Published:Updated:

முரண்டு பிடிக்காமல் மெகா கூட்டணி! - காங்கிரஸ் புது வியூகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முரண்டு பிடிக்காமல் மெகா கூட்டணி! - காங்கிரஸ் புது வியூகம்
முரண்டு பிடிக்காமல் மெகா கூட்டணி! - காங்கிரஸ் புது வியூகம்

முரண்டு பிடிக்காமல் மெகா கூட்டணி! - காங்கிரஸ் புது வியூகம்

பிரீமியம் ஸ்டோரி

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரான பிறகு மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டம், ஜூலை 22-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. வழக்கமாக, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்தான் இந்தக் கூட்டம் நடத்தப்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை அமைக்கும் கூட்டம் என்பதாலோ, என்னவோ... நாடாளுமன்ற துணைக் கட்டடத்தில் இது நடந்தது. காரிய கமிட்டி உறுப்பினர்கள், நிரந்தர உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் என்று 239 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது ராகுல் காந்தி ஆற்றிய உரையின் ஆவேசம் இதிலும் எதிரொலித்தது. அதன் காரணமாக, உறுப்பினர்கள் முகத்திலும் புதிய உற்சாகத்தை இந்த முறை காணமுடிந்தது.

முரண்டு பிடிக்காமல் மெகா கூட்டணி! - காங்கிரஸ் புது வியூகம்

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை அமைப்பதுதான் முக்கிய ‘அஜெண்டா’வாக இருந்தது. ராகுல் பேசியபோது, ‘‘பி.ஜே.பி-க்கு எதிராக மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது, மோடி தரும் பொய்யான வாக்குறுதிகள், ஊழல் குற்றச்சாட்டுகள் என அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க மாநிலம்தோறும் நிர்வாகிகள் உடனே பணிகளைத் தொடங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். ‘‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி-யை எதிர்கொள்ள பலமான மகா கூட்டணி அமைக்கப்பட வேண்டும்’’ என்று சோனியா காந்தி சொன்னார்.

மம்தா பானர்ஜி ஒரு பக்கம் மூன்றாவது அணி அமைப்பதில் மும்முரமாக இருக்கிறார். இடதுசாரிகள் வேறு இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டாமல் கூட்டணி அமைப்பது குறித்து வியூகங்களைத் தனியாக உருவாக்கக் களம் இறங்கியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், ‘பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் அது மகா கூட்டணி அமைவதைப் பாதிக்கலாம்’ என்பதை காரிய கமிட்டி கருத்தில் கொண்டுள்ளது. ஆனால், ‘‘பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்’’ என்கிற கருத்தை, கூட்டத்தில் பேசிய சிலர் வலியுறுத்தினர். 

‘மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, மாநில அளவில் கூட்டணிகளை உருவாக்குவதுதான் பலனளிக்கும்’’ என்பதும் காரிய கமிட்டியின் மற்றொரு முடிவாக அமைந்ததாம். இப்படி அமையும் மாநிலக் கூட்டணிகளின் அடிப்படையில் தேசிய அளவில் மெகா கூட்டணியை முடிவு செய்யலாம் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. ‘‘முந்தைய தேர்தல்களைப் போல் லாப நஷ்டக் கணக்குகளைப் பெரிதாகப் பார்த்து முரண்டுபிடிக்காமல், விட்டுக்கொடுத்துக் கூட்டணி அமைக்க வேண்டும்’’ என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கூட்டத்தின் இறுதியாக, தேர்தல் கூட்டணியை முடிவுசெய்யும் அதிகாரம் ராகுலுக்கு வழங்கப்பட்டது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு குழு அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வர உள்ளது. ‘‘நாம் வலுவாக இருக்கும் 12 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குத் தனியாகவே 150 இடங்கள் இந்த முறை கிடைக்கும். மீதமுள்ள மாநிலங்களில் பலமான கூட்டணி அமைப்பதன் மூலம் கூடுதல் இடங்களைக் கைப்பற்றலாம்’’ என்று கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். கூட்டத்துக்குப் பின் பேசிய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, ‘பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவாரா?’ என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. ‘‘தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, 200 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் பெற்றால், ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்’’ என்றார் அவர்.

முன்கூட்டியே தேர்தல் வந்தால் எதிர்கொள்ளும் விதமாக, ஆகஸ்ட் 15-க்குப்பின் நாடுமுழுவதும் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கப்போகிறதாம் காங்கிரஸ்.

- டெல்லி பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு