Published:Updated:

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம்! - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம்! - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி
மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம்! - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம்! - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி

பிரீமியம் ஸ்டோரி

ந்தமர்ந்த வேகத்தில் நம் பக்கம்கூட திரும்பாமல், தன் மொபைல் போனை ‘டச்’சிக் கொண்டே இருந்தார் கழுகார். நாம் அவ்வப்போது பேசிய வார்த்தைகளும் அவர் காதில் விழவே இல்லை. சட்டென்று எழுந்துபோய் அவரை நாம் கட்டிக்கொள்ள... கொஞ்சம் ஆடிப்போனவராக, நம்மைத் தட்டிக்கொடுத்தார். ‘‘அடடே... கட்டிப்பிடி வைத்தியமா? செம டைமிங்காகத்தான் வேலை பார்க்கிறீர்கள்’’ என்று சொல்லிச் சிரித்தவர், தொடர்ந்தார்.

‘‘டி.டி.வி.தினகரன் முகாமில் இருப்பவர்கள்கூட இப்படி ஒரு முடிவைத் துணிச்சலாக எடுப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், அ.தி.மு.க-வின் மக்களவை எம்.பி-க்கள் ஒரு மாபெரும் கலகத்தை நிகழ்த்திவிட்டனர். ‘மத்திய பி.ஜே.பி அரசை எதிர்ப்போம் என்று கொந்தளித்த அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விழிபிதுங்க வைத்துவிட்டனர்.’’

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம்! - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி

‘‘ஏன் இந்த திடீர்க் கலகம்?’’

‘‘நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது நடந்த விவாதங்களை நீர் கவனித்திருந்தால் ஒரு விஷயம் புரிந்திருக்கும். அ.தி.மு.க சார்பில் முதலில் பேசிய நாடாளுமன்ற அ.தி.மு.க குழுத்தலைவர் டாக்டர் வேணுகோபால், மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையில் மத்திய அரசு நடத்துவதாகச் சொன்னார். எந்தெந்த விஷயங்களில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று பெரிய பட்டியலே போட்டார். வேணுகோபாலுக்குப் பின்வரிசையில் உட்கார்ந்திருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாகூட ஒருவித திகைப்புடன் வேணுகோபால் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். வேணுகோபால் பேசியபோது, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தன் இருக்கையிலிருந்து எழுந்து வெளியில் சென்றார். துணை சபாநாயகர் தம்பிதுரை சென்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, வேணுகோபால் பேசுவதை ரசித்துக் கேட்டார். கிட்டத்தட்ட மத்திய அரசுமீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பவரின் பேச்சு போலவே இருந்தது அது. தென் சென்னை எம்.பி-யும், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்த்தனின் பேச்சும் இப்படித்தான் இருந்தது.’’

‘‘கடைசியில் பி.ஜே.பி-க்கு ஆதரவாகத்தானே வாக்களித்தார்கள்?’’

‘‘வாக்களித்தது பி.ஜே.பி அரசை ஆதரித்துத் தான். ஆனால், ‘வாக்களிக்கலாமா... வாக்அவுட் செய்யலாமா’ என்று பல மணி நேரம் விவாதித்துள்ளனர். அ.தி.மு.க., நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி. இந்தக் கட்சியின் தயவு இல்லாமலே, நம்பிக்கை வாக்கெடுப்பில் பி.ஜே.பி ஜெயித்துவிடும் என்கிற நிலைதான். ஆனால், ‘ஓட்டு வித்தியாசத்தை அதிகரிக்க வேண்டும்’ என்பது பிரதமர் மோடியின் உத்தரவு. அ.தி.மு.க  எம்.பி-க்களின் திடீர் கலகம், பி.ஜே.பி தலைவர்களை அதிரவைத்தது.’’

‘‘அடேங்கப்பா... அந்த அளவுக்கா தைரியம் பிறந்துவிட்டது?’’

‘‘வாக்கெடுப்பு தினத்தன்று காலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப்போடும் மனநிலையில்தான் இருந்துள்ளனர் அ.தி.மு.க எம்.பி-க்கள். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இதுவே பேச்சாக இருக்க, அவர்களை சமாதானப்படுத்தும்படி ராஜ்யசபா எம்.பி-யான டாக்டர் மைத்ரேயனிடம் பேசினார் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு. பிறகு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் அமித் ஷா பேசும் அளவுக்கு விவகாரம் சீரியஸாக ஆனது. ‘நீங்கள் வெளிநடப்பு செய்யப்போவதாகக் கேள்விப் படுகிறோம். உங்களின் ஓட்டுகள் இல்லாமலே நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தோற்கடிப்போம். ஆனால், உங்களின் வெளிநடப்பு, ஒருவகையில் எங்களை அவமதிப்பது போன்றது’ என்று இறுக்கமான குரலில் சொன்னாராம் அமித் ஷா. அதையடுத்து, எடப்பாடியைத் தொடர்புகொண்டு பேசிய ஓ.பி.எஸ்., ‘இந்த நேரத்துல நாம கறார் காட்டுறது நல்லாயிருக்காது. தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும்’ என்று சொன்னாராம். எடப்பாடி சம்மதிக்க, இது உடனடியாக தம்பிதுரைக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகுதான், ‘நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க எதிர்க்கும்’ என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.’’

‘‘ஓஹோ.’’

‘‘தம்பிதுரை இதைச் சொன்னபோது நிறைய எம்.பி-க்கள் ஏற்க மறுத்தனர். உடனே, ‘அனைத்து எம்.பி-க்களிடமும், கட்சியின் கொறடா விஜயகுமார் மூலம் தீர்மானத்தை எதிர்க்கும்படி கையெழுத்து வாங்குங்கள்’ என்று எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து கறார் கட்டளை பிறப்பிக்கப்பட்டதாம்.’’

‘‘ம்ம்... டெல்லி கையில் அல்லவா லகான் இருக்கிறது!’’

‘‘எடப்பாடியும் பன்னீரும் விழிபிதுங்கிப் போய், டெல்லியிலிருந்த எம்.பி-க்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். சமாதானப்படலம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்துள்ளது. அப்போது கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களின் அடிப்படையில்தான் இறங்கி வந்திருக்கிறார்கள் எம்.பி-க்கள். ஆனால், கடைசி நிமிடத்திலும்கூட, ‘வெளிநடப்பு செய்யலாமா’ என்று டாக்டர் வேணுகோபால் கேட்டிருக்கிறார். ‘இப்போதைய சூழ்நிலைக்கு அது சரிப்பட்டு வராது. நாம் முடிவெடுத்தபடி தீர்மானத்தை எதிர்த்து ஓட்டுப்போடுங்கள்’ என்று சொன்னாராம் எடப்பாடி.’’
  
‘‘அ.தி.மு.க எம்.பி-க்களுக்கு எங்கிருந்து வந்தது இத்தனை வீரம்?’’

‘‘பொதுவாகவே தங்களுக்கு டெல்லியில் போதுமான மரியாதை இல்லை என்பதுதான் அவர்களின் மனக்குறை. ‘எப்போது வெடிக்கலாம்’ என்று காத்திருந்தவர்களுக்கு பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க இடையேயான சமீபத்திய உரசல்கள் உரமிட்டுவிட்டன. ‘தமிழ்நாட்டுக்கு வந்து, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக நடக்கிறது என்று முழங்கிவிட்டுப் போயிருக்கிறார் அமித் ஷா. அம்மா இருந்திருந்தால், இது நடந்திருக்குமா? டெல்லியில் மக்கள் பிரச்னைகளை மத்திய அமைச்சர்களிடம் கொண்டுபோனால், எங்களை மதிப்பதில்லை. ஆனால், மற்ற மாநில எம்.பி-க்கள் வந்தால், விழுந்து விழுந்து உபசரிக்கிறார்கள். நிபந்தனையற்ற ஆதரவை நாம் தருவோம் என்ற அலட்சியம்தானே இதற்கெல்லாம் காரணம்’ என்று கேட்கிறார்கள் அவர்கள். பி.ஜே.பி-யுடன் கூட்டணியில் இருந்த சிவசேனாவிடம் அமித் ஷா ஆதரவு கேட்டார். அவர்களோ, வெளிநடப்பு செய்தனர். ஆனால், அ.தி.மு.க பக்கம் அமித் ஷா  திரும்பிக்கூட பார்க்கவில்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த இழிநிலை? நம் கட்சிதான் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி. 37 எம்.பி-க்கள் இருக்கிறோம். அத்தனை பிரச்னைகளிலும் நாம் அரசுக்கு ஆதரவாகவே இருக்கிறோம். ஆனால், நமக்கு அவர்கள் என்ன செய்தார்கள்?’ என்று கேட்கிறார்கள் அவர்கள். ‘தனிப்பட்ட முறையில் ஊழல் அமைச்சர்கள் சிலரைக் காப்பாற்றுவதற்காக, சிலர் அடிமையாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகக் கட்சியை அடகு வைக்கலாமா’ என வெளிப்படையாகவே வெடித்துள்ளார் சீனியர் எம்.பி ஒருவர்.’’

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம்! - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி

‘‘இந்தக் கலகத்துக்கு யார் தலைமை?’’ 

‘‘அன்வர் ராஜா, உதயகுமார், வனரோஜா, நாகராஜன் (தினகரன் ஆதரவாளர்) ஆகிய நான்கு எம்.பி-க்களும் இதில் முக்கியமானவர்கள். மத்திய அரசிடமிருந்து பல துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பாக தங்களுக்கு உரிய மரியாதை காட்டப்படவில்லை என்பதை சில எம்.பி-க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘எம்.எல்.ஏ-க்களுக்கு செலவு செய்கிறோம். உங்களுக்கு எதற்கு? பதவியே முடியப்போகிறதல்லவா?’ என்று எடப்பாடி தரப்பிலிருந்து பதில் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இது, எம்.பி-க்களை மேலும் கடுப்பாக்கிவிட்டதாம். கோவை எம்.பி-யான நாகராஜனுக்கு, தன் பெயரை உள்ளூர் நிகழ்ச்சிகளில் போடுவதில்லை என்கிற வருத்தம். வேறு சில எம்.பி-க்களும், ‘கட்சிக்காரனும் மதிக்கிறதில்லை. மாவட்டச் செயலாளரும் புறக்கணிக்கிறார். அமைச்சர்களும் மதிக்கறதில்லை, அதிகாரிகளும் மதிக்கிறதில்லை. அப்ப எதுக்காக நாங்கள்லாம் எம்.பி-யா இருக்கணும்?’ என்று கோரஸாகப் பேசினார்களாம்.’’

‘‘நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்று, இப்போதுதான் எல்லாம் சரியாகிவிட்டதே?’’

‘‘அதுதான் இல்லை. நடப்புக் கூட்டத்தொடர், குளிர்காலக் கூட்டத்தொடர், இடைக்கால பட்ஜெட்... இந்த மூன்று வைபவங்களில் பி.ஜே.பி மீதான எதிர்ப்பைப் பதிவுசெய்ய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது எம்.பி-க்கள் அடித்தது எச்சரிக்கை மணி மட்டுமே. இனி பி.ஜே.பி அரசின் முடிவுகளைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கமாட்டார்கள். ‘மரியாதை’ தரவில்லை யென்றால், எந்த நேரத்திலும் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடிக்கு கிலி கிளப்புவார்களாம்.’’

‘‘என்னவிதமான மரியாதை?’’

‘‘நிச்சயமாக ஸ்பெஷல் மரியாதைதான். அதை எடப்பாடி செய்து தருவார். ‘கட்சியைக் காப்பாற்ற ஆட்சியைக் காவு கொடுக்கலாம்’ என்கிற நினைப்பில் 20 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். ஏற்கெனவே, செங்குட்டுவன், நாகராஜன் ஆகிய இருவரும் தினகரனின் பாசத்துக்குரியவர்கள். பன்னீர்செல்வத்தின் கோஷ்டியில் 11 பேர் இருக்கிறார்கள். இவர்களும் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தினகரனின் கை டெல்லியில் ஓங்கினால், பி.ஜே.பி-க்கு பிரச்னை என்பதை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். அதனால், எம்.பி-க்களை திருப்திப்படுத்தும்படி எடப்பாடியிடம் டெல்லி பி.ஜே.பி மேலிடம் வலியுறுத்திவருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.’’

‘‘மு.க.ஸ்டாலின் திடீரென கவர்னரைச் சந்தித்துள்ளாரே?’’

‘‘ஜூலை 23-ம் தேதியன்று கவர்னர் பன்வாரிலாலைச் சந்தித்தார் ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வர்களின் வீடுகளில் நடந்த ஐ.டி ரெய்டை சுட்டிக்காட்டி, ‘முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினாராம் ஸ்டாலின். ‘உள்துறை அமைச்சகத்துக்கு உங்கள் புகாரை அனுப்புகிறேன்’ என்று பதில் தந்திருக்கிறார் கவர்னர். உடனே, ‘முதல்வர்மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர உள்ளோம். நீங்கள் அனுமதி தரவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின். ‘உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படிதான் செயல்பட முடியும். அங்கிருந்து அனுமதியளித்தால், உடனே நான் அனுமதி கொடுக்கிறேன்’ எனச் சொன்னாராம் கவர்னர். அனைவருக்கும் டீ, வடை பரிமாறப்பட்டுள்ளது. கவர்னரும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.”
 
‘‘என்ன ஒரு சந்தோஷ தருணம்... ஆனால், இதே கட்சியினர்தானே கறுப்புக் கொடி காட்டி கவர்னருக்கு திகில் கிளப்புகிறார்கள்?’’

‘‘அதைப்பற்றியும் அங்கே பேசப்பட்டுள்ளது. ‘இப்போது, ஆய்வுக்காக நான் எங்கும் செல்வதில்லை. மாவட்டம்தோறும் திட்டங்கள் செயல்படுவதைப் பார்வையிடத்தான் போகிறேன்’ என்று பூடகமாக கவர்னர் சொல்ல, ‘எதிர்க்கட்சியின் தார்மீகக் கடமையைத்தான் நாங்கள் நிறைவேற்றிவருகிறோம். நீங்கள் திண்டுக்கல் செல்லும்போது உங்களுக்குக் கறுப்புக் கொடி காட்டப்படும்’ என்று சிரித்துக் கொண்டே ஸ்டாலின் சொல்ல, கவர்னரும் சிரித்தாராம்.’’

‘‘செயல் தலைவர், சீக்கிரமே கட்சியின் தலைவர் பதவியை ஏற்பார் என்கிறார்களே?’’

‘‘கிட்டத்தட்ட 49 ஆண்டுகளாக தி.மு.க-வின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 2016-ம் ஆண்டின் இறுதியில் உடல்நிலை சரியில்லாமல் போனபிறகு, ‘செயல் தலைவர்’ பதவி புதிதாக உருவாக்கப்பட்டு, ஸ்டாலின் அமரவைக்கப்பட்டார். இந்நிலையில், தி.மு.க-வின் பொதுக்குழு ஆகஸ்ட் 19-ம் தேதி சென்னை அருகே வானகரத்தில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றமும் இல்லாத நிலையில், இந்தப் பொதுக்குழுவில் ஸ்டாலினை தலைவராகத் தேர்வு செய்துவிடலாம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவெடுத்துள்ளனராம். ஜூலை 22-ம் தேதி பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டுக்கு ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சென்று ஆலோசனை செய்துள்ளார்கள். அன்பழகனும் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.’’

‘‘வழக்கமாக, அறிவாலயத்தில்தானே பொதுக்குழு நடைபெறும். இம்முறை வானகரத்தில் நடக்கிறதே?’’

‘‘தி.மு.க-வில் தற்போது 19 அணிகள் உள்ளன.’’

‘‘என்ன சொல்கிறீர்... காங்கிரஸை மிஞ்சிவிடும் போலிருக்கிறதே!’’

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம்! - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி

‘‘அட, நான் சொல்ல வந்தது இளைஞர் அணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி என்று சட்டப்பூர்வமாக இருக்கும் அணிகளை. அதனால், பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 1,500 வரை சென்றுவிட்டது. அறிவாலயத்தில் 1,000 பேர் மட்டுமே அமர முடியும் என்பதால்தான் மாற்று இடமாக வானகரத்தைத் தேர்வு செய்துள்ளார்களாம். வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில்தான் ஜெயலலிதா காலத்திலிருந்தே அ.தி.மு.க-வின் பொதுக்குழு நடைபெறுவது வழக்கமா இருந்துவருகிறது.’’

‘‘எஸ்.பி.கே நிறுவனங்களில் ரெய்டு நடந்தபோது, நெடுஞ்சாலைத் துறைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வீட்டிலும் ரெய்டு நடக்கப்போவதாகத் தகவல்கள் வந்தனவே?’’

‘‘ஆம். ராஜீவ் ரஞ்சன் வீட்டுக்கும் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில், அந்த முயற்சி கைவிடப்பட்டதாம். ராஜீவ் ரஞ்சன் வீட்டிலும் ரெய்டு என்கிற தகவல் கிடைத்ததும், பல ஐ.ஏ.எஸ்-களும் ஆடிப்போய், பல்வேறு இடங்களுக்கும் போன் போட ஆரம்பித்து விட்டனராம். வடஇந்திய பி.ஜே.பி முக்கியப் பிரமுகர்களையும் போனில் பிடித்துள்ளனர். மத்திய அரசின் பணிகளில் சில ஆண்டுகள் இருந்திருப்பதால், ராஜீவ் ரஞ்சனுக்கு டெல்லி பிரமுகர்களை நன்றாகவே தெரியுமாம். அதனால்தான், ரெய்டு தடைப்பட்டது என்கிறார்கள். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோது, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வீட்டுக்கும் குறிவைக்கப்பட்டதாகப் பேச்சு இருந்து. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இப்போது, நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டர்களைக் குறிவைத்து நடந்த ரெய்டின்போது, ராஜீவ் ரஞ்சன் பெயர் அடிபட்டது. கடைசியில் அது நடக்கவில்லை.’’

‘‘கான்ட்ராக்டர்கள் தவறு செய்தால், துறையின் செயலாளருமா தவறு செய்வார்?’’

‘‘அவர் தவறு செய்தாரா, இல்லையா என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? அடுத்து ஒரு ரெய்டு நடந்தால், தன்னாலேயே தெரிந்துவிடப்போகிறது. அதேசமயம், தமிழக நெடுஞ்சாலைத் துறையைப்பற்றி இன்னொரு செய்தியும் இருக்கிறது. அதையும் கேளும். துறையின் பொறியாளர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ஊதியத்தைவிட கிட்டத்தட்ட ஆறாயிரம் ரூபாய் அதிகமாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இது, அரசு டாக்டர்களுக்கு இணையானது. இப்படி உயர்த்தப்பட்டதன் பின்னணி குறித்துப் புகார்கள் உண்டு. இத்தகைய பொறியாளர்களில் சிலரின் துணையுடன்தான் நெடுஞ்சாலைத் துறையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பசையான இடங்களைப் பிடிக்க நடந்த போட்டியில், முக்கியமான ஒரு பதவிக்கு மூன்று கோடி ரூபாய் வரை கைமாறியதாகச் சொல்லப்படுகிறது. இப்படி ஏகப்பட்ட பரிவர்த்தனைகள்.’’

‘‘இதற்கும், ரெய்டு முயற்சிக்கும் என்ன சம்பந்தம்?’’

‘‘இன்னொரு தகவலையும் தருகிறேன். தற்போது எஸ்.பி.கே நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட பராமரிப்பு வேலைகளுக்கான எஸ்டிமேட்டில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்குக் கொடுக்க வேண்டிய கமிஷன் வரை சேர்த்தே கணக்கு போட்டிருக்கிறார்களாம். இதையெல்லாம் அமைச்சர் மட்டத்தில் ஓகே செய்தாலும், துறைச் செயலாளர் கண்காணித்து நிறுத்தியிருக்க வேண்டும் அல்லவா? கூட்டிக்கழித்துப் பாரும்... ஏதாவது சம்பந்தம் தென்படலாம்’’ என்ற கழுகார் பறந்தார்.

ஓவியம்: கார்த்திகேயன் மேடி
அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி

• சென்னை திருவான்மியூரில் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக உள்ள இடம் குறித்த

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம்! - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி

சர்ச்சையை சட்டமன்றத்திலும், வெளியிலும் மு.க.ஸ்டாலின் எழுப்பினார். தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன்தான், இதன் பின்னணியில் இருக்கிறார். இவர்தான், நடிகர் சங்கக் கட்டட விவகாரத்தையும் முதன்முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெளிக்கொண்டு வந்தவர். இப்போது, ராமச்சந்திரா பல்கலைக்கழக விவகாரத்தைத் தோண்டியெடுக்கும் இவருக்கு மிரட்டல்கள் வரத்தொடங்கியுள்ளன.

• தினகரன் தரப்பு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு ரெடி. கடந்த வாரம் டெல்டா பகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் தினகரனைச் சந்தித்துள்ளார்கள். அப்போது, ‘வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என தொகுதிக்கு ஐந்து பேர் வீதம் தேர்வுசெய்து எனக்கு அனுப்புங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் தினகரன். தமிழகம் முழுவதும் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணிகள் தீவிரமாகியுள்ளன. கூடவே, வாக்காளர்களை வளைக்கும் வேலையும்.

• திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில், தமிழக அரசு சிபாரிசில் ஒருவருக்குப் பதவி தரப்படுவது வழக்கம். புது டிரஸ்ட் போர்டில் தமிழக அரசு சிபாரிசில் யாரும் நியமிக்கப்படவில்லை. கடந்த ஏழு மாதங்களாக காலியாகவே இருக்கிறது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரை முதல்வர் எடப்பாடி சிபாரிசு செய்திருக்கிறார். அதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘நோ’ சொல்லிவிட்டாராம்.

• தி.மு.க-வினரிடம் அன்பாகப் பேசுவதில் வல்லவர் அவர். இவரை நாமக்கல் மாவட்ட இளைஞர் ஒருவர் அடிக்கடி மலை மேல் அழைத்துப்போய் குஷிப்படுத்தி அனுப்புவது வழக்கம். அண்மையில் இப்படி அந்த அன்பானவர் பிஸியாக இருந்தபோது, திடீரென ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாம். பதறிப்போய் அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்களாம். சிகிச்சை முடிந்து இப்போது ரெகுலர் பணியில் ஈடுபட்டிருக்கிறார் அந்த அன்பர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு