Published:Updated:

கென்னடி படுகொலை... இன்று வரை நீடிக்கும் மர்மம்! #OnThisDay

விகடன் விமர்சனக்குழு

டெக்சாஸ் மாகாணத்தின் `டாலாஸ்' என்ற பகுதியில் காரில் மெதுவாகச் சென்றபடியே மக்களைப் பார்வையிட்டு கொண்டிருக்கிறார் கென்னடி. காரின் பின்புறம் தன் மனைவி ஜாக்குலின் உடன் அமர்ந்திருந்த கென்னடியின் மீது திடீரென்று மூன்று குண்டுகள் பாய்கின்றன. தலையிலும் கழுத்திலும் பலத்த காயமடைந்த கென்னடி, மனைவியின் மீது சுருண்டு விழுகிறார். அந்த இடமே பரபரப்புக்குள்ளாகிறது.

கென்னடி படுகொலை... இன்று வரை நீடிக்கும் மர்மம்! #OnThisDay
கென்னடி படுகொலை... இன்று வரை நீடிக்கும் மர்மம்! #OnThisDay

1963-ம் ஆண்டு. பனிப்போரின் தீவிரத்தில் வியட்நாம் யுத்தம், கியூபா பிரச்னை என அமெரிக்காவுக்குத் தொடர்ந்து சறுக்கல்கள்.  அந்நேரத்தில், அருகில் உள்ள கியூபாவில் ரஷ்யா ஏவுகணை தளத்தை அமைக்க அமெரிக்காவுக்குத் தலைவலி மேலும் அதிகமானது. மிரட்டலும், கோரிக்கையுமாக ரஷ்யாவிடம் முறையிட, ஏவுகணை தளத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் ரஷ்ய அதிபர் குருட்சேவ். அணுகுண்டு வைத்திருந்த பிரிட்டன், ரஷ்யா இரு நாடுகளையும் சமரசமான அமைதி ஒப்பந்தத்துக்கு அழைத்து வெற்றி பெற்றார் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி (அமெரிக்கா-பிரிட்டன்-சோவியத் அமைதி ஒப்பந்தம். ஆகஸ்ட் 5,1963). உலக அளவில் பாராட்டுகள் குவிந்தன. அந்த நல்ல பெயரை அப்படியே உள்ளூர் அரசியல் பக்கம் திருப்பி, தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.

செல்லும் இடமெல்லாம் கைகுலுக்கல்கள், ஆரவாரம் என மக்கள் மத்தியில் கென்னடிக்குப் பெரும் வரவேற்பு. 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தின் `டாலாஸ்' என்ற பகுதியில் காரில் மெதுவாகச் சென்றபடியே மக்களைப் பார்வையிட்டு கொண்டிருக்கிறார் கென்னடி. காரின் பின்புறம் தன் மனைவி ஜாக்குலின் உடன் அமர்ந்திருந்த கென்னடியின் மீது திடீரென்று மூன்று குண்டுகள் பாய்கின்றன. தலையிலும் கழுத்திலும் பலத்த காயமடைந்த கென்னடி, மனைவியின் மீது சுருண்டு விழுகிறார். அந்த இடமே பரபரப்புக்குள்ளாகிறது. அருகில் உள்ள மருத்துவமனையில் கென்னடிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனால், அடுத்த அரைமணி நேரத்தில் கென்னடியின் உயிர் பிரிந்தது. மொத்த அமெரிக்காவும் கதறி அழுதது.

மிக இளவயதிலேயே அதிபராகப் பொறுப்பேற்று, இளம் வயதிலேயே இறந்தபோன அதிபர் கென்னடிதான். டெமாக்ரடிக் பார்ட்டியின் பாஸ்டன் பகுதியின் தீவிர ஆர்வலர். இயல்பிலேயே சிறந்த பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் பெற்றிருந்தார். அவர் எழுதிய `Profiles in Courage’ என்ற நூலுக்கு `புலிட்சர்’ விருது கிடைத்தது (புலிட்சர் விருது பெற்ற அமெரிக்க அதிபர் கென்னடி மட்டுமே). கென்னடி 1961-ம் ஆண்டு தேர்தலில் டெமாக்ரடிக் பார்ட்டியின் சார்பாக அதிபராக வெற்றிபெற்றார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவம் சார்ந்த அனைத்து உதவிகளையும் முதன்மையாக வழங்குதல், கல்வியில் பல புதிய மாறுபாடுகள் எனக்  குறிப்பிடத்தகுந்த பணிகளைச் செய்தார். லிங்கனைப்போல் கறுப்பின மக்கள் மீது கரிசனப்பட்டார். தனிப்பட்ட வாழ்வில் பெண்கள் சார்ந்து பல சர்ச்சைகள் இருந்தாலும், கென்னடியின் பொதுவாழ்வு அவரை ஒரு நாயகனாகக் காட்டியது. மக்களின் பேராதரவைப் பெற்ற கென்னடியின் மரணம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது என்பது அமெரிக்கர்களின் வருத்தம்.

என்ன நடந்தது? 

கென்னடி சுடப்பட்ட அடுத்த 70-வது நிமிடத்தில் லீ ஹார்வி ஆஸ்வல்ட் என்ற முன்னாள் கடற்படை வீரர் கைது செய்யப்பட்டார். இரண்டு நாள் சிறையில் இருந்த ஆஸ்வல்டு, நீதிமன்ற விசாரணைக்காக நவம்பர் 24-ம் தேதி வெளியே அழைத்துவரப்பட்டார். சிறையில் பெரும் கூட்டத்துக்கு நடுவே நின்றுகொண்டிருந்த `ஜாக் ரூபி' என்பவர் சுட்டதில், ஆஸ்வல்ட் இறந்தார். உணவு விடுதி ஒன்றின் உரிமையாளரான ஜாக் ரூபி ஒரு மன நோயாளி என்று கூறப்பட்டது. 1967-ம் ஆண்டு அவர் சிறையிலேயே மரணமடைந்தார். கென்னடியை ஆஸ்வல்டு எதற்காகச் சுட்டார், அவரின் பின்னணி என்ன, அவரைத் தூண்டியது யார், ஆஸ்வல்டை சுட்ட ரூபி யார், ஆஸ்வல்டுக்கும் ரூபிக்கும் என்ன தொடர்பு, ரூபி உண்மையிலேயே மனநோயாளியா எனத் தொடர் கேள்விகளை உலகம் எழுப்பியது.

வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட `வாரன் கமிஷன்' இதுவரை எந்தத் துல்லியமான முடிவையும் வெளியிடவில்லை. மாஃபியா கும்பல்களில் தலையீடு, பிடல் காஸ்ட்ரோவின் சதி, கம்யூனிஸ்ட்களின் வஞ்சகம், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ வின் வெறுப்பு என்பது வரை பல கோணங்களில் சந்தேகங்களையும், விவாதங்களையும் எழுப்பினார்கள். கென்னடியின் கொலையில் இலுமினாட்டிகளின் சதி உள்ளது என்ற பேச்சும் உள்ளது. இதுவரை பல ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் கூட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின் பேரில் பல புதிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், அதுபற்றிக் கருத்து தெரிவித்த வாரன் கமிஷன், படுகொலை குறித்த முழுமையான தகவல்கள் இல்லை என அதை ஏற்க மறுத்தனர். `வெளியுறவு நிர்வாகத்தின் காரணமாகவும், தேசத்தின் பாதுகாப்பு கருதியும், கொலை குறித்த அனைத்துத் தகவல்களையும் வெளியிட முடியாது என்ற நிர்வாகத் துறைகளின் கோரிக்கையை மீற முடியாது' என்றார் ட்ரம்ப். இது சந்தேகங்கள் மேலும் தொடரவே வழிவகை செய்தது. 

கென்னடி இறந்துவிட்டார் என்பதைத் தவிர, அவர் இறப்பு சார்ந்த அனைத்தும் இன்று வரை மர்மமாகவே உள்ளது.