Published:Updated:

`அமைச்சர் ஊர்லயே ரெண்டு நேரம்தான் சோறு!’ - கஜா பாதிப்பைப் பார்வையிட்டுவந்த கே.பி சொல்கிறார்!

`அமைச்சர் ஊர்லயே ரெண்டு நேரம்தான் சோறு!’ - கஜா பாதிப்பைப் பார்வையிட்டுவந்த கே.பி சொல்கிறார்!
`அமைச்சர் ஊர்லயே ரெண்டு நேரம்தான் சோறு!’ - கஜா பாதிப்பைப் பார்வையிட்டுவந்த கே.பி சொல்கிறார்!
`அமைச்சர் ஊர்லயே ரெண்டு நேரம்தான் சோறு!’ - கஜா பாதிப்பைப் பார்வையிட்டுவந்த கே.பி சொல்கிறார்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.சண்முகம் ஆகியோர் மூன்று நாள்கள் பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர். 

புயல் பாதிப்பு மீட்பு, நிவாரண உதவி தொடர்பான வேலைகளுக்கு இடையில், மக்களின் இடர்ப்பாடுகள் குறித்த நம் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர். 

* எந்தெந்த பகுதிகளுக்குச் சென்றுவந்தீர்கள்?

``திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களைப் பார்த்துவிட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக திருவாரூர் - புலிவலம், கச்சனம், மீண்டும் திருத்துறைப்பூண்டி வந்து நகரத்திலும் அந்தப் பகுதியில் மீதமிருந்த மூன்று முகாம்களிலும், முத்துப்பேட்டை, தஞ்சாவூர், பத்தாங்காடு, தம்பிக்கோட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை, கீரமங்கலம் ஆகிய பகுதிகளிலும் நிலைமையைப் பார்த்தோம்.'' 

* புயல்பாதிப்பு எந்த அளவில் இருக்கிறது?

``பட்டுக்கோட்டை, பேராவூரணி, கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் தேக்கு, வாழை, தென்னை என தோப்புகளாக முழுவதும் நாசமாகிவிட்டன. அந்தப் பக்கம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், தலைஞாயிறு அடங்கிய திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அநேகமான குடியிருப்புகள்தான், கடைகள், சிறு வர்த்தக நிலையங்கள் ஆகியவை முழுவதும் சேதமாகிவிட்டன. ஆஸ்பெட்டாஸ் தகடுகள், மங்களூர் ஓடுகளாலான கூரைகள் எல்லாம் அப்படியே காற்றில் பறந்துபோய்விட்டன. எல்லாம் மொட்டையாக இருக்கிறது. அங்கு மரங்களின் பாதிப்பானது குடியிருப்புகள் அளவுக்கு இல்லை. ஆனால், பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. முத்துப்பேட்டை உட்பட கடலோரப் பகுதிகளிலோ இதைவிட மோசம். கான்கிரீட் வீடுகள் மட்டுமே ஆங்காங்கே நிற்கின்றன. மீனவர்கள் புதிதாகத்தான் தங்களின் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.'' 

`அமைச்சர் ஊர்லயே ரெண்டு நேரம்தான் சோறு!’ - கஜா பாதிப்பைப் பார்வையிட்டுவந்த கே.பி சொல்கிறார்!

* முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு கவனிப்பு எப்படி இருக்கிறது?

``முன்னெச்சரிக்கை செய்ததை ஒரு சாதனையைப்போல அரசாங்கம் சொல்லிக்கொள்கிறது. அதனால், ஓரளவுக்கு மக்கள் வீடுகளைவிட்டு பள்ளிக்கூடங்கள், சமூகக்கூடங்களில் தங்கியிருந்ததால் உயிர்ச்சேதம் பெருமளவில் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், மக்களை எச்சரிக்கையாக இருக்கச் சொன்ன அரசாங்கம், முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டதா என்பது கேள்விக்குறிதான். தலைஞாயிறு பேரூராட்சி முகாமுக்குப் போயிருந்தோம். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஊர் என்றார்கள். அமைச்சரின் சொந்த ஊரிலேயே முகாமில் ஒரே இருட்டு. ஜெனரேட்டர் ஓடவில்லை. இருட்டாக இருப்பதால் குழந்தைகள் ஒருவித மிரட்சியுடன் இருக்கிறார்கள். வெளிச்சம் இல்லாததால் இரவு உணவையும் மாலையிலேயே போட்டுவிடுகிறார்கள். இரண்டு நேரம்தான் உணவு என்று எங்களிடம் சொன்னார்கள். 

மின்சாரம் இல்லாததால் தண்ணீருக்கு வாய்ப்பில்லை. முன்னெச்சரிக்கை செய்த அரசாங்கம், ஐந்நூறு ஆயிரம் டேங்கர் லாரிகளை அந்த கிராமங்களுக்கு அனுப்ப முடியாதா? பக்கத்தில் இருக்கும் நகராட்சி, மாநகராட்சிகளில் டேங்கர் லாரிகளா இல்லை? நான்கு ஊர்களுக்கு ஒரு லாரியை அனுப்பியிருந்தால்கூட மக்களுக்குப் பாதி அவஸ்தை இல்லாம இருக்கும்.’’ 

* வாய்க்கால் தண்ணீரை எடுத்து சமைத்ததாகவெல்லாம் தகவல்கள் வருகின்றனவே..!

``ஆமாம். சுத்தமாகத் தண்ணீரே இல்லையென்றால் சனங்கள் என்ன செய்வார்கள்? வயல்காடெல்லாம் மரம் செடிகொடிகளாகக் கொட்டிக்கிடக்கின்றன. ஆடுமாடு செத்துப்போய் அழுகியவை எல்லாம் அப்புறப்படுத்தப்படாமல் கிடக்கின்றன. கிடைக்கிற தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்கச் சொல்கிறது அரசாங்கம். தண்ணீர் கிடைத்தால்தானே? வாய்க்காலில் வரும் தண்ணீரைப் பார்த்தவுடனே மக்கள் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு குடிதண்ணீருக்கு மக்கள் அல்லாடுகிறார்கள்.’’ 

* நீங்கள் பார்த்த அளவுக்கு பாதிப்பானது எந்த அளவு உள்ளது? அரசு சொல்லும் கணக்கு சரியானதா? 

``நாங்களே இன்னும் முழுமையாகப் போய்ப் பார்க்க முடியவில்லை. மழை மீண்டும் தொடங்கிவிட்டது. இன்னும் உள்கிராமங்களில் அரசுத் தரப்பில் யாரும் எட்டிகூடப் பார்க்கவில்லை. நாங்கள் பார்த்தவரையில், ஒரே ஊருக்குள்ளேயே தெருவைவிட்டுத் தெரு கடந்துசெல்லவே மரங்களுக்கு இடையிலும் மின்கம்பங்களுக்கு இடையிலும் குனிந்து நெளிந்துதான் செல்ல முடிந்தது. அரசாங்கம் எப்படி ஒரு புள்ளிவிவரத்தை எடுத்தது? என்ன கணக்கு என்பது வியப்பாக இருக்கிறது. ஒரு விஷயம், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியில் இருந்திருந்தால், குறைந்தபட்ச உதவிகளையாவது செய்திருக்க முடியும் என்பது மட்டும் உறுதியாகத் தோன்றியது.’’