Published:Updated:

`அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை முதல்வரே!’ - ஸ்டாலின் காட்டம்

`அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை முதல்வரே!’ - ஸ்டாலின் காட்டம்
`அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை முதல்வரே!’ - ஸ்டாலின் காட்டம்

கஜா புயலால் பாதித்த மக்களுக்காக தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அப்படிச் சேகரிக்கப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான 400 டன் அரிசி உட்பட பல்வேறு உணவுப் பொருள்களை சுமார் 100 லாரிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்திலிருந்து அனுப்பி வைத்தார்.

இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த ஸ்டாலின், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, திருச்சி சிவா எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் ஆகியோர் சகிதமாக நிவாரணப் பொருள்களை ஏற்றிய லாரிகளைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்டாலின்,``கஜா புயலால் பாதித்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இவற்றை அந்தந்தப் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் மக்களுக்கு வழங்குவார்கள். இதுதவிர தமிழக முதல்வரிடம் தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க.,எம்.எல்.ஏ, எம்.பி-க்களின் ஒரு மாத சம்பளம் நிவாரணத்துக்கு வழங்கப்பட உள்ளது. தி.மு.க. மகளிரணி சார்பில் 70 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புயல் நிவாரணத்தில் தி.மு.க. அரசியல் செய்வதாக அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தேவையற்ற பொய்ச் செய்தியை அ.தி.மு.க-வினர் கூறி வருகிறார்கள். தி.மு.க புயல் நிவாரணம் வழங்குவதில் அரசியல் செய்யவில்லை. இதில் அரசியல் செய்வதாக இருந்தால் முதல்வரை ஏன் நேரில் சந்தித்து நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். கூரியரில் அனுப்பி இருக்கலாமே. அதனால் தி.மு.க இந்த விஷயத்தில் சரியான நிலைப்பாட்டில் இருக்கிறது.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் பரிதாப நிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து முடுக்கி விட்டிருக்க வேண்டும். ஆனால், ஐந்து நாள்கள் கழித்து திருச்சிக்கு விமானத்தில் வந்து, பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்த்துவிட்டு திரும்பியுள்ளார். அதுவும் பாதியிலேயே திரும்பிச் சென்றுவிட்டார். இது வேடிக்கையாகவும் கேவலமாகவும் உள்ளது. டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்திக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிவாரண நிதியை முறையாகப் பெற்று வர வேண்டும். உரிய நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசு புயல் பாதிப்புக்கு முன் பணம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் வழங்கவில்லை. போர்க்கால அடிப்படையில் நிதி வழங்க வேண்டும்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு, மத்திய அரசு ரூ.2,012 கோடி மட்டுமே வழங்கியது. தற்போது 15,000 கோடி கேட்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1,500 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். இந்த நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் அரசியல் பாகுபாடின்றி ஒன்றிணைந்து செயல்பட்டால், நாங்களும் நிவாரணப் பணிகளில் ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம். உண்ண உணவளித்த நமது டெல்டா மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், அனைத்து அரசியல் கட்சியினரை சந்தித்துச் சூழல் குறித்து கருத்து கேட்டு முடிவு செய்தபின், பிரதமரைச் சந்தித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

வாழை, தென்னை விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். முன்பு வறட்சி காரணமாக 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் துயரத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால் நோயாலும் பல்வேறு காரணங்களாலும் இறந்துவிட்டதாக அரசு சப்பைக்கட்டு கட்டியது.  அ.தி.மு.க.-வும், பா.ஜ.க.-வும் ஊழல் செய்வதில் நெருக்கம் காட்டுகிறதே தவிர மக்கள் நலனுக்காக இணக்கமாகச் செயல்படவில்லை. டெல்லிக்குச் சென்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேட்டி தருகிறார். அவருக்கு ஒரு வேண்டுகோள் அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை. இன்றுகூட இரு விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். உடனே, தற்கொலைகளைத் தடுத்தாக வேண்டும். இனியாவது, ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்’’ என்றார்.