Published:Updated:

நாடாளுமன்றத்தில் ஏன் நிறைவேறவில்லை பெண்களுக்கான இடஒதுக்கீடு?

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்வது பற்றியான விவாதங்கள் மட்டும் நீடித்துக் கொண்டிருக்கின்றதே தவிர தீர்மானம் நிறைவேறவில்லை. 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு என்ற மாய எண் காத்துக்கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் ஏன் நிறைவேறவில்லை பெண்களுக்கான இடஒதுக்கீடு?
நாடாளுமன்றத்தில் ஏன் நிறைவேறவில்லை பெண்களுக்கான இடஒதுக்கீடு?

வாக்காளர் பட்டியலில் பெண்கள் எண்ணிக்கை ஆண்களுக்குச் சமமாக  47 சதவிகிதம் உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு 11 சதவிகிதமாகத்தான் உள்ளது. இப்போதும்  நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்வது பற்றியான விவாதங்கள் மட்டும் நீடித்துக்கொண்டிருக்கிறதே தவிர, தீர்மானம் மட்டும் நிறைவேறவில்லை. 20 ஆண்டுகளாக  நாடாளுமன்றத்தில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு என்ற மாய எண் காத்துக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் தொடங்கும் கொள்கைகள் எல்லாம் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரவி ஒலிக்கும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான தீர்மானம் தமிழகச் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அவற்றை முதலில் நடைமுறைப்படுத்திக் காட்டியது கேரளம். இன்றைய திராவிடக் கட்சிகளின் தொடக்கப் புள்ளியாக இருக்கிற நீதிக்கட்சியின் காலத்தில் பெண்களுக்கான வாக்குரிமை மசோதா, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. சில நாடுகள் சுதந்திரமடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் சுதந்திரமடைந்த உடனே பெண்களுக்கான வாக்குரிமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் இடஒதுக்கீட்டுக்கான மசோதா, முன்னரே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில் மொத்தமுள்ள 147 உறுப்பினர்களில் 12 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்தச் சமநிலையற்ற விகிதாசாரத்தைக் குறைக்கப் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை, நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு புதிதாக நிறைவேற்றியுள்ளது. பல மாநில அரசுகள் இதற்கான மசோதாவை நிறைவேற்றினாலும், நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா இன்னமும் நிலுவையில்தான் உள்ளது.

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் இடமாக நாடாளுமன்றம்தான் செயல்படுகிறது. ஜனநாயகத்தில் அதிகாரங்கள் வாக்காளர்களிடமே வழங்கப்பட்டுள்ளன. அந்த வாக்குவங்கி அரசியலை, பெண்கள் முழுமையாகப் பயன்படுத்த இன்னும் ஆரம்பிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்போது பெண்களுக்கான அதிகாரப் பகிர்வு அதிகரிக்கப்படும். தங்களுக்கான உரிமைகளை நாடாளுமன்றத்தில் கேட்டுப்பெறுவதற்கான வாய்ப்பாக இவை அமையும்.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் பல சர்ச்சையான நிகழ்வுகள் அரங்கேறின. ஏற்கெனவே பெண்கள் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் இடத்தைப் பெற்றுள்ளனர். இந்த வேகத்தைத் துரிதப்படுத்தவே மூன்றில் ஒரு பங்கு என்ற எண்ணிக்கை வரையறுக்கப்பட்டது. ஒருபுறம், இந்த ஒதுக்கீட்டின் அளவு அதிகம் என்றும், 33 சதவிகிதத்தை 15 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்பது பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டன. மற்றொரு புறம், பெண்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு பற்றியான பிரச்னைகள் எழுந்தன. தமிழகத்தைச் சார்ந்த திராவிடக் கட்சிகளும், சி.பி.எம். போன்ற இடதுசாரி அமைப்புகளும் உள்ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாகத் திரண்டு குரல்கொடுத்தன.

அதிகாரமற்றவர்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருவதற்காக இந்தியா, `குடியரசு' என்ற கொள்கையைக் கையில் எடுத்துக்கொண்டு எழுபதாம் ஆண்டை நெருங்குகையில், இன்னமும் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்பது போன்ற நிலைகள் அதிகாரப் பரவலாக்கலைக் கேள்விக்குள்ளாகிறது.

இதுகுறித்து எழுத்தாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., ``ஒடிசா அரசு பெண்களுக்கு வழங்கியிருக்கும் இடஒதுக்கீட்டை வரவேற்கிறேன். ஆனால், இதே மசோதா பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் இருப்பதுதான் வருத்தமளிக்கிறது. இந்தத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போனதற்குக் காரணம், அதில் ஏற்பட்ட உள்ஒதுக்கீடு பற்றியான பிரச்னைகள்தான். பெண்கள் அமைப்புகள் மௌனம் கலைத்து உள்ஒதுக்கீடு பற்றி விவாதிக்க வேண்டும். தகுதி அடிப்படையில்தான் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றால், பெண்களுக்கு இடஒதுக்கீடு எதற்கு? எல்லாச் சமூக, பொருளாதார பின்னணியைச் சார்ந்த பெண்களையும் அரசியலில் பங்கெடுக்கச் செய்வதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும். மெரிட் அடிப்படையில்தான் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றால், இப்போது இருப்பவர்கள் எல்லாம் தகுதியானவர்கள்தானா” என்றார் ஆவேசமாக.

பெண்களுக்கான இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட வேண்டும்.