Published:Updated:

`எங்க புள்ளைங்க படிச்சும் எந்தப் பிரயோஜனமுமில்லை!'- கண்கலங்கும் பழங்குடியின மக்கள்

`எங்க புள்ளைங்க படிச்சும் எந்தப் பிரயோஜனமுமில்லை!'- கண்கலங்கும் பழங்குடியின மக்கள்
`எங்க புள்ளைங்க படிச்சும் எந்தப் பிரயோஜனமுமில்லை!'- கண்கலங்கும் பழங்குடியின மக்கள்

``கயிறு மேல நடந்து வித்தைக் காட்டி, எங்களை மாதிரியே எங்க புள்ளைங்க வாழ்க்கையும் வீணாப் போயிடக் கூடாதுன்னு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்க வெச்சோம். ஆனா. இன்றைக்கு எங்க புள்ளைங்க படித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை” எனக் கலங்குகின்றனர் பழங்குடியின மக்கள்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் தாலுகா, பெரியகரட்டுப்பாளையம் எம்.ஜி.ஆர் நகர்ப் பகுதியில் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்கள், சர்க்கஸ் தொழிலை விட்டுவிட்டு, தற்போது கட்டட வேலை, கூலி வேலை எனக் கிடைக்கின்ற வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும், தங்களுடைய குழந்தைகள் படித்து வாழ்க்கையில் ஏற்றம் காண வேண்டுமெனப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைத்தும் வருகின்றனர். ஆனால், சாதிச் சான்றிதழ் குளறுபடியால் படித்து முடித்தும் வேலை கிடைக்காமல் கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலையிலேயே எங்கள் குழந்தைகள் இருக்கின்றனர் எனக் கண்ணீர் வடிக்கின்றனர் பழங்குடியின மக்கள். இந்தப் பிரச்னை தொடர்பாக ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவைச் சந்தித்து மனு ஒன்றையும் அளித்திருக்கின்றனர்.

இது சம்பந்தமாகப் பெரியகரட்டுப்பாளையம் ஊர்த் தலைவர் மகாலிங்கத்திடம் பேசினோம். ``கோபி தாலுகா, பெரியகரட்டுப்பாளையம் பகுதியில் எங்க இனத்தைச் சேர்ந்த 915 பேர் வசித்து வருகிறோம். நாங்கள் ஊர் ஊராகப் போய் சர்க்கஸ் போட்டுப் பிழைப்பு நடத்திக்கிட்டு வந்தோம். `குழந்தைகளை வச்சி சர்க்கஸ் நடத்தாதீங்க. உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செஞ்சித் தருகிறோம். குழந்தைகளைப் படிக்க வையுங்கன்னு’ அரசாங்கம் சொல்லுச்சி. அதைக்கேட்டு, 2003-ம் ஆண்டு 27 குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்தோம். இதுவரை 285 பேர் படித்து முடிச்சிருக்காங்க. எங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறப்ப சாதிச் சான்றிதழ் கேட்டார்கள். சாதிச்சான்றிதழ் கேட்டு அதிகாரிகளைச் சந்திச்சப்ப, `மலைக்குறவர் - ஆதிதிராவிடர் (எஸ்.சி)ன்னு போட்டுத்தர்றோம்னு சொன்னாங்க’ எங்களுக்குப் பெருசா படிப்பறிவு இல்லாததால், எஸ்.சின்னு சர்டிஃபிகேட் வாங்கிட்டுப் போய்ட்டோம்.

ஆனால், இன்றைக்கு எங்க பிள்ளைகளுக்கு எஸ்.டி சர்டிஃபிகேட் இல்லாததால், வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க மாட்டேங்குது. டிகிரி வரைக்கும் படித்து முடித்த பசங்க எல்லாம் எங்ககூட கூலி வேலைக்குத்தான் வர்றாங்க. நாகப்பட்டினத்தில் உள்ள எங்களோட சொந்தக்காரங்க எல்லாம் மலைக்குறவர் எஸ்.டி சான்றிதழ் வாங்கியிருக்கிறாங்க. எங்களுக்கு எஸ்.டி சான்றிதழ் கொடுத்து, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைச்சா, எங்களோட சமுதாயத்துல வர்ற பிள்ளைங்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கை கிடைக்கும். 20-க்கும் மேற்பட்ட பசங்க ஜிம்னாஸ்டிக் ஸ்போர்ட்ஸ்ல பயிற்சி முடிச்சிருக்காங்க. 3 பசங்க கல்கத்தாவுக்குப் போய் இதுசம்பந்தமான சர்டிபிகேட் கோர்ஸ் முடிச்சிருக்காங்க. ஒருத்தர் அரசாங்க வேலைக்குப் போய்ட்டா கூட மத்தப் பசங்களுக்கு நம்பிக்கை வந்திடும். நாங்க ஒரு ஊர்ல சர்க்கஸ்க்கு டென்ட் அடிச்சோமுன்னா, அந்த ஊரே வந்து எங்களை ஆச்சர்யமா பார்த்துட்டு போவும். எங்க சர்க்கஸ் போடுவீங்கன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. பேசாம, கயிறு மேல நடந்தே வாழ்க்கையை முடிச்சிருக்கலாம்னு சில சமயம் மனசுக்குள்ள தோணுது. எங்க ஜனம் கரையேற அரசாங்கம்தான் உதவி செய்யணும்” என்றார்.