Published:Updated:

`அதுதான் வேண்டாம் என்று சொல்லிவிட்டோமே!' - தமிழிசை முயற்சியால் கொதித்த ஸ்டாலின்

`வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் சொல்வதைக் கேட்டு, உங்களை அழித்துக் கொள்ள வேண்டாம். தி.மு.க-வை மனதில் வைத்துத்தான் மேலிடத்தில் பேசி வருகிறேன்' எனக் கூறியிருக்கிறார் தமிழிசை

`அதுதான் வேண்டாம் என்று சொல்லிவிட்டோமே!' - தமிழிசை முயற்சியால் கொதித்த ஸ்டாலின்
`அதுதான் வேண்டாம் என்று சொல்லிவிட்டோமே!' - தமிழிசை முயற்சியால் கொதித்த ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பை வேறுவிதமாகப் பேசத் தொடங்கியுள்ளனர் தமிழக பா.ஜ.க-வினர். `தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைவதையே நாங்கள் விரும்புகிறோம். அண்ணன் (ஸ்டாலின்) விரும்பினால், அவருடன் பேசத் தயாராக இருக்கிறேன்' என மெசெஜ் அனுப்பியிருக்கிறார் தமிழிசை. 

காவிரி டெல்டா மாவட்டங்களை நிலைகுலைய வைத்திருக்கிறது கஜா புயல். இதனால் கூடுதல் நிதி கேட்டு நேற்று பிரதமரைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட தினகரன், `பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறியாமல், இழப்புகளை மதிப்பீடு செய்யாமல், அவசர அவசரமாக முதலமைச்சர் டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவா என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார். 

``தினகரன் எழுப்பியுள்ள சந்தேகம் நியாயமானது. இந்தமுறை நடந்த டெல்லி சந்திப்பு, எடப்பாடி பழனிசாமிக்குத் திருப்தி அளிக்கவில்லை. பிரதமரின் செயல்பாடுகளும், `அ.தி.மு.க-வோடு நாங்கள் நெருக்கமாக இல்லை' என்பதை உணர்த்துவது போலவே இருந்தது" என விவரித்த தமிழக பா.ஜ.க-வின் முன்னணி நிர்வாகி ஒருவர், ``நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் அணிசேருவதற்காகக் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர் பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்கள். இதற்காக நிதின் கட்கரி மூலமாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு எந்தவித அசைவையும் ஸ்டாலின் வெளிக்காட்டவில்லை. 

இதுதொடர்பாக, தி.மு.க-வின் அடுத்தகட்டத் தலைவர்களுடன் பேசிய தமிழிசை, ``நீங்கள் எங்களுடன் கூட்டணி சேர வேண்டும். 99-ல் நாம் வெற்றி பெற்றதுபோல இந்தமுறையும் வெற்றி பெறுவோம். நீங்கள் பெறக் கூடிய வாக்குகளில் பத்து சதவிகிதம் மோடி தலைமைக்கு வரக் கூடியவை. அவை கருணாநிதி தலைமைக்கும் மோடி தலைமைக்கும் உள்ள பொதுவான வாக்குகள். `முஸ்லிம், கிறிஸ்துவ மக்கள் மத்தியில்தான் வாக்குகள் இருக்கின்றன' என நீங்கள் நினைக்க வேண்டாம். தமிழகத்தில் காங்கிரஸ் பிளவுபட்ட பிறகு அங்கு 3 சதவிகித வாக்குகள்தான் இருக்கின்றன. இதை ஸ்டாலின் உணர்ந்து கொண்டால் போதும்.

இப்போது கிறிஸ்துவ, முஸ்லிம்கள் வாக்குகள் எல்லாம் தினகரன் பின்னால் போய்விட்டன. எங்கள் முயற்சிகளுக்கு, நீங்கள்தான் பிடிகொடுக்காமல் இருக்கிறீர்கள். `அ.தி.மு.க-வுடன் எங்களது கூட்டணி இன்னும் முடிவாகவில்லை' என்ற சமிக்ஞையை உங்களுக்குத்தான் கொடுக்கிறோம். காங்கிரஸ் கட்சியோடு சேருவதால் வெற்றி கிடைக்கப் போவதில்லை. வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் சொல்வதைக் கேட்டு, உங்களை அழித்துக் கொள்ள வேண்டாம். தி.மு.க-வை மனதில் வைத்துத்தான் மேலிடத்தில் பேசி வருகிறேன். இதுதொடர்பாக, அண்ணனிடம் (ஸ்டாலின்) பேசுங்கள். நானும் அவரிடம் பேசத் தயாராக இருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார். 

இந்த முயற்சிகளுக்குப் பிறகும் ஸ்டாலின் தரப்பில் எந்தப் பதிலும் வரவில்லை. இதையடுத்துத் தொடர்ந்து பேசிய பா.ஜ.க நிர்வாகிகள், ` மத்திய அதிகாரம் இல்லாமல் தமிழகத்தில் எதுவும் செய்ய முடியாது. கொள்கை..கொள்கை என நீங்கள் இன்னமும் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். கருணாநிதியோடு கூட்டணி வைத்து நாங்கள் வெற்றி பெறவில்லையா. அப்போது இருந்ததைவிட இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம். எதிர்ப்பு வாக்குகள் சிதறத்தான் செய்யும். எடப்பாடியும் தினகரனும் தங்களது பலம் தெரியும் வரையில் ஒன்று சேர மாட்டார்கள். இதைப் பயன்படுத்தி நாம் வெற்றி பெற்றுவிடலாம்' எனப் பேசியுள்ளனர். தொடர்ந்து நடக்கும் தூது முயற்சியால் ஒருகட்டத்தில் கொதிப்படைந்துவிட்டார் ஸ்டாலின். `அதுதான் வேண்டாம் எனச் சொல்லிவிட்டோமே..பிறகு ஏன் தொடர்ந்து கேட்கிறார்கள்?' என சீனியர்களிடம் எரிச்சலோடு பேசியிருக்கிறார். இருப்பினும், தூது முயற்சியிலிருந்து தமிழிசை பின்வாங்கவில்லை" என்றார் விரிவாக.