Published:Updated:

“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்!” - தா.பாண்டியன் நினைவலைகள்

“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்!” - தா.பாண்டியன் நினைவலைகள்
பிரீமியம் ஸ்டோரி
“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்!” - தா.பாண்டியன் நினைவலைகள்

“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்!” - தா.பாண்டியன் நினைவலைகள்

“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்!” - தா.பாண்டியன் நினைவலைகள்

“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்!” - தா.பாண்டியன் நினைவலைகள்

Published:Updated:
“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்!” - தா.பாண்டியன் நினைவலைகள்
பிரீமியம் ஸ்டோரி
“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்!” - தா.பாண்டியன் நினைவலைகள்

27.07.2018...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பதவியேற்று 49 ஆண்டுகளை நிறைவுசெய்து, 50-வது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளார் கருணாநிதி. வெற்றி, தோல்வி, சாதனை, சோதனை... என தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பில் அரை நூற்றாண்டைத் தொடும் கருணாநிதியுடனான தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்...


‘‘தன் முதல் திரைப்படமான ‘பராசக்தி’ திரைப்படத்துக்குக் கருணாநிதி எழுதிய வசனங்கள் தமிழகத்தையே உலுக்கின. ‘பராசக்தி’ திரைப்பட வசனங்கள் திரைப்படம் என்ற அளவையும் தாண்டி, தெருக்கள், திருமண விழாக்கள் எனத் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் முழங்கிக் கொண்டிருந்தன. அந்தக் காலகட்டத்தில், தலை நிறையச் சுருள் முடிகொண்ட இளைஞர் கருணாநிதி, மேடையேறிப் பேச ஆரம்பித்தால், மற்றவர்களை விட அதிகமான கைதட்டல்களைப் பெறுவார்.

“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்!” - தா.பாண்டியன் நினைவலைகள்

1948 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அடக்குமுறைகளும் ஏவிவிடப்பட்டிருந்தன.  அதுகுறித்துப் பேசவோ, நடக்கிற சம்பவங்களைக் கண்டிக்கவோ கம்யூனிஸ்ட்டுகள் மேடையேற முடியாது. சேலம் சிறைச்சாலையில், அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கம்யூனிஸ்ட் தோழர்கள் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுகுறித்து மதுரைக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதைக் கேட்ட ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். கம்யூனிஸ்ட் தோழர்களேகூட அவ்வளவு ஆவேசமாக, உணர்ச்சிவசமாகப் பேசியிருப்பார்களா என்பது சந்தேகம்.

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தியாகம், அந்தக் கட்சியின் தேவை என்பதையெல்லாம் குறிப்பிட்டவர், ‘பொதுவுடைமை வேண்டும்’ என்றும் பேசினார். ‘தி.மு.க-வின் நோக்கமும் பொதுவுடைமைதான்... இந்த ஆட்சியைப் புரட்சியின் மூலம் தூக்கியெறிந்துவிடலாம் என கம்யூனிஸ்ட்கள் நினைக்கிறார்கள். எங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை. மக்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவந்து, ஆட்சியைக் கைப்பற்றி, படிப்படியாக பொதுவுடமையைக் கொண்டுவருவதுதான் எங்களது நோக்கமும்கூட’ என்று முடித்தார். அன்றைக்கு அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும் இப்போதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

1957-ம் ஆண்டில்தான், தி.மு.க முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது வெற்றிபெற்ற 15 பேரில் கருணாநிதியும் ஒருவர். அதன்பிறகு, இப்போது வரையில் அவர் பங்கேற்ற அனைத்துத் தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். ஒருமுறைகூட அவர் தோல்வியைக் கண்டதில்லை. இது இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆச்சர்யம்.

பிரதமர் பதவியில் இருந்தபோதே இந்திரா காந்தி தோல்வியடைந்துள்ளார். தோழர் ஜீவா, பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்களும்கூடத் தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின், தி.மு.க சர்வமாக முறியடிக்கப்பட்ட போதும்கூட, கருணாநிதி மட்டும் வெற்றி பெற்றார். எனவே, எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம் அவர்.

அவரே வேடிக்கையாகச் சொல்வார்... ‘என்னை வாழ்க என்று சொல்பவர்களும் கருணாநிதி வாழ்க என்றுதான் சொல்வார்கள். ஒழிக என்று சொல்பவர்களும் கருணாநிதி ஒழிக என்றுதான் சொல்வார்கள். ஆக, இருவர் மனதிலும் நான் இருந்துகொண்டே இருக்கிறேன்’ என்று. அது மிகப்பெரிய உண்மை. ஏனெனில், தமிழக அரசியல் வரலாற்றில், கடந்த 60 ஆண்டுகளாக அவரை ஆதரித்தும் எதிர்த்தும்தான் தேர்தல் பிரசாரங்கள் இருந்துள்ளன.

“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்!” - தா.பாண்டியன் நினைவலைகள்

தேர்தல் சமயங்களில், ‘நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக’, ‘தாலிக்குத் தங்கம் இல்லை... தாளிக்க வெங்காயம் இல்லை’ என்பனபோன்ற சரியான சொற்களை மிகச் சரியான நேரத்தில் முழக்கங்களாக எழுப்புவார்.

கருணாநிதிக்கு அரசியல் வாழ்வில் சவால் என்று வந்தது தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்ததுதான்; அல்லது எம்.ஜி.ஆரை நீக்கியதுதான். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க-வை தவிர, தேசிய அரசியல் கட்சிகளால்  தி.மு.க-வை தேர்தலில் தோற்கடிக்க முடியவில்லை. அ.தி.மு.க-வையும் தி.மு.க தவிர வேறு எந்தக் கட்சியாலும் தோற்கடிக்க முடியவில்லை. காரணம்... தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிற முறையிலேயே அவரது அரசியல் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டுவந்துள்ளன.

பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர் அல்ல அவர்... ஆனால், தமிழ் இலக்கியத்தில் சிறந்த படைப்பாளியாக, இத்தனை அரசியல் பணிகளுக்கிடையேயும் இலக்கியங்கள் படைத்திருக்கிறார்.

இந்திய அரசியல் வரலாற்றில், ‘உடன்பிறப்பே...’ என்று தலைப்பிட்டு இடைவெளியே இல்லாமல், நாள்தோறும் தன் கட்சித் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதிய ஒரே அரசியல் தலைவர் கருணாநிதிதான். அவரை ஆதரிப்பவர்களும் சரி... எதிர்ப்பவர்களும் சரி... என்றைக்குமே அவரது தனித்திறமையை குறைத்து மதிப்பிட்டதே இல்லை. எழுத்தாற்றல், பேச்சாற்றல், நிர்வாகத் திறமை, புதிய திட்டங்களை அறிவித்தல்... என மக்களின் மனதில் பதிவதற்கு இவை அனைத்திலும் அவர் முதலிடத்திலேயே இருந்துவந்துள்ளார்.

கூட்டணி அமைப்பதிலும் தோழமைக் கட்சி களுக்கு இடம் ஒதுக்குவதிலும்கூட மகா சாமர்த்தியசாலி. எடுத்துக்கொண்ட கடமையை நிறைவேற்றுவதில், அவர் காட்டும் சுறுசுறுப்பு அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது. அவரை 24 மணி நேர அரசியல்வாதி என்றுதான் சொல்ல வேண்டும். தூங்கும்போதும் அவரைத் தட்டியெழுப்பினால், உடனடியாக ஓர் அரசியல் கருத்தை வெளியிடக்கூடியவர்.

95 வயதிலும் கட்சித் தலைமை, பல்வேறு பொறுப்புகளுக்கு மத்தியில், தனக்கு ஏற்பட்டுள்ள நோயையும் எதிர்த்து அவர் போராடிக் கொண்டிருப்பது அவரது உள்ள உறுதியைக் காட்டுகிறது. தி.மு.க-வுடன் நாங்கள் கூட்டணியில் இல்லாதபோதும்கூட இலக்கியக் கூட்டங்கள், கண்டனக் கூட்டங்களுக்கு என்னை அவர் அழைத்திருக்கிறார். அப்போது, மேடையில் அருகருகே அமர்ந்திருக்கும்போது, ‘கட்சிரீதியில் நாம் இரண்டு பேரும் பக்கத்தில் உட்கார முடியவில்லை. ஆனால், தமிழன்னை நம் இருவரையும் இங்கே அருகருகே உட்கார வைத்திருக்கிறாள்’ என்று மெதுவாகச் சொல்வார்.

“எந்தப் புயலிலும் சாயாத அரசியல் ஆலமரம்!” - தா.பாண்டியன் நினைவலைகள்

எனக்கு ஒரு மகன்; இரு மகள்கள். மூவரின் திருமணங்களிலும் கலந்துகொண்டு வாழ்த்துக் கூறியவர் அவர். கூட்டங்களில் பேசும்போது, ‘என்னை தா.பாண்டியன் தாக்கி எழுதியதையும் படித்து ரசித்திருக்கிறேன். தாங்கி எழுதியதையும் படித்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் அவரது தமிழ் எனக்குப் பிடிக்கும்’ என்று அவரே சொல்லியிருக்கிறார்.

கருணாநிதியின் வாழ்க்கைத் தனிப்பட்ட வாழ்க்கை அல்ல... தமிழகத்தைத் தாண்டி இந்திய அரசியல் தலைவர்களின் வாழ்க்கையிலும் அவர் பங்கெடுத்துள்ளார். மத்திய ஆட்சியிலும் தி.மு.க பல ஆண்டுகள் பெரும்பங்காற்றியுள்ளது. ஆட்சியில் இருந்தபோதும் சரி... எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி... தனது பகுத்தறிவுப் பாதையிலிருந்து அவர் விலகியதே இல்லை.

ஒருமுறை தேர்தல் சமயத்தில், சொந்த ஊரான திருக்குவளைக்கு பிரசாரத்துக்குப் போனபோது என்னையும் உடன் அழைத்துச்சென்றிருந்தார். நெற்றியில் திருநீறு பூசி, தலையில் ஜடை போட்டு, பள்ளிக்குச் செல்வதற்காக ஒரு கைப்பையை ஒரு கையில் பிடித்தபடித் தன் அப்பாவின் விரல்களைப் பிடித்தவாறு நின்றிருக்கும் சிறுவயதுப் புகைப்படத்தைக் காட்டி மகிழ்ந்தார்.’’

- கண்கள் கலங்குகின்றன தா.பாண்டியனுக்கு!

- த.கதிரவன்
படங்கள்: தி.குமரகுருபரன்