Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

ஆர்.அண்ணாதுரை, கரூர்.

தண்ணீர் வேண்டும் என்று கதறிக்கொண்டே இருந்தோம். ஆனால், தற்போது பொங்கிவரும் காவிரி நீரை வீணாகக் கடலில் கலக்க விடுகிறோமே?


உங்களின் ஆதங்கம் சரி. ஆனால், வீணாகக் கடலில் கலக்கவிடுகிறோம் என்கிற சொல்லாடல் தவறு. சரிவரப் பயன்படுத்தாமல் இருக்கிறோமே என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். மழையால் ஆறுகளில் பெருக்கெடுக்கும் நீரானது, கடலில் சென்று கலப்பதுதான் இயற்கையின் ஏற்பாடு. அதுதான் இயற்கைச் சமநிலையை உறுதிப்படுத்தும். அதை வழியில் தடுத்து நிறுத்தி, போதுமான அளவுக்குப் பயன் படுத்திக்கொள்வதில் தவறில்லை. ஆனால், கடலுக்கே செல்லவிடாமல் தடுப்பது, சுற்றுச் சூழலுக்கே கேடான செயல். ஏரி, குளங்களில் சேமிக்கவும், தடுப்பணை களை கட்டவும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.  அதற்கெல்லாம் ஆள்வோருக்கு எங்கே நேரமிருக்கிறது?

கழுகார் பதில்கள்!

செ.சோமசுந்தரம், சென்னை-91.

மருத்துவர் ராமதாஸை விமர்சனம் செய்கிறார் தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் துரைமுருகன். ஆனால், எந்த மறுப்போ, விளக்கமோ சொல்வதில்லையே ராமதாஸ்?

தான் பதில் தரும் அளவுக்கு துரைமுருகன் பெரிய ஆள் இல்லை என்று ராமதாஸ் நினைத்திருக்கலாம். அல்லது ‘குஞ்சு மிதித்துக் கோழி முடமாகிவிடாது’ என்பதும் காரணமாக இருக்கலாம்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.


முறைகேடு நடக்காத துறை எது?


இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால், அதை ஆரம்பிப்பதற்காகவே ஏகப்பட்ட முறைகேடுகளைச்  செய்ய வேண்டியிருக்கும், பரவாயில்லையா?

கே.முரளி, சென்னை-63.

‘ஆகஸ்ட் 31-ம் தேதி 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்’ என்று ச.ம.க தலைவர் சரத்குமார் கூறியிருப்பது பற்றி?


வில்லன், கதாநாயகன், குணச்சித்திர நடிகர், கெஸ்ட் ரோல் என எல்லாவற்றிலும் நடித்து முடித்துவிட்டார். காமெடியன் ரோல் மட்டும்தான் பாக்கி.

கழுகார் பதில்கள்!

பாரதி சுந்தர், குறண்டி.

எல்லோரும் எல்லா விஷயங்களிலும் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இது எங்கே போய் முடியும்?


எங்கேயும் பொய் முடியாது.

மு.மதிவாணன், செங்கல்பட்டு.

ரஜினி, அரசியலில் குதித்து பல மாதங்களாகின்றன. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லையே?


அதன்பிறகுதான் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். மேற்கொண்டு இரண்டு படங்களுக்குப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல். நீங்கள் கவலையே படத் தேவையில்லை, மேலும் மேலும் இப்படி முன்னேற்றத்தைக் காட்டிக்கொண்டேதான் இருப்பார் அவர்.

எஸ்.எம்.சிராஜுதீன், வாணியம்பாடி.


கருணாநிதி?


ஆயிரமாயிரம் வீடியோக்கள், லட்சோப லட்சம் கட்டுரைகள், கோடானுகோடி வாட்ஸ்அப்கள் என்று படம்பிடித்தாலும், எழுதினாலும் போதாது.

முத்துக்கிருஷ்ணன், வேலூர்-7.

மேட்டூர் அணை நிரம்பியதும் செய்தித்தாள்களில் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்க விளம்பரம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டாரே?

ஆமாம்! ‘நீர்மட்டத்தை 120 அடிக்கு உயர்த்தி, தமிழர்களின் மனதில் 1,200 அடி உயர்ந்த உத்தமரே’ என்று போற்றிப் பாடியிருக்கலாமே. ஏதாவது ஒரு குக்கிராமத்தில் சாக்கடையைத் தூர்வாரினால்கூட, எடப்பாடி பழனிசாமி படத்துடன் விளம்பரம் தரும் தற்போதைய மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள், இதை எப்படி கோட்டைவிட்டார்கள்? உடனடியாக தமிழக அரசின் மக்கள் தொடர்புத் துறையின் உயர் பொறுப்பில் உங்களை நியமிக்கச் சிபாரிசு செய்கிறேன்.

 நெல்லை தேவன், தூத்துக்குடி.

வரவிருக்கும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் அ.தி.மு.க இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா?


இன்றைக்கு தமிழகத்தில் மிகவும் பசையுள்ள கட்சிகளில் முதலிடத்தில் இருப்பது அ.தி.மு.க-வும், தினகரனின் அ.ம.மு.க-வும்தான். இதில் ஆட்சியையும் கையில் வைத்திருப்பதால் அ.தி.மு.க அமுத சுரபியாகவே இருக்கிறது. அத்தகைய கட்சியுடன் கூட்டுசேர எந்தக் கட்சிக்குத்தான் கசக்கும்? ஆனால், ஒப்பீட்டு அளவில் காங்கிரஸைவிட அ.தி.மு.க பெரிய கட்சி என்பதால், கூட்டணித் தலைமையை காங்கிரஸுக்கு அ.தி.மு.க விட்டுக்கொடுக்காது!

ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி-25.


ஆறுமுகசாமி ஆணையமும் தீவிரச் சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறதுபோல?


ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டுவருவதாக அல்லாமல், ஜெயலலிதா எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்பதை ஆராய்ச்சி செய்யும் இடமாக அந்த ஆணையம் மாறியிருக்கிறது. விசாரணைக்குத் தொடர்பில்லாத விஷயங்களையே விவாதிக்கிறார்கள். இதை வைத்து ஆணையத்தையே நையாண்டி செய்கிறீர்களா? எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கும் ஒரு சம்மன் அனுப்பிவிடப்போகிறார்கள். பிறகு, உங்களுக்கும் தீவிரச் சிகிச்சைப் பிரிவு அறை ஒதுக்கப்பட நேரிடலாம்.

எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

ஆட்சிக்கு முடிவு நெருங்கிவிட்டதா என்ன?


ஆமாம்... இன்னும் ஒன்பதே மாதங்கள்தான்! உங்கள் கேள்வி ‘மத்தி’யமாகத்தானே இருக்கிறது.

மனோகர், திருச்சி.

மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்ளா’ என மாறியுள்ளதாமே?

இன்னும் மாறவில்லை. மாற்றுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்ததும் பாரம்பர்ய பெயரைக் கொண்டு வருவதற்காகவும், இந்திய மாநிலங்களின் வரிசைப்பட்டியலில் ஆங்கில எழுத்துக்களின்படிக் கடைசி இடத்தில் (வெஸ்ட் பெங்கால்) மாநிலம் இருப்பதைத் தவிர்ப்பதற்காகவும் பெயர் மாற்றத்தை அறிவித்தார். ஆனால், மத்திய அரசு இதற்குத் தடை போட்டுக்கொண்டே இருக்கிறது. முதலில், ‘பச்சிம் பங்கா’ என்று பெயர் சூட்டி, சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினார்கள். நிராகரித்துவிட்டது மத்திய அரசு. அடுத்து, ஆங்கிலத்தில் பெங்கால், இந்தியில் பங்கால், வங்காளத்தில் பங்ளா என்று மாற்றினார். அதுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூன்று மொழிகளிலுமே பங்ளா என்று மாற்றக்கோரி இப்போது மூன்றாவதாகத் தீர்மானத்தை அனுப்பியுள்ளார் மம்தா.

கழுகார் பதில்கள்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

‘‘தி.மு.க ஆட்சியில் மாமன், மச்சான், அண்ணன், தம்பி, சம்பந்திகளுக்கெல்லாம் டெண்டர் கொடுக்க வில்லை’’ என்கிறாரே அந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்?

‘‘தி.மு.க ஆட்சியிலும் என் மகனின் சகலை குடும்பத்துக்கு டெண்டர் கொடுத்தார்கள்.

அ.தி.மு.க ஆட்சியில் கொடுத்ததைவிட அதிகமாகவே கொடுத்தார்கள்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டாரே... அப்புறம் என்ன?

வீ.ஹரிகிருஷ்ணன், திருச்சி-14.

தமிழகத்தில் நடந்த வருமானவரித் துறை ரெய்டுகளில் கட்டுக்கட்டாக பணம், பாளம் பாளமாகத் தங்கக் கட்டிகள் பிடிபட்டுக்கொண்டிருப்பது எதைக் காட்டுகிறது?


‘வளமான தமிழக’த்தை உருவாக்க, அல்லும் பகலும் பாடுபடும் ‘அன்பு நெஞ்சங்கள்’ பெருகிக்கொண்டே இருக்கின்றன.

ஏ.பார்வதி, திருவாரூர்.

ஆபீஸ் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வேலைப்பளு இருந்தாலும், பலரும் புன்சிரிப்புடன் நடந்துகொள்கிறார்கள். ஆனால், வேலை முடிந்து வீடு திரும்பும் கணவர்கள், வீட்டில் அப்படி நடந்து கொள்வதில்லையே, ஏன்?


கணவர்கள் மட்டுமா? வேலையிலிருந்து திரும்பும் மனைவிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள். அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் டென்ஷன் வரத்தான் செய்யும். அவற்றையெல்லாம் துரத்தியடிக்க வழி தெரிந்திருந்தால் பிரச்னையே இல்லை.

‘மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’ எழுதிய சுவாமி சுகபோதானந்தா சொல்லும் ஒரு கதை இங்கே பொருத்தமாக இருக்கும்.

ஒரு விவசாயி, ‘‘என் மனைவி ஆடு, மாடு, கோழி என்று வளர்க்கிறாள். அதனால் வீடு முழுவதும் மூச்சுத் திணறும் அளவுக்கு நாற்றம் அடிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்’’ என்று சுஃபி குருவிடம் கேட்டார்.

‘‘உன் வீட்டின் ஜன்னலைத் திறந்துவிடு... நாற்றம் வெளியேறட்டும்’’ என்றார் குரு.

‘‘ஜன்னலைத் திறந்தால், அப்புறம் நான் வளர்க்கும் புறாக்கள் பறந்துவிடுமே’’ என்றாராம் அந்த விவசாயி.

பலரும் பல சமயங்களில் புறா என்கிற அதிக முக்கியத்துவமற்ற விஷயத்தை எண்ணிக்கொண்டே, அறிவு ஜன்னலைத் திறக்காமல் இருந்து விடுகிறோம். விளைவு, மூச்சுத்திணற வைக்கிறது டென்ஷன். அறிவு ஜன்னலை அகலமாகத் திறந்துவைப்போம்.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!