Published:Updated:

நீட் தமிழ் வினாத்தாளில் தவறு செய்தது அரசா? மாணவர்களா?

நீட் தமிழ் வினாத்தாளில் தவறு செய்தது அரசா? மாணவர்களா?
நீட் தமிழ் வினாத்தாளில் தவறு செய்தது அரசா? மாணவர்களா?

'மொழிபெயர்ப்புகளில் ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள வினாக்களைப் பார்த்துச் சரிசெய்து கொள்ள வேண்டும்' எனச் சொல்வது எப்படி நியாயமாக அமையும்?

“ஐயா, நான், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வை, 2018 மே 6-ம் தேதி தமிழ் மொழியில் எழுதிய மாணவர். அந்தத் தேர்வுக்கான வினாத்தாளில் வினாக்கள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுக் கேட்கப்பட்டிருந்ததால், அந்த வினாக்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்பது அந்தத் தேர்வெழுதிய பிரதீபா, தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாள்களுக்கு முன், நம்பிக்கையுடன் எழுதிய வரிகள். பிரதீபாவுக்கு நீதியின் மீதிருந்த நம்பிக்கைக்கூட்டை, சமீபத்தில் நீட் தேர்வு தொடர்பாக வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு கலைத்துவிட்டது.

இந்தச் சமூகத்தில் பெண் கல்விக்காக, ராஜாராம் மோகன்ராய் தொடங்கிப் பல தலைவர்கள் காலங்காலமாகத் தொடர்ந்து உழைத்து வந்துள்ளனர். அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவுதான் இன்றைய சமூகத்தில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றம் எனலாம். இந்திய அளவில் நீட் தேர்வை, ஆண்களை விடவும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பெண்களே எழுதிவருவது மகிழ்ச்சி என்றாலும். மற்றொருபுறம் 2017-ல் அனிதா, 2018-ல் பிரதீபா என உயிரிழப்புகளும் தொடருகின்றன.

கல்வியானது தொழில் நிறுவனங்களைப் போன்று வியாபாரமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் தங்களின் மொத்த உழைப்பையும் குழந்தைகளின் கல்விக்காகவே முதலீடு செய்கின்றனர். கல்விக்கான செலவினங்கள் அதிகமாக உள்ள நிலையில், அரசுக் கல்லூரிகள்தான் ஏழைகளின் வாழ்விற்கு அடைக்கலம் தருபவையாக உள்ளன. தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது, தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் பல லட்சம் ரூபாய். 2017-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் பிரதீபா தேர்ச்சி பெற்று, தனியார் கல்லூரிகளில் சேர வாய்ப்புகளிருந்தும் பணமில்லாததால் அது முடியாமல் போனது. அதே பிரதீபா, 2018-ம் ஆண்டில் தமிழில் நீட் தேர்வை எழுதினார். பல வினாக்கள் தமிழ் மொழியில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்ததால் குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால், மனமுடைந்து பிரதீபா தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்திலிருந்து நீட் தேர்வெழுதிய 1,20,000 மாணவர்களில் 24,000 மாணவர்கள் தமிழில் தேர்வெழுதினர். தமிழ் வினாத்தாள்களில் கேட்கப்பட்டிருந்த 49 வினாக்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. உதாரணமாக ‘சிறுத்தையின்’ என்பதை ‘சித்தாவின்’ என மொழிபெயர்ப்பு இருந்தது. இதுபோன்ற வினாக்களால் தேர்வெழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் தேர்வு நடத்திய மத்திய அரசின் அமைப்பிடம் புகார் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், பொது நலவழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, "தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்ததால் அவற்றுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்" என்று சி.பி.எஸ்.இ-க்கு உத்தரவிட்டது. "இரண்டு வாரத்துக்குள் புதிய தரவரிசையை வெளியிட வேண்டும்" என்றும் வற்புறுத்தி ஜூலை 10-ம் தேதி தீர்ப்பு அளித்தது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சார்பாக, இருபது மாணவர்கள் மேல்முறையீட்டுக்குச் சென்றனர். கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கு இடைக்கால தடையை வழங்கியிருந்த உச்ச நீதிமன்றம், இப்போது வழங்கியுள்ள தீர்ப்பில் “மொழிபெயர்ப்பில் ஏதேனும் தவறுகள் இருப்பின் 'விடைகளை எழுதும்போது, ஆங்கில மூலத்தைப் பார்த்துச் சரிசெய்து கொள்ள வேண்டும்' என வினாத்தாள்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, கருணை மதிப்பெண்களை வழங்க முடியாது. மொழிபெயர்ப்புகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இனி வரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

போதுமான அறிவியல் கலைச்சொற்கள் ஆங்கிலத்தில் தெரியாததால்தான் 'நீட்' தேர்வைத் தமிழில் எழுத மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.அவ்வாறு எழுதத் தேர்ந்தெடுத்த பிறகும் 'மொழிபெயர்ப்புகளில் ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள வினாக்களைப் பார்த்துச் சரிசெய்து கொள்ள வேண்டும்' எனச் சொல்வது எப்படி நியாயமாக அமையும்?

இதுகுறித்து 'டெக் ஃபார் ஆல் (Tech4All)' அமைப்பின் நிறுவனர் ராம் பிரகாஷ் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது. நீட் தேர்வுக்கான கேள்வித்தாள்களில் தவறுகள் இருப்பின், ஆங்கிலத்தில் உள்ளதைப் பார்த்துச் சரி செய்து கொள்ள வேண்டும்' எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. இது மாதிரியான போட்டித் தேர்வுகளில் முக்கியமானவை நேரம்தான். 49 கேள்விகள் தவறாக உள்ளபோது, இதற்காகவே அதிக நேரம் செலவாகும். இதுமாதிரியான தீர்ப்பு, எதிர்காலத்தில் மாணவர்கள், 'ஆங்கிலத்தில்தான் தேர்வெழுத வேண்டும்' என்ற எண்ணத்தை விளைவிக்கும். மொழிபெயர்ப்பில் மாற்றத்தைக் கொண்டுவர நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. அறிவியல் கலைச்சொற்களைத் தமிழில் சரியாக மொழிபெயர்ப்பது கடினம். இனிவரும் காலங்களில் தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொண்டாலும், இப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் சித்த மருத்துவத்துக்கும் நீட் கொண்டு வரப்போவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் சித்த மருத்துவப் படிப்பே தமிழில் உள்ளபோது ஆங்கிலம் என்பதே தேவைப்படாத ஒன்று” என்றார்.

மொழிபெயர்ப்புகளில் தவறு நிகழாமல்  பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. அதில் தவறு செய்தது அரசா? மக்களா? பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்திற்கு என்ன சொல்லப்போகிறது இந்த அரசு?

அடுத்த கட்டுரைக்கு