Published:Updated:

படேல் சிலைக்கு 3000 கோடி.. குடிசை பகுதியை மீள்கட்டமைக்க சர்வதேச டெண்டரா? - அதிர்ச்சி பின்னணியை விவரிக்கும் தாராவியின் மகன்

படேல் சிலைக்கு 3000 கோடி.. குடிசை பகுதியை மீள்கட்டமைக்க சர்வதேச டெண்டரா? - அதிர்ச்சி பின்னணியை விவரிக்கும் தாராவியின் மகன்
படேல் சிலைக்கு 3000 கோடி.. குடிசை பகுதியை மீள்கட்டமைக்க சர்வதேச டெண்டரா? - அதிர்ச்சி பின்னணியை விவரிக்கும் தாராவியின் மகன்

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மீள்கட்டமைப்பு செய்ய, மகாராஷ்டிரா அரசு சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது. 


 

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் மும்பையில், இதயமாக அமைந்திருக்கும் பகுதிதான் தாராவி. வானுயர ஓங்கி நிற்கும் பிரமாண்ட கட்டடங்கள் மட்டும் மும்பையின் அடையாளம் கிடையாது. முழுக்க முழுக்க உழைக்கும் மக்கள் வசிக்கும் குடிசைகள் நிறைந்த பகுதி தாராவிதான் மும்பையின் உண்மையான அடையாளம். தாராவியில் வசிப்பவர்களில்  பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தாம். தாராவியில் இருந்து மும்பையின் முக்கியப் பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும். மும்பையின் மையப்பகுதியில் அமைந்திருப்பதால், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தாராவியை அபகரிக்கத் திட்டம் தீட்டிவருகின்றன. மகாராஷ்டிரா அரசும்தான். 


 

சில மாதங்களுக்கு முன்னர், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில்  வெளியான  'காலா' திரைப்படம், தாராவி கதையையும் வாழ்வியலையும் பேசியிருந்தது. வளர்ச்சித் திட்டங்கள் என தாராவி மக்களுக்கு அநீதி இழைக்கக் காத்திருக்கும் அரசியல் புள்ளிகள் குறித்தும் காலா அழுத்தமாகப் பேசியது. 

கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு, தாராவியைப் புதுப்பிக்கும் முயற்சியில் மகாராஷ்டிரா அரசு மீண்டும் இறங்கியுள்ளது. மூன்று முறை முயன்றும் அரசுக்கு தோல்வியே மிஞ்சியது. காரணம், அங்கிருக்கும் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இம்முறை மராட்டிய அரசு மீள்கட்டமைப்புத் திட்டம் என்னும் பெயரில் தாராவியை புதுப்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தாராவி மீள்கட்டமைப்பு திட்டத்தைச் செயல்படுத்த சர்வதேச டெண்டர் விட மராட்டிய அரசு முடிவுசெய்துள்ளது. அதாவது, டென்டர் எடுக்கும் சர்வதேச நிறுவனத்தின் கையில், 593 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாராவியை மீள்கட்டமைப்பு செய்யும் பணி முழுவதுமாக ஒப்படைக்கப்படும். இந்த டெண்டருக்கான குறைந்தபட்ச நிபந்தனை ஏலத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.3,150 கோடி. 

இந்த மீள்கட்டமைப்புத் திட்டம்குறித்து   `காலா’ வசன எழுத்தாளர் மகிழ்நனைத் தொடர்புகொண்டு பேசினோம். தாராவியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், சற்று விரிவாகவே விளக்கம் கொடுத்தார்..

`மீள்கட்டமைப்பு திட்டத்துக்கு சர்வதேச அளவிலான முதலீட்டாளர்களை நாங்கள் வரவேற்கிறோம் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்திருக்கிறது. வரப்போகும் அந்த முதலீட்டாளர், தாராவியில் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்யப்போகிறார்கள். முதலீடு செய்த தொகையை முதலீட்டாளர் திரும்பவும் எடுக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். உதாரணமாக 4 சதுரடியில் வீடு கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தால், ஒரு சதுரடியில் வீடு கட்டித் தந்துவிட்டு, மீதமுள்ள 3 சதுரடி இடத்தை அவர்களே எடுத்துக்கொள்வார்கள். அந்த இடத்தில் தனியாக கட்டடத்தை எழுப்பி விற்பனைக்கு விடுவார்கள். எந்த வகையான நஷ்டத்துக்கும் அவர்கள் வரவில்லை. லாபம் ஈட்டுவதற்காகத்தான் அவர்கள் வருகிறார்கள். நாங்கள் இவ்வளவு நாள் வாழ்ந்து உருவாக்கிய நிலத்தை, எங்கிருந்தோ வந்து 3 பங்கு நிலத்தை கபளீகரம் செய்துவிட்டு மிச்சம் இருக்கும் ஒரு பங்கு நிலத்தில் எங்கள் மக்களுக்கு வீடுகட்டித் தருவார்கள். இதுதான் இந்தத் திட்டத்தின் சாரம். 


 

சர்தார் படேல் சிலைக்கு சுமார் 3000 கோடி ரூபாய் ஒதுக்க முடிந்த அரசுக்கு, மக்களுக்காக செலவுசெய்ய காசு இல்லையா? எதற்காகத் தனியார், அதுவும் சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்? அரசு செலவில்தான் அங்கிருக்கும் மக்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும். ஆனால் அரசோ, மக்களிடமிருந்து நிலத்தைப் பறிக்கும் நோக்கில் இந்த வழியைத் தேர்வுசெய்துள்ளது. இதில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம்,  மும்பையில் ரியல் எஸ்டேட் தொழில் கொஞ்சம் மந்தமாகிவிட்டது. இடம் தேவைப்படுகிறது. எனவே 593 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் தாராவி நிலத்தின்மீது கண்கள் பதிந்துவிட்டன. மீள்கட்டமைப்பு என்னும் பேரில் ஒரு சின்ன இடத்தில் அங்கு வசிக்கும் மக்களை அடைத்துவிட்டு, மிச்ச இடத்தில் கட்டடங்கள் எழுப்புவார்கள். எங்கள் நிலம் எங்களுக்குத்தான் சொந்தம். உதவ வேண்டாம். உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும். இதுதான் அங்கிருக்கும் மக்களின் கோரிக்கையும்” என்று முடித்தார் ஆதங்கத்துடன்.