Published:Updated:

``உள்ளாட்சித்தேர்தல் ஏன் அவசியம்?" - கஜா உணர்த்திய உண்மை நிலவரம்!

அதிகாரிகள் ஆரம்பக்கட்டத்தில் ஆர்வம் காட்டிவிட்டு, அடுத்தப் புயலுக்கு புள்ளிவிவரங்களைச் சேகரிக்கப் போய்விடுவார்கள். அப்புறம் அந்தப் பகுதிகளின் நிலை என்ன? அதைக் கண்காணிப்பது யார்? அரசுக்குத் தெரியப்படுத்துவது யார்?

``உள்ளாட்சித்தேர்தல் ஏன் அவசியம்?" - கஜா உணர்த்திய உண்மை நிலவரம்!
``உள்ளாட்சித்தேர்தல் ஏன் அவசியம்?" - கஜா உணர்த்திய உண்மை நிலவரம்!

ள்ளாட்சிப் பிரதிநிதிகளின் முக்கியத்துவத்தை ‘கஜா’ புயல் உணர்த்தி இருக்கிறது. நாகை, புதுக்கோட்டை, தஞ்சை என்று மொத்தம்  ஏழு மாவட்டங்களை அசுரக்கரங்களால் அலசிப்போட்டுச் சென்றிருக்கிறது கஜா. ஊருக்கே உணவளித்த டெல்டா, இப்போது உருக்குலைந்து கிடக்கிறது. 

இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். இன்னும் நிறைய பேர் மருத்துவமுகாம்களில் இருக்கிறார்கள். மரங்கள் சாய்ந்து, மின் கம்பங்கள் சரிந்து, மின் கம்பிகள் அறுந்து எனப் பல இடர்ப்பாடுகளால் புயல் பாதித்த பகுதிகள் நிலைகுலைந்து கிடக்கின்றன. நிலைமை மோசமானது என்றாலும், உலகம் முழுக்க இருந்து உதவிக்கரங்கள் டெல்டாவை தூக்கி வருகின்றன. அரசு, அரசியல் கட்சிகள் தவிர்த்து, எத்தனையோ இயக்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனி மனிதர்கள் எனப் பலரும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறார்கள். களத்திற்குச் சென்றும் பணியாற்றி வருகிறார்கள். 

எப்போதுமே, கள நிலவரங்கள் வேறு மாதிரி இருக்கும். இவர்களில் பலர், நிவாரணப் பொருட்களைப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் ஒப்படைப்பதிலும், பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். ஏனென்றால், உதவி செய்ய வருபவர்களையும் உதவி பெறுவோரையும் சரியாக ஒருங்கிணைக்க, அந்தந்த பகுதிகளில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லை. ”வாங்க தம்பி... இதையெல்லாம் சரி பண்ணணும்..” என்று சுட்டிக்காட்டிச் சொல்ல, பஞ்சாயத்துத் தலைவர் இல்லை. அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் இளைஞர்களே அதையெல்லாம் முடிந்த அளவுக்குச் சமாளித்து வருகிறார்கள்.

’இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அந்தக் கிராமங்களின் ஆன்மா உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில், மாநகராட்சி, நகராட்சி, நகரப் பஞ்சாயத்து, கிராமப் பஞ்சாயத்து என்று பல வகைகள் இருக்கின்றன. இதில் அந்தக் ’கிராமப் பஞ்சாயத்து’ என்பதே மிக முக்கியமானது. அதுதான் ‘கிராமங்களின் ஆன்மா’. எப்போதுமே, அதிகாரிகள் சூழ்ந்த நகர நிர்வாகம் சுறுசுறுப்பாக இயங்கும். ஆனால் கிராமங்கள்?

புயல் முடிந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும், டெல்டா மாவட்டங்களின் உட்பகுதி கிராங்களுக்கு அதிகாரிகள் செல்லவே இல்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது கல்லுக்குடியிருப்பு கிராமம். அந்த மக்கள், செடிவளர்ப்பு தொழிலைப் பிரதானமாகச் செய்து வருபவர்கள். புயலின்போது, மழைநீரில் சிக்கி, மரங்கள் விழுந்து, அத்தனைச் செடிகளும் சேதமடைந்துவிட்டன. ”பழைய நிலை திரும்ப இன்னும் 6 மாதமோ ஒரு வருடமோ ஆகும்” என்கிறார்கள். ”எங்களின் பகுதிக்கு இதுவரை ஒரு அதிகாரியும் வரவில்லை” என்றும் கலங்குகிறார்கள். இப்படி இன்னும் எத்தனை கிராமங்கள்... எத்தனை மக்கள்... எவ்வளவு கண்ணீர்... அவர்களுக்கு, உண்ண உணவு இருக்கிறதா? உடுத்த உடை இருக்கிறதா? உறங்க கூரை இருக்கிறதா? கேள்விகள் அதிகரிக்கின்றன. ஆனால், பதில்கள் இல்லை. 

வார்டு உறுப்பினர், பஞ்சாயத்துத் தலைவர், கவுன்சிலர் என்பதெல்லாம் வெறும் பதவிகள் அல்ல. அவர்கள்தான் கிராம நிர்வாகத்தின் நாடிநரம்புகள். உதவிக்கு ஆயிரம் பேர் இருந்தாலும், ஒருங்கிணைக்க ஒருத்தர் வேண்டும் அல்லவா? ”அதுதான் கிராம நிர்வாக அதிகாரி இருக்கிறாரே” என்று சொல்லலாம். அவர் அரசின் பிரதிநிதி. அந்த மக்களின் பிரதிநிதி என்று ஒருவர் வேண்டாமா? “என் ஊரில் இத்தனை மரம் சாய்ந்துவிட்டது. இத்தனை வீடு இடிந்துவிட்டது. என் ஊர் மக்களுக்கான உதவிகள் எங்கே?” என்று கேள்விகேட்க, ஒரு பிரதிநிதி வேண்டாமா? அதற்காகத்தானே ஏற்படுத்தப்பட்டன உள்ளாட்சி அமைப்புகள்? 

உண்மையில் ’உள்ளாட்சி’ என்று எளிதாக நினைக்கிறோம். ஆனால், அது மாபெரும் விருட்சம் என்பதை மறக்கிறோம். தமிழகத்தில் மட்டும், 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 நகரப் பஞ்சாயத்துகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இவற்றுக்கு, 2015-ம் ஆண்டில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இப்போதுவரை, தனி அதிகாரிகளே நிர்வகித்து வருகிறார்கள். இது சரியானதா, தவறானதா என்பது இரண்டாவது கேள்வி? பயனளிக்கிறதா என்பதே முதல் கேள்வி? பயனளிக்கிறதா என்றால் வருத்தமே மிஞ்சுகிறது. கோட்டை அரசியலில் நடக்கும் களேபரங்களைக் கவனித்துக்கொண்டே, இதையெல்லாம் கோட்டைவிட்டு விட்டோம். விளைவு... புயல் புரட்டிப்போட்ட நிறையப் பகுதிகளில் குழந்தைக்கு ஊட்டப் பாலில்லை. கேள்வி கேட்க ஆளில்லை.

‘நிவாரண உதவிகள் எங்கே?’ என்று கேட்டுப் போராடிய மக்களை, கைதுசெய்கிறது காவல் துறை. ”அவர்களை விடுவியுங்கள்” என்று காவல் நிலையம் சென்று குரலெழுப்ப, ஒரு பிரதிநிதிகூட இல்லை. அத்தனை அதிகாரங்களும் அதிகாரிகள் கையில் இருக்கிறது. ஒரு வருமானச் சான்றிதழ் வாங்கச் சென்றாலே, வாரக்கணக்கில் அலையவிடும் அதிகாரிகளுக்கு, அந்த மக்களின் அழுகுரல் தெரியுமா? அதன் வலி புரியுமா? மக்கள் எவரிடம் முறையிடுவார்கள்? எவர் மக்கள் சார்பாகப் பேசுவார்கள், எம்.எல்.ஏ-வும் எம்.பி-யுமா? அவர்களுக்கே அவர்களின் தொகுதி அலுவலகங்களுக்கு வழி தெரியுமா என்று கேட்டுப்பார்க்க வேண்டும்.

மழை அடித்து ஓய்கிறது. சென்னை வால்டாக்ஸ் சாலையில் இருக்கும் அம்மன் தெருவில், முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நெடுஞ்சாலை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசுகிறார்கள் மக்களில் சிலர். “இது மாநகராட்சியின் வேலை” என்று தட்டிக்கழிக்கிறார்கள், அதிகாரிகள். மாநகராட்சியில் எவர் இருக்கிறார்கள்? அவர்களும் அதிகாரிகளே. அதிகாரிகள் என்றால் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் அல்ல. ஏதோ ஓர் ஊரில் இருந்து வந்திருக்கும் அதிகாரிகள். அவர்களுக்கு அம்மன் தெருவின் அமைப்பும், அங்கிருக்கும் மக்களையும் பற்றித் தெரியுமா? முழங்கால்வரை தேங்கிய தண்ணீர், கழுத்துவரைக்கும் தேங்கியிருந்தால், என்னாவது?

அதிகாரிகள் என்பவர்கள் மாதச்சம்பளம் வாங்கும் பணியாளர்கள். அவர்கள் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்களே ஒழிய, மக்களின் தோளோடு தோள்நின்று களப்பணியாற்றுவார்களா? அப்படிப்பட்ட சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். ஆனால், ’எக்‌ஷப்சன்ஸ் ஆர் நாட் எக்ஸாம்பிள்ஸ்’! மக்களோடு  நிற்பவனின் அருமை, கொண்டாட்டங்களின்போது தெரியாது, துயரங்களின்போதுதான் தெரியும். இதோ இப்போது தெரிகிறது.

1991 - 1995 ஆட்சிக்காலத்தில், உள்ளாட்சிப் பிரதிநிதிகளே இல்லாமல், அதிகாரிகளை வைத்தே அரசை ஓட்டினார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அப்போது இதுபோன்ற பெரும்புயல்கள் அடிக்கவில்லை. ஆனால், வர்தா புயல், ஒகி புயல், இதோ இப்போது கஜா புயல் என்று தொடர்ச்சியாகப் புயல்கள் தமிழகத்தைத் தத்தெடுத்து தாக்கி வருகின்றன. இந்தச் சமயங்களில், ஆயிரக்கணக்கான கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. தொலைத்தொடர்பு அற்றுத் தவிக்கின்றன. அந்தந்த கிராமங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளில் வேகமே காட்டப்படுவதில்லை. 

கஜாவை பேசுகிறோம். ஆனால், வர்தா, ஒகி கணக்குகளே இன்னும் தீரவில்லை தெரியுமா? அந்தப் புயல்களில் இருந்தே இன்னும் நிறையக் கிராமங்கள் மீளவில்லை என்பதே உண்மை. புயலில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில வாரங்களில் முடியக்கூடியவை அல்ல. அதிகாரிகள் ஆரம்பக்கட்டத்தில் ஆர்வம் காட்டிவிட்டு, அடுத்தப் புயலுக்கு புள்ளிவிவரங்களைச் சேகரிக்கப் போய்விடுவார்கள். அப்புறம் அந்தப் பகுதிகளின் நிலை என்ன? அதைக் கண்காணிப்பது யார்? அரசுக்குத் தெரியப்படுத்துவது யார்?

”ஏன் உள்ளாட்சித் தேர்தலை இன்னும் நடத்தவில்லை?” என்று இதுவரை பலமுறை கேட்டுவிட்டது உயர் நீதிமன்றம்.  “இந்த மாதம்... அந்த மாதம்...” என்று மூன்று வருடங்களை முடித்துவிட்டது, மாநிலத் தேர்தல் ஆணையம். ஆரம்பத்தில் தி.மு.க தாக்கல் சொன்னது. இப்போது அ.தி.மு.க தாக்கல் சொல்கிறது. ”எத்தனை முறைதான் கேட்பது?” என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. இப்போது உயர் நீதிமன்றமும் கேட்பதில்லை.

ஆனால் மக்கள் மன்றத்தில் கேட்கிறார்கள்... “உள்ளாட்சித் தேர்தலை எப்போது நடத்துவீர்கள்?”