Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

வள்ளி. மா.மூர்த்தி, சத்தியமங்கலம்.

ஆனானப்பட்ட சசிகலாவையே ஏமாற்றிய ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் கூட்டணி, மோடியை ஏமாற்றாதா?


மோடி லேசுப்பட்டவரல்ல.

கழுகார் பதில்கள்!

ஆர்.சுப்ரமணியன், சென்னை.

தேர்தலில் கட்சிகள் ஒன்றோடு ஒன்று கூட்டணி அமைப்பதற்குத் தடை விதிக்கப்படுமா?

முதலுக்கே மோசம் வரும் யோசனையைச் சொல்கிறீர்களே! தனித்து ஜெயிக்க முடியாது என்கிற சூழலில்தான், கூட்டணியை வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டுள்ளனர்; கொள்ளையை யும் தொடர்ந்து கொண்டுள்ளனர். இதற்காகவேதான், முன்யோசனையுடன் தேர்தல் சட்டங்களை உருவாக்கியும் வைத்துள்ளனர். இதற்குத் தடை என்றால்... பல கட்சிகள் காணாமல் போய்விடும்!

சாந்தி மணாளன், கருவூர்.

ட்ராய் (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, ட்விட்டர்வாசிகளிடம் சவால்விட்டுக் கரிபூசிக்கொண்டிருப்பது பற்றி?

ஒவ்வொரு வினைக்கும் இணையான மற்றும் எதிரான வினை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. எதிர்வினையானது இணையாகவே இருப்பதில்லை. சமயங்களில் பல படிகள் கூடுதலாகவும் இருப்பது உண்டு. அவருடைய வங்கிக்கணக்கில் ஒரு ரூபாயை டெபாசிட் செய்ததன் மூலம், ஆதார் தகவல் திருட்டை ஆதாரபூர்வமாக நிரூபித்துவிட்டனர் ஹேக்கர்கள். இது, சர்மா மீது பூசப்பட்ட கரியல்ல; ஆதாரை ஆரம்பித்து வைத்த காங்கிரஸ் முதல், தற்போது தாங்கிப்பிடிக்கும் பி.ஜே.பி வரை அனைவரின் முகத்திலும் பூசப்பட்ட கரி. பலமான எதிர்வினையை ஆற்றாவிட்டால், ஒட்டுமொத்த இந்தியர்களின் முகத்திலும் வெகுவிரைவில் கரிதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

காந்திலெனின், திருச்சி.

ஒரு தலைவன் எங்கே உருவாகிறான்?


பொதுவாக, ஒரு குழுவை வழிநடத்த வேண்டிய தேவை இருக்கும்போதுதான் தலைவன் என்பவன் உருவாகிறான்; அல்லது உருவாக்கப்படுகிறான். அவன் அந்தத் தேவையை உணர்ந்து நடந்துகொள்ளும்வரை அது சரியாகத்தான் இருக்கும். ஆனால், தனிநபர் வழிபாடாக மாறத்தொடங்கிவிட்டால், அதுதான் ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் கேடு. தன்னைச் சுற்றி நான்கு பேர் எப்போதும் நிற்க வேண்டும்; துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சூழ நடந்துவரவேண்டும்; ஓயாமல் தனக்கு ஜால்ரா போட வேண்டும்; இவற்றை வைத்தே காரியங்களைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களின் காலமாக இது மாறிவிட்டதால், பலரும் அதைநோக்கியே நகர்கிறார்கள். அந்தப் போதைதான்... விதிமீறல், முறைகேடு, ஊழல், லஞ்சம் என அனைத்துவிதமான சீர்கேடுகளையும் செய்ய வைக்கிறது. 

அரசியல்தான் என்றில்லை, சினிமா, கல்வி, சட்டம் உள்பட எல்லாத் துறைகளிலும் தனிநபர் வழிபாடு என்பதுதான் பெருங்கேடாக மாறிக்கிடக்கிறது, கோயில் கட்டும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

என்றென்றும் தன்னைத் தொண்டனாக உணர்ந்து செயலாற்றும் ஒருவன் தான் உண்மையான தலைவன். ஆனால், அப்படிப்பட்ட வர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று தேடக்கூடிய நிலைதான் நீடிக்கிறது.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.


நெருப்பின்றி புகையக்கூடியது?


நெருப்பில்லாமல் புகையாது என்பதுதான் உண்மை. எந்தவொரு செயலும் நெருப்பே. குப்பைமேடு தானாகப் பற்றி எரிந்தாலும், பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி அவதூறு கிளப்பினாலும், அன்டார்டிகா பனிமலை உருகினாலும், அங்கே ஏதோ ஒரு சக்தி வேலை செய்தே ஆகவேண்டும். அதற்கு நெருப்பு, வயிற்றெரிச்சல், சுற்றுச்சூழல் பாதிப்பு என்று பெயர்கள் மாறலாம். நெருப்பில்லாமல் புகைந்தால், அது அறிவியலுக்கு விடப்படும் சவாலே!

டி.உமாமகேஸ்வரி, கிருஷ்ணகிரி.

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்கிறார்கள்; ஏன் ‘மகேஸ்வரி தீர்ப்பு’ என்று சொல்லவில்லை? பெண்களைக் குறைத்து மதிப்பிடுவதாகத்தானே அர்த்தம்?

அட, இந்தக் கேள்வியை ஒரு மகேஸ்வரியே கேட்டிருக்கிறாரே! சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று அந்தத் தென்னாடுடைய சிவனே சொல்லிவிட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. விட்டுத்தள்ளுங்கள். சிவனே சொன்னால்தான் நீங்கள் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். எதற்கும், உங்கள் வீட்டு சிவனிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கழுகார் பதில்கள்!

ஆர்.கே.ராமர், தேனி.

கருணாநிதியின் உடல்நிலையை வைத்து இத்தனைப் பரபரப்புத் தேவையா?


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும்கூட இதுபோன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்தன. என்ன... எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமான காலகட்டத்தில் இத்தனை தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் எல்லாம் இல்லை. அதனால், அது பெரிதாக வெளியில் தெரியவில்லை. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அத்தனை நாள்களுமே வாசலில் ஒரு கூட்டம் நிற்கத்தானே செய்தது. தற்போது கருணாநிதிக்காக நிற்கிறது. இந்த அன்பில் தவறில்லை. ஆனால், தலைவர்கள்மீதான தங்கள் பாசத்தையும் நேசத்தையும் காட்டுவதற்காகப் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தவேண்டுமா என்பதைத் தொண்டர்கள் யோசிக்க வேண்டும். தலைவர்களும் நேரடியாகக் களத்தில் இறங்கி இதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

கழுகார் பதில்கள்!

ஆர்.எஸ்.அனந்தராமன், நாகர்கோவில்.

பிரதமர் நரேந்திர மோடி, தொழில் அதிபர்கள்தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள் என்று கூறுவது பற்றி?


நன்றாகக் கவனியுங்கள்... வளர்ச்சி எந்திரங்கள் என்றுதான் கூறியுள்ளார். அவர்கள் எப்போதுமே எந்திரத்தனமாகத்தான் வேலை செய்வார்கள். நாம் தான் (அரசு) கண்காணிப்புடன் இருந்து, நெறிப்படுத்த வேண்டும். எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு எந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். தேவையை மீறிப் பணவெறியுடன் எந்திரங்களை ஓடவிட்டால் ஆபத்துதான்.

பல இடங்களில் மனிதன் இயற்கையுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறான். அதனால், ஆங்காங்கே இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்துகிறது. நாம் இயற்கைப் பிரியர்களாக வேண்டும், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் மோடியின் கருத்துதான்.

தொழில் வளர்ச்சியும் இயற்கைப் பாதுகாப்பும் நேரெதிரானவை. இந்த இரண்டுக்குமான முரண்பாட்டை சமன்படுத்தும் இடத்தில்தான், நிஜமான வளர்ச்சி சாத்தியமாகும்.

கழுகார் பதில்கள்!

ராமசுப்பிரமணியன், தூத்துக்குடி.

நாற்பதிலும் வெற்றி என்ற தினகரனின் நம்பிக்கை எதைக் காட்டுகிறது?

இரு(ப்)பதை காட்டுகிறது!

கழுகார் பதில்கள்!

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

ஓ.பன்னீர்செல்வத்தை, மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமதித்தது உண்மையா?


எதையும் தாங்கும் அந்த இதயம், தான் அசிங்கப் பட்டதாகவோ அவமானப் பட்டதாகவோ வெளியில் சொல்லவில்லை. அழையா விருந்தாளிக்கு இடமில்லை என்று ட்விட்டரிலேயே பதில் சொல்லியிருக்கிறது நிர்மலா சீதாராமனின் அலுவலகம். ‘நான் தனிப்பட்ட முறையில்தான் சந்திக்க வந்தேன்’ என்று அந்த இதயமே கூறிவிட்டது. இத்தனைக்குப் பிறகும் துணை முதல்வரை அவமானப்படுத்திவிட்டதாகச் செய்திகள் போடப் படுகின்றன. எதையும் தாங்கும் இதயத்தால், இதைத்தான் தாங்கிக் கொள்ள முடியாது.

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை,  சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism