Published:Updated:

“எங்கள் குடும்பத்தில் ஒருவர்கூட அ.தி.மு.க-வில் இல்லை!”

“எங்கள் குடும்பத்தில் ஒருவர்கூட அ.தி.மு.க-வில் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“எங்கள் குடும்பத்தில் ஒருவர்கூட அ.தி.மு.க-வில் இல்லை!”

தினகரன் தம்பி பாஸ்கரன் Open Talk

“எங்கள் குடும்பத்தில் ஒருவர்கூட அ.தி.மு.க-வில் இல்லை!”

தினகரன் தம்பி பாஸ்கரன் Open Talk

Published:Updated:
“எங்கள் குடும்பத்தில் ஒருவர்கூட அ.தி.மு.க-வில் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“எங்கள் குடும்பத்தில் ஒருவர்கூட அ.தி.மு.க-வில் இல்லை!”

‘‘ஜெயலலிதா அம்மாவே என்னை ‘பாஸ்’ என்றுதான் அழைப் பார்கள். அவரை நான் ‘அம்மா’ என்பேன். நான் எவ்வளவு பெரிய எம்.ஜி.ஆர் பக்தன் என அம்மாவுக்குத் தெரியும். நான் ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் மற்றும் ஜெ.ஜெ டி.வி நிர்வாகப் பொறுப்பைப் பார்த்துக்கொண்டிருந்த போது, போயஸ் கார்டனில் தங்கியிருந்தேன். அப்போது, என் அறையில் எம்.ஜி.ஆர் படத்தை வைத்து தினமும் விளக்கேற்றி வணங்குவேன். இது அம்மாவுக்கும் தெரியும். பலர் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு அம்மா முன்பு பவ்யத்துடன் பணிவுகாட்டி நடிப்பார்கள். அம்மா அதை நம்பி தகுதியில்லாத பலருக்கு பெரிய பொறுப்புகளைக் கொடுத்தார்கள். நான் அப்படி செய்திருந்தால், இன்றைக்கு நானும் பெரிய பொறுப்பில் இருந்திருப்பேன். நான் யார்கிட்டேயும் எதற்கும் வளைந்து நெளிந்து அட்ஜஸ்ட் செய்துகொள்ளவில்லை. போயஸ் கார்டன் என்கிற அரண்மனையில் நடந்த நாடகங்களில் நடிக்காமல், நான் நேர்மையாக இருந்தேன். அதனால் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை’’ என அதிரடியாக ஆரம்பித்தார் பாஸ்கரன்.

சசிகலாவின் அக்கா மகனும், டி.டி.வி.தினகரனின் தம்பியுமான பாஸ்கரன், படங்களிலும் நடிக்கிறார். ‘தலைவன் பாஸ்’ என்கிற பெயரில் பாசறை நடத்திவருகிறார். விரைவில் இதை அரசியல் கட்சியாகவும் அறிவிக்கவிருக்கிறார். ஏற்கெனவே தினகரனும் திவாகரனும் கட்சிகள் நடத்துவது போதாதென்று இப்போது, அந்தக் குடும்பத்திலிருந்து மூன்றாவது அரசியல் என்ட்ரி. மாவட்டம்தோறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளைக் கொண்டாடி நலத்திட்ட உதவிகளை வழங்கிவரும் பாஸ்கரனை தஞ்சாவூரில் சந்தித்தோம்...

“எங்கள் குடும்பத்தில் ஒருவர்கூட அ.தி.மு.க-வில் இல்லை!”

‘‘உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பி வருகிறீர்களே?’’

‘‘மற்ற எல்லோரும் எங்கே இருந்தார்கள் என வெளி உலகத்துக்கு நன்றாகத் தெரியும். நான் அம்மா இருந்தபோதே, எட்டு வருடங்களுக்கு முன்பே என் ரசிகர் மன்றத்தினரை வைத்து பாசறை ஆரம்பித்தவன். இந்த நேரத்தில் அம்மா உயிருடன் இருந்திருந்தால், எனக்குப் பெரிய இடம் கிடைத்திருக்கும். அம்மா இறந்தபிறகு அ.தி.மு.க ரொம்பவே கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. அது பல துண்டுகளாகப் பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க., அ.ம.மு.க என இரண்டு அணிகளிலும் மேல்மட்டப் பொறுப்பாளர்கள் வருமானம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இரு தரப்பும் பணம் கொடுத்துதான் எல்லாவற்றையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேல் மட்டத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிற நிர்வாகிகள் மட்டும் தெளிவாக உள்ளனர். எங்கே அதிகம் பணம் கொடுக்கிறார்களோ, அந்தப் பக்கம் போய்விடுகிறார்கள். ஆனால், தொண்டர்கள் சரியாக இருக்கிறார்கள். தொண்டர்களின் சப்போர்ட் எனக்கு இருக்கிறது. அவர்களுக்காகத்தான் கட்சியை ஆரம்பிக்கிறேன்.’’

‘‘சசிகலா குடும்பத்தில் உள்ளவர்களே பல கட்சிகள் ஆரம்பிப்பது ஏன்?’’

‘‘ஒரே கையில் உள்ள ஐந்து விரல்களும் ஒன்றாக இருக்காது. என்னைப் பொறுத்தவரையில் எல்லோரிடத்திலும் நான் வைத்திருக்கும் அன்பு என்பது தனி. அம்மா இருந்தபோதே நான்தான் மக்கள் வெளிச்சத்துக்கு வந்தேன். அம்மா என்மீது வைத்திருந்த நம்பிக்கையால், ஜெ.ஜெ டி.வி-யை என்னைத்தான் நிர்வாகம் செய்ய வைத்தார். நானும் கட்சிக்காக உழைத்தேன். அம்மாவுக்கு விசுவாசமாகவும் இருந்தேன். அவர் இருந்தபோதே நான் துணிச்சலாக எல்லாவற்றையும் செய்தவன். தினகரன் போன்றவர்கள் அப்போது எங்கு இருந்தார்கள் என்றே தெரியவில்லை. இப்போது வந்து வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.’’

‘‘திவாகரன் சொல்லித்தான் நீங்கள் தினகரனுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறுகிறார்களே?’’

‘‘திவாகரன், தினகரன் இவர்களுக்கு முன்பிருந்தே நான் செயல்பட்டுவருகிறேன். என்னை யாரும் வழிநடத்த முடியாது. அவர்களைப்போல் நான் பொதுவெளியில் யாரையும் திட்டவும் இல்லை. திவாகரன், தினகரன் செயல்பாடுகளை நான் பார்ப்பதில்லை. நான் எம்.ஜி.ஆர் வழியில் சென்றுகொண்டிருக் கிறேன். எம்.ஜி.ஆரை ஒரு கோடி பேர் நல்லவர் எனச் சொன்னார்கள். என்னை ஒரு லட்சம் பேராவது நல்லவன் எனச் சொல்லவேண்டும். அரசியல்வாதிகள் என்றாலே ஃபிராடு என்ற நினைப்புதான் எல்லோருக்கும் வருகிறது. அதை மாற்றி புது அரசியல் ட்ரெண்டை உருவாக்கு வதுடன், நேர்மையாகவும் இருக்க வேண்டும். ‘இன்றைக்கு உள்ள அரசியல் சூழ்நிலையில் இப்படியும் ஒரு நல்லவன் இருக்கானே’ என எல்லோரையும் பேச வைக்கவேண்டும். அதுதான் என் லட்சியம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன். நாடாளுமன்றத் தேர்தலில் என் ஆதரவு மோடிக்குத்தான். மீண்டும் மோடிதான் பிரதமராகப் பொறுப்பேற்பார். மீத்தேன், ஸ்டெர்லைட், காவிரி போன்ற விவகாரங்களில் மோடியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்து கிறார்கள். அந்தத் திட்டங்கள் யார் ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை, அப்போது மோடி எங்கு இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவுக்கு நல்ல தலைவர் தேவை. மோடி நேர்மையானவர். இந்தியா வலிமையாக இருந்தால்தான், தமிழ்நாட்டில் தூய்மையான அரசியல் செய்ய முடியும்.’’

‘‘நீங்கள் கட்சி ஆரம்பிப்பது சசிகலாவுக்குத் தெரியுமா?’’

‘‘இது என் தனிப்பட்ட முடிவு. சின்னம்மாவைப் பார்த்தால் உடல்நிலை குறித்து மட்டும் விசாரிப்பேன். அவராக இதைப் பற்றிக் கேட்டால் மட்டுமே சொல்வேன். சின்னம்மா சரியான நேரத்தில் பல தவறான முடிவுகளை எடுத்து விட்டார். சரியான முடிவுகளை எடுத்திருந்திருந்தால், இன்றைக்கு எல்லாமே சின்னம்மா கையில்தான் இருந்திருக்கும். அவர் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்தப் பிரச்னையும் செய்யாமல் ஒதுங்கியே இருந்தேன். வாக்குவாதம் செய்து, பஞ்சாயத்து செய்து, அதன்மூலம் கிடைப்பது எதையும் நான் விரும்பவில்லை. சின்னம்மாவை அனுசரித்துப் போய், நான் எதையும் பெற ஆசைப்படவில்லை.’’

‘‘நீங்கள் ஆரம்பிக்கப் போகும் கட்சியில் ஜெயலலிதா மற்றும் சசிகலா பெயர்களையும் புகைப்படங்களையும் பயன்படுத்துவீர்களா?’’

‘‘இரண்டு பேருமே எனக்கு அம்மாதான். ஆனால், ‘தூய்மை’ என்றால் அது எம்.ஜி.ஆர்-தான். எனவே அவர் போட்டோவை மட்டுமே பயன்படுத்துவேன். என் தம்பி சுதாகரன் திருமணத்தை நடத்தி வைத்தது உள்பட பலவற்றில் கெட்ட பெயர் ஏற்பட்டு, 96-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க மோசமாகத் தோல்வியுற்றது. அப்போது அம்மா என்னிடம், ‘ஏன் பாஸ்... நான் நல்லாதானே ஆட்சி செய்தேன். அப்புறம் ஏன் தோல்வி அடைந்தோம்?’ எனக் கேட்டார்கள். அம்மாவிடம் நான், ‘உங்களிடம் காலில் விழுந்து யார் எதைச் சொன்னாலும் நம்பாதீங்க. ஒரு நல்ல ஆண்மகன், நேர்மையானவன் யார் காலிலும் விழமாட்டான்; அழ மாட்டான். அப்படி உங்களிடம் எல்லோரும் நடந்துகொண்டதால் உண்மையான விஷயங்கள் உங்களுக்கு வராமல் போய்விட்டன’ என்றேன். அடுத்த நாளே, ‘இனிமேல் யாரும் என் காலில் விழக்கூடாது’ என அம்மா அறிக்கை விட்டார்கள்.’’

‘‘ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடக்கிறதே?’’

‘‘என்றைக்கு இருந்தாலும் உண்மை வெளி வரும். யார்மீதும் பொய்ப்பழி போட முடியாது. உண்மை வெளிவரும்போது யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று தெரியவரும்.’’

‘‘தினகரன்தான் அடுத்த முதல்வர் என அவரின் ஆதரவாளர்கள் கூறிவருகிறார்களே?’’

‘‘சீமான், ரஜினி, கமல் போன்றவர்களின் தொண்டர்களும் ‘அடுத்த முதல்வர் எங்கள் தலைவர்தான்’ என்று கூறுகிறார்கள். என் தொண்டர்கள் என்னை ‘அடுத்த முதல்வர்’ என்று சொல்கிறார்கள். இயற்கை யாருக்கு அந்த அமைப்பைக் கொடுக்கிறதோ, அவர்தான் முதல்வராக வருவார்கள். கர்நாடகாவில் எடியூரப்பாவாலோ, சித்தராமையாவாலோ முதல்வராக ஆகமுடியவில்லை. குறைந்த தொகுதிகளே ஜெயித்த குமாரசாமி முதல்வ ரானார். அதுபோல இங்கேயும் நடக்கலாமே!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எங்கள் குடும்பத்தில் ஒருவர்கூட அ.தி.மு.க-வில் இல்லை!”

‘‘சசிகலா குடும்பத்துக்கு இருந்த கெட்ட பெயர், தினகரன் வருகைக்குப் பிறகுதான் மாறியது என்று சொல்லப்படுகிறதே?’’

‘‘தினகரனுக்குக் கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அதனால் அவரின் தொண்டர்கள் அப்படிப் பேசிவருகிறார்கள். பணத்தை வைத்துக்கொண்டு சில காலம்தான் சித்து விளையாட்டு காட்ட முடியும். காகிதப் பூக்கள் சில நாள்கள்தான் ஜொலிக்கும். மோடி நல்லவர், யோகியும்கூட. கெட்டவர்களையும், சூட்சமங்களில் ஈடுபட்டு அரசியல் செய்பவர்களையும் மோடி விடமாட்டார். இப்போதுகூட ஒரு பெரிய உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காலம் பதில் சொல்லும். என்றைக்கு இருந்தாலும் உண்மை வெளியில் வரும்.’’

‘‘சசிகலாதானே தினகரனுக்கு பொறுப்பு கொடுத்தார். இதற்கு ஏன் குடும்பத்திலேயே எதிர்ப்பு எழுகிறது?’’

‘‘எங்களை சின்ன வயதிலிருந்தே சின்னம்மா பார்த்து வருகிறார். எங்கள் வீட்டில் எம்.ஜி.ஆர்., சிவாஜி பற்றி சண்டையே நடக்கும். நான் எம்.ஜி.ஆர் பக்தன். எம்.ஜி.ஆருக்காக சண்டை போடுவேன். இன்றைக்கு துணைப் பொதுச் செயலாளராக இருக்கிற டி.டி.வி.தினகரன், ‘சின்ன எம்.ஜி.ஆர்’ என சொல்லிக்கொண்டு திரிந்த என் தம்பி சுதாகரன், அண்ணா திராவிடர் கழகம் கட்சி ஆரம்பித்துள்ள திவாகரன்... இவர்கள் அனைவருமே சிவாஜியின் ரசிகர்கள். அந்தப் பக்கம்தான் நிற்பார்கள். நான் மட்டுமே எம்.ஜி.ஆர் பக்கம் நின்றவன். எங்கள் குடும்பத்தில் ஒருவர்கூட அ.தி.மு.க-வில் இல்லை. காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வில்தான் எல்லோரும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்திலேயே நான்தான் முதன்முதலாக அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட்டவன். அந்த வகையில் நியாயமாகப் பார்த்தால் என்னைத்தான் துணைப் பொதுச்செயலாளராக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், கொடுக்காததைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அதை நான் என் வழியில் பெற்றுக்கொள்வேன்.’’

‘‘அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவேன் என்று கூறிவருகிறீர்களே?’’

‘‘எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கும் பக்தர்களுக்கும் இயற்கை சாதகமாக இருக்கும். அவரால் ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க-வைக் கைப்பற்றி, தலைமைப் பொறுப்பையும் ஏற்பேன். நான் புதுக்கட்சி ஆரம்பிப்பது, அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதற்கான ஆரம்பம்தான்.’’

- கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism