Published:Updated:

மிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு!

மிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு!

மிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு!

மிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு!

மிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, தி.மு.க உடன்பிறப்புகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. இப்போதைக்கு அந்த மருத்துவமனைதான் அவர்களுக்கு அறிவாலயம், கோபாலபுரம் எல்லாம். 

மருத்துவமனையின் நான்காவது மாடியில் கருணாநிதி சிகிச்சைபெறும் அறை உள்ளது. அந்தத் தளத்தில் உள்ள அனைத்து அறைகளையும் கருணாநிதி குடும்பத்தினரும், கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் எடுத்துக்கொண்டுள்ளனர். ஸ்டாலின் குடும்பத்துக்கு ஓர் அறை, அழகிரி குடும்பத்துக்கு ஓர் அறை, ராஜாத்தி அம்மாள் மற்றும் கனிமொழிக்கு ஓர் அறை, செல்வி குடும்பத்துக்கு ஓர் அறை எனத் தனித்தனி அறைகளில் உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஓர் அறையில் உள்ளனர். கே.என்.நேருவுக்கு மருத்துவமனை சார்பில் தனி அறை கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை உரிமையாளர்களும் கே.என்.நேருவும் உறவினர்கள் என்பதால், அவருக்கு அந்தச் சிறப்பு.

நான்காவது தளத்தில் உள்ள தன் அறையில்தான், தலைவர்களையும், முக்கியப் பிரமுகர்களையும் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அழகிரியின் அறைப் பெரும்பாலான நேரங்களில் மூடியே இருப்பதால், ‘எதற்குப் பிரச்னை’ என்று பலர் அவரைச் சந்திக்காமல் நழுவிவிடுகின்றனர்.

மிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு!

மொத்தக் குடும்பமும் மருத்துவமனையில் இருப்பதால், சில சமாதானங்களும் சில சர்ச்சைகளும் தவிர்க்க முடியாதவை ஆகியுள்ளன. குறிப்பாக, அழகிரி-ஸ்டாலின் உரசலை வைத்து வெளியில் கட்டுக்கதைகள் கட்டப்படுகின்றன. உள்ளுக்குள் அப்படி எந்த உரசலும் அண்ணன்-தம்பிக்குள் இல்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் அண்டு கோ நடத்தும் லாபியைப் பார்த்து பல சமயங்களில் அழகிரி எரிச்சல் அடைகிறார்; சில நேரங்களில் அவர்களைச் செமத்தியாகக் கலாய்க்கவும் செய்கிறார். தாம்பரம் முன்னாள் எம்.எல்.ஏ மீ.அ.வைத்தியலிங்கம் கருணாநிதியைப் பார்க்க மருத்துவமனை வந்தபோது, அவரை ஸ்டாலின் ஆட்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அப்போது குறுக்கிட்ட அழகிரி, “அண்ணா, தலைவர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பவர் அவர். அவரைத் தெரியாதவர்கள்தான் இப்போது தி.மு.க-வாக இருக்கிறீர்கள். நடக்கட்டும்... நடக்கட்டும்...” என்றாராம். மருத்துவமனைக்குள் போகமுடியாத தி.மு.க முன்னாள் தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா, அழகிரியை அவரது வீட்டில் சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார்.

சிலருக்கு மருத்துவமனையின் தரை தளம்வரை மட்டுமே அனுமதி. அங்கே இருக்கும் நோட்டில், தங்கள் குறிப்புகளை எழுதிவைத்துவிட்டு அவர்கள் கிளம்ப வேண்டியதுதான். ‘சீனியர் நிர்வாகிகள் மற்றும் மாற்றுக்கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே நான்காவது தளத்துக்குச் செல்ல அனுமதி’ என்று சொல்லப்படுகிறது. சபரீசனுடன் வரும் நண்பர்களுக்கு எந்த முட்டுக்கட்டையும் இல்லை; அவர்கள் யார் அனுமதியும் இல்லாமல் நேராக மேல்தளத்துக்குச் சென்றுவிடுகின்றனர். மதுரையிலிருந்து வருபவர்களை, அழகிரி ஆள் அனுப்பி அழைத்துக்கொள்கிறார். ஆனால், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு அந்த மரியாதை கிடைப்பதில்லை என்பதுதான் இப்போது மருத்துவமனைக்குள் உள்ள பெரிய குழப்பம். ஜூலை 31-ம் தேதி மன்னன் வந்தபோது, அவரை கீழே சிலர் தடுத்தனர். மேலே இருந்து காந்தி அழகிரி வந்து, ‘‘அவர் எங்களைப் பார்க்க வந்தவர். அவரை நீங்கள் எப்படித் தடுக்கலாம்’’ என்று சத்தம் போட்டுவிட்டு மன்னனைக் கூட்டிப்போனாராம். இப்படியாக மருத்துவமனையில் மல்லுக்கட்டு நடந்துகொண்டிருக்கிறது.

குடும்ப உறுப்பினர்களில், செல்விதான் முதல் ஆளாகக் கருணாநிதியைப் பார்க்கத் தினமும் வந்துவிடுகிறார். அதுபோல கனிமொழியும் காலையில் வந்து அங்கேயே தங்கிவிடுகிறார். கருணாநிதியின் பேரன்கள், அவர்களின் வாரிசுகள் என ஒட்டுமொத்தமாக அனைவரும் கருணாநிதியைப் பார்த்து விட்டனர். வராதது, கனிமொழியின் மகன் ஆதித்யா மட்டும்தான். சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருக்கும் அவர் மட்டும் இன்னும் கருணாநிதியைப் பார்க்க வரவில்லை. குடும்பத்து ஆட்களுக்கு வீட்டிலிருந்தே சாப்பாடு வந்துவிடுகிறது. டீ, காபி, ஸ்நாக்ஸ் மட்டும் அங்கேயே வாங்கிக்கொள்கின்றனர். முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்நாக்ஸ் கவனிப்பு எல்லாம் எ.வ.வேலுதான்! மாலை நேரமானால், கடலை மிட்டாய் உள்ளிட்ட பண்டங்களை வாங்கிக் குவித்து அவர்களைக் கவனித்துக்கொள்கிறார்.

கருணாநிதியைப் பார்க்க வந்த முக்கியமான நபர் மு.க.முத்து. உடல்நலிவுற்ற நிலையில் இருந்த அவரை, வீல் சேரில் வைத்துத்தான் நான்காவது தளத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர், “அப்பா... அப்பா...” என்று உடைந்த குரலில் கருணாநிதியின் காதில் தழுதழுத்துள்ளார். அதன்பிறகு வெளியில் வந்த அவரிடம் பேசிய முரசொலி செல்வம், “உன்னையும் இங்கு சேர்த்து ட்ரீட்மென்ட் பார்க்கலாமா” என்று கேட்டுள்ளார். அழகிரி வந்து மு.க.முத்துவிடம் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அழகிரியிடம், “எங்கே தங்கியிருக்கிறாய்?” என்று விசாரித்துள்ளார். “உன் மகள் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். அதுகூட உனக்குத் தெரியவில்லையா?” என்று அழகிரி ஜாலியாகக் கேட்டாராம். 
கருணாநிதியைப் பார்க்க வந்த ரஜினி, முதலில் சந்தித்தது அழகிரியைத்தான். எப்போதும் ரஜினிக்கு அழகிரியுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் உண்டு. முதலில் அழகிரியைப் பார்த்து விட்டு, அதன்பிறகு தன்னை அவர் சந்தித்தார் என்பதாலோ என்னவோ... அந்தச் சந்திப்பில் ஸ்டாலினின் முகம் இறுக்கமாக இருந்தது.

கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்துவருகிறது என காவேரி மருத்துவமனை தரப்பிலும், தி.மு.க உயர்மட்ட நிர்வாகிகளும் சொல்லிக்கொண்டே இருந்தனர். ‘‘கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்துவருவதால்தான் நாங்கள் அனைவரும் வீட்டுக்குச் செல்கிறோம். இல்லையென்றால் நாங்கள் வீட்டுக்குச் செல்வோமா? அதனால், நீங்களும் வீட்டுக்குச் செல்லுங்கள்” என ஜூலை 29-ம் தேதி இரவு தொண்டர்களிடம் சொல்லி விட்டு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் மு.க.அழகிரி. மறுநாள் 30-ம் தேதி இரவு அவரைச் சுற்றி நடந்த சம்பவம் வேறு எதையோ உணர்த்தியது. சுமார் 9.45 மணியளவில் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையை விட்டு காரில் வெளியேறினார். கால் மணி நேரம் கழித்து அழகிரி மருத்துவமனையை விட்டு காரில் வெளியே வந்தார். திடீரென சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் அவர் காருக்கு முன்னே வந்து ‘‘வருங்கால முதல்வரே வாழ்க... வருங்கால தி.மு.க-வே வாழ்க’’ என்று சொல்லிக்கொண்டே காருக்கு முன்பு கீழே விழுந்து அழகிரியை வணங்கினார்கள். கீழே விழுந்தவர்களை அப்புறப்படுத்தி, சில நொடிகள் கழித்தே கார் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. அழகிரி முகத்தில் ஒரு சிறுபுன்னகை மின்னி மறைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

களையெடுக்கிறார் ரஜினி!

கஸ்டு 1-ம் தேதி பகல் 12 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்தார் ரஜினி. ‘‘அடுத்த சில நாள்கள் சென்னையில் தங்கியிருப்பேன். நாம் கட்சியை ஆரம்பிக்கும்முன்பு, ரசிகர் மன்ற ஊழல் புகார்கள் பற்றிய விசாரணைப் படலத்தை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களைக் களையடுக்கப்போகிறேன்’’ என்று கோபமான குரலில் சொன்னாராம் ரஜினி. அன்று, அமைப்புச் செயலாளர் இளவரசன், ஆலோசகர் ராஜசேகரன் ஆகிய இருவருடன் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பற்றி வந்த புகார்க் கடிதங்களும், அது தொடர்பான விசாரணை அறிக்கை அடங்கிய ஃபைல்களும் வைக்கப்பட்டன.

முதலில் அவர் எடுத்த ஃபைல், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ரஜினி இப்ராஹிம் பற்றியது. இவர் வீடு கட்டியபோது, செங்கல் சூளைக்குச் சென்று ஒவ்வொரு செங்கல்லிலும் ‘ரஜினி’ என்று பொறிக்கப்பட்டிருக்கவேண்டும் என ஆர்டர் கொடுத்து வாங்கியவர். அந்த அளவுக்கு ரஜினி விசுவாசி. அப்படிப்பட்டவர்மீது பதவிக்குப் பணம் பெற்றது, பூத் கமிட்டிகளில் போலியான உறுப்பினர்களைச் சேர்த்தது போன்ற புகார்கள். அவை தொடர்பான விசாரணை முடிவுகளும் எடுத்துச் சொல்லப்பட்டன. கொஞ்ச நேரம் யோசித்த ரஜினி, இப்ராஹிமை நீக்க ஓகே சொன்னாராம்.

அடுத்து கன்னியாகுமரி, வட சென்னை, தென் சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில நிர்வாகிகள் தொடர்பான ஃபைல்கள் வைக்கப்பட்டன. ஒவ்வொன்றையும் கவனமாகப் படித்து குறிப்பு எழுதிவருகிறார் ரஜினி. ‘‘களையெடுப்புகள் தொடரும்’’ என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

10 ஆயிரம் ரூபாய்க்கு பாஸ் மார்க்!

ண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளில், ஒரு பேப்பருக்கு ரூ.10 ஆயிரம் வாங்கிக்கொண்டு பல நூறு பேருக்கு நிறைய மார்க் போட்ட விவகாரம் இப்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கண்களில் சிக்கியுள்ளது. டெக்னிக்காக இந்த விவகாரத்தில் விளையாடியுள்ளனர். ஃபெயில் மார்க் அல்லது குறைந்த மார்க் வாங்கிய மாணவர்கள், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்வார்கள். முதலில் வாங்கிய மார்க்கைவிட அதில் 15 சதவிகிதத்துக்கும் அதிகமான மார்க் வாங்கினால், மூன்றாவது பேராசிரியர் ஒருவரிடம் அந்த விடைத்தாள் அனுப்பப்படும். இந்த இடத்தில்தான் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை வைத்துக்கொண்டு, மார்க்குகளை வாரிவழங்கியுள்ளனர். இப்படி அதிக மதிப்பெண் தரப்பட்ட விடைத்தாள்களையும் பெருமளவில் அழித்து, ஆதாரங்களை யார் கையிலும் கிடைக்கவிடாமல் செய்துள்ளனர்.

குறிப்பாக, 2017 ஆகஸ்ட்டில் 3,02,380 விடைத்தாள்களுக்கு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில் 16,636 விடைத்தாள்களுக்கு மிக அதிக மதிப்பெண் வழங்கப்பட்டது ஏன் என விசாரணை நடக்கிறது. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த பேராசிரியர் உமா உள்ளிட்ட 10 பேர்தான் மறுமதிப்பீடு ஊழலில் சிக்கியுள்ளனர். இந்த வேட்டையில் தற்போது பேராசிரியர்கள் மட்டும்தான் சிக்கியுள்ளனர். ஆனால், இந்த நெட்வொர்க்கில் முக்கியமான மீடியேட்டர்கள் நிறையப்பேர் வெளியில் உள்ளனர். அவர்களில் முக்கியத் தலை, விசு என்று சொல்லப்படுகிறது. அவருடன் முக்கியமான பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் பல தலைகள் இதில் உருளும்.

அண்ணா பல்கலைக்கழகம் இப்படிப்பட்ட சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. 2012 ஜூனில் ‘மறு மதிப்பீட்டில் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் போடச் சொல்லி எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள்’ என இரு பேராசிரியர்கள் புகார் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து, சில அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஆனால், புகாருக்கு ஆதாரம் இல்லை என்று சொல்லி, சீக்கிரமே அவர்கள் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ‘‘இந்த முறையாவது தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்கிறார்கள், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர். 

மிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு!

‘‘மீட்பார் என்று நம்பினோம்!’’

து
ணை முதல்வர் பன்னீரைப் பார்க்க விரும்பாத மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பன்னீரின் முன்னாள் ஆதரவாளரும், அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யுமான கே.சி.பழனிசாமிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார். அதுமட்டுமல்ல, கே.சி.பழனிசாமியிடம் நிர்மலா நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். பி.ஜே.பி-க்கு எதிராகப் பேசியதால் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட இவரிடம் நிர்மலா பேசியது, அ.தி.மு.க-வில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ஓ.பி.எஸ் விவகாரம் குறித்து, ‘‘அவர் என்னைச் சந்திக்க வருவதென்றால் அதைச் சத்தமில்லாமல் செய்திருக்க வேண்டும். ஆனால், பி.ஜே.பி-யின் ஒட்டுமொத்த ஆதரவில் அவர் இருப்பதைப்போல காட்டிக்கொள்ள முயன்றார்’’ என்று நிர்மலா சொன்னாராம். அவரிடம் பேசிய கே.சி.பழனிசாமி, ‘‘அ.தி.மு.க-வை ஓ.பி.எஸ் மீட்பார் என்று நம்பினோம். ஆனால், அவர் சூழ்நிலைக் கைதியைப்போல் இருக்கிறார். அவரும் எடப்பாடியும் சேர்ந்துகொண்டு கட்சிக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர். எம்.ஜி.ஆர் காலத்துக் கட்சிக்காரர்கள், உண்மையான விசுவாசிகள் ரொம்பவும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று புலம்பினாராம். அதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டாராம் நிர்மலா சீதாராமன். கே.சி.பழனிசாமி இதைத் தொடர்ந்து முக்கியமான பி.ஜே.பி தலைவர்கள் இருவரைச் சந்தித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism