Published:Updated:

`காஷ்மீரில் பெல்லட் குண்டு தாக்கி கதறிய குழந்தை!’ - பார்வை இழக்கும் அபாயம்

`காஷ்மீரில் பெல்லட் குண்டு தாக்கி கதறிய குழந்தை!’ - பார்வை இழக்கும் அபாயம்
`காஷ்மீரில் பெல்லட் குண்டு தாக்கி கதறிய குழந்தை!’ - பார்வை இழக்கும் அபாயம்

காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் பெல்லட் குண்டு தாக்கியதில் 20 மாதக் குழந்தையின் கண்பார்வை பறி போகும் நிலையில் உள்ளது. 

சோபியான் மாவட்டத்தில் கப்ரின் பகுதியில் நேற்று நடந்த என்கவுன்டரில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து ஷோபியான் மாவட்டத்தில் மக்கள் போராட்டம் நடத்தினர். பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க பெல்லட் குண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தினர். அப்போது, தாயுடன் வீட்டை விட்டு வெளியே வந்த 20 மாதக் குழந்தை ஹிபாவின் வலது கண்ணை பெல்லட் குண்டு தாக்கியது. அலறித் துடித்தக் குழந்தையை உடனடியாக ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்குப் பெற்றோர் தூக்கிக் கொண்டு ஓடினர். மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் குழந்தையின் பார்வை பறிபோகும் நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறது. 

ஹிபாவின் தாயார் மெர்ஸலா ஜேன், ``போராட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கேஸ் பயன்படுத்தினர். இதனால், நானும் என் மூத்த மகனும் ஹிபாவும் மூச்சு விட சிரமப்பட்டோம். குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே செல்ல கதவைத் திறந்தேன். அப்போது, பாதுகாப்புப் படை வீரர்கள் எங்களைப் பார்த்து நேரடியாக பெல்லட் குண்டால் சுட்டனர். நான் என் கையால் குழந்தையின் முகத்தை மூடிக்கொண்டேன். இல்லையென்றால் அவளின் முகம் சிதைந்திருக்கும்'' என்றார் வேதனையுடன். 

தந்தை நிஷார் அகமது, ``என் மனைவி மகனை வீட்டுக்குள் தள்ளிவிட்டதால், அவன் பெல்லட் குண்டில் இருந்து தப்பினார். பாதுகாப்புப் படையினர் குழந்தை என்றும் பாராமல் பெல்லட் குண்டு கொண்டு அடிக்கின்றனர்'' என்று வேதனைத் தெரிவித்துள்ளார்.