இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது எம்.எல்.ஏ-வை இழந்திருக்கிறார்கள் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி மக்கள். இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஏ.கே.போஸ், ஆகஸ்ட் 2-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். ஏ.கே.போஸ் மரணத்துக்கு அ.தி.மு.க-வினர், தி.மு.க-வினர், தினகரன் அணியினர் எனப் பல தரப்பினரும் பாகுபாடின்றி இரங்கல் தெரிவித்தனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வந்தனர்.

எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான போஸ், ஆரம்பத்தில் ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் புக் செய்பவராகத் தொழிலை ஆரம்பித்தார். பின்பு, பெரியார் பஸ் நிலையம் அருகே டிராவல்ஸ் தொடங்கினார். அவருக்கு ஜெ.பேரவை மாவட்டத் தலைவர் பதவி கிடைத்தது. 2004-ல் டி.டி.வி.தினகரனின் ஆசியால், மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க-வினர் அத்தனை பேரும் சேர்ந்து அவரைத் தோற்கடித்தனர். அடுத்து 2006-ல் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். 2011 தேர்தலில், மதுரை வடக்கு தொகுதியில் வெற்றிபெற்றார். 2016 தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. அந்தத் தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் வெற்றிபெற்ற சீனிவேல், தேர்தல் முடிவு வெளியான சமயத்தில் மரணமடைந்தார். அதையடுத்து வந்த இடைத்தேர்தலில் சீட் வாங்குவதற்கு பலர் போட்டி போட்டுக்கொண்டிருக்க, அலட்டிக்கொள்ளாமல் இருந்த ஏ.கே.போஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அனைத்து அமைச்சர்களும் படாதபாடுபட்டு இவரை ஜெயிக்கவைத்தனர்.
“கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் மச்சான், மாப்ளே, மாமா என உறவுமுறை சொல்லி அழைப்பதுதான் ஏ.கே.போஸின் வழக்கம். எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், தன் டிராவல்ஸ் அலுவலகத்தில்தான் கட்சியினரைச் சந்திப்பார். அப்போது கஸ்டமர் யாராவது போன் போட்டு ‘சென்னைக்கு ரெண்டு டிக்கெட்’ என்று கேட்டால், ‘ஏ.சி.யா, நான் ஏசியா, பெர்த்தா...’ என்று கேட்டு ஆர்டர் புக் செய்வார். கட்சிப் பொதுக்கூட்டம் நடக்கும்போது, யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அவருக்கு உடல் பருமன்தான் பெரும் பிரச்னை. கொஞ்ச தூரம் நடந்தாலும் களைத்துவிடுவார். போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க வேட்பாளரான டாக்டர் சரவணன் வழக்கு போட்டார். ‘தேவையில்லாமல் இந்த டாக்டர் கேஸ் போட்டுட்டிருக்கார். இதுக்கு வேற கோர்ட்டுக்கு அலையணும்’ என்று நொந்துகொண்டார் போஸ். மரணச்செய்தி தெரிந்ததும், காலையிலயே வந்து டாக்டர் சரவணன் அஞ்சலி செலுத்தினார்” என்கிறார் மதுரை மாவட்ட அ.தி.மு.க சீனியர் ஒருவர்.
சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசி, ஏ.கே.போஸ். அதனால், மனதளவில் தினகரன் பக்கமும், வேறுவழியில்லாமல் எடப்பாடி பக்கமும் இருந்தார். ஒருமுறை செய்தியாளர்களிடம், “சின்னம்மாவால்தான் கட்சியை நடத்த முடியும்” என்று கூறி எடப்பாடிக்கு ஷாக் கொடுத்தார். அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோது ஒரு திருமண விழாவில், காலையில் தினகரனுக்கும், மாலையில் எடப்பாடிக்கும் துண்டு போட்டு பலரையும் கலவரப்படுத்தினார்.
ஆய்வுக்கூட்டங்களில் கலந்துகொள்ள மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தபோது, ‘‘மாடி ஏறி வர முடியல... கால் வலிக்குது’’ என்று கலெக்டர் வீரராகவ ராவிடம் எதேச்சையாக போஸ் சொல்ல.. “உங்களைப் போல பலரும் சிரமப்படு கிறார்கள். லிஃப்ட் வைக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்று உத்தரவாதம் கொடுத்த கலெக்டர், அதற்கு உடனே நிதியும் ஒதுக்கினார். லிஃப்ட் அமைக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. ‘‘அந்த லிஃப்டில் கால் வைக்காமலே போஸ் போய்விட்டாரே’’ என்று அதிகாரிகள் வருத்தத்துடன் சொல்கிறார்கள்.
- செ.சல்மான்
படங்கள்: வீ.சதீஷ்குமார்
