Published:Updated:

``மக்கள் வரிப் பணத்தில்தான் சம்பளம் வாங்குகிறோம்” - அதிகாரிகளுக்கு புதுச்சேரி முதல்வர் அட்வைஸ்

``மக்கள் வரிப் பணத்தில்தான் சம்பளம் வாங்குகிறோம்” - அதிகாரிகளுக்கு புதுச்சேரி முதல்வர் அட்வைஸ்
``மக்கள் வரிப் பணத்தில்தான் சம்பளம் வாங்குகிறோம்” - அதிகாரிகளுக்கு புதுச்சேரி முதல்வர் அட்வைஸ்

``மக்கள் வரிப் பணத்தில்தான் நாம் சம்பளம் வாங்குகிறோம்” என்று காவல் துறையினருக்கு முதல்வர் நாராயணசாமி அட்வைஸ் வழங்கியிருக்கிறார்.
 

புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 23-ம் பிரிவு பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு விழா இன்று கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி ஆட்சி அமைந்தது. அதன்பிறகு புதுச்சேரியில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியோடு வந்து செல்வதற்கும் காவல்துறையில் நிர்வாக சீர்திருத்தங்களை செய்தோம். அதோடு காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து செயல்படுத்தினோம். கடந்த 2016-17-ல் இந்தியா டுடே பத்திரிகை குழுவினர் புதுச்சேரிக்கு வருகை தந்து சட்டம்- ஒழுங்கு, கல்வி, மருத்துவம், விவசாயம் மற்றும் சமூக நலம் குறித்து ஆய்வு செய்தனர். முடிவில் காவல்துறையில் சிறந்த  நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலம் என்ற விருதுகளை நமது மாநிலத்துக்கு அளித்தனர்.  

ஆனால், இந்த ஆண்டு தமிழகத்துடன் நடந்த போட்டியில் அந்த விருதை நம்மால் பெற முடியாமல் போனது. காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். மக்களுக்காகதான் நாம், நமக்காக அவர்கள்  இல்லை என்ற உணர்வு இருக்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தில்தான் அனைத்து துறை அதிகாரிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் சம்பளம் வாங்குகின்றோம் என்ற உண்மையைப் புரிந்து அவர்களுக்கு முழு உரிமையைத் தர வேண்டும். போலீஸாரின் ஒத்துழைப்பு இல்லாமல் அமைதியைக் காண முடியாது. அமைதியாக இருக்கலாம், தொல்லை இருக்காது, குற்றம் செய்பவர்கள் நம்மை நெருங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் நம் மாநிலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றனர். குற்றங்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் அது நடைபெறுவதற்கு முன்பே தடுப்பது எப்படி என்ற தகவல்களைச் சேகரித்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். 

போலி ஏ.டி.எம் மோசடியில் பிற மாநிலத்தவர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பணத்தை இழந்துள்ளனர். புதுச்சேரி போலீஸாரால் அந்த வழக்கை கண்டுபிடிக்க முடியாது சி.பி.ஐ வேண்டும், இன்டர்போல்  வேண்டும் என்று பலர் கூறினர். ஆனால், புதுச்சேரி காவல்துறையினர் அந்த வழக்கை சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். தற்போது பாரம்பர்ய குற்றங்கள் மட்டுமல்லாமல் விஞ்ஞான ரீதியிலான குற்றங்களும் நடைபெற்று வருகிறது. அவைகளை எதிர்கொள்ள பயிற்சிகள் பெற வேண்டும். தற்போது பட்டப்படிப்பு, சட்டம் படித்தவர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள்  கடமையைச் சரியாக செய்து. ஊழல் இல்லாமல் பணியாற்ற சபதம் ஏற்க வேண்டும். புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கடுமையாக பேசக் கூடாது” என்றார்.