Published:Updated:

பூமியின் சாம்பியன் 70 பழங்குடிகளை அப்புறப்படுத்திய கதை!

பூமியின் சாம்பியன் 70 பழங்குடிகளை அப்புறப்படுத்திய கதை!
பூமியின் சாம்பியன் 70 பழங்குடிகளை அப்புறப்படுத்திய கதை!

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டுக்கான 'பூமியின் சாம்பியன்' (Champions of the Earth) விருதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கும் வழங்கியது. ஆனால், அதன் பின்னணியில் இந்தியாவின் சுற்றுச்சூழல் நாசம் செய்யப்பட்ட நான்கு ஆண்டுகள் விவாதிக்கப்படாமலேயே புதையுண்டு கிடக்கிறது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பழங்குடி இன மக்கள்தான். பிர்சா முண்டா போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் அதற்கு உதாரணம். அவர்கள் தங்களது உரிமைகளை என்றுமே விட்டுக் கொடுக்காதவர்கள்." சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி பேசிய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் இதைக் கூறியிருந்தார். 

அந்த நிகழ்வு நடந்த மூன்றே நாள்களில் குஜராத் நர்மதா நதிக்கரையோரம் உலகின் உயரமான சிலை என்று கருதப்படும் சர்தார் வல்லபபாய் படேலின் சிலை திறக்கப்பட்டது. முரணாக அந்தச் சிலையை அங்கே நிறுவுவதற்காகச் சுமார் 70 பழங்குடியின குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டார்கள். தாங்கள் அகற்றப்படுவதை எதிர்த்து, அந்த மக்கள் போராட்டம் செய்தது குஜராத் மாநில ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. பழங்குடியின மக்களின் உரிமைகளைக் குறிப்பிட்டு மெச்சியவர் அத்தனை பெரிய சிலையை நிறுவுவதற்காக வேண்டி, தான் முதலமைச்சராக இருந்த காலம் தொட்டே அந்தப் பகுதியில் இருந்த பழங்குடி மக்களை அப்புறப்படுத்த நேர்ந்தது துரதிர்ஷ்ட வசமான சூழல்தான். முரணுக்கு வலுசேர்க்கும் விதமாக சர்தார் சரோவர் அணை கட்டப்படுவதற்காகவும் ஆயிரக்கணக்கிலான பழங்குடி மக்கள் ஏற்கெனவே அந்தப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்கள். 

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டுக்கான 'பூமியின் சாம்பியன்' (Champions of the Earth) விருதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கும் வழங்கியது. சூரிய சக்தி பயன்பாட்டு ஊக்குவிப்புக்காக இருநாடுகளும் இணைந்து ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டிருப்பதாலும் பிளாஸ்டிக் மறு சுழற்சியின் தேவை குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்காகவும் இருவருக்கும் இந்த விருது தரப்பட்டது. ஆனால், அதன் பின்னணியில் இந்தியாவின் சுற்றுச்சூழல் நாசம் செய்யப்பட்ட நான்கு ஆண்டுகள் விவாதிக்கப்படாமலேயே புதையுண்டு கிடக்கிறது. 

’உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை இணைத்துக்கொள்ள 1991 தொடங்கி காங்கிரஸ் புதைத்த சுற்றுச்சூழல் அழிவுக்கு மேல் கட்டப்பட்ட அழிவுகள்தான் இவை என்றாலும், இந்த விவகாரத்தில் காங்கிரஸிலிருந்து பி.ஜே.பி தனித்தே இருக்கிறது’ என்கிறது மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பகம். அவர்களின் பட்டியல்படி... 

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அழித்து அங்கே கார்ப்பரேட்டுகளுக்கு இடமளிக்கும் ’வளர்ச்சித் திட்டங்கள்’ எண்ணிக்கை பி.ஜே.பி-யின் ஆட்சிக் காலத்தில் அதிகரித்திருக்கிறது’. பாதிப்புகளைப் பற்றி விவரமாக ஆய்வு செய்யாமல் அப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 260 ஆக இருந்தது தற்போது 519 ஆக அதிகரித்துள்ளது.

காடுகளுக்கான புதிய கொள்கைகளும் கடலோர ஒழுங்குமுறை மண்டலமும் அதற்காகவே அமைக்கப்பட்டன. 

தேசியத் தூயக் காற்றுத்திட்டம் என்ற ஒன்று தொடங்கப்பட்டது, அதற்கடுத்துதான் மாசு அதிகமான நகரங்கள் பட்டியலில் டெல்லியும் கொல்கத்தாவும் முந்திக்கொண்டு இடம்பிடித்தன. அந்தத் திட்டம் தற்போது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் கிடப்பில் இருக்கிறது. இப்படிப் பலதிட்டங்கள் அரைக் கிணற்றைத் தாண்டிய கதையாகக் கிடக்கின்றன. 

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இருக்குமா அல்லது கலைக்கப்படுமா? என்கிற கேள்வி எழும் அளவுக்கு அதன் உட்கட்டமைப்புகளில் அரசியல் நுழைந்தது. 

காங்கிரஸ் ஆட்சியில் உருவான தேசிய நதிநீர் இணைப்புத்திட்டம்போல இந்த அரசு தொடங்கிய சாகர்மாலா திட்டமும் மீனவர்களையும் கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பையும் ஓரங்கட்டும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பேரழிவாகவே இருக்கும்.   

4,000 கோடி ரூபாய் அளவில் செலவிடப்பட்டு கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதற்கு தனி அலுவலகம் ஒன்றை அமைத்துச் செயல்பட்டாலும் 2014-ம் வருடத்தைவிட அந்த நதியின் அசுத்தம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. 

அரசு தனது அடுத்த சாதனையாகக் கூறிக்கொள்ளும் சூரிய சக்தி மின் உற்பத்திகூட இந்தியத் தனிநபர்களால் முன்னெடுக்கப்பட்டத் திட்டமாக இல்லாமல் பெரும் கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கப்பட்டத் திட்டமாகவே இருக்கிறது. 

மீனவர்கள், விவசாயிகள், கிராமப்புற மக்கள் மற்றும் மண் சார்ந்து இயங்கும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு இயற்கையும் அதன் சூழலும்தான் வாழ்வாதாரமாக இருக்கிறது. ஆனால், வளர்ச்சி என்னும் அடிப்படையில் இதே சூழல் கொள்ளையடிக்கப்படும்போது யாருடைய  வளர்ச்சி என்கிற கேள்வி எழுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 3.5 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய மக்களில் ஒரு சதவிகிதமே இருக்கும் தனிநபர் பணக்காரர்களின் வளர்ச்சி மட்டும் கடந்த 2017-ம் ஆண்டில் 20.9 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. 

பணமதிப்பு நீக்க நடவடிக்கை நல்லெண்ண அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டதாகச் சொன்னாலும், யாரிடமிருக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக அது நிகழ்த்தப்பட்டதோ? அவர்கள் இல்லாமல், விவசாயிகள்தான் அதற்கடுத்த காலங்களில் போராட்டங்களில் குதித்தார்கள். மகாராஷ்டிராவின் நாசிக்கிலிருந்து நடைப்பயணமாக மும்பைவரை வந்து போராடிய 30,000 விவசாயிகள், டெல்லிவரை வந்து போராடிய 1,00,000 விவசாயிகள், புல்லட் ரயில் திட்டத்துக்கு எதிராகப் போராடிய 1,000 விவசாயிகள்,  டெல்லி ஜந்தர் மந்தர் களத்திலேயே இருந்து போராடிய தமிழக விவசாயிகள், ஜி.எஸ்.டி-க்கு எதிராகப் போராடிய கர்நாடகக் கைவினைத் தொழிலாளர்கள் எனப் பட்டியல் நீளமாகச் செல்கிறது.

அரசின் வளர்ச்சியை எதிர்க்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருக்கும் பல்கலைக்கழகங்களின் மானியங்கள் ரத்து செய்யப்படும் என்று கடந்த மே மாதம் பல்கலைக்கழக மானியக் குழு வழியாக அறிக்கை ஒன்று வெளியானது. அரசின் வளர்ச்சித் திட்டங்களை 'ஆம்’ என்று ஆமோதிக்காத அறிவார்ந்தவர்கள் அர்பன் நக்சல்கள் எனப்பட்டார்கள். கைது செய்யப்பட்டார்கள். 

இப்படிச் சூழலியல் சார்ந்த பகுத்தறிவற்ற முடிவுகள், அது ஜனநாயகமற்ற அதிகாரப்போக்குடன் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும் முறைகள், இந்தச் செயல்திட்டங்கள் அனைத்தும் தப்பிப்பிழைப்பதற்காக மக்களிடம் விதைக்கப்படும் அரசியல் எனத் தனது கலவையானதொரு அடிப்படைவாத அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல் 2019 வருடம் பி.ஜே.பி கட்சி ஆட்சிக்கு வருமானால், அது 1970-களைவிட இன்னும் பலமடங்கு மோசமானதாகவே இருக்கும் எனக் கண்காணிப்பகத்தின் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு