அலசல்
Published:Updated:

எடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா!

எடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா!
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா!

எடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா!

ருணாநிதி, காவேரி மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த ஆகஸ்ட் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியமே, இறுதி அஞ்சலி குறித்த பேச்சு ஆரம்பித்துவிட்டது. ‘மெரினாவில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்ததுபோலவே, அவரது உடலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது. அன்று மதியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த ஸ்டாலின், மெரினா கோரிக்கையுடன் ராஜாஜி ஹாலில் உடலை வைப்பதற்கான அனுமதியையும் கேட்டுள்ளார். அதற்கு முதல்வர் தரப்பில் உடனடியாக ஓகே சொல்லப்பட்டது. ஆனால், ‘‘ஒரு நாளுக்கு மேல் வைக்க வேண்டாம். பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்பட்டுவிடும்’’ என்ற ஸ்டாலினிடம் முதல்வர் சொன்னாராம்.

எடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா!

பொதுப்பணித்துறை அதிகாரிகள் அன்று மாலையே ராஜாஜி ஹாலைப் பார்வையிட்டனர். கருணாநிதியின் மரண அறிவிப்பு வருவதற்கு சில மணிநேரத்துக்கு முன்பே ராஜாஜி ஹாலை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பமாகிவிட்டன.

சி.ஐ.டி காலனி இல்லத்திலிருந்து கருணாநிதியின் உடலை அதிகாலை 4 மணிக்குள் ராஜாஜி ஹால் கொண்டுவருவதாகத் திட்டம். ஆனால், 4.40 மணிக்குத்தான் அங்கிருந்து கருணாநிதியின் உடலைத் தாங்கிய ஆம்புலன்ஸ் கிளம்பியது. அப்போது, மழை பெய்ய ஆரம்பித்தது. ஆம்புலன்ஸ் சரியாக 5.05-க்கு ராஜாஜி ஹாலை வந்தடைந்தது. அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே ராஜாஜி ஹாலில் பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது. நெருக்கியடித்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, போலீஸார் கெடுபிடி செய்யத் தொடங்கினர்.

கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழை, ராஜாஜி ஹாலில் அமைக்கப்பட்டிருந்த சாய்வு மேடையில் வைக்கப்பட்டது. வைத்த நேரத்தில், கருணாநிதியின் உடல் ஒருபுறமாகச் சாய்ந்துவிட்டது. பதறிப்போய் அதைச் சரிசெய்து சாய்வு மேடையில் வைத்தனர். வரும்போது உடலின்மீது தி.மு.க கொடியே போர்த்தப்பட்டிருந்தது. உடல் வைக்கப்பட்டபின் ராணுவத்தினர் வந்து தேசியக்கொடியைப் போர்த்திய பிறகே, மற்றவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது.

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டதும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு சூழ்ந்தனர். எ.வ.வேலு, பொன்முடி என முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏ-க்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், ராஜாஜி ஹால் படிக்கட்டுகளில் வரிசையாக இடம்பிடிக்கத் தொடங்கினர். கருணாநிதியின் உடலுக்குக் கீழே இருபுறம் அமைந்திருக்கும் முதல் படிக்கட்டில் அமர்வதற்குப் பெரும் போட்டியே நடந்தது.

எடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா!

அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, செல்வி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அடுத்ததாக, அங்கு காத்திருந்த தொண்டர்கள் அஞ்சலி செலுத்த வந்தபோது, ‘‘தலைவர் தெரியவில்லை, தலைவர் முகம் தெரியவில்லை’’ என்று திரும்பத் திரும்பக் கூச்சலிட்டனர். காலை 6.40 மணி வரை இதே நிலை நீடிக்க... தொண்டர்களுக்கான வரிசைக்கு வந்த ஆ.ராசா, அங்கிருந்து மேடையைப் பார்த்தார். அவருக்கு, கருணாநிதியின் கால்கள் மட்டுமே தெரிந்தன. அதைத்தொடர்ந்து, சாய்வு மேடை உயரத்தை அதிகரிக்க முடிவு செய்தனர். இரண்டு சாய்வு மேடைகள் ரெடி செய்து வைத்திருந்தனர். அவற்றில் உயரம் குறைவான சாய்வுமேடையிலிருந்து உடலை எடுத்து, உயரம் அதிகமான சாய்வுமேடைக்கு மாற்றினார்கள். தலையணை வைத்துத் தலையை உயர்த்தினர். அந்த நேரத்தில், டி.வி நேரலையும் நிறுத்தப்பட்டது.

ராஜாஜி ஹாலின் உள்ளே இருக்கைகள் போடப்பட்டு கருணாநிதி குடும்பத்தினரும், கட்சி நிர்வாகிகளும்,  அரசியல் கட்சித் தலைவர்களும் அமரவைக்கப்பட்டனர். கருணாநிதியின் உடலருகே நின்றிருந்த அழகிரி, சிறிது நேரத்தில் நிற்கமுடியாமல் ராஜாஜி அரங்கின் உள் ஹாலுக்குச் சென்று அமர்ந்துவிட்டார். அதன்பிறகு கனிமொழி உள்ளிட்ட சில உறவுகளும் அரங்கினுள் சென்று அமர்ந்தனர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,
தா.பாண்டியன் உள்பட பலரும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அழகிரியை உள்ளே வந்து பார்த்துப் பேசினர். பி.ஜே.பி தமிழகப் பொறுப்பாளர் முரளிதரராவ் அரை மணி நேரத்துக்கும் மேலாக அழகிரியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

ஹாலில் முன்இருக்கையில் அழகிரியும், அவரின் மகன் துரை தயாநிதியும் அமர்ந்திருந்தனர். கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யன் ஆகியோர் இன்னொரு பக்கம் இருந்தனர். கருணாநிதியின் உதவியாளர்கள் சண்முகநாதன், ராஜமாணிக்கம் ஆகியோரும் அங்கு இருந்தனர். கருணாநிதியின் மகள் செல்வி, மருமகள் மோகனா உள்பட பெண்கள் அனைவரும் தொடர்ந்து அழுதுகொண்டிருக்க, ஸ்டாலினும், கனிமொழியும் வந்து ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தனர். பிரகாஷ் காரத், டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன்,  கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் அந்த அறைக்குள் வந்து கனிமொழி மற்றும் செல்வியுடன் நீண்ட நேரம் உரையாடினர். தமிழச்சி தங்கபாண்டியன், பூங்கோதை, கீதாஜீவன் உள்ளிட்டோர் கனிமொழியை கட்டிப்பிடித்து அழுதது உருக்கமான காட்சியாக அமைந்தது.

சி.ஐ.டி காலனியிலிருந்து கருணாநிதி உடல் கிளம்பியபோதே, தனது வீட்டிலிருந்து ராஜாஜி ஹாலுக்குக் கிளம்பிவிட்டார் டி.டி.வி.தினகரன். கருணாநிதி உடல் வந்து, ராணுவ மரியாதை நடக்கும் வரை காத்திருந்து, அதன்பிறகு முதல் ஆளாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இரண்டாவது நபராக ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

எடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் காலை 6.30 மணிக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, எடப்பாடியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “தேங்க்ஸ்… தேங்க்ஸ்... நீங்க பண்ணதுக்கு எல்லாம் ரொம்ப தேங்க்ஸ்’’ என முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கிண்டல் தொனியுடன் ஸ்டாலின் சொல்ல, எடப்பாடி பழனிசாமியின் முகம் வெளிறியது. ஓ.பி.எஸ் வழக்கம்போல தனது அடக்கமாக நடையுடன் வெளியேறினார்.

‘மெரினாவில் இடம்’ தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் போய்த்தான் முடியும் போலிருக்கிறது என்ற தகவல் பரவிய வேளையில், எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தவந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எடப்பாடியை எதிர்த்துத் தொண்டர்கள் கோஷமிட, ஸ்டாலின் உதட்டில் கைவைத்து ‘உஷ்’ என எச்சரித்தார்.

ராஜாஜி ஹாலின் பின்புறம் உள்ள பாதையை வி.ஐ.பி-க்கள் வந்துசெல்லும் வழியாக அமைத்திருந்தனர். அந்தப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, முக்கிய நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. எம்.எல்.ஏ விடுதி அருகிலேயே தி.மு.க முக்கிய நிர்வாகிகளின் கார்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. காவல்துறை கூடுதல் ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் ராஜாஜி ஹாலைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மற்றொரு கூடுதல் ஆணையர் சாரங்கன், தொண்டர்கள் பகுதியில் பாதுகாப்பைக் கவனித்தார். வி.ஐ.பி என்ட்ரியின் பாதுகாப்பைக் கவனித்துக்கொண்டார் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ரவாளி பிரியா கந்தபுனேனி.

அரங்கின் இடதுபுறம் இருந்த பகுதியை அடைத்து, டேபிள் சேர் போடப்பட்டன. சுமார் பத்து  மணியளவில் காலை உணவு கொண்டுவரப் பட்டது. திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார். பத்து மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கவே, படிகளில் உட்கார்ந்திருந்த மூத்த நிர்வாகிகளுக்குச் சிக்கலாகி விட்டது. பலரும் பி.பி மற்றும் சர்க்கரை மாத்திரை போடவேண்டும் என்பதால், நைஸாக நழுவிச் சாப்பிட வந்துவிட்டனர். 

‘மெரினா இடம்’ தொடர்பான வழக்கில் 12 மணியளவில் தீர்ப்பு வந்துவிடும் என்ற நிலையில், அரங்கினுள் இருந்த அழகிரி தன் மகன் துரை தயாநிதியிடம் தீர்ப்பு விவரம் பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்தார். அரங்கினுள் செல்போன் நெட்வொர்க் கிடைக்காததால், வெளியேவந்து போன் பேசிவிட்டு, அனுமதி கிடைத்த விஷயத்தை அழகிரியிடம் சொன்னார் துரை தயாநிதி. கண்மல்க மகனைக் கட்டித் தழுவினார் அழகிரி. அறைக்குள் அனைவரும் எழுந்துநின்று சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். செல்வி கதறி அழுதபடியே ஸ்டாலினைப் பார்க்க ஓடினார். அதேநேரம், கருணாநிதி உடலருகே நின்ற ஸ்டாலினிடம் இந்த விஷயத்தைச் சொன்ன தயாநிதி மாறன், குலுங்கி அழ ஆரம்பித்தார். கண்ணீருடன் அனைவருக்கும் ஸ்டாலின் வணக்கம் செலுத்திய காட்சியைப் பார்த்து, தொண்டர்கள் உணர்ச்சிமயமாகிக் கோஷமிட்டனர். அண்ணனைத் தேற்றினார் கனிமொழி. மெரினா விவகாரம் கருணாநிதியின் குடும்பத்தை எவ்வளவு பாதித்திருந்தது என்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது. 

எடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா!

பிரதமர் மோடி வருவதற்கு முன்பாக, ராஜாஜி ஹால் வராண்டா காலி செய்யப்பட்டு, எஸ்.பி.ஜி செக்யூரிட்டிகளின் கெடுபிடி அதிகமானது. தி.மு.க-வின் பல முக்கிய நிர்வாகிகளைக்கூட அங்கிருந்து அகற்றிவிட்டனர். தமிழிசை, இல.கணேசன், முரளிதரராவ் ஆகியோர் தயாராகி, அந்த முதன்மை அறையில் உட்கார்ந்திருந்தனர். மோடி வந்ததும் ஸ்டாலின், கனிமொழி மற்றும் குடும்பத்தினரிடம் ஃபார்மலாக பேசியவர், “அழகிரி எங்கே?” என விசாரித்ததுதான் ஆச்சரியம். மோடி வந்தபோது நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வந்திருந்ததால், தொண்டர்கள் மத்தியில், ‘‘பிரதமர் மோடி வாழ்க’’ என்ற கோஷமும் ஒலித்தது.

பிரதமருடன் இணைந்து அஞ்சலி செலுத்த வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேராக ஸ்டாலினிடம் சென்று பேசிக்கொண்டிருந்தார். “ஏங்க... எல்லாத்துக்கும் நாங்கதான் காரணமா? எல்லாரும் என்னைக் காரணம் சொல்லிட்டு இருக்காங்க. இந்த விவகாரத்துக்கு நாங்க எப்படிங்க பொறுப்பாகுறது?’’ என மெரினா இடம் தொடர்பாக ஆதங்கத்துடன் கேட்டு விட்டார். அதனால், தர்மசங்கடமான சூழல் அங்கு ஏற்பட்டது.

வி.ஐ.பி நுழைவு வாயிலில், காலையிலிருந்தே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டி.ராஜேந்தர், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் வந்தபோது, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால், அந்த வி.ஐ.பி-க்களிடம் போலீஸார் சற்றுக் கடுமையாக நடந்துகொண்டனர். உள்ளே அனுமதிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. ‘‘என் குருநாதரைப் பார்க்க என்னையே அனுமதிக்க மாட்டீர்களா?’’ என போலீஸாரிடம் கோபம் காட்டினார் டி.ஆர். இவருக்கு மட்டுமல்ல, அந்த நுழைவு வாயிலில் வந்த பல வி.ஐ.பி-க்களுக்கும் இதுதான் நிலைமை. ஹெச்.ராஜா அஞ்சலி செலுத்தவந்தபோது, கூட்டத்தில் கடும் கூச்சல். 

வி.ஐ.பி வாயிலில் காலை முதலே தொண்டர்கள் பலரும் நின்றுகொண்டு ‘‘உள்ளே விடுங்கள்’’ என்று போலீஸுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். இதனால், பல முக்கியப் பிரமுகர்கள் உள்ளே வருவது சிக்கலானது. அதைத் தொடர்ந்து, வி.ஐ.பி என்ட்ரி அருகே சேகர்பாபு, எழும்பூர் ரவி, அன்னியூர் சிவா ஆகிய மூவரும் நின்று, காவலர்களுக்கு யாரை உள்ளே அனுப்ப வேண்டும் என்று சொல்லிவந்தனர். பிரதமர் வந்து சென்றபிறகு அங்கு நெரிசல் அதிகமானதால், கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் தடியடி நடத்தினர். ‘கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்யலாம்’ என்ற வெற்றிகரமான தீர்ப்பைப் பெற்றுக்கொண்டு ராஜாஜி ஹாலுக்கு வந்த வழக்கறிஞர்கள் வில்சன், இளங்கோ, விடுதலை, சண்முகசுந்தரம் ஆகிய நால்வரும் இந்தக் கூட்டத்தில் சிக்கிக்கொண்டனர். இவர்கள்மீதும் தடியடி நடத்தும் நிலை வந்தபோது, கூட்டத்தை ஒழுங்கு செய்ய நின்ற அன்னியூர் சிவா, ‘‘தீர்ப்பு வாங்கிய வழக்கறிஞர்களையே அடிக்கப் போகிறீர்களா?’’ என்று காவல்துறையினரிடம் கேட்டு, அந்த நால்வரையும் மீட்டு அரங்கிற்குள் அழைத்துச்சென்றார்.

‘மெரினாவில் இடம்’ என்று உறுதியானதும், இடத்தைத் தேர்வுசெய்யும் பணியில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர். இடத்தைப் பார்த்துத் தேவையான பணிகளைச் செய்யுமாறு தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, ஐ.பெரியசாமி, ஆகியோரிடம் ஸ்டாலின் சொன்னார். அதைத் தொடர்ந்து அண்ணா சமாதிக்கு அவர்கள் விரைந்தனர். பக்கத்தில் ஜெ. நினைவிடம் கட்டும் பணியில் இருந்த அத்தனை இயந்திரங்களும் அவசரமாக இங்கே திருப்பிவிடப்பட்டன. ஜெ. நினைவிடம் கட்டும் பணியில் சேர்ந்த குப்பைகளை இங்கேதான் கொட்டி வைத்திருந்தனர். அவற்றை அவசரமாக அகற்றிவிட்டுப் பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர். துரைமுருகன் வந்ததும் அதைப் பார்த்தார். அண்ணா சமாதிக்கு நேர்க்கோட்டில் அந்த இடம் இல்லாததால், பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்துச் சொன்னார். உடனே அந்தப் பள்ளத்தை மூடிவிட்டு, நேரான இடத்தைத் தேர்வுசெய்து புதிதாகப் பள்ளம் தோண்டினார்கள்.

எடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா!

ஏற்பாடுகளைப் பார்வையிட தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தின் பின்பக்கத்தில் பிரமாண்டமான ஜெயலலிதா படம் இருந்தது. ஜெ. நினைவிடம் கட்டும் இடத்திலிருந்து அகற்றப்பட்ட படம் அது. அதிகாரிகள் கொஞ்ச நேரத்தில் அதைக் கவனித்துவிட்டு, பாதுகாப்பாகத் திருப்பிவைத்தனர். நீதிமன்ற உத்தரவு வந்த ஐந்து மணி நேரத்துக்குள் குழிதோண்டி, கான்க்ரீட் போட்டு உடலை அடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்கள். 

‘அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு’ என்பதால் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, உமாநாத், பூஜா குல்கர்னி, தாரேஷ் அகமது, சந்தோஷ்பாபு, ஜெயந்தி, அனு ஜார்ஜ் உள்ளிட்டோர் ராஜாஜி ஹாலில் இருந்தனர். சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ராஜாஜி ஹாலுக்கு வந்து, ஸ்டாலினுடன் தனி அறையில் ஆலோசித்துவிட்டுச் சென்றார். ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டதிலிருந்து அமுதா, அனு ஜார்ஜ் என்ற இரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பம்பரமாகச் சுழன்றனர்.  பரபரப்பாகச் செயல்பட்ட அமுதாவைப் பார்த்து, “யார் இவங்க?” என்று கருணாநிதியின் குடும்பப் பெண்கள் ஆர்வத்துடன் விசாரித்தனர்.

கருணாநிதியின் உடல், சுமார் 6:15 மணிக்கு அண்ணா நினைவிடம் வந்து சேர்ந்தது. உடல்மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை எடுத்து மடித்த ராணுவத்தினர், ஸ்டாலினிடம் அதை ஒப்படைத்தனர்.  முறைப்படி, மூத்த மகன் மு.க.அழகிரியிடம் அந்தக் கொடியைக் கொடுக்க, அதிகாரிகள் தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் மு.க.அழகிரி, ‘‘கொடியைத் தம்பி ஸ்டாலினிடம் கொடுத்துவிடுங்கள்’’ என்றார். எனவே, அது ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது.

எல்லோரும் இறுதி மரியாதை செலுத்த, ராணுவ இசை இசைக்கப்பட்டு, 21 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அனைவர் கண்களிலும் கண்ணீர். அடக்கம் செய்யப்பட்டதும் பள்ளத்தை மூடுவதற்குப் பணியாள்கள் வருவதற்குள், குழுமியிருந்த தொண்டர்களே கைகளால் மண்ணை அள்ளியெடுத்து பள்ளத்தை நிரப்பத் தொடங்கினர். சிறிது நேரத்துக்கெல்லாம் மேகங்கள் திரண்டு மழை பொழிய ஆரம்பித்தது. 

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர், ந.பா.சேதுராமன், ஐஷ்வர்யா, மீனாட்சிசுந்தரம்
படங்கள்: பா.காளிமுத்து, ப.சரவணகுமார், தி.குமரகுருபரன், வி.ஸ்ரீனிவாசுலு, கே.ஜெரோம்

பிரதமர் போனதும் அலட்சியம் காட்டிய போலீஸ்!

ருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த உணர்ச்சிப்பெருக்கில் குவிந்திருந்த கூட்டத்தில், திடீரென்று ஏற்பட்ட தள்ளுமுள்ளு நால்வரைப் பலி கொண்டது. பாதுகாப்பு விஷயத்தில் போலீஸார் சரியாகத் திட்டமிடாததே இதற்குக் காரணம்.

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், ராஜாஜி ஹாலின் பின்புற வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முன்புற வாசல் வழியாக நூறு நூறு பேராக அனுமதிக்கப்பட்டனர். நான்காயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.12 மணியளவில், கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு திரண்டிருந்த மக்கள் ஆர்ப்பரித்தனர். அப்போதும் பாதுகாப்பு கட்டுக்குள் இருந்தது. அதன்பின்னர் பிரதமர் மோடி வந்து அஞ்சலி செலுத்திவிட்டுப் புறப்பட்டார். அதுவரை கட்டுக்குள் இருந்த பாதுகாப்பு, திடீரெனத் தளர்த்தப்பட்டது.

முக்கியப் பிரமுகர்கள் வந்துசெல்லும் பின்வாயில் பகுதியில் பொதுமக்களும், தி.மு.க தொண்டர்களும் நுழைய, அதைத் தடுக்க போலீஸாரிடம் எந்த முன்னேற் பாடுகளும் இருக்கவில்லை. முன்புறமும் அதே சூழல் நிலவியது. அதுவரை நூறு நூறு பேராக அனுமதிக்கப்பட்ட பொதுமக்களும் தொண்டர்களும் திடீரென முண்டியடித்து முன்னேறினர். முன்புற வழியாகவும் பின்புற வழியாகவும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர், கருணாநிதியின் உடல் வைக்கப்பட்ட இடத்தை நோக்கிப் பாய்ந்தனர். அதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா!

முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் பேச ‘மீடியா சென்டர்’ அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் கூட்டம் பின் வாயிலில் அதிகரிக்கத் தொடங்கியபோதே, அங்கிருந்த போலீஸாரிடம் செய்தியாளர்கள் தெரிவித்தனர். ஆனால், அதைத் தடுக்க போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்புற வாயிலில் வரும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு முன்புற வாயில் வழியே வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடும் நெரிசல் ஏற்பட்டதால், இரு வாயில்களில் திரண்ட தொண்டர்களும், பொதுமக்களும் வெளியேற வழியின்றி திணறினர். கருணாநிதி உடலைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், அங்கு பெரும் பதற்றம் உருவானது. அதையடுத்தே டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்தனர். தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். அதில் நெரிசல் ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்தனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகச் சொல்லப்படும் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்த வந்தபோதுதான், இந்தத் தள்ளுமுள்ளு நடந்தது. ராகுல்காந்தி நெரிசலில் சிக்கித் தவித்தார். ஜன்னல் வழியே தாவிக் குதித்து அவரை வெளியேறச் செய்தனர். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் சதாசிவம் உள்படத் தலைவர்கள் பலர் நெரிசலில் சிக்கினர். நேரம் ஆக ஆகக் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. ‘‘உங்களால் ஒழுங்கா பாதுகாப்பு கொடுக்க முடியலைன்னா சொல்லிடுங்க. எதுக்கு தேவையில்லாம லத்தி சார்ஜ் பண்றீங்க. ஜெயலலிதா இறந்தப்போ இப்படித்தான் நடந்துச்சா’’ என ஸ்டாலினும், கனிமொழியும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கோபப்பட்டனர்.

போலீஸ் இத்தனை அலட்சியம் காட்டியிருக்கக் கூடாது.

- ச.ஜெ.ரவி