அலசல்
Published:Updated:

கருணாநிதி - துணுக்குகள்

கருணாநிதி - துணுக்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கருணாநிதி - துணுக்குகள்

கருணாநிதி - துணுக்குகள்

கருணாநிதி - துணுக்குகள்

வீடும் வீடுபேறும்!

ரா
யப்பேட்டை அருகே ஹோட்டலில் காபி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார் எழுத்தாளர் பிரபஞ்சன். கார் ஒன்று அருகே வந்து நின்றது. ‘‘கலைஞரைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். நீங்களும் வாருங்கள்’’ என்றார் காரில் இருந்த நண்பர். இருவரும் சென்று கலைஞர் முன் அமர்ந்தனர். கலைஞர் பிரபஞ்சனை விசாரித்தார். ‘‘எங்கே இருக்கிறீர்கள்?’’

‘‘வீடுபேறுகூட கிடைத்துவிடும் போல இருக்கிறது... சென்னையில் வீடு கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது.’’

‘‘வீடு இல்லையா?’’

கலைஞர் யோசித்தார்.

‘‘பிச்சாண்டி இருக்கிறாரா... கூப்பிடுங்கள்!’’ என்றார் உதவியாளரிடம். பிச்சாண்டி அப்போது வீட்டுவசதித் துறை அமைச்சர்.

‘‘இவர் எழுத்தாளர் பிரபஞ்சன்... இவருக்கு உங்கள் துறையில் ஒரு வீடு ஒதுக்குங்கள்.’’

‘‘இப்போது எதுவும் காலி இல்லையே...’’ என இழுத்தார் அமைச்சர்.

‘‘இல்லை என்று சொல்வதற்கா அழைத்தேன்? ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார் அழுத்தமாக. பிரபஞ்சனுக்குப் பீட்டர்ஸ் காலனியில் அன்றே வீடு ஒதுக்கப்பட்டது.

- தமிழ்மகன்

கருணாநிதி - துணுக்குகள்

குளோஸ்!

தி
.மு.க-வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்த நேரம். கலைஞரும் மூப்பனாரும் இணைந்து பேட்டி அளித்தனர். போட்டோ செஷன் வந்தபோது, போட்டோகிராபர்கள், “அய்யா, ரெண்டு பேரும் கொஞ்சம் குளோஸா வாங்க, குளோஸா வாங்க” என்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது கலைஞர், “ஏயப்பா, கூட்டணியைக் குளோஸ் பண்ணி விட்றாதீங்க” என்று சொல்ல, அங்கே சிரிப்பலை அடங்க வெகுநேரம் பிடித்தது.

- ந.பா.சேதுராமன்

‘‘அங்கே இருக்கிறார் அண்ணா!’’

மர்ஜென்சி நேரத்தில் தி.மு.க-வுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற நிலை இருந்தது. ஒருநாள் கருணாநிதி, நாவலர், நாகநாதன் மூவரும் பீச்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இதுபற்றிய விவாதம் வந்தது. நாவலர், “கட்சியைத் தடை செய்தால் என்ன? வேற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்குவோம். அதற்கு ஏன் கவலைப்படறீங்க? என்றார். அப்போது குறுக்கிட்ட கருணாநிதி, “அப்படியில்லை. தி.மு.க அண்ணா தொடங்கியது. அதில் அவரின் உயிர் இருக்கிறது. இதைத் தடை செய்தால், கட்சியைக் கொஞ்சம் தள்ளிவைத்து நடத்துவோம். எம்.ஜி.ஆர் நடத்தும் கட்சியில் அண்ணாவும் இருக்கிறது. தி.மு.க-வும் இருக்கிறது. நாம் அதைப் பார்த்துக்கூட ஆறுதல் அடைந்துகொள்வோம்’’ என்றார்.

- ஜோ.ஸ்டாலின்

கத்தரிக்காய் முற்றி டி.வி-க்கு வந்தது!

ரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று 2010 ஜனவரி 25-ம் தேதி கோபாலபுரம் வீட்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சித்த மருத்துவர் கு.சிவராமன், நடிகை ரோகிணி தலைமையில் சந்தித்த டீம் வலியுறுத்தியது. ‘‘இந்தக் கத்தரிக்காயைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். இவற்றைவிட மிக முக்கியமாகப் பாரம்பர்யக் கத்தரிக்காய் விதை அழியும். பயிரிடும் நிலம் பாழாகும்’’ என்று விளக்கிக் கூறினர். அப்போது கருணாநிதி, ‘‘அறிவியல் பூர்வமாக மரபணு மாற்று கத்தரிக்காயால் எந்தப் பிரச்னையும் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறதே?’’ என்று சுமார் ஒரு மணி நேரம் தன் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தார். கடுமையான விவாதம். முடிவுக்கு வராமலேயே எழுந்துபோனார் கருணாநிதி. அவர்கள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு வந்து டி.வி-யைப் போட்டால் மரபணு கத்தரிக்காய்க்குத் தடைவிதிக்கப்பட்டதாக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது என டி.வி-யில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

கருணாநிதி - துணுக்குகள்

அறம் வெல்லும்!

மு
தல்வர் பதவியை கருணாநிதி இழந்ததும், 2001 ஜூன் 30 அன்று நள்ளிரவில் கருணாநிதியின் வீடு புகுந்தது ஜெயலலிதாவின் காவல்துறை. அவ்வளவு ஆற்றல் மிகுந்த அரசியலின் மூத்த தலைவரை போலீஸ் கையை முறுக்கியது. ‘‘கொல்றாங்களே... கொல்றாங்களே...’’ என்று அலறினார் கருணாநிதி. கைது செய்யப்பட்டு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தியபிறகு, சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் கருணாநிதி. அந்த நேரத்தில், கருணாநிதியிடம் ஒரு காகிதம் கொடுக்கப்பட்டது. ‘‘எதையாவது எழுதிக்கொடுங்கள்’’ என்று கேட்டார், காகிதத்தைக் கொடுத்த பத்திரிகையாளர். அந்த நெருக்கடியான நேரத்தில் சிரித்துக்கொண்டே கருணாநிதி, ‘அநீதி வீழும்... அறம் வெல்லும்!’ என்று எழுதிக்கொடுத்தார்.

- ஜோ.ஸ்டாலின்

“அறிவாலயத்தில் இல்லாத இடமா?’’

றிவாலயத்துக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் நிருபர்கள், வாசலில் இருக்கும் பூங்காவில்தான் பெரும்பாலும் அமர்ந்திருப்போம். வெயிலோ, மழையோ, ஒதுங்கி ஒதுங்கி வெளியில்தான் நிற்போம். பேட்டி என்றால் மட்டுமே உள்ளே போவோம். ஒருமுறை கலைஞர் அதைக் கவனித்து, அங்கிருந்த மூத்த செய்தியாளர்களைக் கூப்பிட்டு, “அறிவாலயத்தில் இல்லாத இடமாய்யா?” என்று கேட்டுவிட்டுச் சாதாரணமாகப் போய்விட்டார். அடுத்தநாளே, அறிவாலயத்தின் நுழைவுப் பகுதியில் செய்தியாளர்களுக்கு நாற்காலிகள், தேநீர், ஸ்நாக்ஸ், குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்கிறது.

- ந.பா.சேதுராமன்