அலசல்
Published:Updated:

கலைஞர் காலம் - ரவிக்குமார்

கலைஞர் காலம் - ரவிக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
கலைஞர் காலம் - ரவிக்குமார்

கலைஞர் காலம் - ரவிக்குமார்

மது ஜனநாயகத்தைத் தாங்கியிருக்கும் நான்காவது தூண் என்று பத்திரிகைகளைக் குறிப்பிடுவார்கள். ஆனால், அதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதில் கலைஞர் மட்டும் ஒரு விதிவிலக்கு.

கலைஞர் தன்னை ஒரு பத்திரிகையாள ராகக் கூறிக்கொள்வதில் பெருமைப் படுபவர். பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களைப் பொருட்படுத்துபவர். பத்திரிகையாளர்களை அதிகாலையில் போனில் அழைத்துப் பேசுவார் என்று நண்பர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கே வாய்க்கும் என நினைத்ததில்லை.

கலைஞர் காலம் - ரவிக்குமார்

நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதம்கூட ஆகவில்லை. ஈழத் தமிழ் அகதி முகாம்களின் நிலை குறித்துக் கட்டுரை ஒன்றை ஆனந்த விகடனில் எழுதியிருந்தேன். அதைப் படித்த கலைஞர், அதிகாலையில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ‘‘அகதி முகாம்களைப் பார்வையிட்டு அறிக்கை கொடுங்கள்’’ எனக் கூறினார். அதே பிரச்னையை நான் சட்டமன்றத்திலும் பேசியிருந்தேன் என்றபோதிலும், பத்திரிகையில் வந்ததுதான் அவரது கவனத்தை ஈர்த்தது. அந்தச் சமயத்தில், ஜூனியர் விகடனில் பத்தி எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து எனது கருத்துகளைப் பதிவுசெய்வதாக மட்டுமின்றி, அதை எனது சட்டமன்றப் பணியின் அங்கமாகவும் நான் மாற்றிக்கொண்டேன்.

ஒரு கோரிக்கையைச் சட்டமன்றத்தில் எழுப்பினால், அதுகுறித்து புள்ளிவிவரங்களுடன் ஜூ.வி-யில் கட்டுரையும் எழுதுவேன். அதுவரை கவனிக்கப்படாமல் கிடந்த பிரச்னைகள் குறித்து நான் சட்டமன்றத்தில் பேசியபோது, கலைஞர் அதைக் கூர்ந்து கவனிப்பதையும் குறிப்புகள் எடுப்பதையும் நான் பார்த்தேன். பீட்டர் அல்போன்ஸ் போன்ற மூத்த உறுப்பினர்கள் பேசுகிற நேரம், அவையில் அமர்ந்து கவனிக்கும் தலைவர் கலைஞர், நான் பேசுகிற நேரத்தில் அவைக்கு வந்து அமர ஆரம்பித்தார். அது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்தது. அமைச் சர்களும், அதிகாரிகளும் எனது கோரிக்கைகளை சீரியஸாக எடுத்துக்கொள்வ தற்கும் அது காரணமானது.

ஜூனியர் விகடனில் நான் கட்டுரைகளின் மூலமாக முன்வைத்த பல கோரிக்கைகள், அரசின் திட்டங்களாக மாறின. அவற்றுள் இரண்டை மட்டும் இங்கே பதிவுசெய்கிறேன்.

கலைஞர் காலம் - ரவிக்குமார்

நரிக்குறவர் நல வாரியம்:

நரிக்குறவர்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாகப் போராடிவந்தாலும், அது இன்னும்கூட நிறைவேறவில்லை. எனவே, அவர்களுக்கு நலவாரியம் ஒன்றை அமைத்துத்தர வேண்டும் என 2008 ஜனவரியில் ஜூ.வி-யில் கட்டுரை ஒன்றை எழுதினேன். ‘பாசிமணி ஊசியெல்லாம் விப்போமுங்க’ என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரையில், ‘‘நரிக்குறவர்கள் என்றாலே துப்பாக்கியும் கையுமாக அவர்கள் காட்சியளிப்பதுதான் நமக்கு நினைவுக்கு வரும். இப்போது, வேட்டைக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டன. துப்பாக்கி லைசென்ஸ் புதுப்பிப்பதிலும் அரசு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது. இவ்வளவு காலமும் நரிகளை வேட்டையாடிப் பிழைத்துவந்த நரிக்குறவர்கள், இப்போது பிழைப்புக்கு வழியின்றி கஷ்டப் படுகிறார்கள். ‘நரிக்கொம்பு இருக்கிறது வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று பேருந்து நிலையங்களில் நச்சரிக்கும் நரிக்குறவர்களை இதனால்தான் இப்போது காணமுடிவதில்லை. நரிகளெல்லாம் இறைவனின் திருவிளையாடலால் குதிரைகளாக மாற்றப்பட்டதாகப் புராணக்கதை ஒன்று உண்டு. அதேபோல இறைவனின் திருவிளையாடலோ என்னவோ, இப்போது நரிகளெல்லாம் மனிதர்களாக மாறிவிட்டன. அதனால், நரிக்குறவர்களின் பாடு திண்டாட்டமாகி விட்டது” எனக் குறிப்பிட்டிருந்தேன். அதுமட்டு மின்றி, “கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சில சிறப்புத் திட்டங்களை முதல்வர் கலைஞர் அறிவித்தார். அதுபோல இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நரிக்குறவர், இருளர், கல்ஒட்டர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காக நலத்திட்டங்களை அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தேன்.

அந்தக் கட்டுரை வெளிவந்து ஒரு சில நாள் களிலேயே சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் இதைப் பேசினேன். அந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே நரிக் குறவர் நல வாரியத்துக்கான அறிவிப்பு வந்துவிட்டது.

குடிசைகளில்லா தமிழ்நாடு:

தமிழ்நாட்டைக் குடிசைகளில்லா மாநிலமாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை எனது கன்னி உரையிலிருந்தே முன்வைக்கத் தொடங்கி விட்டேன். எப்போது பேசினாலும் அதைக் குறிப்பிடாமல் விடமாட்டேன். நான் பேச எழுந்தாலே அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ‘‘குடிசைகளில்லாத தமிழ்நாடுன்னு ஆரம்பிச்சுடாதே’’ என வேடிக்கையாக கமென்ட் அடிப்பார்.

குடிசைகளில்லா தமிழ்நாடு குறித்து நான் ஜூ.வி-யில் எழுதிய கட்டுரையில், “நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமை, அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் கூறப்பட்டிருக்கிறது. கௌரவத்துடன் வாழ்வதென்று சொன்னால் ‘போதுமான உடை, தேவையான உணவு, படிப்பதற்கும், ஒருவர் தன்னைத் தான் விரும்பியவாறு வெளிப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பளிக்கும் விதத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஆகியவையும் அதில் அடங்கும்’ என 1981-ல் உச்ச நீதிமன்றம் அதற்கு விளக்கமளித்தது.

அதன்பிறகு 1990-ல் உச்ச நீதிமன்றம் இன்னொரு தீர்ப்பில், ‘மனிதனுக்கான அடிப்படைத் தேவைகள் என்று எல்லோரும் ஏற்றுக்கொண்ட விஷயங்கள் மூன்றாகும். உணவு, உடை, இருப்பிடம் ஆகியவைதான் அந்த மூன்று தேவைகள். உயிர் வாழ்வதற்கான உரிமை எல்லாச் சமூகத்திலும் உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கிறது. உயிர் வாழ்வதற்கான உரிமையென்றால் அது, உணவுபெறுவதற்கான உரிமை, சுகாதாரமான சுற்றுச்சூழலுக்கான உரிமை, கௌரவமான இருப்பிடத்திற்கான உரிமை என்பவற்றை உள்ளடக்கியதுதான். நமது அரசியலமைப்புச் சட்டம், ஒவ்வொரு குழந்தையும் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டும் என்று கூறுகிறது. ஒரு குழந்தை நல்ல வீட்டுச்சூழ்நிலை இருந்தால்தான், முழுமையாக வளரமுடியும். ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய கௌரவமான ஒரு வீடு அவசியமாக இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளது.

1997-ம் ஆண்டு நவாப் கான் என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘குறைந்த விலைக்கு வீடுகளைக்கட்டி அதை ஏழை மக்களுக்குக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் காரணமாக, வீட்டுக்கான உரிமை என்பது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தேன்.

கலைஞர் காலம் - ரவிக்குமார்

“​தமிழ்நாட்டில், 2001-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சுமார் ஒரு கோடியே நாற்பத்திரண்டு லட்சம் வீடுகள் உள்ளன. இதில், 41 சதவிகிதத்தினர் நிலையற்ற, குடிசை வீடுகளில் வாழ்கிறார்கள் எனக் கண்டறிந்திருக்கிறார்கள். இது இந்திய அளவில் குடிசை வீடுகளில் வாழ்கிற மக்களின் சதவிகிதத்தைவிட மிகமிக அதிகமாகும்” என்ற புள்ளிவிவரத்தையும் அதில் எடுத்துக் காட்டியிருந்தேன். இறுதியில் “இலவசமாக இதைத் தருகிறோம், அதைத் தருகிறோம் என்று அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதற்குப் பதிலாக, ‘வீடற்ற மக்களுக்கு வீடு கட்டித் தருகிறோம்’ என்று கூறினால், அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைப்பது நிச்சயம். எனவே, இந்த வாக்குறுதியை அளிப்பதற்கு அரசியல் கட்சிகள் முன்வருமா?” எனக் கேட்டிருந்தேன்.

2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நேரம். ஒருநாள், பேராசிரியர் நாகநாதனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘குடிசை வீடுகளை ஒழித்துவிட்டு கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டுமென நீங்கள் கேட்டீர்களாமே. உங்கள் கோரிக்கையை தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு தலைவர் கூறியிருக்கிறார். அதைப்பற்றிப் பேசவேண்டும் நேரில் வாருங்கள்’ என்றார். விரைந்து சென்று அந்த விவரங்களைக் கொடுத்தேன். தேர்தல் அறிக்கையில் அந்த வாக்குறுதி இடம்பெற்றது. அந்தத் தேர்தலில், தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. அதற்கு அடுத்ததாகச் சமர்ப்பிக்கப்பட்ட மாநில பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் 21 லட்சம் குடிசைகள் இருப்பதாகவும், அவற்றை மாற்றி ஆண்டுக்கு மூன்று லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார் கலைஞர். அவையில் அந்த அறிவிப்பைப் பேராசிரியர் படித்தபோது என்னைப் பார்த்துக் கரத்தை உயர்த்தி, ‘இப்போது சந்தோஷம்தானே’ என்பதுபோல கலைஞர் பாவனை செய்தார். நான் எழுந்துநின்று இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி அவரை வணங்கினேன். மகிழ்ச்சியில் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டே ஆண்டுகளில் ஐந்து லட்சம் பேர் அந்தத் திட்டத்தால் வீடுகளைப் பெற்றனர்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டதற்கும்; மின்னணுக்கழிவுக் கொள்கை இயற்றப்படுவதற்கும்; கடலூர் மாவட்டத்துக்கென வெள்ளத்தடுப்பு திட்டம் தீட்டப்படுவதற்கும்; குண்டு பல்புகளை மாற்றி சி.எஃப்.எல் விளக்குகள் அறிமுகம் ஆனதற்கும் நான் ஜூ.வி-யில் எழுதிய கட்டுரைகளே காரணம். இதுபோல இன்னும் பலவற்றைக் கூறமுடியும். எளிய மக்களுக்கான கோரிக்கைகளை இதயத்தால் கேட்டு, உடனுக்குடன் நிறைவேற்றித் தந்த தலைவர் கலைஞர் இன்று இல்லை. ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ எனப் பாடிய பாரிமகளிர்போலப் பரிதவிக்கிறேன் நான்.