அலசல்
Published:Updated:

மெரினா தடை... தகர்ந்த கதை!

மெரினா தடை... தகர்ந்த கதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மெரினா தடை... தகர்ந்த கதை!

மெரினா தடை... தகர்ந்த கதை!

மெரினா தடை... தகர்ந்த கதை!

ந்தியாவின் தலைநகர் டெல்லியை ‘சமாதிகளின் பூமி’ என்று வரலாற்றாய் வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மெரினா கடற்கரை ‘திராவிட அரசியலின் நினைவு பூமி’ என்ற சிறப்பைப் பெற்றுவிட்டது. திராவிட அரசியலை முன்னெடுத்த அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களைத் தொடர்ந்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவிடமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பட்டத்தை மெரினா அடைவதற்குப் பல சித்தாந்தத் தடைகள், அரசியல் காரணங்கள், சட்டத்தின் பெயரில் முட்டுக்கட்டைகள் விழுந்தன. அத்தனையையும் நீதிமன்றத்தில் உடைத்தது தி.மு.க வழக்கறிஞர் பிரிவு.

ஆகஸ்ட் 7-ம் தேதி தி.மு.க தலைவர் கருணாநிதி மரணமடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, மெரினாவில் இடம் கேட்டு ஸ்டாலின் தலைமையில் தி.மு.க குழு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது. அதற்கு முன்பே, கருணாநிதியை மருத்துவமனையில் பார்க்க வந்த ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரிடம் இதுபற்றி தி.மு.க சார்பில் பேசப்பட்டிருந்தது. ஆனால், எதுவும் பயன்படவில்லை. 7-ம் தேதி இரவு, தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டிருந்தது. 

கருணாநிதிக்கு மெரினா இடம் மறுக்கப்பட்டபோது, தி.மு.க தொண்டர்கள் அத்தனைபேரின் கோபமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம்தான் திரும்பியது. அவரைத் திட்டி கோஷம் போடாத தி.மு.க தொண்டர் ஒருவர்கூட பாக்கி இல்லை. உண்மையில், எடப்பாடி பழனிசாமிக்கு அந்த எண்ணம் சுத்தமாக இல்லை என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். ‘கருணாநிதிக்கு இடம் கொடுக்கக் கூடாது’ என டெல்லி யிலிருந்தும், தன் அமைச்சரவை சகாக்கள் சிலரிடமிருந்தும் எடப்பாடிக்கு நிர்பந்தங்களும் எச்சரிக்கைகளும் இருந்தன என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். இந்தத் தடைகளை வெளிப்படையாக எடப்பாடியால் உடைக்க முடியவில்லை. அதனால், நீதிமன்றத்தின் பக்கம் பந்தைத் திருப்பிவிட்டு, தி.மு.க-வை வைத்தே உடைக்க வைத்தார். ‘‘தடை உடைபட்ட பிறகு, தமிழக அரசு மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் போகாததற்கு அதுதான் காரணம்’’ என்கிறார்கள் அவர்கள்.  

மெரினா தடை... தகர்ந்த கதை!

ரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குநராக நியமிக்கப்படுகிற அளவுக்கு டெல்லி  பி.ஜே.பி-யில் தனிச் செல்வாக்குப் பெற்ற ஆடிட்டர் குருமூர்த்தி, ‘கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்கக்கூடாது’ என்று பேசியதிலிருந்தே எடப்பாடிக்கு என்ன நிர்பந்தம், எங்கிருந்து அது கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை எளிதாக யூகித்துவிடலாம். அதுபோக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் சில அரசியல் புதிர்களில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க வேண்டிய அழுத்தம் இருந்தது. குறிப்பாக, எம்.ஜி.ஆரின் வெறித்தனமான ரசிகர்களுக்கும், எம்.ஜி.ஆருக்காகவே இன்னும் அ.தி.மு.க-காரர்களாக நீடிக்கும் தொண்டர்களுக்கும், கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர் சமாதி அருகே இடம் கொடுப்பதில் விருப்பம் இல்லை. அது, அவரின் அமைச்சரவை சகாக்களிடமே எதிரொலித்தது. அவர்களில் பலர், ‘‘கருணாநிதிக்கு அம்மா நினைவிடம் அருகில் இடம் கொடுத்தால், அவருடைய ஆன்மா உங்களை மன்னிக்காது’’ என்ற ரீதியில் எடப்பாடியை மிரட்டவே செய்தனராம். அதன்பிறகுதான், கருணாநிதி உடல் அடக்கத்துக்கான இடம் தொடர்பாக வெளியான அறிக்கை, அரசாணையாகவும் இல்லாமல், பத்திரிகைச் செய்தியாகவும் இல்லாமல் இரண்டுக்கும் பொதுவாக தலைமைச் செயலாளர் பெயரில் வெளியானது.

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி, இறக்கும் நேரத்தில் முதல்வராக இல்லை. அது, காலம் அவருக்குச் செய்த பாதகம். ஆனால், அவருக்கு மெரினாவில் இடம் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்த நீதிபதிகள், இந்த நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்தது அவருக்குக் காலம் செய்த சாதகம். தி.மு.க சார்பில் வழக்கறிஞர் வில்சன் 7-ம் தேதி இரவு 9.20 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ரமேஷைத் தொடர்புகொண்டு, ‘‘அவசர வழக்காக இதை எடுத்து விசாரிக்க வேண்டும்’’ என்று சொன்னார். இந்த விவகாரத்தில் அவசர வழக்காக எடுக்க என்ன முக்கியத்துவம் உள்ளது என்று நீதிபதி கேட்டிருக்கிறார். ‘‘கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கக் காரணம் சட்டச் சிக்கல்கள் என்கிறார்கள். ஆனால், சட்டச் சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதை அரசாங்கத்துக்கு நீதிமன்றம்தான் உணர்த்த வேண்டும். அந்த முக்கியத்துவம் உள்ளதால், இதை அவசர வழக்காக எடுக்க வேண்டும்’’ என்று வில்சன் முறையிட்டார்.

இதையடுத்து, தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி, ‘‘இரவு 10.30 மணிக்கு வழக்கை விசாரிக்கிறேன்’’ என்றார். அரசு வழக்கறிஞர்களுக்குத் தகவல் போனது. அரசாங்கத்தின் சார்பில் இந்த வழக்கில் வாதாட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வந்தார். ஹுலுவாடி ரமேஷ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதி ரமேஷின் இல்லத்திலேயே அமர்ந்தது. நீதிபதியின் வீட்டுக்குள், இந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், மெரிீனாவில் ஜெயலலிதாவுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று ஏற்கெனவே மனு போட்டிருந்த மனுதாரர்கள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

மெரினா தடை... தகர்ந்த கதை!

தி.மு.க வழக்கறிஞர் வில்சன், “இடம் கொடுக்க மாட்டோம் என அரசு மறுக்கவில்லை. ஆனால், நாங்கள் கேட்ட இடத்தை ஒதுக்கவில்லை. அதில் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளனர். அது என்ன சட்டச் சிக்கல் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இப்போது அரசு, இடத்தை மறுத்துப் பத்திரிகைச் செய்தி கொடுத்திருப்பதால், தமிழகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதான் புதிய சட்டச் சிக்கல்களை அரசுக்கு ஏற்படுத்தப்போகிறது’’ என்றார். அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன், “இந்த வழக்கை ஏன் இரவிலேயே விசாரிக்க வேண்டும்; அந்த அளவுக்கு இதில் என்ன முக்கியத்துவம் உள்ளது? எதிர்த் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுவுக்குப் பதில் அளிக்க எங்களுக்குக் கால அவகாசம் வேண்டும்” என்றார். அதைக் கேட்ட நீதிபதிகள் கடுப்பாகி, “கால அவகாசம் என்றால், உங்களுக்கு ஒரு வாரம் போதுமா?’’ என்று கேட்டனர். சூழலை உணர்ந்துகொண்ட அரசுத் தரப்பு, காலை 10.30 மணி வரை அவகாசம் கேட்டது. ஆனால், ‘‘காலை 8 மணிக்குப் பதில் மனு தாக்கல் செய்யுங்கள். நாங்கள் 8.30-க்கு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கிறோம்’’ என்றனர் நீதிபதிகள். இதைக் கேட்டதுமே தி.மு.க வழக்கறிஞர்கள் முகத்தில் நிம்மதி நிழலாடத் தொடங்கியது. இந்த வழக்கு இழுத்தடிக்கப் படாது என்று அவர்கள் உணர்ந்தனர்.

என்றாலும், அந்த இரவிலேயே சேகர்பாபுவின் அலுவலகத்தில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, பூச்சிமுருகன் ஆகியோர் வழக்கறிஞர்கள் குழுவுடன் அமர்ந்து ஆவணங்களை ரெடி செய்தனர். ஒருவேளை தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்குப் போனால் என்ன செய்வது என, அதற்கும் மனுவைத் தயார் செய்தனர். கட்சி நிர்வாகிகள் பலரும் கோபால புரத்தில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்த நேரத்தில், இவர்கள் இங்கு அமர்ந்து இதைச் செய்தனர்.

மெரினா தடை... தகர்ந்த கதை!

மறுநாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. அரசுத் தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஜெயலலிதாவுக்கு இடம் ஒதுக்கக் கூடாது’ என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் பற்றிய விவரங்கள் இருந்தன. ஆனால், அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டபோது, “கருணாநிதி முதல்வராக இருந்தபோது, முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், ஜானகி அம்மையார் ஆகியோருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை. ஏன், திராவிடத் தலைவராக அறியப்படும் பெரியாருக்குக்கூட இடம் ஒதுக்கவில்லை’’ என்றார். உடனே வில்சன், ‘‘அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதில் மனுவில் இல்லாத விஷயங்களைத் தன் வாதத்தில் குறிப்பிடுகிறார். அவரை யாரோ எங்கிருந்தோ இயக்குகிறார்கள்’’் என்றார். உடனே வைத்தியநாதன், ‘‘ஜெயலலிதாவுக்கு மெரினாவில் இடம் கொடுத்தபோது பல காரணங்களை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்துக்கு வந்தவர்கள் எல்லாம், ஒரே இரவில் அந்த வழக்குகளை வாபஸ் வாங்குகிறார்கள் என்றால், அவர்களைத்தான் யாரோ இயக்குகிறார்கள்’’ என்றார்.

வழக்கிலிருந்து விலகி எங்கோ போன விவாதத்தை நெறிப்படுத்திய நீதிபதிகள், ‘‘சட்டச் சிக்கல் தொடர்பான அத்தனை வழக்குகளும் வாபஸ் ஆகிவிட்டன’’ என்று சொல்லி, தீர்ப்பை வழங்கினர். நீதிபதிகள் இதற்கான வாய்மொழி உத்தரவைக் காலை 11.54 மணிக்குப் பிறப்பித்தனர். டெல்லி அரசியல், அரசுக் குறிப்பு, நீதிமன்ற வழக்குகள் என அத்தனை தடைகளையும் உடைத்து, தன் அண்ணாவின் பக்கத்தில் ஓய்வெடுக்க இடம்பிடித்தார் அவரின் தம்பி கருணாநிதி.

- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: ப.சரவணக்குமார், தே.அசோக்குமார்

‘‘பெரியாருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை!’’

‘‘பெ
ரியார், ராஜாஜி, காமராஜர், ஜானகி ராமச்சந்திரன் ஆகியோர் மறைவின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி, அவர்களுக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கவில்லை’’ என்ற வாதத்தைத் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் முன்வைத்தார். இதுகுறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் கேட்டோம். ‘‘இது தவறான வாதம். பெரியார் 1973-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி வேலூர் மருத்துவமனையில் மறைந்தபோதே அன்னை மணியம்மையாரும், நாங்களும் ‘பெரியார் உடலை பெரியார் திடலில்தான் அடக்கம் செய்ய வேண்டும்’ என்று முடிவெடுத்தோம். மெரினாவில் இடம் கேட்கவில்லை. இதை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் சொன்னோம். பெரியார் நினைவிடத்தை கொள்கைரீதியாகவும் நிரந்தரமாகவும் பாதுகாக்க பெரியார் திடல்தான் பொருத்தமான இடம் என்பது எங்கள் எண்ணம். எமர்ஜென்சி காலத்தில், அண்ணா நினைவிடத்தில் விளக்குகள்கூட போடவில்லை என்பதெல்லாம் வரலாறு.

மெரினா தடை... தகர்ந்த கதை!

ராஜாஜி, காமராஜர் பெயர்களையும் இந்தப் பிரச்னையில் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் உண்மை இல்லை. ராஜாஜியின் இறுதி அஞ்சலியை அவரின் குடும்பத்தினர் மரபுப்படி செய்தார்கள். கருணாநிதியே முன்வந்து, யாரும் கேட்காமலேயே ஓர் இடத்தை ஒதுக்கி ராஜாஜிக்கு நினைவிடத்தைக் கட்டினார். ‘காமராஜர் நினைவிடம் காந்தி மண்டபத்துக்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் நண்பர்கள், தேசியவாதிகள், காமராஜரின் நண்பர்கள் விரும்பினார்கள். காமராஜர் மறைந்த அன்றிரவே, இப்போது நினைவிடம் உள்ள இடத்துக்கு முதல்வர் கருணாநிதி காரில் போனார். அவருடன் நானும் சென்றேன். இரவு 9.30 மணிக்கு மேல், கருணாநிதியின் கார் வெளிச்சத்தில்தான் அந்த இடத்தைப் பார்வையிட்டோம். அந்த இடத்தை இரவோடு இரவாகச் சரிப்படுத்தினார்கள்’’ என்றார் வீரமணி.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

‘‘காமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்டோம்!’’

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியிடம் பேசினோம். ‘‘1975 அக்டோபர் 2-ம் தேதி காலமானார் காமராஜர். அப்போது நான், கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தேன். தகவல் கிடைத்தவுடன், தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி கிளம்பி வந்துவிட்டார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜாராம், பழ.நெடுமாறன், கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றவர்களுடன் நானும் இருந்தேன். நாங்கள் அனைவரும் காமராஜரை மெரினாவில்தான் தகனம் செய்யவேண்டும் என்கிற முடிவுடன் இருந்தோம். ஒருசிலர், ‘தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் தகனம் செய்யலாம்’ என்றனர். அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கருணாநிதி, என்னைத் தனியாக அழைத்தார். ‘மெரினாவில் அண்ணா சமாதியை வைத்துவிட்டுக் கஷ்டப்படுகிறோம். அதைப் பராமரிக்கச் சிரமமாக இருக்கிறது. காமராஜரை மெரினாவில் தகனம் செய்வதில் இந்தச் சங்கடம் இருக்கிறது. காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வதுதான் சரியாக இருக்கும். ஒரு பக்கம் ராஜாஜி, இன்னொரு பக்கம் காமராஜர். மரியாதையாக இருக்கும். காங்கிரஸ் மைதானத்தில் வைத்தால், கட்சிக்காரர்கள் மட்டும்தான் வருவார்கள்’ என்றார்.

மெரினா தடை... தகர்ந்த கதை!

பழ.நெடுமாறன், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகிய மூவரும் மெரினாவில் பிடிவாதமாக இருந்தார்கள். ஆனால், எனக்கு கருணாநிதி சொன்னவை சரி என்று தோன்றியதால், காந்தி மண்டபம் அருகே வைத்துக்கொள்ள சம்மதித்தேன். பிறகு நெடுமாறனிடம் பேசி சம்மதிக்க வைத்தேன். மற்றவர்களும் சம்மதம் சொன்னார்கள். இடத்தைப் பார்க்க என்னையும், ராஜராமையும் கருணாநிதி அழைத்துச் சென்றார். இரவோடு இரவாக இடத்தை ரெடி செய்தார்கள். அப்படித்தான் காமராஜரைத் தகனம் செய்ய இடம் தேர்வானது’’ என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி. ஆனால் பழ.நெடுமாறனோ, “காமராஜருக்கு நாங்கள் மெரினாவில் இடம் கேட்கவே இல்லை. கிண்டியில் இடம் ஒதுக்க அன்றைய முதல்வர் கருணாநிதி தாமாகவே முன்வந்தார். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று கூறியுள்ளார்.

- ஆர்.பாலகிருஷ்ணன்

‘‘எனக்கும் மெரினாவில் இடம் கேட்பேன்!’’

டி
ராபிக் ராமசாமி நம்மிடம் கோபம் குறையாமல் பேசினார். ‘‘கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கிடையாது என்று தமிழக அரசு வெளியிட்ட பத்திரிகைச் செய்தியை எதிர்த்துத்தான் தி.மு.க மனு போட்டது. ‘மெரினாவில் சமாதிகளே இருக்கக் கூடாது. ஏற்கெனவே இருக்கும் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரின் சமாதிகளையும் அகற்றி வேறு இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்’ என்று 2017-ல் நான் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு விசாரணையில் இருப்பதால், தி.மு.க போட்ட அவசர வழக்குக்குச் சிக்கல் உருவானது. ஜெயலலிதா சமாதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க வழக்கறிஞர் கே.பாலுவும், தந்தை பெரியார் தி.க-வைச் சேர்ந்த துரைசாமியும் தொடர்ந்திருந்த வழக்குகளை, அவர்கள் வாபஸ் வாங்கிவிட்டார்கள். என் வழக்குதான் அவர்களுக்குப் பிரச்னையாக இருந்தது.

மெரினா தடை... தகர்ந்த கதை!

தி.மு.க மனுவுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. என்றாலும், ஏற்கெனவே அதுதொடர்பான எங்கள் வழக்கு நிலுவையில் இருப்பதால், இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க என் வழக்கறிஞர் கணேசனை அங்கு போகச் சொன்னேன். அவர் தாக்கப்பட்டார். அதையும் மீறி உள்ளேபோய் நீதிபதிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால், மறுநாள் காலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எங்கள் வழக்கையும் விவாதித்து, ‘இது தகுதியான வழக்கு இல்லை’ என்று தள்ளுபடி செய்திருக்கிறார்கள். ஆனால், எங்கள் வழக்கறிஞர் வழக்கை வாபஸ் வாங்க வந்ததாக தவறாகச் செய்தி வெளியாகிவிட்டது. நான் எதற்காக வாபஸ் வாங்க வேண்டும்? உச்ச நீதிமன்றத்துக்குப் போவேன். எல்லாச் சமாதிகளையும் மெரினாவிலிருந்து அகற்றாமல் ஓயமாட்டேன். அது முடியாது என்று நீதிமன்றம் சொன்னால், எனக்கும் மெரினாவில் இடம் கேட்பேன்’’ என்றார்.

டிராபிக் ராமசாமியின் வழக்கறிஞர் கணேசன், ‘‘ஆகஸ்ட் 7-ம் தேதி இரவு 10.30 மணிக்கு அவசர வழக்காக இதை விசாரிக்கப்போகிறார்கள் என்று டி.வி-யில் செய்தி வந்தது. எனவே, நான் அங்கே போனேன். சில நிமிடங்களில் நான் வழக்கை வாபஸ் வாங்க வந்திருப்பதாக டி.வி-யில் செய்தி வருவதாக, நண்பர் ஒருவர் எனக்கு போன் செய்தார். இதுகுறித்து அங்கிருந்த நிருபர்களிடம் கேட்டேன். அப்போது அங்கிருந்த ஒரு பெரிய கும்பல், ‘வழக்கை வாபஸ் வாங்கலைன்னா நீ எதுக்கு இங்கே வந்துருக்கே’ன்னு கேட்டு என்னை சுத்திக்கிட்டாங்க. என்னை அடிச்சு, என் வக்கீல் கோட்டை கிழிச்சாங்க. போலீஸ் வந்து என்னை மீட்டுச்சு’’ என்றார்.

- எம்.புண்ணியமூர்த்தி