அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன?

மிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன?

மிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன?

மெரினாவில் கருணாநிதி புதைக்கப் பட்ட மறுநாள் ஆகஸ்ட் 9... மொத்தக் குடும்பமும் மு.க.ஸ்டாலி னுடன் போய் கருணாநிதி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தும் காட்சி டி.வி திரையில் ஓடிக்கொண்டிருக்க... அதைப் பார்த்தபடியே வந்த கழுகார், தியானம் செய்வதுபோன்ற பொசி ஷனில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்தார்.

மிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன?

‘‘என்ன... நீங்களும் தியானத்தை ஆரம்பித்து விட்டீர் போலிருக்கிறதே?’’ என்று கேட்டதும், ‘‘நீர் வேறு, எதையாவது கொளுத்திப் போட்டுவிடாதீர். பிறகு என்னால் வெளியில் தலைகாட்ட முடியாமல் போய்விடும்’’ என்று உஷாரானார் கழுகார். 

‘‘செயல்படாவிட்டாலும், தலைவர் என்கிற பொறுப்பு கடைசிவரை கருணாநிதியிடம்தான் இருந்தது. அவர் இல்லாத தி.மு.க-வில் அடுத்த என்ன நடக்கும்?’’ என்று கேட்டோம்.

‘‘தி.மு.க பொதுக்குழு அறிவாலயத்துக்கு வெளியே நடந்ததில்லை. இம்முறை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பொதுக்குழு என்று ஏற்கெனவே தேதி குறிக்கப்பட்டது. ஆனால், கருணாநிதியின் மரணத்தைக் காரணம் காட்டிப் பொதுக்குழு தள்ளிவைக்கப்படும் என்கிறார்கள் சிலர். ஆனால், ‘திட்டமிட்டபடி அது நடக்கலாம். செயல்தலைவர் பதவியில் இருக்கும் மு.க.ஸ்டாலின், தலைவர் பதவியில் அமரவைக்கப்படுவார். பொதுச்செயலாளர் அன்பழகன் முன்மொழிய, கட்சி நிர்வாகிகள் வழிமொழிய ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டப்படும்’ என்கிறார்கள் சிலர். அதேசமயம், மு.க.அழகிரியை சமாதானப்படுத்தும் வகையில் ஒரு பெரிய பொறுப்பு தரப்படக் கூடுமாம். அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு தி.மு.க அறக்கட்டளையில் உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென ஏற்கெனவே கோரிக்கை எழுப்பப் பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். டெல்லி அரசியலைக் கவனித்துக் கொள்ளும்வகையில், கனிமொழிக்கு கூடுதல் பதவி தரப்படலாம்’’ என்று சொல்லிக்கொண்டே போனார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன?

‘‘இதற்கெல்லாம் எதிர்ப்புகள் வராதா?’’

‘‘கடந்த இரண்டு ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின்தான் தலைவராக அனைத்தையும் தீர்மானிக்கிறார். கருணாநிதி உயிருடன் இருந்ததால், ஒருவித எச்சரிக்கை உணர்வுடன்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருந் தார். கருணாநிதி இல்லாத சூழலில், இப்போது ஒவ்வோர் அடியும் அளந்துதான் வைக்கப்பட வேண்டி யிருக்கும். குடும்பம், கட்சி நிர்வாகிகள், கூட்டணி மற்றும் பிற கட்சியினர் என எந்தத் திசையிலிருந்தும் ரியாக்‌ஷன் வரலாம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து அரசியல் நடத்திய கருணாநிதி, அவர்கள் முதல்வராக இருந்தபோது, அவர்களின் வீடுகளுக்கு ஒரு முறைகூட போனதில்லை. ஆனால், குடும்பத்தி னருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கே போய் அவரைச் சந்தித்து, ‘மெரினாவில் இடம் வேண்டும்’ என்று கேட்டார் ஸ்டாலின். கடைசியில் நீதிமன்றம்தான் அதைச் செய்தது. ‘88 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள ஸ்டாலின், இந்த விஷயத்தில் இன்னும் சாமர்த்தியமாக நடந்துகொண்டிருக்கலாம். இவர் கோட்டைவிட்டுவிட்டார்’ என்று தி.மு.க மேல்மட்டத் தலைவர்கள் சிலரே பேசிக்கொள்கிறார் களாம்.’’

‘‘ஆனால், சட்ட முயற்சியில் இது சுமுகமாக முடிந்திருக்கிறதே?’’

‘‘சரிதான். ஆனால், பல்வேறு விஷயங்களிலும், ‘இந்நேரம் கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்திருந்தால், இப்படி விட்டிருப்பாரா?’ என்று கருத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே தி.மு.க-வுக்குள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வி. ‘இனிவரும் காலத்தில் அத்தனை எம்.எல்.ஏ-க்களுமே ஸ்டாலினுக்குக் கட்டுப்பட்டு அமைதி காப்பார்களா?’ என்ற கேள்வி எழுகிறது. கருணாநிதிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் அரசியல் செயல்பாடுகளில் நிறைய வித்தியாசம் தெரிகிறது. கருணாநிதி தன் அருகில் வைத்துக்கொண்ட ஆ.ராசா, பொன்முடி, ஆற்காடு வீராசாமி போன்ற சிலர், தி.மு.க சித்தாந்தத்தில் பிடிமானம் கொண்டவர்கள். எந்தச் சூழலிலும் கட்சியை விட்டுப்போகாதவர்கள். மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்குப் பதவிகள் கொடுப்பார்; தேர்தலில் சீட் கொடுப்பார். ஆனால், அருகில் நெருங்க விடமாட்டார். ஆனால், ஸ்டாலின் அப்படியில்லை. மாற்றுக்கட்சியிலிருந்து வந்த எ.வ.வேலு, சேகர்பாபு போன்ற சிலரைத்தான் உள் வட்டத்தில் வைத்திருக்கிறார் என்பது நிர்வாகிகள் சிலரின் ஆதங்கம்.’’

மிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன?

‘‘சீனியர் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள்?’’

‘‘மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகன் சபரீசன், அண்ணாநகர் கார்த்திகேயன், ஓ.எம்.ஜி குரூப் இப்படி சிலரைத்தான் தனது பொலிட்டிகல் பீரோவாக வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதற்கு அடுத்த ரவுண்டில்தான் கட்சியின் சீனியர்களை வைத்திருக்கிறார். இதில் அவர்களுக்கு வருத்தம். ‘தமிழகத்தில் அ.தி.மு.க-வையும், தி.மு.க-வையும் சிதறடிக்க வேண்டும் என்பதுதான் பி.ஜே.பி-யின் திட்டம். ஏற்கெனவே அ.தி.மு.க உடைந்து விட்டது. இருக்கும் அ.தி.மு.க-வும் அவர்களின் கைப்பிடிக்குள்தான் உள்ளது. இப்போது கருணாநிதி இல்லாத தி.மு.க-வை நோக்கி பி.ஜே.பி அம்புவிடுமே’ என்கிறார்கள் அவர்கள்.’’

‘‘இது நடக்குமா?’’

‘‘டெல்லி வட்டாரத்தில் விசாரித்தேன். தி.மு.க-வுக்கு ஏற்கெனவே ‘செக்’ ரெடியாகிவிட்டது. ‘பி.ஜே.பி-யுடன் கூட்டணி இல்லை’ என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். காங்கிரஸுடனான கூட்டணியைத் தொடரத் தான் ஆர்வம் காட்டிவருகிறார். ஆனால், கனிமொழி, அழகிரி இருவருக்கும் பி.ஜே.பி-மீது அதிருப்தி இல்லை. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோதுகூட, ‘அழகிரி எங்கே’ என்று கேட்டிருக்கிறார் மோடி. அந்த நேரம், முதுகுவலி காரணமாக உள்ளேயே அமர்ந்திருந்தாராம் அழகிரி. கனிமொழியையும் அழகிரியையும் கருவியாகப் பயன்படுத்தி தி.மு.க-வை உடைக்க பி.ஜே.பி நினைக்கிறது. இதற்காக, காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அட்மிட் ஆன நாள் முதல் தொடங்கி, பத்து நாட்களுக்கும் மேலாக சென்னையிலேயே முகாமிட்டிருக்கிறார், மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர். ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ள தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சமீபத்தில் கட்சிப் பதவியை இழந்தவர்கள் எனப் பெரிய லிஸ்ட்டை மின்னல் வேகத்தில் ரெடி செய்திருக்கிறாராம் அந்த அதிகாரி. அதேபோல, தி.மு.க-வுக்குள் பி.ஜே.பி பாசத்துடன் இருப்பவர்கள், பி.ஜே.பி-க்குள் தி.மு.க பாசத்துடன் இருப்பவர்கள் என இரு தரப்பினருடனும் அந்த உளவுத்துறை அதிகாரியின் தூதர்கள் பேசிவருகிறார்கள். ‘ஏதோ ஓர் எதிர்ப்பு, கட்சிக்குள் கிளம்பும். இப்படி எதிர்ப்பவர்கள், தங்கள் தரப்பில் சில கோரிக்கைகளை முன்வைப்பார்கள். இதற்கு ஸ்டாலின் எப்படி ரியாக்ட் செய்வார் என்பதைப் பொறுத்துத்தான் தி.மு.க-வின் எதிர்காலம் இருக்கும்’ என்று பொடி வைத்துப் பேசுகிறார்கள், இந்த ஆபரேஷனுடன் தொடர்புள்ளவர்கள்.’’

மிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன?

‘‘இது தெரிந்து கருணாநிதி குடும்பமும் உஷாராகியிருக்குமே?’’

‘‘கருணாநிதி இறுதி அஞ்சலி முடிந்ததும், அழகிரியை அழைத்துப் பேசினாராம் முரசொலி செல்வம். ‘ஸ்டாலின்தான் தி.மு.க-வுக்குத் தலைவர் என்பது ஏற்கெனவே கருணாநிதி முடிவெடுத்த விஷயம். இதில் யாரும் எதுவும் பிரச்னை செய்ய வேண்டாம்’ என்பதைச் சொல்லி, சில திட்டங்களையும் விவரித்தாராம். அழகிரி அமைதியாகக் கேட்டுக் கொண்டாராம். செல்வம் பேச்சுக்கு அந்தக் குடும்பத்தில் தனி மரியாதை உண்டு. இறுதி அஞ்சலிக்கு மறுநாள் காலையில் ஸ்டாலின் மட்டும் தனியாக நிர்வாகிகளுடன் போய் மலரஞ்சலி செலுத்தியதும், வதந்திகள் பரவின. மாலையில் ‘அழகிரி தனியாகக் குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்துவார். அதில் கனிமொழியும் கண்டிப்பாக இருப்பார்’ என்றன அந்த வதந்திகள். ஆனால், அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, செல்வி, கனிமொழி ஆகிய ஐந்து பேரும் ஒன்றாக வந்து, ‘நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்’ என உணர்த்தியிருக்கிறார்கள்.’’

‘‘குடும்பம் சரி, கட்சி?’’

‘‘கருணாநிதியின் இறுதி யாத்திரையின்போது குவிந்த கூட்டத்தில், இளைஞர்கள் அதிகமாகக் காணப்பட்டார்கள். ‘தி.மு.க-வில் இருப்பது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான்’ என்று பேசப்பட்டு வந்த நிலையில், இப்படி திரண்டு வந்த இளைஞர் கூட்டத்தைப் பார்த்து ஸ்டாலின் உள்ளிட்டோரே வியந்துபோனார்களாம். ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், இறுதியில் தலைவர் பதவியில் அமரப்போவது மு.க.ஸ்டாலின்தான். இவர்கள் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து, தி.மு.க-வில் தக்கவைப்பாரா ஸ்டாலின் என்பதுதான் கேள்வி’’ என்ற கழுகார் பறந்தார்.

அட்டைப்படம்: சு.குமரேசன்
படம்: வெ.நரேஷ்குமார்

ஷெட்டுக்குப் போன கருணாநிதி கார்!

ருணாநிதி பயன்படுத்துவதற்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட டொயோட்டா கார், எப்போதும் கோபாலபுரம் வீட்டின் முன்பக்கம் நிறுத்தப்பட்டிருக்கும். கோபாலபுரம் வரும் தொண்டர்கள், கருணாநிதியைப்  பார்க்க முடியாவிட்டாலும், அவர் பயன்படுத்தும் காரைப் பார்த்துவிட்டுச் செல்வார்கள். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, அவரது கார் அருகில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் கொண்டுபோய் விடப்பட்டது.