Published:Updated:

`எனக்கு யாரும் அரசியல் கற்றுத் தர வேண்டியதில்லை!' - திருமாவை சமாதானப்படுத்திய ஸ்டாலின்

`தேர்தல் தொடர்பாக நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. மதவாத சக்திகளை எதிர்ப்பதற்கு, நாம் ஒன்றாகச்  செயல்பட வேண்டிய நேரம் இது' எனக் கூறி உற்சாகப்படுத்தினார் ஸ்டாலின்.

`எனக்கு யாரும் அரசியல் கற்றுத் தர வேண்டியதில்லை!'  - திருமாவை சமாதானப்படுத்திய ஸ்டாலின்
`எனக்கு யாரும் அரசியல் கற்றுத் தர வேண்டியதில்லை!' - திருமாவை சமாதானப்படுத்திய ஸ்டாலின்

`தி.மு.க கூட்டணியில் வி.சி.க அங்கம் வகிக்கிறதா?' என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின். `கூட்டணியில் வி.சி.க-வைச் சேர்க்கக் கூடாது என்பதற்காகத் தி.மு.க நிர்வாகிகள் சிலர் திரைமறைவில் செயல்பட்டு வந்தனர். அந்தக் கோபத்தைக் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தார் திருமா. அதுதான் இந்தளவுக்குக் கொண்டு வந்துவிட்டது' என்கின்றனர் சிறுத்தைகள் வட்டாரத்தில். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். முன்னதாக, கூட்டணிக்கும் தோழமைக்கும் உள்ள வித்தியாசம் குறித்து துரைமுருகன் அளித்த பேட்டி, வி.சி.க வட்டாரத்துக்குள் புயலைக் கிளப்பியிருந்தது. "பொருளாளர் பேச்சைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை" என நேற்று திருமாவளவனிடம் தெளிவுபடுத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். 

`இப்படியொரு சர்ச்சை ஏன் ஏற்பட்டது?' என்பதற்கான காரணத்தை நம்மிடம் விளக்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவர், "தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிராகத் தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. ஆத்தூர் சிறுமி ராஜலட்சுமியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார் திருமாவளவன். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கண்டன உரையாற்றச் சென்றிருந்தார் திருமா. அப்போது, இந்தப் படுகொலை சம்பவம் குறித்து பிரதானக் கட்சித் தலைவர்கள் பேசாமல் இருப்பது கண்டு கொதித்துப் போய் சில வார்த்தைகளைப் பேசிவிட்டார். அவர் பேசும்போது, `பொதுவாழ்க்கையில் இருப்பதற்கே இவர்கள் லாயக்கற்றவர்கள். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தால் மற்றவர்களின் ஓட்டு தங்களுக்கு வராது என இவர்கள் நினைப்பதுதான் காரணம்' எனப் பேசினார். இது முழுக்க தி.மு.க-வைத் தாக்கிப் பேசிய வார்த்தைகள்தான். இதனை எதிர்பார்க்காத ஸ்டாலினும், `சாதித் தீண்டாமை எந்த வடிவில் இருந்தாலும் அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். ஆட்சியில் அமரும்போது இதற்குச் சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்' என விளக்கம் அளித்தார். 

வி.சி.க-வுக்கு எதிராக ஆதாரத்தைத் தேடிக் கொண்டிருந்த தி.மு.க-வில் உள்ள சிலர், இந்த விஷயத்தை தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர், தி.மு.க ஆதரவு எழுத்தாளர் ஒருவர், பா.ம.கவை விமர்சித்துப் பதிவிட்டிருந்தார். கூடவே, வி.சி.கவையும் அந்தப் பதிவில் இணைத்துக் கொண்டார். அவர் வெளியிட்ட பதிவில், `முதல்வர் கனவில் இருப்பவர்களும் ஆட்சியில் பங்கு கேட்பவர்களையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது' எனக் கூறியிருந்தார். இதனையடுத்தே, துரைமுருகன் பேட்டியும் வெளியானது. `வடமாவட்டங்களில் செல்வாக்கைக் காட்டுவதற்காக துரைமுருகன் இவ்வாறு செய்கிறார்' என வி.சி.க நிர்வாகிகள் நினைத்தனர். `ஸ்டாலின் சொல்லாமல் துரைமுருகன் இப்படியெல்லாம் பேச மாட்டார். அதையும் மீறி பேசுகிறார்கள் என்றால், தலைமை வலிமையானதாக இல்லை. நம்மைத் திட்டமிட்டுப் புறக்கணிப்பதற்காக நடத்தப்படும் நாடகங்கள் இவை' எனவும் திருமாவிடம் ஆதங்கப்பட்டுள்ளனர். இந்தக் கோபத்தைத் திருநெல்வேலி நிகழ்ச்சியிலும் வெளிப்படுத்தினார் திருமா" என விவரித்தவர், 

``திருச்சியில் நடைபெற உள்ள `தேசம் காப்போம்' மாநாட்டுக்காகத் தொண்டர்களைத் திரட்டுவதற்காகத் தொடர்ந்து பயணம் செய்து வருகிறார் திருமாவளவன். அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அந்தக் கூட்டத்தில் பேசும்போது, வழக்கத்துக்கு மாறான உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவர் இருந்தார். `எனக்கு யாரும் அரசியல் கற்றுத் தர வேண்டிய தேவையில்லை. எனக்கு அரசியல் சொல்லித் தரக் கூடிய தகுதியும் இங்கு யாருக்கு இல்லை. எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. இழப்பு அவர்களுக்குத்தான். இரண்டு சீட், மூன்று சீட்டுக்காக நிற்கிறார் என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் எனக்காக அடுத்தவர் வீட்டு வாசலில் எப்போதும் நின்றதில்லை' எனக் கூறிவிட்டு, கட்சிக்காரர்களையும் கடுமையாகத் திட்டினார். தொடர்ந்து பேசிய திருமா, `தொகுதிக்கு 5 கோடி ரூபாய் தருகிறோம். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். யாரிடமும் போய் நாம் கையேந்தி நிற்க வேண்டிய தேவையில்லை' எனக் காட்டமாகப் பேசிவிட்டு அமர்ந்தார். இதே கருத்தை அவர் விருதுநகரிலும் எதிரொலித்தார். இதையொட்டியே வைகோவும் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்தார். 

விவகாரம் எல்லை மீறிப் போவதைக் கண்ட ஸ்டாலின், 'இந்தளவுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. பொருளாளர் அப்படியெல்லாம் பேசவில்லை. தோழமையோடு இருப்பவர்கள் இதை ஏன் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் வருத்தப்படலாமா?' என திருமாவிடம் விளக்கிக் கூறினார். 'நாங்கள் தோழமையுடன்தான் இருக்கிறோம். பொதுவெளியில் வரக் கூடிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தான் உங்களைச் சந்திக்க வந்தோம். மதவாத கட்சியை எதிர்ப்பதற்காகத்தான் மாநாடு நடத்துகிறோம். உங்கள் தலைமையில்தான் அனைத்தையும் எதிர்கொள்ள இருக்கிறோம். புதிய தலைமை என்று எதுவும் உருவாக்கவில்லை. உங்கள் கட்சிக்காரர்கள் பேசுவதுதான் மனவருத்தத்தைத் தருகிறது. இதுகுறித்து எங்கள் கட்சியிலும் விவாதம் கிளம்புகிறது' என வருத்தப்பட்டிருக்கிறார் திருமாவளவன். இதனைக் கேட்ட ஸ்டாலினும், `தேர்தல் தொடர்பாக நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. மதவாத சக்திகளை எதிர்க்க நாம் ஒன்றாகச்  செயல்பட வேண்டிய நேரம் இது' எனக் கூறி உற்சாகப்படுத்தினார்" என்றார் விரிவாக.