Published:Updated:

சாதி மோதல்களை வைத்து அரசியல் செய்கிறார் ராமதாஸ்: சீமான் குற்றச்சாட்டு

சாதி மோதல்களை வைத்து அரசியல் செய்கிறார் ராமதாஸ்: சீமான் குற்றச்சாட்டு
சாதி மோதல்களை வைத்து அரசியல் செய்கிறார் ராமதாஸ்: சீமான் குற்றச்சாட்டு
சாதி மோதல்களை வைத்து அரசியல் செய்கிறார் ராமதாஸ்: சீமான் குற்றச்சாட்டு

நெல்லை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சாதி மோதல்களை வைத்து அரசியல் செய்வதாக நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் குற்றம் சாட்டினார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்ட கணேசன், சந்தியாகு ராயப்பன் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். கைதானவர்களில் கணேசன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் ராதாபுரம் ஒன்றிய செயலாளராகவும் இருக்கிறார்.

சிறையில் இருக்கும் இருவரையும் பார்ப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் இன்று நெல்லை வந்தார். கட்சி நிர்வாகிகளுடன் சிறைக்கு சென்ற அவர், அங்கு அடைக்கப்பட்டு இருக்கும் இருவரையும் சந்தித்தார்.

பின்னர் வெளியே வந்த சீமான் நிருபர்களிடம் பேசுகையில், "நியாயமான அச்சத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் போடப்படுகின்றன. எங்கள் கட்சியின் நிர்வாகியான கணேசன் மீது மட்டும் 103 வழக்குகள் போட்டு இருக்கிறார்கள். இது அதிகப்பட்சமாக அவர் தேசத்துக்கு எதிராக போர் தொடுத்த பிரிவிலும் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் அப்பாவி மீனவர்களை நமது எல்லைக்குள் வந்து சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்கிறது. இப்படி அறிவிக்கப்படாத போரை நடத்தி வரும் சிங்கள ராணுவம் இதுவரை 800 பேரை கொன்று இருக்கிறது. இந்த அத்துமீறல்கள் இந்தியாவுக்கு எதிரான போராக மத்திய அரசுக்கு தெரியவில்லை. ஆனால், நியாயமான கோரிக்கைக்காக அறவழியில் போராடும் மக்கள் மீது தேசத்துக்கு எதிராக போர் தொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்படுவது, அந்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களை மிரட்டும் செயல்.

நியாயமான கோரிக்கைகளுக்காக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். ஒருவேளை அணு உலை வெடித்தால், அதற்கான இழப்பீட்டு தொகையை ரஷ்யா வழங்குமா அல்லது அணு உலை பாதுகாப்பானது என்று சொல்லி வரும் இந்திய அரசு வழங்குமா என்று கேட்டால் பதில் கிடையாது. ஒருவேளை பேரழிவு சம்பவம் நடந்தால் அதில் இருந்து தப்புவது எப்படி என்பது குறித்து பேரிடர் மேலாண்மை பயிற்சியை கொடுங்கள் என்று அந்த மக்கள் கேட்டால் அதனை செய்ய மறுக்கிறார்கள்.

இது தவிர, அணு உலையானது அதன் மொத்த வாழ்நாள் காலமான 30 வருடத்தில் 900 டன் அணுக்கழிவை ஏற்படுத்தும். அந்த கழிவானது 50,000 வருடங்களுக்கு கதிர் வீச்சை ஏற்படுத்தும். அதனால் அந்த கழிவுகளை எங்கே புதைத்து வைத்து பாதுகாக்க போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கும் பதில் கிடையாது. ஆனால் பொய் வழக்குகள் போட்டு போராட்டத்தை நசுக்கி ஒடுக்கும் முயற்சிகள் மட்டும் தீவிரமாக இருக்கிறது’’ என படபடத்தார் சீமான்.

தொடர்ந்து சாதி மோதல்கள் பற்றி அவர் பேசுகையில், "சாதி, மத ரீதியாக மக்களை பிரித்ததன் காரணமாகவே எமது மக்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து தவிக்கிறார்கள். அதனால் இளைஞர்கள் சாதி, மதம் போன்றவற்றை கடந்து வெளியே வர வேண்டும். மரக்காணம் பகுதியில் நடக்கும் சாதி மோதல்கள் அரசியல் லாபத்துக்காக தூண்டி விடப்பட்டு இருக்கிறது. டாக்டர் ராமதாஸ், "வன்னியர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்" என்கிறார். சாதி அமைப்புகளுடன் கூட்டணி ஏற்படுத்த போவதாக சொல்கிறார். இதை எல்லாம் பார்க்கும் போது அவர் அரசியலுக்காக சாதியை பயன்படுத்துகிறார் என்றே நினைக்க தோன்றுகிறது. வருங்கால சமுதாயம் இது போன்ற செயல்களை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று முடித்தார்.

ஆண்டனிராஜ்