
MISSION IMPOSSIBLE - ராகுல் தயாரா?
1982 மார்ச் 29-ம் தேதி.
பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்தில் பிரளயம். மாமியார் இந்திரா காந்திக்கும் மருமகள் மேனகா காந்திக்கும் இடையே காரசார சண்டை. இரண்டு வயதான மகன் வருண் காந்தியைத் தூக்கிக்கொண்டு, இந்திராவின் வீட்டை விட்டு வெளியேறுகிறார் மேனகா. அதற்குச் சில நாள்களுக்கு முன்புதான் வருண் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அரங்கேறியிருந்தன. வருண்மீது எல்லையில்லாப் பாசத்தை வைத்திருந்தார் இந்திரா. ‘‘வருணை நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்ற இந்திராவின் கெஞ்சல்கள் காற்றில் கரைய... மேனகா விருட்டெனப் புறப்பட்டார்.

நெருக்கடி நிலை உட்பட அதிரடி அரசியலுக்குப் பெயர் பெற்றவர் இந்திரா. அவரின் டி.என்.ஏ-தான் சஞ்சய் காந்தி. நெருக்கடி நிலைக் கொடூரங்களில் சஞ்சய்யின் கரங்களும் இருந்தன. ‘‘இந்திராவின் அரசியல் வாரிசு’’ என ‘கை’ காட்டப்பட்டார் சஞ்சய் காந்தி. ஆனால், அது நிறைவேறுவதற்கு முன்பே சஞ்சய் காந்தி, விமான விபத்தில் உயிரை விட்டார். சஞ்சய் இடத்தில் ராஜீவ் காந்தியைக் கொண்டு வந்தார் இந்திரா. சஞ்சய் மரணத்தால் காலியான அமேதித் தொகுதியில் ராஜீவை நிறுத்தினார் இந்திரா. கணவன் எம்.பி-யாக இருந்த அமேதியில் மேனகா காந்தி களமிறங்க ஆசைப்பட்டார். அமேதி இடைத் தேர்தல், இந்திராவின் வீட்டில் புயல் வீச வைத்தது. சஞ்சய் காந்தி புகழ்பாடுவதாகச் சொல்லிக்கொண்டு, இந்திராவின் எதிரிகளோடு கைகோத்தார் மேனகா. சச்சரவுகள் விரிசல்கள் ஆகி, இந்திராவை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறினார் மேனகா.
‘அதிரடி’ சஞ்சய் காந்தி, ‘அமைதி’ ராஜீவ் காந்தி ஆகியோரின் வாரிசுகள் தந்தையைப் போலவே இருக்கின்றனர். அப்பாவைப் போலவே பாய்ச்சல் காட்டினார் சஞ்சய்யின் மகன் வருண். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி சார்பில் பிலிபிட் தொகுதியில் வருண் போட்டியிட்டபோது பி.ஜே.பியினர்கூடப் பேசத் துணியாத பேச்சை வருண் பேசினார். ‘‘இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல. தாமரையின் சக்தி. இந்தக் கை முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும். இந்து மதத்துக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால், அவர்களது கையை வருண் காந்தி வெட்டுவான். அடுத்த சஞ்சய் காந்திதான் இந்த வருண் காந்தி. ஜெய் ஸ்ரீராம்’’ என அனல் கக்கினார். அதோடு ‘கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு, ராணுவப் பயிற்சி’ என்கிற சஞ்சய் காந்தியின் கொள்கைகளையும் முழுங்கினார்.

வருண் காந்திக்கு ராகுல் காந்தி காட்டிய ரியாக்ஷன் அப்படியே ராஜீவ் காந்தியின் வார்ப்பு. ‘‘வருண் பேச்சு எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. எனக்கும் கோபம் வரும். ஆனால், அதைக் கட்டுக்குள் வைக்க முயல்வேன். வெறுப்பும் கோபமும் வருணைக் கண்மூட வைத்துவிட்டன’’ என, பக்குவப்பட்ட அரசியல்வாதி போல பதில் சொன்னார்
ராஜீவ் காந்தியின் வழித் தோன்றலாகப் பத்தாண்டுகளுக்கு முன்பே ராகுல் நின்றார். அது இன்று வரையில் தொடர்கிறது. ராஜீவ் மரணத்துக்குப் பிறகு பிரதமர் பதவி தேடி வந்தபோதும் சோனியா காந்தி ஏற்கவில்லை. அதே அடிச்சுவட்டைப் பின்பற்ற ஆரம்பித்தார் ராகுல். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஜெயித்து, அடுத்த 2009 தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்றது. மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமைச்சராகும் வாய்ப்பைக்கூடப் புறந்தள்ளினார் ராகுல்.
2007-ல் அகில இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளர். 2013-ல் கட்சியின் துணைத் தலைவர் எனப் படிப்படியாக ஏறி, 2017 இறுதியில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பினை ஏற்றார்.
தலைவர் பதவியை ஏற்பதற்கு முன்புதான் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ராகுல் காந்தியின் பிரசார வியூகம் எடுபடவில்லை. அந்த தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தன. இப்படியான சூழலில்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு ராகுல் காந்தி அமர்த்தப்பட்டார். அதன்பிறகும் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றுக் கொண்டே இருந்தது. மோடி-அமித்ஷா வியூகங்களுக்கு முன் ராகுல் காந்தியின் எல்லாத் திட்டங்களும் தோற்றன.
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வென்றபோதும்கூட அங்கே காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியாமல்போனது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியோடு ஆட்சியைப் பங்கு போட்டுக்கொள்ள அதிரடியாக முடிவு எடுத்தது. இதற்காக சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை நள்ளிரவில் போய்த் தட்டியது காங்கிரஸ். அகமது பட்டேல் ராஜ்ய சபா எம்.பி. தேர்தலுக்கு நின்றபோது அவரை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-கள் ஓட்டுப் போடப்போவதாக எழுந்த பிரச்னையில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-களை எல்லாம் கர்நாடகாவில் பாதுகாப்பாக வைத்தார்கள். இவை எல்லாமே ராகுலின் புதிய முயற்சிகள்.

இப்படியான முயற்சிகளின் அடுத்த எபிசோடுதான் நாடாளுமன்றத்தில் ராகுல் காட்டிய அதிரடி பர்ஃபாமென்ஸ். மோடி ஆட்சியின்மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது பேசிய ராகுல், ‘`பிரதமர் மோடி என் கண்ணைப் பார்த்துப் பேச மறுக்கிறார், அவர் என்னைப் பார்த்ததும் ஒருவிதமான பதற்றம் அடைகிறார். பிரதமரிடம் உண்மையில்லை. மோடி எப்போதும், வசதிபடைத்தவர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் பேசுகிறார்’’ எனச் சீறினார். கறுப்புப்பண மீட்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, பெட்ரோல் விலை உயர்வு, ரபேல் போர் விமானங்களில் விலை கூடுதலுக்குக் காரணமான ரகசியம், ஜியோ விளம்பரங்களில் பிரதமர் படம் வந்தது என மக்கள் எழுப்ப நினைத்த கேள்விகளை நாடாளுமன்றத்தில் ராகுல் வீசியபோது கிடைத்த பாராட்டுகள் மக்களின் மனசாட்சியைப் பிரதிபலித்தன.
``பிரதமர் பதவிக்குரிய அனுபவத்தை நான் இன்னும் பெறவில்லை. அதனால், அந்தப் பதவி வேண்டாம்’’ என 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது சொன்னார் ராகுல். அவர் சொல்லிப் பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்படலாம். அதற்கான தகுதிகளையும் அனுபவங்களையும் இந்தப் பத்தாண்டில் ராகுல் கற்றுக்கொண்டார் என்பதே காங்கிரஸ்காரர்கள் எண்ணம்.
“பி.ஜே.பி. தனி மனிதர் ஒருவரை மக்களிடையே முன்னிறுத்தி, மோடி பிரதமரானால் நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் எனக் கூறுகிறது. நாங்கள் அப்படித் தனி மனிதரை முன்னிறுத்துவது இல்லை’’ என ஒரு முறை ராகுல் சொல்லியிருந்தார். ஆனால், அது வரும் தேர்தலில் எதிர்மறையாகிவிடும். ராகுல் காந்தியைத்தான் காங்கிரஸ் முன்னிறுத்தப்போகிறது. அப்போது ராகுல் காந்தி, மோடி - அதானி தொடர்புகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம், காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த தகவல் பெறும் உரிமை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி எனத் தேர்தல் பிரசாரத்தில் வீசுவதற்கு நிறைய அஸ்திரங்களைக் கையில் வைத்திருக்கிறார்.
இவற்றையெல்லாம் செய்வதற்கு பலமான பி.ஜே.பி-யைத் தோற்கடிக்க வேண்டும். அதற்காக மாநிலக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிவிட்டது காங்கிரஸ். மோடிக்கு எதிராக ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்பதற்கு பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் தயங்குகின்றன. அதனால், ‘எதிர்க்கட்சிகளுக்குப் பிரதமர் வேட்பாளரை விட்டுத் தரவும் தயார்’’ எனச் சொல்ல ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ்.
‘`நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், எவ்வளவு தரம் தாழ்ந்து வேண்டுமானாலும் விமர்சியுங்கள், கேலியும் கிண்டலுமாகவும் பேசுங்கள். ஆனால் நான் இந்திய நாட்டிலுள்ள அனைவரையும் ஒருமனதாகவே நேசிக்கிறேன், பிரதமரையும் சேர்த்தே...’’ என நாடாளுமன்றத்தில் ராகுல் சொன்னார்.
ராகுல் கேலிக்குரியவரா... கேள்விக்குறிகளை ஏற்படுத்தப் போகிறவரா? விடை அடுத்த தேர்தலில் தெரிந்துவிடும். ராகுல்காந்திக்குக் காத்திருக்கிறது ஆசிட் டெஸ்ட்!
எஸ்.ஏ.எம். பரக்கத் அலி -ஓவியம்: ஹாசிப்கான்