Published:Updated:

` வைகோ, எங்களை சந்தேகப்படலாமா?!'  - எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் ம.தி.மு.க ஒ.செ. 

என் வீட்டு திறப்புவிழாவையும் வைகோதான் நடத்திக் கொடுத்தார். வீட்டு முற்றத்தில் 12 அடிக்கு பம்பரம் சின்னம் வைத்திருந்தேன். கண்ணப்பன் மீதும் இதேபோல் சந்தேகப்பட்டுத்தான் கட்சியை விட்டு நீக்கினார்' என ஆதங்கப்படுகிறார் சிவராமன்.

` வைகோ, எங்களை சந்தேகப்படலாமா?!'  - எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் ம.தி.மு.க ஒ.செ. 
` வைகோ, எங்களை சந்தேகப்படலாமா?!'  - எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் ம.தி.மு.க ஒ.செ. 

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து இரண்டு ஒன்றியச் செயலாளர்களைக் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. ` தி.மு.க-விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது, அவர் வீட்டுக்குக் காவல் இருந்தவர்கள் நாங்கள். கட்சியிலிருந்து நீக்குவதற்கு முன்னால் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்' என ஆதங்கப்படுகின்றனர் நீக்கப்பட்டவர்கள். 

` கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதற்காக திருப்போரூர் தெற்கு ஒ.செ சிவராமனையும் வடக்கு ஒ.செ ராஜாவையும் நீக்குகிறேன்' என நேற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் வைகோ. இப்படியொரு அறிவிப்பு வெளியானதை இருவருமே எதிர்பார்க்கவில்லை. வைகோ அறிவிப்பின் பின்னணியை விசாரித்தோம். `` கட்சியை விட்டு நீக்கியதிலிருந்து மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் சிவராமன். அவருக்கு நீண்டநாள்களாக நோட்டரி பப்ளிக் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம். 99-ம் ஆண்டு வக்கீலாகப் பதிவு செய்து வைத்திருந்தார். ஆளும்கட்சியின் ஆதரவு இருந்தால்தான் நோட்டரி பப்ளிக் ஆக முடியும் என்பதை அறிந்து அதற்கான பணிகளில் இறங்கியிருந்தார். இதற்காகக் கடந்த ஒரு மாதமாக அ.தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளர் திருக்கழுகுன்றம் ஆறுமுகம், எம்.பி மரகதம் குமரவேல், திருப்போரூர் இடைத்தேர்தல் தொகுதி பொறுப்பாளரான சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரை சந்தித்துப் பேசி வந்தார். தனிப்பட்ட கோரிக்கைகளுக்காகத்தான் அவர் சந்தித்துப் பேசினார். இதற்காக 5 சால்வைகளையும் அ.தி.மு.க கரை வேட்டிகளையும் தன்னுடைய வாகனத்தில் வைத்திருந்தார். இந்த சந்திப்பு ம.தி.மு.க வட்டாரத்தில் புயலைக் கிளப்பிவிட்டது. 

உள்ளூர் ம.தி.மு.க-வினர் இந்த விவகாரத்தை துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து, சிவராமனைத் தொடர்புகொண்டார் சத்யா. இந்தப் போன்காலுக்கு சிவராமன் பதில் அளிக்கவில்லை. இதனால் கடுப்பான சத்யா, `என்னுடைய போன்காலுக்குப் பதில் இல்லை' என வைகோவிடம் கூறிவிட்டார். திருச்சியில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு ஆள்களைத் திரட்டிக் கூட்டிக்கொண்டு போனார் சிவராமன். இருப்பினும், அவரை சந்தேகத்தோடு பார்த்து வந்தார் வைகோ. உள்ளூரில் கட்சி சார்பாக நடந்த விழாக்களுக்கும் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. திருப்போரூர் நகரச் செயலாளராக இருந்த லோகுவுக்கும் சிவராமனுக்கும் இடையில் கோஷ்டி மோதல் இருந்து வந்தது. அ.தி.மு.க அமைச்சரை சிவராமன் சந்தித்ததை தங்களுக்குச் சாதகமாக சிலர் பயன்படுத்திக்கொண்டனர். இந்தநேரத்தில் நோட்டரி பப்ளிக்காகவும் ஆகிவிட்டார் சிவராமன். இதற்காக நன்றி தெரிவிப்பதற்காக மீண்டும் அமைச்சரை சந்திக்கச் சென்றார் சிவராமன். இதை இறுதி வாய்ப்பாக நினைத்து, ஒ.செ பதவியில் இருந்து அவரையும் ராஜாவையும் நீக்கிவிட்டனர். இதையடுத்து, இன்று மாலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அ.தி.மு.கவில் இணைய இருக்கின்றனர் சிவராமனும் ராஜாவும்" என்கின்றனர் விரிவாக. 

சிவராமனிடம் பேசினோம். `` பாலவாக்கம் சோமு, கட்சியிலிருந்து பிரிந்து சென்ற நாளில் இருந்தே எங்களையெல்லாம் ஓரம்கட்டி வைத்திருந்தார் வைகோ. எந்த முடிவை எடுத்தாலும் அவர் எங்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை. எங்கள் மாவட்டத்தில் யாருக்காவது பொறுப்பு வழங்கினால்கூட தெரியப்படுத்துவதில்லை. எனக்கு எதிராகவும் கோஷ்டி அரசியல் நடந்தது. வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு, நோட்டரி பப்ளிக் ஆவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஏற்கெனவே, 2010-ம் ஆண்டு முயற்சி செய்தேன். அப்போது மத்திய அரசிடம் வாங்க முடியவில்லை. இந்தமுறை அ.தி.மு.கவில் உள்ள என்னுடைய நண்பர்கள் மூலமாக முயற்சி மேற்கொண்டேன். இதற்காக எம்.பி மரகதம் குமரவேல், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரை சந்தித்துக் கோரிக்கை வைத்தேன். இந்தச் சந்திப்பைக்கூட சந்தேகப்பட்டு பேசி வந்தனர்.

1993-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி வைகோ மீது கொலைப் பழி சுமத்திய அவரைத் தி.மு.க-விலிருந்து வெளியேற்றியபோது, சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தேன். அன்று இரவு வைகோ வீட்டுக்கு நான் காவல் இருந்தேன். 19 ஆண்டுகளாக ஒன்றியச் செயலாளராக இருந்தேன். நேற்றோடு அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது. இதற்கு முன்பும் ஒருமுறை சந்தேகப்பட்டார் வைகோ. அப்போது என்னுடைய வீட்டுக்கே வந்து காபி குடித்துவிட்டுப் போனார். என் வீட்டு திறப்புவிழாவையும் அவர்தான் நடத்திக் கொடுத்தார். என்னுடைய வீட்டு முற்றத்தில் 12 அடிக்கு பம்பரம் சின்னம் வைத்திருந்தேன். கண்ணப்பன் மீதும் இதேபோல் சந்தேகப்பட்டுத்தான் கட்சியை விட்டு நீக்கினார். இந்த சந்தேகம் எங்கு போய் முடியப் போகிறதோ தெரியவில்லை" என்றார் வேதனையுடன்.