Published:Updated:

முதலமைச்சர் கருணாநிதி!

முதலமைச்சர் கருணாநிதி!
பிரீமியம் ஸ்டோரி
News
முதலமைச்சர் கருணாநிதி!

முதலமைச்சர் கருணாநிதி!

திரு அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு தி.மு.க. தலைவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்த முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பு ஏற்பட்டது. அந்தக் கடமையை அவர்கள் கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டுடனும் செய்து முடித்து விட்டார்கள். இது, மறைந்த தலைவரின் நினைவுக்கும் பெருமைக்கும் அவர்கள் செலுத்தியுள்ள சிறந்த அஞ்சலியாகும்.

முதலமைச்சர் கருணாநிதி!

திரு அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது, அமைச்சரவையில் இரண்டாவது இடத்தை வகித்து வந்த திரு நெடுஞ்செழியனே அடுத்த முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றுதான் பொதுவாகக் கருதப்பட்டது. ஆனால், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு விதமாகத் தீர்மானித்து, ஒருமனதாக திரு. மு.கருணாநிதியைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். திரு கருணாநிதியும் அப்பெரும் பொறுப்பை ஏற்று, விரைவிலேயே புதிய அமைச்சர வையையும் அமைத்து விட்டார்.

தி.மு.க. தோழர்கள் அண்ணாவின் மீது வைத்திருந்த அளவுகடந்த பாச உணர்வை திரு கருணாநிதி பெறுவது கடினமானாலும் சட்டமன்ற உறுப்பினர்க ளின் நம்பிக்கையைப் பெற்றிருப்பது அவருடைய கரத்தைப் பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

பள்ளிப் பருவத்திலிருந்தே பொது வாழ்வில் பெரும் பங்கு கொண்டு, புரட்சிப் புயலாக சீறியெழுந்து, எதிர்நீச்சல் போட்டு தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, அரசியலில் முன்னுக்கு வந்தவர் திரு கருணாநிதி. முதலில் ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை நிழலில் வளர்ந்து, பின்னர் திரு அண்ணாதுரையின் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்று, தம் தளபதியின் தோளோடு தோள் நின்று தி.மு.க.வை வளர்க்க அரும்பாடு பட்டவர். தமிழார்வம் கொண்டவர். தமிழனின் பண்டையப் பெருமைகளை அறிந்தவர். கலையுள்ளம் படைத்தவர். எழுத்து வன்மை மிக்கவர், மேடைப் பேச்சில் வல்லவர். அவர் நாடகங்கள் படைத்திருக்கிறார்; சினிமாக் கதைகள் தீட்டியிருக்கிறார்; கவிதைகளும் புனைந்திருக்கிறார்.

நாற்பத்தைந்து வயதே நிரம்பியுள்ள திரு கருணாநிதி எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற மன உறுதியும், துணிச்சலும் உடையவர். அயராது உழைப்பதற்கு அவர் தயங்க மாட்டார். எதிர்ப்புகளைக் கண்டு மனம் கலங்க மாட்டார்.

முதலமைச்சர் கருணாநிதி!அரசியலில் புரட்சி வீரராகவும், கழகத்தின் செயல் வீரராகவும் விளங்கிய திரு கருணாநிதி, அண்ணா தமக்கு அளித்த பொதுப்பணி அமைச்சர் பதவியையும் திறம்பட நடத்திக் காட்டினார். தமது இலாகா நிர்வாகத்தில் சிவப்பு நாடாவுக்கு இடம் அளிக்காமல், பிரச்னைகளைத் தீர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி, உடனடியான முடிவுகள் எடுத்து, செயலாற்றி நற்பெயர் எடுத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த நிர்வாக அனுபவம் தற்போது இவருக்குப் பெரிதும் கை கொடுத்து உதவும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

ஒரு கட்சியின் தலைவர் தமது கட்சியின் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்துவது இயல்பே. ஆனால், அதே தலைவர் முதலமைச்சராகும்போது, அவர் மாநிலத்தின் வளர்ச்சியில்தான் முக்கிய கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். ஆட்சியிலிருப்பவர்கள், எல்லாக் கட்சிகளுக்கும், எல்லா மக்களுக்கும் பொதுவானவர்கள். அத்துடன், அவர்கள் எதிர்க்கட்சிக்குரிய மதிப்பையும் மரியாதையையும் அளித்து ஜனநாயகப் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். அதுதான் நீதி வழுவாத நேர்மையான ஆட்சிக்கு அடையாளமாகும். அடக்கத்தோடும் நிதானத்தோடும் அப்படியோர் ஆட்சி நடத்தியதால்தான், அமரர் அண்ணா இன்று, அத்தனை பேர் உள்ளங்களிலும் நீங்காத இடம் பெற்றிருக்கிறார். இந்த உண்மையை எல்லோரையும்விட திரு கருணாநிதி மிக நன்றாக உணர்ந்திருப்பார்.

மாறிய சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு, நிலைமைக்குத் தேவையான அளவு உயரக் கூடிய சாமர்த்தியம் திரு. கருணாநிதிக்கு உண்டு. பொறுப்பு உணர்ச்சியையும் நிதானப் போக்கையும் முதலமைச்சர் நாற்காலியே அவருக்குக் கற்றுத் தந்துவிடும்.

கழகத்தின் முன்னேற்றத்திற்குப் பெருமளவு காரணமாக இருந்த திரு கருணாநிதியின் ஆர்வமும் ஆற்றலும் அவரது நிர்வாகத்திலும் பிரதிபலித்து, தமிழகம் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று விகடன் உளமார விரும்புகிறான்.

(அண்ணா மறைவுக்குப் பிறகு, கருணாநிதி முதலமைச்சரானபோது, 23.02.69 ஆனந்த விகடனில் வெளியான தலையங்கம்)

ஓவியம்: கார்த்திகேயன் மேடி