Published:Updated:

மு.க. ஆவாரா மு.க.ஸ்டாலின்?

மு.க. ஆவாரா மு.க.ஸ்டாலின்?
பிரீமியம் ஸ்டோரி
News
மு.க. ஆவாரா மு.க.ஸ்டாலின்?

மு.க. ஆவாரா மு.க.ஸ்டாலின்?

பெரும் விருட்சங்கள் தங்கள் நிழலில் சிறு புல்லைக்கூட வளர விடுவதில்லை. ஆலமரத்தின் நிழலில் அதன் கன்றுகூட வளர முடியாது. இந்த இயற்கை நியதிக்கு முரணாக வளர்ந்தவர், வளர்த்தெடுக்கப்பட்டவர் மு.க.ஸ்டாலின். அண்ணன் அழகிரியே எதிர்த்தாலும்கூட, தி.மு.க-வின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான்.

மு.க. ஆவாரா மு.க.ஸ்டாலின்?

காமராஜரின் அரசியல் வாரிசாகத் தமிழக காங்கிரஸ்காரர்கள் யாரையும் ஏற்கவில்லை. விளைவாக அது ஆட்சியை இழந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. எம்.ஜி.ஆர் தன் அரசியல் வாரிசாக யாரையும் அறிவிக்கவில்லை. உடைந்த அ.தி.மு.க மீண்டும் ஒட்டிக்கொள்ள ஒரு தேர்தல் தோல்வி தேவைப்பட்டது; ஜெயலலிதாவை ‘வாழும் எம்.ஜி.ஆர்’ என அ.தி.மு.க-வினர் ஏற்றுக்கொள்ள ஒரு தேர்தல் வெற்றி போதுமானதாக இருந்தது. ஜெயலலிதா தன் அரசியல் வாரிசாக யாரையும் அறிவிக்கவில்லை. உடைந்த கட்சியின் ஒரு கோஷ்டி  கையில் ஆட்சி  இருக்கிறது; இன்னொரு கோஷ்டியின் தலைவர் டி.டி.வி.தினகரன் ‘நாளைய முதல்வர்’ என வர்ணிக்கப்படுகிறார். அ.தி.மு.க மீண்டும் ஒரே கட்சியாக வடிவம் எடுக்குமா... அதற்கு எத்தனை தேர்தல் வெற்றிகளும் தோல்விகளும் தேவைப்படும் என்பது தெரியவில்லை.

தி.மு.க-வில் இந்த நிலைமை இல்லை. இரண்டு பெரும் தோல்விகளை அடுத்தடுத்து அந்தக் கட்சி சந்தித்த பிறகும், கருணாநிதியின் காலத்திலேயே ஸ்டாலினைத் தங்கள் தலைவராக தி.மு.க-வினர் ஏற்றுக்கொண்டுவிட்டனர். அதற்கு அவர் நியாயம் செய்வாரா என்பதுதான் கேள்வியே! 

13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 1989-ல் தி.மு.க மீண்டும் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலின்போது கட்சிக்குள் இளரத்தம் பாய்ச்சினார் கருணாநிதி. இன்று தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்களாக, மாவட்டச் செயலாளர்களாக ஸ்டாலினுடன் வலம்வரும் பலரும் அப்போது முதன்முதலாகப் பதவிக்கு வந்தவர்கள்தான். ‘கட்சியின் எதிர்காலத் தலைவராக ஸ்டாலின் வரவேண்டும்’ என அன்றே தீர்மானித்த கருணாநிதி, அதற்கு ஏற்றபடி இரண்டாம்கட்டத் தலைவர்களை வளர்த்தெடுத்தார்.  இருந்த தடைகளை அகற்றவும் செய்தார். அதைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வர ஸ்டாலினுக்கு 25 ஆண்டுகளுக்கும்மேல் தேவைப்பட்டன. 

மு.க. ஆவாரா மு.க.ஸ்டாலின்?

‘ஸ்டாலின் தனித்து செயல்படும் பக்குவம் பெறவில்லையோ’ என்ற சந்தேகத்துடனும், தன் கையிலிருந்து அதிகார லகானை விடமுடியாத தயக்கத்துடனும் கருணாநிதி தன்னால் இயங்கமுடிந்த காலம்வரை தலைவர் பதவியில் நீடித்தார். ‘தந்தை’ என்ற உறவால் எழுந்த உரிமையைத் தாண்டி ‘தலைவர்’ என்ற ஆளுமையைப் பார்த்து ஆச்சர்யப்படும் தொண்டனாகவே இருந்து பழகிவிட்டார் ஸ்டாலின். மிகப்பெரிய ஆளுமைகளுக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பவரும் எல்லோருக்கும் இருக்கும் சிக்கல் இது.

கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோதும், அவரின் மறைவின்போதும் தன் அரசியல் முதிர்ச்சியை ஸ்டாலின் வெளிப்படுத்தினார். கருணாநிதி மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும்கூட, அவரின் புகைப்படங்கள் இரண்டு முறை வெளியிடப்பட்டன. கவலையில் இருந்த தொண்டர்களுக்கு உண்மை நிலையை உணர்த்தியது, கருணாநிதியின் மறைவுச்செய்தி வெளியானபோது, அமைதி காக்குமாறு தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்தது, ‘ஒரே ஒருமுறை உங்களை அப்பா என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே’ என தன் நெகிழ்ச்சிப் பக்கங்களைத் திறந்து காட்டியது, மெரீனாவில் இடம் வாங்க உடனடியாக சட்டப்போராட்டம் நடத்தியது, மெரீனாவில் இடம்கிடைத்த உத்தரவு வெளியானதும் பொது இடம் என்று பார்க்காமல் கண்கலங்கித் தன்னை உணர்ச்சிமயமான தலைவர் என நிரூபித்தது, ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தினரிடையே நெரிசல் ஏற்பட்டபோது கையில் மைக்கை வாங்கித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது, காயம்பட்டவர்களை உடனே போய் மருத்துவமனையில் பார்த்தது ஆகியவை ஸ்டாலினுக்கு நல்ல இமேஜை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.

2017 ஜனவரி 4-ம் தேதி தி.மு.க-வின் செயல் தலைவராக நியமனம் செய்யப் பட்டார் ஸ்டாலின். அன்றுமுதலே கிட்டத்தட்ட அவரே தலைவராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். கருணாநிதி போல முரசொலியில் கடிதம் எழுதுகிறார். போராட்டங்களை நடத்துகிறார். கட்சிக்கூட்டங்களில் தலைமையேற்கிறார். எப்போதும் இல்லாதபடி ‘கழக உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு’ என மாவட்டவாரியாகத் தொண்டர்களை நேரடியாக அறிவாலயத்துக்கு அழைத்து சந்தித்தார். ஆனாலும், ‘ஏதோ ஒன்று குறைகிறது’ என உணர்வு தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எழாமல் இல்லை.

மு.க. ஆவாரா மு.க.ஸ்டாலின்?

கருணாநிதி காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்றால், அண்ணாவில் ஆரம்பித்து மதுராந்தகம் ஆறுமுகம் வரை அந்த மாவட்டத்தில் கட்சியுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருந்த அத்தனை பேரையும் தன் உரையில் நினைவுபடுத்துவார். கடலூரில் பேசப் போனால் இளம்வழுதியில் ஆரம்பித்து, எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வரை பல பெயர்களை அவரின் உதடுகள் உச்சரிக்கும். இது அந்த உரையை உள்ளூர்க் கட்சிக்காரர்களின் மனத்துக்கு நெருக்கமாக்கும். இதில் இன்னொரு நுட்பமும் இருக்கும். தி.மு.க-வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் இரண்டு கோஷ்டிகள் இருக்கும். அந்த இரண்டு கோஷ்டியினரும் நேசிக்கும் பெயர்களை சரிவிகிதத்தில் கலந்து சொல்வார் கருணாநிதி. இருதரப்பினருமே நிறைவு பெறுவார்கள்.

‘நமக்கு நாமே’ பயணத்தில் ஸ்டாலின் நடத்திய பொதுக்கூட்டங்கள் இதிலிருந்து வித்தியாசப்படுகின்றன. மேடையில் அவர் மட்டுமே இருந்தார். மாவட்டச் செயலாளருக்குக்கூட இடமில்லை. தான் பங்கெடுக்காத நாடகத்தில் ஒரு நடிகன் சுவாரஸ்யம் இழந்துவிடுவது போல, கட்சி நிர்வாகிகள் சுரத்தில்லாமல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

மாவட்டங்களுக்கு கருணாநிதி சுற்றுப்பயணம் செல்லும்போது கட்சியினரை கவனமாகக் கையாள்வார். கருணாநிதி தங்கியிருக்கும் அறைக்குள் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருப்பார்கள். மாவட்ட நிலவரம் குறித்து அவர்களுடன் உரையாடுவார் கருணாநிதி. அறைக்கு வெளியே, மாவட்டச் செயலாளருக்கு ஆகாத கோஷ்டி, ஆதங்கத்துடன் காத்திருக்கும். வெளியே வரும் கருணாநிதி, மற்றவர்களை ஒதுக்கிவிட்டு, அவர்களிடம் நின்று, பெயர் சொல்லி அழைத்து, இரண்டு நிமிடங்களாவது பேசி நலம் விசாரித்துவிட்டுப் போவார். எதிர்கோஷ்டிக்கு அந்த உரையாடலே போதுமானதாக இருக்கும். ‘தலைவர் என்மேல இவ்வளவு பாசம் வச்சிருக்காரே’ என்று உருகுவார்கள்.

ஸ்டாலின் இதைச் செய்வதில்லை என்பதுதான் பலரின் மனக்குறை. மாவட்டச் செயலாளரை எதிர்த்து அரசியல் செய்பவர்களை, தனக்கும் எதிராகச் செயல்படுவதாக அவர் நினைத்துக்கொள்கிறார். ‘‘நாங்கள் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டோம். அவர் எங்களைத் தொண்டர்களாக ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா என்பதுதான் இப்போது பிரச்னை’’ என்பது அவர்களின் குரல். தனக்குப் பிடிக்காதவர்களைப் பார்த்தால் கருணாநிதி முகம் திருப்பிக்கொள்வதில்லை. எதிரில் நின்று வணங்குபவர்களைக் கண்டுகொள்ளாமலும் போனதில்லை. ‘நமக்குப் பிடித்தமானவர்களை மட்டுமில்லாமல், பிடிக்காதவர்களையும் இணைத்துக்கொண்டு நிகழ்த்த வேண்டிய விளையாட்டுதான் அரசியல்’ என்பது அவருக்குத் தெரியும். ஸ்டாலினுக்கு அவர் கற்றுக்கொடுக்காமல் விட்டுவிட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படிப் புறக்கணிக்கப்படும் கட்சிக்காரர்களைத்தான் ‘கருணாநிதியின் உண்மை விசுவாசிகள் எனக்குப் பின்னால் இருக்கிறார்கள்’ என அழகிரி இப்போது அடையாளப்படுத்துகிறார்.

எதிர்ப்பு அரசியலில் ஊறி வளர்ந்த தி.மு.க., இன்று அதை சின்னச்சின்ன இயக்கங்களிடம் இழந்து நிற்கிறது. கருணாநிதி ஒரு போராட்டத்தை அறிவித்தால், அதை ஒரு தொடர் இயக்கமாக மாற்ற முயற்சி செய்வார். ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி பேசிக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருப்பார். ஆனால், இப்போதைய போராட்டங்கள் வெறும் அடையாளப் போராட்டங்களாக ஆகிவிட்டன.
#GoBackModi உள்ளிட்ட பல போராட்டக் களங்களை, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-விடமிருந்து சின்னச்சின்ன அமைப்புகள் கைப்பற்றிக்கொண்டன. கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஸ்டாலின் தொடர் போராட்டங்கள் நடத்துகிறார்.

‘கருணாநிதி தமிழகத்தில் இருந்து கொண்டு இந்தியாவைப் பார்த்தார்; ஸ்டாலின் கொளத்தூரில் இருந்துகொண்டு தமிழகத்தைப் பார்க்கிறார்’ என்பது ஸ்டாலின்மீது தி.மு.க நிர்வாகிகள் வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. நலத்திட்ட உதவிகள் தருவதோ, குறைகள் கேட்பதோ, ஸ்டாலின் உடனே தனது கொளத்தூர் தொகுதிக்குப் போய்விடுவார். தன் தொகுதியை நன்றாகக் கவனித்துக் கொள்ளும் மிகச்சில எம்.எல்.ஏ-க்கள் பட்டியலில் ஸ்டாலின் இருக்கிறார். ஆனால், தமிழகத்தில் 88 எம்.எல்.ஏ -க்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர், கொளத்தூரைத் தாண்டியும் கவனிக்க வேண்டும். கருணாநிதி திருவாரூரின் எம்.எல்.ஏ-வாக மட்டும் தன்னை நினைத்துக்கொள்ளவில்லை. ஆனாலும், 2016 தேர்தலில் தமிழகத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தவர் அவர்தான்.

‘கருணாநிதி இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கேட்பவர்களை ‘கருணாநிதியைவிட இவர் சிறப்பாகச் செயல்படுகிறார்’ என சொல்லவைக்க வேண்டும். அதுதான் ஸ்டாலினை இந்தத் தலைமைப் பதவிக்குத் தகுதியானவர் ஆக்கும்.

அது நடக்குமா என்பதை எதிர்காலம்தான் சொல்ல வேண்டும். அதுதான் தி.மு.க.வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

தி.முருகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி