Published:Updated:

``அவர்கள் வலியை உணர்ந்தீர்களா விவசாயி-மகனே?" - எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம்

காலை எழுந்ததும் பல் விளக்கி முடிக்கும்வரை வீட்டு வாஷ்பேசினில் தண்ணீர் திறந்துவிட்டபடியே இருக்கும். அதே தண்ணீருக்காக விவசாயிகள் படும் கஷ்டம் எனக்கு அப்போது தெரிந்ததில்லை.

``அவர்கள் வலியை உணர்ந்தீர்களா விவசாயி-மகனே?" - எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம்
``அவர்கள் வலியை உணர்ந்தீர்களா விவசாயி-மகனே?" - எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம்

வணக்கம்,

பிறந்தது முதல் 20 ஆண்டுகள்வரை சென்னை மாநகரத்திலேயே வாழ்ந்து வளர்ந்தவன் எழுதிக்கொள்வது. எங்களது தாத்தா காலம்வரை எங்கள் பரம்பரை 4 ஏக்கர் நன்செய் நிலத்தை விவசாயம் செய்து வாழ்ந்துவந்தார்கள் என்றபோதும் விவசாயம் பற்றி எனக்கு அதிகபட்சம் தெரிந்ததெல்லாம் `Agriculture is the backbone of our country' என்று மூன்றாம் வகுப்பில் படித்த வரிகள் மட்டுமே. காலை எழுந்ததும் பல் விளக்கி முடிக்கும்வரை வீட்டு வாஷ்பேசினில் தண்ணீர் திறந்துவிட்டபடியே இருக்கும். அதே தண்ணீருக்காக விவசாயிகள் படும் கஷ்டம் எனக்கு அப்போது தெரிந்ததில்லை. அடைமழை பெய்தாலும் பால்கனியில் நின்றுகொண்டு மழையை ரசித்துக்கொண்டே இருக்கும் எனக்கு, மழை வந்தால் குடிசைக்குள் ஒழுகும் மழை நீரைப் பிடிக்க வாளி வைத்துக்கொண்டு அலையும் பாடெல்லாம் இருந்ததில்லை. அடுக்குமாடி குடியிருப்பு அல்லது தனி வீடுகள் மட்டுமே கண்ணுக்கு எட்டும் தூரம்வரை தெரியும் சூழலில் வாழும் என் போன்ற சென்னைப் பையன்களுக்குக் குடிசையில் வாழும் மக்கள் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

அத்தனை மக்களும் உதவிக்கரம் நீட்டி மீட்டெடுத்த 2015 சென்னை வெள்ளம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அத்தனை கரங்களும் இணைந்ததால் தங்களை மீட்டெடுத்துவிடும் நம்பிக்கை சென்னை மக்களுக்கு இரண்டொரு நாள்களில் கிடைத்தது. 2016-ம் ஆண்டு வர்தா புயல் சென்னையைத் தாக்கியபோதுகூட 5 நாள்களில் இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்தது. தற்போது 2018-ல் `கஜா' புயல் வருகிறதென்றவுடன் மூன்று நாள்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவார்கள். பிறகு, எப்போதும்போல மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்று எல்லாச் சாமான்யர்களைப்போலத்தான் நானும் நினைத்தேன். ஆனால், நிலைமை சாமான்யர்கள் நினைத்தவாறு இல்லை. புயல் அடித்து மூன்று நாள்களுக்கு புதுகையில் இருக்கும் நண்பன் ஒருவனை அழைத்தபோது ``டேய், வீடே காத்துல அடிச்சுட்டுப் போயிருச்சுடா! பள்ளிக்கூடத் திண்ணையிலதான் எல்லாரும் இருக்கோம்" என்றான். அந்தக் குரலில் இருந்த நடுக்கத்தையும், வலியையும் அடுத்தவேளை சோற்றுக்கு என்ன செய்வது என்ற தவிப்பையும் உணர முடிந்தது. விளைவு, என்னை டெல்டா மாவட்டங்களில் பயணிக்கவைத்தது. மழை என்றால் துள்ளிக் குதித்துக்கொண்டு ரசித்த பட்டாளங்களைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். ஆனால், அலறியடித்துக்கொண்டு கையில் கூடுமானவரை பொருள்களை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத் திண்ணைகளுக்கு ஓட்டம்பிடிக்கும் தாய்மார்களையும் குழந்தைகளையும் அன்றுதான் கண்டேன்.

``வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என வள்ளலாரை மனப்பாடச் செய்யுளாகப் படித்தபோது புரியாத அந்த வலி, பெற்ற பிள்ளைபோலத் தென்னை, வாழைகளை ஏக்கர் கணக்கில் வளர்த்த விவசாயிகளின் அழுகுரல் கண்களைக் கலங்கவைத்தது. தேக்கு பயிர் செய்த விவசாயி ஒருவர் ``ரெண்டு வருசத்துக்கு, முன்னதான் கடன வாங்கி தேக்குப் பயிரிட்டேன், நல்லாதான் வளர்ந்துட்டு இருந்துச்சு, வெறும் நாலு மணி நேரம் வந்த புயல், எங்க எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கிடுச்சு, என் புள்ள சென்னையில இன்ஜினீயரிங் படிக்கிறா, அவளை நான் எப்படிக் கரைசேர்க்கப் போறேனு தெரியலியே!" என்று கதறினார். உயிரைத் தவிர்த்து எல்லாவற்றையும் அவர் தொலைத்துவிட்டு நின்றதைப் பார்க்க மனம் தாளவில்லை. மெட்ரோ நகரம் சென்னையில் நாம் வாழும் வாழ்வு எவ்வளவு சொகுசானதென்று அன்றுதான் புரிந்தது. விவசாயம், கிராமத்து வாழ்க்கை பற்றிய அடிப்படை அறிவே எனக்கு இல்லாதபோதும், பாதிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் களத்துக்குச் செல்ல வேண்டும், பாதிப்புகளைப் பதிவிட வேண்டும் என்று புறப்பட்டுச் சென்றேன். ஆனால் மூச்சுக்கு முந்நூறு முறை மேடைகளில் `நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்' என்று மார்தட்டிகொள்ளும் நீங்கள், புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை ஹெலிகாப்டரில் பார்வையிட்டது எந்த வகையில் நியாயமென்பது இந்த வருங்கால இளைஞனுக்குப் புரியவில்லை. மேலும், நீங்கள் செய்ததை முட்டுக்கொடுக்கும் வகையில், `ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன மரங்கள் சாய்ந்திருக்கின்றன, எவ்வளவு வாழை மரங்கள் சாய்ந்திருக்கின்றன, எவ்வளவு தென்னை மரங்கள் சாய்ந்திருக்கின்றன எனத் தாழ்வாகப் பறந்து எல்லாவற்றையும் பார்வையிட்டோம். வெறுமெனப் பார்வையிடச் செல்லவில்லை' என்று நீங்கள் காரணம் கற்பிப்பதும் அந்தத் தவற்றை மூடிமறைப்பதற்காகவே அடுத்தமுறை தரைவழியாகப் பார்வையிடச் சென்றதும் அங்கே புயல் பாதித்த பகுதியில் உள்ள வீட்டில் உணவு அருந்துவதெல்லாம் எத்தனை அபத்தம்?

சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்காக நிலம் அப்புறப்படுத்தப்பட்டபோது தென்னை ஒன்றுக்கு 40,000 ரூபாய் இழப்பீட்டுத்தொகையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுவே `கஜா' என்ற சூறாவளி, மக்களின் வாழ்வை வதைத்து, பல்லாயிர ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்களைச் சூறையாடியுள்ளபோது தென்னை ஒன்றை அகற்றி மறுசாகுபடி செய்ய ரூபாய் 1,512 அறிவித்துள்ளீர்கள். ``நல்லா வளர்ந்த ஒரு தென்னை மாசத்துக்கு 250 ரூபா தரும்பா, இதுக்குமேல மறுசாகுபடி செஞ்சாக்கூட 5 வருஷம் திடமா வளர்ந்த அப்புறம்தான் அவ்ளோ சம்பாத்தியம் தரும். ஆனா, அரசாங்கத்துல வெறும் 1,500 தான் கொடுக்கிறாங்களாம். இது வெறும் 6 மாசத்துக்கான இழப்பீடுதான், இதிலேயேதான் நாங்க மரத்தை அப்புறப்படுத்தி, மறுசாகுபடியும் செஞ்சுக்கணுமாம். குறைச்சலா 5 வருஷத்துக்கான இழப்பீடா மரத்துக்கு 15,000 ரூபா கொடுத்தாதான்யா எங்களால பொழைக்க முடியும். இதையெல்லாம் வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ணுறதுகில்ல, மருந்து குடிச்சுட்டுச் சாக வேண்டியதுதான்..." என்று தொடர்ந்தவரின் வார்த்தைகள் அழுகைக்குள் மறைந்தன. இவரின் அழுகைக்குள் ஒளிந்திருக்கும் மரணவலி விவசாயி மகனான உங்களுக்கு யாரும் சொல்லிப் புரிய வேண்டுமென்கிற அவசியமில்லை, ஏனென்றால் நீங்கள்தான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவராயிற்றே! 

குடியிருப்புப் பகுதிகள் மட்டுமே நிரம்பிவழியும் சென்னையில் பெருவெள்ளம் வந்தபோதும், வர்தா புயல் வந்தபோதும் முறையே 25,912 கோடி ரூபாயும், 22,573 கோடி ரூபாயும் நிவாரணமாகக் கோரியது அன்றைய அ.தி.மு.க. அரசு. ஆனால் சராசரியாகக் கோரப்பட்ட தொகையில் 5 சதவிகிதம்தான் இந்திய அரசு ஒதுக்கியது. ஆனால் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, புதுகை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் பெருமளவில் அழிவுக்குள்ளாகியிருக்கும் நிலையில், புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து சரியான மதிப்பீடு செய்யாமலேயே வெறும் 14,910 கோடி ரூபாய் கோரியது நியாயமா? மேலும், ``நாம் கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுத்து உதவுவதில்லை" என்று கஜா புயலுக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தீர்கள். உண்மைதான், ஆனால் அது இன்று நேற்றுள்ள நிலவரம் இல்லை என்பதும் தங்களுக்கு நன்றாகவே தெரியும். இத்தனை இருந்தும் சமீபத்தில் மத்திய அரசுமீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கு உங்கள் எம்.பி-க்கள் ஆதரவளித்தது ஏன்? அப்போது மட்டும் தாங்கள் விவசாயி மகன் என்பதை மறந்துவிட்டீர்களா?. 

அதிகாரம் கையிலிருக்கும் ஒற்றைக் காரணத்துக்காகவே தூத்துக்குடியில் நடுரோட்டில் சாமான்ய மக்களைச் சுட்டுவீழ்த்தியதையும், தற்போது விவசாயிகளை மரணத்துக்குத் தள்ளிக்கொண்டிருக்கும் உங்களின் அலட்சியப் போக்கையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். உங்கள் கட்சிக்காரர்களுக்கே உண்டான பழமொழியைத் தங்களுக்கும் தற்போது நினைவுபடுத்த வேண்டியதாக இருக்கிறது, ``தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்". தர்மம் உங்கள் கட்சிக்கு மட்டும்தானா வெல்லும்? செத்துக்கிடந்த பயிரைக் கண்டு மனம்நொந்து இறந்துபோன அந்த விவசாயியின் குருதியுடன் வழிந்த ஓலக்குரல் உங்கள் ஆட்சிக்கட்டிலிடம் நிச்சயம் நியாயம் கேட்கும்.

இப்படிக்கு,

நகரத்தில் வளர்ந்த சாமான்ய இளைஞன்.