Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

எஸ்.மகிமைராஜா, பூந்தமல்லி.

தி.மு.க-வின் செயற்குழுவில் கருணாநிதிக்கான இரங்கலைவிட, அடுத்த தலைவராக ஸ்டாலினை முன்னிறுத்துவதற்குத்தானே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது?


இது கழகங்களின் ஸ்டைல். எப்போதுமே இரங்கற்பா நிகழ்வுகளில்தான் ‘தல’ புராணம் ஆரம்பமாகும்.

கழுகார் பதில்கள்!

பி.மணி, குப்பம், ஆந்திரா.

50 எம்.பி-க்களை வைத்திருக்கும் அ.தி.மு.க ராஜநடை போடுவதை விட்டுவிட்டு, மத்திய அரசிடம் மண்டியிடுவதேன்?


அந்த 50 பேரும் அ.தி.மு.க எம்.பி-க்கள்தான் என்று உங்களுக்கு யார் சொன்னது. பலரும் ஏகப்பட்ட அணிகளாகப் பிரிந்து, இஷ்டம் போல முடிவெடுக்கிறார்கள். அணி சேராத சிலர், டெல்லி பி.ஜே.பி தலைவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, தனி ஆவர்த்தனம் நடத்திவருகின்றனர். ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் கூடும்போதெல்லாம் அனைவரும் அ.தி.மு.க எம்.பி-க்கள் என்பதை நிரூபிப்பதற்குள் எடப்பாடிக்கும் பன்னீருக்கும்  தாவு தீர்ந்துபோகிறது. இதில் ராஜநடையா?

ஏ.உமாபார்வதி, மதுரை-1.

டி.வி-யில் தோன்றும் ஒரு டாக்டர், ‘‘இந்த எண்ணெயைத் தடவுங்கள்; முடி வளரும்’’ என்கிறார். டாக்டர் சொன்னபடி எண்ணெய் தடவியும் முடி வளரவில்லையே என்கிற கேள்விக்கு, ‘‘எண்ணெய் தடவினால், முடி வளரும் என்று யார் சொன்னது’’ என்று இன்னொரு டி.வி-யில் கேள்வி கேட்கிறார் ஒரு பியூட்டீஷியன். யார் பேச்சை நம்புவது?


விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கழுகார் பதில்கள்!

இதுபோன்ற பார்ட்டிகளின் பேச்சுக்களைவிட, நம் பாட்டிகளின் பேச்சை நம்புங்கள். தேங்காய் எண்ணெய் இருக்கும் பாட்டிலில் வெட்டிவேர், வெந்தயம் உள்ளிட்ட சில விஷயங்களைப் போட்டு வைத்திருப்பார்கள். அதிலிருந்து கிளம்பும் மணமே அலாதியாக இருக்கும். அதைத்தான் தினமும் பயன்படுத்துவார்கள். முடிவளர்கிறதோ இல்லையோ... பிரச்னை வளராமல் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் அந்த பாட்டில்களும் இல்லை; அத்தகைய பாட்டிகளும் இல்லை.
ஒரு வேண்டுகோள். இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிடாதீர்கள். பிறகு, ‘போலி இயற்கை வைத்தியர்’ என்று என்னையும் கைது செய்துவிடப் போகிறார்கள்.

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

‘அ.தி.மு.க-தி.மு.க இடையே மறைமுக உறவு உள்ளது, ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்களைப் போலவே, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களும் கவனிக்கப்படுகிறார்கள்’ என்றெல்லாம் குற்றம்சாட்டப்படும் நிலையில், துணை முதல்வர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு போடுகிறதே தி.மு.க?

ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு, திரைக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகத் திடீரென்று நீதிமன்றத்தில் வழக்கு வரும். ‘படத்தின் கதை என்னுடையது’, ‘இந்தப் படத்தின் கதை என் குடும்பத்தைப் பற்றியது’, ‘இந்தப் படத்துக்காக வாங்கிய பணத்தைத் தரவில்லை’ என்றெல்லாம் குற்றம்சாட்டி ‘படத்தை வெளியிடக் கூடாது’ என வழக்கு போடுவார்கள். இப்படியாக வரும் வழக்குகள், கடைசியில் காணாமல் போய்விடும். எல்லாம் ஒரு பரஸ்பர விளம்பரம்தான். அப்படித்தான் இதுவும்!

லோகேஷ்குமார், ஈரோடு.

சமீபகாலமாக ‘இலுமினாட்டி’ என்ற வார்த்தை அதிகமாகச் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறதே... அதைப் பற்றி உங்கள் கருத்து?


அப்பப்பா... இந்த வார்த்தை படும்பாடு இருக்கிறதே! யாரையாவது பிடிக்கவில்லை என்றால் உடனே ‘இலுமினாட்டி’ முத்திரைதான். கமல்ஹாசன் தொடங்கி ஒபாமா வரை இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில், உலகையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்டிப்படைக்க நினைக்கும் ஒரு ரகசியக் குழு அல்லது ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகத்தான் இது முதலில் அறியப்பட்டது. வரலாற்றுக் காலம் தொட்டே இது இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், 1771-ல் இங்கோஸ்டட் பல்கலைக்கழகப் பேராசிரியர்களில் ஒருவரான ஜான் ஆடம் வெய்ஸாட் இந்த இயக்கத்தை உருவாக்கினார். இவர்தான் நவீன இலுமினாட்டி யுகத்தின் நிறுவனர். இப்போதும் இந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால், இவர்கள் உலகத்தையே கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விடுவார்களா என்பது விவாதப் பொருள்.

கழுகார் பதில்கள்!

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது?


அமெரிக்காவிலிருந்து அவர் கருணாநிதிக்காகக் கண்ணீர்விட்டு அழுத வீடியோவைப் பார்க்கவில்லையா?

ஆர்.முத்துவேல், இமெயில்.

1996 சட்டமன்றத் தேர்தலில், மூப்பனாருடன் கருணாநிதி கூட்டணி சேராமல், ரஜினியும் ‘வாய்ஸ்’ கொடுக்காமல் இருந்திருந்தால், இந்த அளவுக்குக் கருணாநிதியின் செல்வாக்கு பெருகியிருக்குமா?


அந்தத் தேர்தல் வெற்றி, முக்கியமாக மீடியா வாய்ஸால் கிடைத்த வெற்றி. மற்ற வாய்ஸ்களெல்லாம் அதற்கு அடுத்தபடிதான். 1991 தொடங்கி 1996 வரையிலான காலகட்டத்தில் இப்போதுபோல சோஷியல் மீடியா இல்லை. ஆனால், சுடுகாட்டுக்கூரை ஊழல், பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, கலர் டி.வி ஊழல், டான்சி நில பேரம், சொத்துக்குவிப்பு வழக்கு, வளர்ப்பு மகன் திருமணம், ஆட்சிக்கு எதிராகப் பேசுபவர்கள்மீது ஆசிட் வீச்சு என்று ஆரம்பித்து ஒவ்வொன்றையும் உடனுக்குடன் தோலுரித்தவை பத்திரிகைகளும் டி.வி-க்களும்தான். அவையெல்லாம் சேர்ந்து கொடுத்த வாய்ஸ்தான்... அப்போது தி.மு.க-வுக்கு ஆதரவாகத் திரண்டது. ஏற்கெனவே மக்களிடம் செல்வாக்கு மிகுந்த தலைவர் என்பதாலும், அடுத்த சாய்ஸ் என்பதாலும் கருணாநிதிக்கு மகுடம் சூட்டப்பட்டது. 

கழுகார் பதில்கள்!

வீ.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17.

தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்?


புகழேந்தி.

எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

தமிழகத்தில் போலி இன்ஜினீயரிங் கல்லூரிகள் இருந்தனவாமே... யார் அனுமதியுடன் நடத்தியிருக்க முடியும்?


ம்... ஆட்சியே போலியாக நடக்கிறது என்று குற்றம்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதில் இன்ஜினீயரிங் கல்லூரிகளைப் பற்றிக் கேட்கிறீரே!

திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

ஒரு மனிதன் எல்லோருக்கும் நல்லவனாக முடியுமா?


எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்.

யோகா வெங்கட், சத்துவாச்சாரி.


அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயை, எளிய மனிதரான ஆனைமுத்து நேருக்கு நேர் கேள்வி கேட்டதாகப் படித்தேன். இன்றைய பிரதமரிடமோ, தமிழக முதல்வரிடமோ இப்படி சாமான்யர்கள் கேள்வி கேட்க முடியுமா?

அன்றைய சூழல் வேறு; இன்றைய சூழல் வேறு. இன்று தலைவர்களுக்குப் பலவிதமான அச்சுறுத்தல்கள் இருப்பதால் அனைவருமே மக்களைவிட்டு வெகுதூரம் விலகியே இருக்கிறார்கள். உண்மையிலேயே அச்சுறுத்தல் இருக்கும் தலைவர்களைவிட, வெட்டிப் பந்தாவுக்காகப் பாதுகாப்புப் படைகளுடன் வலம் வருபவர்கள் அதிகரித்துவிட்டனர். நேற்று முளைத்த தலைவர்கூட, ஏதாவது ஒரு செட்டப் தாக்குதலைத் தன் வீட்டில் நடத்தவைத்துவிட்டு, ‘இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டும்’ என்கிறார். பல சமயங்களில் பத்திரிகையாளர்களாலேயே மக்கள் பிரதிநிதிகளை நெருங்கமுடியாத நிலையில், சாமான்யர்கள் எம்மாத்திரம்?

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி.


சென்னையில் தி.மு.க-வினரால் தாக்குதலுக்கு உள்ளான பிரியாணி கடைக்கு நேரில் சென்று, அவர்களுக்கு ஆறுதல்கூறிய மு.க.ஸ்டாலினின் செயல்பாடு எதைக் காட்டுகிறது?


உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம். அனைத்துக் கட்சியினருமே பின்பற்றவேண்டியதும்கூட. இதைவிட முக்கியம், இப்படிப்பட்ட சூழல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான். சம்பவம் நடந்தபிறகு போய் ஆறுதல் சொல்வதைவிட மிகுந்த பலன் தரக்கூடியது அது. ஆனால், அனைத்துக் கட்சிகளிலுமே தொண்டர்களைவிட குண்டர்கள் நிறைந்திருக்கும் சூழலில், இது எப்படி சாத்தியம் என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும்.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை,  சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!