Published:Updated:

சென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்!

சென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்!

சென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்!

ருணாநிதி சமாதியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி பரபரப்பைப் பற்றவைத்தார் அழகிரி. அடுத்ததாக, கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மிகப்பெரிய பேரணியை சென்னையில் நடத்தி தி.மு.க-வுக்கும், தமிழக மக்களுக்கும் தன் பலத்தைக் காட்டத் தயாராகிவருவதாக அவரின் ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும்  உள்ள அழகிரி ஆதரவாளர்களையும், தி.மு.க மாவட்ட நிர்வாகிகள்மீது அதிருப்தியில் உள்ளவர்களையும், சமீபத்தில் பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகளையும் தொடர்புகொண்டு மதுரையில் உள்ள அழகிரியின் முக்கிய விசுவாசிகள் ஒருங்கிணைத்துவருகிறார்கள்.

எப்போதும் சென்னையில் ஒரு பிரச்னையைத் தொடங்கிவைத்தால், உடனே மதுரைக்கு வந்துவிடும் அழகிரி, சமாதி சங்கல்பத்துக்குப் பிறகு சென்னையில் இருந்தே தன் ஆதரவாளர்களிடம் பேசிவருகிறார். எதிலும் பட்டும் படாமல் இருக்கும் மகன் துரை தயாநிதி, இந்த முறை அப்பாவுடன் தினம் தினம் தீவிர ஆலோசனை நடத்திவருகிறார். அதன் வெளிப்பாடாகத்தான் ட்விட்டரில் கி.வீரமணியைக் கடுமையாகச் சாடியிருந்தார் துரை தயாநிதி. அழகிரியை தி.மு.க-வுக்குத் தலைமை ஏற்க அழைக்கும் பாடல் ஒன்று, அழகிரி பெயர் கொண்ட முகநூல் பக்கம் ஒன்றில் வெளி யிடப்பட்டதும் துரை தயாநிதியின் ஏற்பாடுதான் என்று சொல்லப்படுகிறது.  

சென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்!

‘‘கட்சி நிர்வாகிகள் பலரும் எங்கள் பக்கம்தான். அழகிரி அண்ணன் எடுக்கப் போகும் எந்த முடிவுக்கும் தயாராக இருக்கிறோம்’’ என்று மதுரைத் தம்பிகள் கூறிக் கொண்டிருந்தாலும், ‘‘இந்தச் சலசலப்பு கொஞ்ச நாட்களில் அடங்கிவிடும்’’ என்கிறார்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள். மதுரையில் உள்ள ஸ்டாலின் அணி நிர்வாகி ஒருவர், ‘‘கருணாநிதி சமாதியில் அழகிரி ஆரம்பித்து வைத்த ஓ.பி.எஸ் மாடல் அரசியல், அவர்கள் குடும்பத்துக்குள் வேண்டுமானால் ஓரளவு சலசலப்பை ஏற்படுத்தலாம். ஆனால், கட்சிக்குள் எந்தச் சலனத்தையும் உண்டு பண்ணவில்லை’’ என்கிறார்.

‘‘அழகிரியின் ஆதங்கப் பேச்சு, அன்றைய தினத்தில் தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் பெரிதாகப் பேசப்பட்டது. தி.மு.க-வை எதிர்ப்பவர்களுக்குக் கிண்டல் செய்ய அது பயன்பட்டது. அதைத் தவிர வேறு எந்த அசைவும் இல்லை. உண்மையிலேயே அழகிரியின் பேச்சு கட்சியினரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என்றில்லை; சாதாரண நிர்வாகிகளாவது அழகிரியைப் பார்த்துத் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்க வேண்டும். ஊர் ஊருக்கு ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்... ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு என்று ஸ்டாலினுக்கு எதிராக நடந்திருக்க வேண்டும். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.

ஒருகாலத்தில் அழகிரியின் விசுவாசியாக இருந்த ஐ.பெரியசாமியே, ‘கட்சியை யாரும் உடைக்க முடியாது’ என்று அறிக்கை வெளியிட்டார். அது மட்டுமல்ல. ஆகஸ்ட் 14-ம் தேதி தி.மு.க செயற்குழுவும் சிறப்பாக நடந்து முடிந்தது. பெரியார், அண்ணா, கலைஞராக ஸ்டாலினை பார்க்கிறோம் என்று ஸ்டாலினை கருணாநிதியின் இடத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஏற்றிவைத்துவிட்டார்கள். அழகிரிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது போலச் சமூக ஊடகங்களில் சிலர் போட்டிருந்தார்கள். அவைகூட பழசுதான்; புதுசு இல்லை. அ.தி.மு.க-வில் இதுபோலப் பிரச்னை ஏற்பட்டு எதிர்ப்புக்குரல் கொடுத்த ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஒரு கூட்டம் சேர்ந்தது. அதுபோல, அழகிரிக்குக் கூட்டம் சேர்ந்திருக்க வேண்டாமா? சென்னையில் அவர் கொந்தளித்துக்கொண்டிருந்தபோது, இங்கே அவரின் தீவிர விசுவாசிகள் அமைதியாக இருந்தனர். இப்போதும் அழகிரியின் மதுரை வீட்டுப் பக்கம் யாருமே இல்லை. இதுதான் தொண்டர்கள் செல்வாக்கா?’’ என்றார் அவர். இது உண்மைதான். ‘அஞ்சாநெஞ்சனின் கோட்டை’ என்று சொல்லப்படும் தென்மண்டலம் அமைதியாகவே உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்!

மதுரை தி.மு.க-வில் அழகிரியால் உருவாக்கப்பட்ட பி.மூர்த்தி, கோ.தளபதி, எஸ்ஸார் கோபி, மிசா பாண்டியன், ஜெயராமன், தமிழரசி போன்றோர் இப்போது ஸ்டாலின் அணியில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இசக்கிமுத்து, பி.எம்.மன்னன்,  உதயகுமார், முபாராக் மந்திரி, கவுஸ் பாட்சா, கோபிநாதன், எம்.எல்.ராஜ் போன்றவர்கள் மட்டும் அழகிரியிடம் விசுவாசத்துடன் இருக்கிறார்கள். ‘‘கருணாநிதி சமாதியின் ஈரம் காய்வதற்குள் அண்ணன் இப்படிப் பேசியிருக்கக் கூடாதுதான். ஆனால், அண்ணனை ஒட்டுமொத்தமாக ஒழிக்கச் சூழ்ச்சி செய்துவருகிறார்கள். அதனால்தான் அண்ணன் கோபமாகி விட்டார். இப்போது அமைதியாக இருந்தால், அரசியல் எதிர்காலமே சூன்யமாகிவிடும் என்பதால்தான் அப்படிப் பேசினார். எடப்பாடி அரசை காலிசெய்ய வேண்டுமென்றால், வருகிற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெற வேண்டும். அதற்கு, கட்சி ஒற்றுமையாக இருந்தால்தான் சாத்தியம். இது, அழகிரி அண்ணனுக்குத் தெரிகிறது, ஸ்டாலினுக்குப் புரியவில்லை’’ என்றனர்.

பி.எம்.மன்னனிடம் பேசியபோது, ‘‘மீண்டும் கட்சிக்குள் அண்ணன் வரக் கூடாது என்று சிலர் சதி செய்கிறார்கள். இதற்குமேலும் பொறுக்க முடியாது. தி.மு.க-வில் உள்ள பலரும், அண்ணன் கட்சி பணியாற்ற வரவேண்டும் என விரும்புகிறார்கள். உண்மையான விசுவாசிகள் அனைவரும் அண்ணன் பக்கம்தான்” என்றார். மற்றொரு விசுவாசியான இசக்கிமுத்துவோ, ‘‘அண்ணன் விரைவில் சரியான முடிவை எடுப்பார். அதற்குமுன் பிரமாண்டப் பேரணி ஒன்றை சென்னையில் நடத்தவுள்ளோம். அப்போது தமிழ்நாட்டுகே அண்ணனின் பலம் தெரியும்’’ என்றார். தி.மு.க-வினரோ, ‘‘ஆகஸ்ட் 19-ம் தேதி மதுரையில் தி.மு.க சார்பில் நடத்தப்படும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்குக் கூடும் கூட்டம் அழகிரிக்கு பதில் சொல்லும்’’ என்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அழகிரி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று தி.மு.க-வினர் மட்டுமில்லாமல், அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி-யினரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

- செ.சல்மான்
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்