Published:Updated:

“ரஜினி மக்கள் மன்றத்தில் நடப்பது ரஜினிக்குத் தெரியுமா? - புலம்பும் ரசிகர்கள்

“ரஜினி மக்கள் மன்றத்தில் நடப்பது ரஜினிக்குத் தெரியுமா? - புலம்பும் ரசிகர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
“ரஜினி மக்கள் மன்றத்தில் நடப்பது ரஜினிக்குத் தெரியுமா? - புலம்பும் ரசிகர்கள்

“ரஜினி மக்கள் மன்றத்தில் நடப்பது ரஜினிக்குத் தெரியுமா? - புலம்பும் ரசிகர்கள்

ரசியலுக்கு வருவேன் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரஜினி அறிவித்தார். அதைத் தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றங்கள், ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றப்பட்டன. தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக ரஜினி மக்கள் மன்றத் தலைமையின் உத்தரவுப்படி, பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனமும் நடைபெற்றது. சில மாதங்களிலேயே பல இடங்களிலும் நிர்வாகிகள் மாற்றப்பட்டார்கள்.

இதைத் தொடர்ந்து, ‘‘ரஜினி மக்கள் மன்றத்தில் நடப்பது ரஜினிக்குத் தெரியுமா என்பதே புரியவில்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ரசிகர் மன்றத்துக்கு உழைத்த உண்மை விசுவாசிகள் பலரும் திடீரென ஓரங்கட்டப்படுகிறார்கள். தலைமை நிர்வாகிகள் என்கிற பெயரில் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கிறார்கள்’’  என்று பொங்கிப் புலம்ப ஆரம்பித்துள்ளனர் மாவட்ட நிர்வாகிகள் சிலர்.

“ரஜினி மக்கள் மன்றத்தில் நடப்பது ரஜினிக்குத் தெரியுமா? - புலம்பும் ரசிகர்கள்

இதுபற்றி நம்மிடம் பேசிய மாவட்ட நிர்வாகிகள் சிலர், ‘‘அரசியலுக்கு வரப்போகிறேன் என்று தலைவர் சொன்னதும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த உற்சாகத்தில் இருந்த எங்களை மாவட்டம்தோறும் நிர்வாகிகளாக நியமித்தனர். தேர்தலை எதிர்கொள்ள வசதியாக, பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்றார்கள். உடனே, களம் இறங்கினோம். உதாரணத்துக்கு ஒரு கிராமத்தில் இரண்டு வாக்குச்சாவடிகள் உள்ளன என்றால், நாங்கள் இரண்டு பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும். ஒரு பூத் கமிட்டிக்கு 30 பேர் வீதம் 60 உறுப்பினர்களை மன்றத்தில் இணைக்க வேண்டும். உறுப்பினர்களின் புகைப்படங்கள், வாக்காளர் அடையாள அட்டைகள் போன்றவற்றைச் சேகரித்து கமிட்டி அமைக்க வேண்டும். விண்ணப்பப் படிவம், புகைப்படம், ஸ்கேன் செய்வது, போக்குவரத்துச் செலவு என அனைத்தையும் நாங்கள்தான் செய்கிறோம். இதற்காகத் தலைமையிலிருந்து ஒரு பைசாகூட வழங்கவில்லை. இதனால், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் கடனாளியாகிவருகிறோம்.

கட்சியின் பெயரே என்னவென்று தெரியாது, என்னவிதமான அரசியல் செய்யப்போகிறோம் என்பதும் தெரியாது. இருந்தாலும், மக்கள் கேட்கும் கேள்விகளைச் சமாளித்து, ரஜினி பெயரைச் சொல்லிப் புது உறுப்பினர்களைச் சேர்க்கிறோம். இதற்கான அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; அவமானங்கள் கிடைப்பதுதான் வேதனை. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பொறுப்பாளர் என மன்றத்துக்குத் தொடர்பில்லாத வசதிபடைத்த ஒருவரை நியமனம் செய்துள்ளனர். அவர், அவ்வப்போது நடக்கும் மன்ற நிகழ்ச்சிகளில் பங்குகொள்வாரே தவிர, செலவுகளில் பங்குகொள்ள மாட்டார்.

தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு மிகவும் நெருக்கமானவரும் லைக்கா பட நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்தவருமான ராஜு மகாலிங்கம், ரஜினி மக்கள் மன்ற மாநிலச் செயலாளர் பதவிக்கு வந்திருக்கிறார். அதுபோல், அ.தி.மு.க-வில் மருத்துவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டாக்டர் இளவரசன், தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்புச் செயலாளராகவும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராகவும் பதவிக்கு வந்திருக்கிறார். இவர்கள் வந்தபிறகு, ரஜினியின் நீண்டநாள் விசுவாசிகளான எங்களுக்குக் கஷ்டகாலம் ஆரம்பித்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ரஜினி மக்கள் மன்றத்தில் நடப்பது ரஜினிக்குத் தெரியுமா? - புலம்பும் ரசிகர்கள்

உதாரணத்துக்கு, ரயில்வே துறையில் மாதம் லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் புதுக்கோட்டை குணசேகரன். 38 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் பணியாற்றியவர். ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் பதவிக்காக, வேலையை உதறிவிட்டு வந்தவர். திடீரென அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மன்றத்துக்குத் தொடர்பில்லாத முருகுபாண்டியனை நியமித்துள்ளனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த ரஜினி மன்றத் தலைவர் இப்ராஹிம். இவரது வீடு, பா.ம.க  உடனான பிரச்னையால் ‘பாபா’ பட வெளியீட்டின்போது தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அப்போது லதா ரஜினிகாந்த், ‘உங்களுக்குப் பணம் தருகிறோம். வீடு கட்டிக்கொள்ளுங்கள்’ என்றார். ‘பணம் வேண்டாம்மா. உங்கள் அன்பு ஒன்றேபோதும்’ என்று கூறியவர் இப்ராஹிம். அவரே சொந்தச் செலவில் செங்கல் சூளை போட்டு ஒவ்வொரு கல்லிலும் ரஜினி பெயரைப் பொறித்து வீடு கட்டினார். அதைக் கேள்விப்பட்ட ரஜினி, ‘ஏன் உங்கள் தந்தையின் பெயரைப் போடவேண்டியதுதானே?’ என்று கேட்க, ‘எனக்கு அம்மா, அப்பா, தெய்வம் எல்லாம் நீங்கள்தான் தலைவரே’ என்று அவர் சொன்னார். அப்படிப்பட்டவரை மாற்றிவிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகத்தின் டிரைவராக இருந்த திண்டிவனம் எத்திராஜ் என்பவரை நியமித்துள்ளார்கள்.

33 வருடங்களாக உழைத்த தேனி மாவட்டச் செயலாளர் ஜெய புஷ்பராஜை எந்தக் காரணமும் கூறாமல் நீக்கிவிட்டார்கள். ‘கொலையாளிக்குக்கூட விசாரித்துதான் தண்டனை கொடுப்பார்கள். ஆனால், என்னிடம் எதுவுமே கேட்காமல் நீக்கிவிட்டார்களே?’ என்று வருத்தப்படுகிறார் ஜெய புஷ்பராஜ்.

இப்படி திண்டுக்கல் தம்புராஜ், கடலூர் பெரியசாமி, விருத்தாசலம் பாஸ்கர் என்று பலர் நீக்கப்பட்டு, முற்றிலும் புதிய நபர்கள் மன்றப் பதவிகளில் கொண்டுவரப்படுகிறார்கள். தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், தலைவருக்காக உயிரைக் கொடுக்ககத் தயாராக இருக்கும் நல்லவர்கள் தண்டிக்கப்படக் கூடாது.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் ரஜினி மன்ற பூத் கமிட்டிகள் விரைவாக அமைக்கப்படுகின்றன என்ற விஷயத்தை தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளிடம் ராஜு மகாலிங்கம் கூறியிருக்கிறார். அந்த மாவட்டங்களில் எல்லாம் இப்போது தி.மு.க-வினர் 15 உறுப்பினர்களைக் கொண்ட பூத் கமிட்டிகளை அமைக்கின்றனர். இந்த விஷயம் ரஜினிக்குத் தெரிந்து அதிர்ந்துபோய் அவரை ஓரங்கட்டியுள்ளார். நாங்கள் ரஜினியின் பெயரை மட்டும் சொல்லி, கையெடுத்துக் கும்பிட்டு, காலில் விழுந்து உறுப்பினர்களைச் சேர்த்து பூத் கமிட்டி அமைக்கிறோம். ஆனால், டி.டி.வி.தினகரன் தரப்பினர் அவர்களுக்குப் பணம் கொடுத்து இழுத்துவருகின்றனர். தி.மு.க-வினரும் களத்தில் இறங்கிவிட்டனர். இந்த நேரத்தில், மன்றத்தில் நிகழும் பிரச்னைகளால், நாங்கள் அமைத்த பூத் கமிட்டிகளே இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது’’ என்றனர் வேதனையுடன். 

“ரஜினி மக்கள் மன்றத்தில் நடப்பது ரஜினிக்குத் தெரியுமா? - புலம்பும் ரசிகர்கள்

ராஜு மகாலிங்கத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘என்மீதான புகார்களில் உண்மையில்லை. என்னை ஓரங்கட்டவும் இல்லை; நீக்கவும் இல்லை. இப்போதுகூட தலைவர் என் தோள்மீது கைபோட்டுப் பேசினார். டி.ஆர்.பாலுவுடனான தொழில்நட்பு என்பது பழைய விஷயம். அதைப்பற்றி இப்போது பேசத் தேவையில்லை. அதெல்லாம் தலைவருக்கும் தெரியும்’’ என்று முடித்துக்கொண்டார்.

டாக்டர் இளவரசனைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அதேசமயம், அடுத்த சில மணி நேரத்திலேயே, ‘ரஜினி மக்கள் மன்ற நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன’ என்று இளவரசனின் உதவியாளர் அருண் மூலம் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்றம் தொடர்பாக இப்படிக் கிளம்பிக்கிடக்கும் செய்திகள் குறித்து மன்றத்தின் மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். தன் பெயரை வெளிப்படுத்த விரும்பாதவராகப் பேசிய அவர், ‘‘நீக்கப்பட்டவர்கள் பலரும் தங்கள் மாவட்டத்தில் பூத் கமிட்டிகளை சரியாக அமைக்காமலே, தவறான கணக்கு காண்பித்தார்கள். சிலர் பணம் வாங்கிக்கொண்டு மன்றப் பொறுப்பாளர்களை நியமனம் செய்தார்கள். கட்சி ஆரம்பிக்கும் முன்பாகவே தவறான பாதையில் போகும் இவர்களை வைத்துக்கொண்டு தூய்மையான அரசியல் செய்ய முடியாது என ரஜினி நினைக்கிறார். அதனால்தான், அனைத்தையும் கண்காணிப்பதற்காகத் தனி ஏற்பாடுகளை அவர் செய்துவைத்துள்ளார். அதனடிப்படையில் அவருக்குக் கிடைக்கும் ஆதாரப்பூர்வமான தகவல்களைக் கொண்டுதான் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். நீண்டகால விசுவாசிகளாக இருந்தாலும், அவர்களை நீக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார் தலைவர்’’ என்று சொன்னார்.

ஒரு கட்சியும் வேணாம்... கொடியும் வேணாம் என்று சொன்ன ரஜினி, கட்சி ஆரம்பிக்கும் முனைப்பில் இருக்கிறார். அதற்கு முன்னதாகவே, கோஷ்டிகள் முளைக்க ஆரம்பித்துவிட்டதுதான் கொடுமை. இதெல்லாம் ரஜனிக்குத் தெரியுமா, தெரியாதா என்பதை அவரேதான் சொல்ல வேண்டும்.

- மு.இராகவன்
படம்: சு.குமரேசன்