Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொடா போட்ட ஜெ... விருது தந்த எடப்பாடி!

ஜெ
யலலிதா ஆட்சியில் பொடா சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுப் பழிவாங்கப்பட்டவரின் மகனுக்கு, அதே ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்யும் எடப்பாடி அரசு, மனிதநேய விருது வழங்கி கௌரவம் செய்திருப்பதை அனைவரும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

2002 ஜூன் 22-ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ம.தி.மு.க பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக வழக்கு பதிவுசெய்து, வைகோ உட்பட ஒன்பது பேரை பொடா சட்டத்தில் சிறையில் அடைத்தது ஜெயலலிதா அரசு. ம.தி.மு.க-வின் திருமங்கலம் நகரச் செயலாளராக இருந்த நாகராஜனும் இவர்களில் ஒருவர். திருமங்கலம் மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட அரசியல்வாதியான நாகராஜன், இந்த வழக்கில் சிறைக்குச் சென்றதை அப்பகுதி மக்கள் மிகவும் கவலையுடன் பார்த்தனர். அந்த வழக்கில் நீண்ட நாட்கள் சிறையில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார்கள். பின்பு, பொடா சட்டமே காங்கிரஸ் அரசால் திரும்பப் பெறப்பட்டது. நாகராஜன் இப்போது தி.மு.க-வில் இருக்கிறார்.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், முதல்வர் எடப்பாடி கையால் விருது பெற்றவர்களில், பொடா நாகராஜனின் மகன் கவாஸ்கரும் ஒருவர். திருமங்கலத்தில் இவர் நடத்தும் ஏற்றுமதி நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. திருமங்கலம் மக்கள், ‘‘ தந்தைக்கு பொடாவைப் பரிசாகக் கொடுத்தார் ஜெயலலிதா. அதற்கு பிராயசித்தம் செய்ததுபோல் நாகராஜன் மகனுக்கு விருது கொடுத்துக் கௌரவித்துள்ளார், ஜெ. வழியில் ஆட்சி செய்யும் எடப்பாடி’’ என்கிறார்கள். நாகராஜனிடம் பேசினோம், ‘‘பழைய சம்பவத்தைப் பற்றிப் பேச ஒன்றுமில்லை. என் மகன் ஏற்றுமதி நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்து நிறையச் சேவை செய்துவருகிறார். அதைப் பாராட்டி விருது கொடுத்துள்ளார்கள். இதுபோன்ற பாராட்டுகள் இன்னும் ஊக்கப்படுத்தும்’’ என்றார் அடக்கமாக.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பேரவையில் பறிபோன பல கோடி!

‘‘க
ட்சியிலேயே நான்கு கோடி ரூபாய்தான் நிதி இருக்கிறது. அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறதா?’’ என்று ஜெயலலிதாவே ஒருமுறை ஆச்சர்யப்பட்டார். அந்த அளவுக்கு, அ.தி.மு.க-வின் தொழிற்சங்க அமைப்பில் பணம் கொழித்தது. இந்த அமைப்பின் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான சின்னசாமி, பல கோடி ரூபாய் கையாடல் செய்துவிட்டதாக எழுந்த புகாரில் இப்போது கைதாகியுள்ளார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

ஜெயலலிதாவால் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் சின்னசாமி. ஜெ. மறைவுக்குப் பின், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பிரச்னை வெடித்த சமயத்தில், பேரவையின் வங்கிக்கணக்கிலிருந்து அவ்வப்போது லட்சங்களில் பணத்தை எடுத்திருக்கிறார் சின்னசாமி. ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் பஞ்சாயத்து சுமுகமாக முடிந்தபோது, சின்னசாமி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ‘ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட தன்னை எடப்பாடியும் பன்னீரும் நீக்க முடியாது’ என வழக்கு போட்ட சின்னசாமி, அப்படியே டி.டி.வி.தினகரன் பக்கம் சென்றுவிட்டார். அங்கு அவருக்குத் தொழிற்சங்கப் பதவி தரப்பட்டது. மாநிலம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்களில் அ.ம.மு.க சார்பில் தொழிற்சங்கக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சிகளில் தீவிரம் காட்டினார் சின்னசாமி. இப்படியே விட்டால் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் தங்களின் பலம் குறைந்துவிடும் என உஷாரான ஆளும்கட்சியினர், சின்னசாமிமீது கையாடல் புகார் கொடுத்துள்ளனர்.

அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தாடி ம.ராசு, ‘‘பேரவையின் வங்கிக்கணக்கை பொருளாளரும் செயலாளரும் கூட்டுக்கணக்கின் அடிப்படையில் பராமரித்தனர். நிர்வாகக் குழுவின் அனுமதி பெறாமல், சின்னசாமி தன்னிச்சையாக கோடிக்கணக்கில் பணம் எடுத்துள்ளார். கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது’’ என்றார். பணம் எடுப்பதற்கு பேரவைப் பொருளாளர் அப்துல் ஹமீதுவும் கையெழுத்துப் போட்டிருக்கிறார் என்றாலும், அவர்மீது அமைப்புரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பால்குட சர்ச்சையால் பற்றி எரியும் கோஷ்டிப் பூசல்!

கா
ஞ்சிபுரம் நகர தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள கோஷ்டிப் பூசல் காரணமாக, தி.மு.க நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதை தி.மு.க-வினரே கொண்டாடுவது, காஞ்சிபுரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

பொலிட்டிகல் பொடிமாஸ்!

இதுகுறித்து காஞ்சிபுரம் தி.மு.க நிர்வாகி ஒருவர், ‘‘காஞ்சிபுரம் பட்டுத் தொழிலதிபர் பாபு ஷாவின் மகன் மகேஷ் ஷா. சமீபத்தில்தான் தி.மு.க-வில் இணைந்தார். மருத்துவமனையில் கருணாநிதி சேர்க்கப்பட்டபோது, அவர் உடல்நலம் பெறவேண்டி காமாட்சி அம்மனுக்கு இவர் ஏற்பாட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்துகொண்டு பால்குடம் எடுத்தனர். நகர தி.மு.க நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை, தனது முகநூலில் பதிந்தார் மகேஷ் ஷா.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

இதை விமர்சித்து பி.எம்.குமார் என்பவர் கமென்ட் போட்டார். அதைத் தொடர்ந்து இருவருக்கு மிடையே போனில் வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து பி.எம்.குமார் வீட்டுக்குப் போய் மகேஷ் ஷா ஆதரவாளர்கள் மிரட்டினார்கள். அதைத் தொடர்ந்து, போலீஸில் பி.எம்.குமார் புகார் கொடுத்தார். இருதரப்பினரையும் அழைத்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் சமரசம் செய்வார் என தி.மு.க-வினர் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் பி.எம்.குமார் கொடுத்த புகார் அடிப்படையில், காஞ்சிபுரம் தி.மு.க நகர இளைஞரணி செயலாளர் ரவிக்குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மகேஷ் ஷா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தலைமறைவாகிவிட்டனர். ரவிக்குமார் கைது செய்யப்பட்டதை வரவேற்று, காஞ்சிபுரம் தி.மு.க-வினர் சிலர் வாட்ஸ்அப் குழுவில் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். தி.மு.க பிரமுகர் கைது செய்யப்பட்டதை தி.மு.க-வினரே கொண்டாடும் அளவுக்கு காஞ்சிபுரத்தில் கோஷ்டிப் பூசல் அதிகரித்துவிட்டது’’ என்றார் வேதனையாக.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தரிடம் கேட்டோம். ‘‘மகேஷ் ஷாவின் ஆட்கள் பத்து பேர் தனது வீட்டிற்கு வந்து தகறாறு செய்ததாக பி.எம்.குமார் என்னிடம் சொன்னார். நான் உடனடியாக போலீஸில் புகார் கொடுக்கச் சொன்னேன். யார் செய்தது தவறு என்று விசாரணையில் தெரியவரும்’’ என்றார்.

அழகிரி பிரச்னை தி.மு.க தலைமைக்குச் சவாலாக இருந்து கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இதுவேறு!

- செ.சல்மான், பா.ஜெயவேல், இரா.தமிழ்க்கனல்