Published:Updated:

சிக்குவாரா முன்னாள் அமைச்சர் பழனியப்பன்? - மறுமதிப்பீடு மங்காத்தா

சிக்குவாரா முன்னாள் அமைச்சர் பழனியப்பன்? - மறுமதிப்பீடு மங்காத்தா
பிரீமியம் ஸ்டோரி
News
சிக்குவாரா முன்னாள் அமைச்சர் பழனியப்பன்? - மறுமதிப்பீடு மங்காத்தா

சிக்குவாரா முன்னாள் அமைச்சர் பழனியப்பன்? - மறுமதிப்பீடு மங்காத்தா

ண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு முறைகேட்டில் தினந்தோறும் புதிது புதிதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள பலரும், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனின் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். எனவே, இந்த விவகாரத்தில் பழனியப்பனும் விரைவில் சிக்கக்கூடும் என்று தகவல்கள் பரபரக்கின்றன.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் விசாரணை வளையத்துக்குள் இருக்கும் முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் மற்றும் சிலரின் முறைகேடுகள் குறித்து துணைவேந்தர் சூரப்பாவுக்கு புகார்கள் குவிந்தன. அதையடுத்து, உயர்மட்டக் குழு அமைத்து அவர் ரகசிய விசாரணை நடத்தினார். அதில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்த மோசடிகள் ஆதாரபூர்வமாகப் பிடிபட்டன. இந்த நிலையில், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவுசெய்து அதிரடியாக உள்ளே புகுந்தனர். முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

சிக்குவாரா முன்னாள் அமைச்சர் பழனியப்பன்? - மறுமதிப்பீடு மங்காத்தா

அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள உமாவின் அலுவலகம் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் ஆகியவற்றில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் ரெய்டு நடத்தினர். அப்போது, யார் யாருக்கு எவ்வளவு மார்க் போட்டார்கள் என்ற விவரம் அடங்கிய உத்தேசப் பட்டியலை உமாவின் வீட்டில் போலீஸார் கைப்பற்றினர். தேர்வில் 24 மதிப்பெண் எடுத்த மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவு மாணவருக்கு, மறுமதிப்பீட்டில் 94 மதிப்பெண் தரப்பட்டி ருந்தது. பல்கலைக்கழகத்தில் இன்ஃபர்மேஷன் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி துறையில் உள்ள உமாவின் அறையில், எழுதப்படாத விடைத்தாள்கள் பல சிக்கியுள்ளன. தேர்வு எழுதிய மாணவர்களின் ஒரிஜினல் விடைத்தாள் களையும் போலீஸார் அங்கு கைப்பற்றியுள்ளனர்.

தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகள், முறையாக காப்பி செய்து சேமிக்கப்படவில்லை. முக்கியமான சில இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் வேலையே செய்யவில்லை. ஓர் ஆண்டு வரை பாதுகாப்பாக வைக்க வேண்டிய விடைத்தாள்களை, உடனுக்குடன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இவற்றையெல்லாம் விசாரணையில் அறிந்துகொண்ட போலீஸார், அதிர்ச்சியின் உச்சிக்கே போயிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிக்குவாரா முன்னாள் அமைச்சர் பழனியப்பன்? - மறுமதிப்பீடு மங்காத்தா

2017-ம் ஆண்டு மறுமதிப்பீட்டில் மோசடி செய்யப்பட்ட 63 விடைத்தாள்கள் போலீஸிடம் சிக்கியுள்ளன. மறுமதிப்பீட்டுக்குச் சென்ற ஆசிரியர்கள் சிலர், இந்த மோசடி எப்படியெல்லாம் நடந்தன என்று ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதுபற்றி அந்த ஆசிரியர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘தேர்வு எழுதும் கல்லூரிகளில் ஒவ்வொரு பரீட்சையும் முடிந்தவுடன், அன்றைய தினமே மண்டல அலுவலகங்களுக்கு விடைத்தாளை அனுப்ப வேண்டும். ஆனால், மறுநாள்தான் அனுப்புவார்கள். அதற்குள், அங்குவைத்து விடை எழுதிவிடுவார்கள். அங்கு தில்லுமுல்லு செய்ய முடியவில்லை யென்றால், விடைத்தாள் திருத்தும் இடத்தில் மோசடிகள் அரங்கேற்றப்படும். அதிலும், நேர்மையான ஆசிரியர்களிடம் அந்த பேப்பர் போய்விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அதையும் தாண்டி, மறுமதிப்பீடு என்ற இடத்தில் தான் மெகா மோசடி நடக்கும். இதற்காகவே, தமிழகம் முழுவதும் விடைத்தாள் திருத்தப்படும் 23 மண்டலங்களில் நடந்த விடைத்தாள் மறுமதிப்பீட்டை, திண்டிவனம் மண்டலத்துக்கு உமா மாற்றினார். யார் யாருக்கெல்லாம் மார்க் போட வேண்டுமோ, அதுபற்றிய விவரங்களைச் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் முன்கூட்டியே கொடுத்து விடுவார்கள். விடைத்தாள்களைத் திருத்தும் பணிக்கு யார் யாரைப் போட வேண்டும் என்பதையும் முன்கூட்டியே முடிவுசெய்வார்கள். எனவே, இந்த மறுமதிப்பீடு முறைகேடு கச்சிதமாக முடிக்கப்படும்.

விடைத்தாளில் மார்க் போட முடியாத அளவுக்கு இருந்தால், சில ஆசிரியர்கள் தாங்களே விடையை எழுதி மார்க் போடுவார்கள். மேலும் செய்ய வேண்டிய தில்லுமுல்லுகளுக்கு கம்ப்யூட்டரில் மார்க் பதிவுசெய்யும் இடத்தில் வேலையைக் காட்டுவார்கள். கம்ப்யூட்டர்களில் மார்க் பதிவேற்றம் செய்யும் இடத்தில் பெரும்பாலான ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள்தான். அவர்களில் குறிப்பிட்ட சிலரைக் கைக்குள் போட்டுக்கொண்டு, இந்த மோசடிகள் நடைபெறும். இந்தக் கம்யூட்டர்களின் பாஸ்வேர்டு, கம்ப்யூட்டர் செக்‌ஷனில் பணிபுரியும் ஊழியர்களைத்தாண்டி உமாவுக்கும் தெரியும். இந்த முறைகேடுகளுக்கு உமா மட்டும் பொறுப்பு என இப்போது கைகாட்டுகிறார்கள். அதில் உண்மை இல்லை. பிரச்னை வெடித்ததும், சிலர் நல்லவர் வேஷம் போடுகிறார்கள். துணைவேந்தராக ராஜாராம் இருந்த காலத்தில் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கௌரவத்தை மீட்டெடுக்க வேண்டும். முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.

சிக்குவாரா முன்னாள் அமைச்சர் பழனியப்பன்? - மறுமதிப்பீடு மங்காத்தா

‘‘முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் ஏற்கெனவே, சோதனை நடத்தி நான்கு கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். ஆம்னி பஸ் தொழிலில் அவர் செய்த முதலீடுகளைக் கண்டுபிடித்தனர். அந்த வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது. ராஜாராம் காலத்தில்தான், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக உமா நியமிக்கப்பட்டார். உயர்கல்வித் துறை அமைச்சராக பழனியப்பன் இருந்தபோதுதான், ராஜாராம் துணைவேந்தர் ஆனார். இதில் சங்கிலித் தொடர்போல பல விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் விசாரிக்கும்போது, பல மர்மங்கள் வெளிவரும்’’ என்கிறார்கள் உயர்கல்வித் துறை அதிகாரிகள்.

உமா வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தியபோது, அவர் ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருப்பதற்கு ஆதாரமாக உறுப்பினர் அட்டையை எடுத்துள்ளனர். அவரின் கணவரும் அந்தக் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அந்தக் கட்சியிலிருந்து உமாவுக்கு ஆதரவுக் குரல் எழுப்பவில்லை. ஆனால், வேறு ஒரு கட்சியிலிருந்து விசாரணை அதிகாரிகள் சிலருக்கு மிரட்டல் போயிருக்கிறது.

இந்த விவகாரத்தில் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

- எஸ்.முத்துகிருஷ்ணன்