Published:Updated:

சிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி?

சிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி?
பிரீமியம் ஸ்டோரி
News
சிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி?

சர்ச்சையைக் கிளப்பிய அரசு விளம்பரம்

டப்பாடியின் ஆட்சி பற்றி பக்கம் பக்கமாகப் புகார்கள் வாசிக்கப்பட்டாலும் அதில் முக்கியமான புகார், நாளுக்கு நாள் நலிவடைந்துவரும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பற்றியதுதான்.

‘‘எடப்பாடி ஆட்சியில் மட்டுமல்ல, ஜெயலலிதா ஆட்சியிலேயே அந்நிய முதலீடுகளும் புதுத் தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டுக்கு வருவது பெரிதும் குறைந்துவிட்டது’’ என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், தொழில்துறை தொடர்பாக இரண்டு ஆய்வறிக்கைகள் வெளியாகின. அவற்றை மையமாக வைத்து, ‘எடப்பாடி பழனிசாமியின் ஆளுமைமிகுந்த ஆட்சி’ எனப் பத்திரிகைகளில் விளம்பரங்களும் வெளியாகின. இதைத் தொழில் துறையினர் உறுதிசெய்தாலும், இது சமூக ஆர்வலர்களின் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது.

சிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி?

முதலில் அந்த அறிக்கைகளின் சாராம்சத்தைப் பார்த்துவிடலாம். பெங்களூரைச் சேர்ந்த பொது விவகாரங்கள் மையம் (Public Affairs Centre -PAC) என்ற அமைப்பு, சமூக-பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் மாநில அரசுகளின் தர மதிப்பீட்டைக் 2016-ம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த ஆண்டுக்கான அறிக்கை அண்மையில் வெளியானது. அதில், இந்திய அளவில் சிறந்த ஆளுமைக்கான தரவரிசையில் தமிழக அரசு இரண்டாவது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதற்கு ஒரு வாரம் முன்னதாக, பயன்பாடு மற்றும் பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சிலின் சிந்தனைக்குழு (Think-tank National Council for Applied and Economic Research-NCAER) வெளியிட்ட ஆய்வறிக்கை, தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருப்பதாக அறிவித்தது. 

பொது விவகாரங்கள் மையம், ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட விஷயங்களை முதலில் பார்த்துவிடுவோம். பொருளாதாரச் சுதந்திரம், நிதி நிர்வாகம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வு, சுற்றுச்சூழல், நீதி வழங்குதல், அடிப்படை உள்கட்டமைப்பு, மனித மேம்பாட்டுக்கான ஆதரவு, சமூகப் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு என 10 விஷயங்களின்கீழ், 25 வகையான அம்சங் களில் மாநில அரசுகளின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 30 மாநில அரசுகளின் செயல்பாடுகளை ஆய்வுசெய்து, இதில் ஒட்டுமொத்த வரிசையில் கேரளா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி?

‘‘பொது விவகாரங்கள் மையம், பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்பு. அந்த அமைப்பு வெளியிட்ட தர மதிப்பீட்டு அறிக்கையில், தனக்குச் சாதகமாக உள்ள சில அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு விளம்பரம் வெளியிட்டு, தாங்கள் ஏதோ சிறப்பாக ஆட்சி செய்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற முயற்சி மேற்கொள்கிறது எடப்பாடி அரசு. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 10 விஷயங்களில் சுற்றுச்சூழல், குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய இரண்டில் மட்டுமே தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நிதி மேலாண்மையில் 18-வது இடம்தான். வெளிப்படையான, பொறுப்பு உணர்வுள்ள அரசு நிர்வாகத்தில் (Transparency, Accountability) 17-வது இடம்தான். சிறு - குறு தொழில் வளர்ச்சியில் (Economic Freedom) 12-வது இடம், சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் 9-வது இடம்  எனப்பல அம்சங்களில் தமிழக அரசு பின்தங்கியுள்ளது. இவற்றையும் விளம்பரத்தில் வெளியிட வேண்டியதுதானே” எனக் கேட்கிறார், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம். ‘‘அறிக்கையின் முழுவிவரங்களையும் வெளியிடாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சில விவரங்களை மட்டும் வெளியிடுவது மக்களை ஏமாற்றும் செயல். இப்படி விளம்பரங்கள் கொடுப்பதில் காட்டும் அக்கறையை, பின்தங்கியுள்ள துறைகளை முன்னேற்றுவதிலும் காட்டலாம்’’ எனக் கொதிக்கிறார் அவர்.

ஆனால், இந்த அறிக்கை தந்திருக்கும் தரத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன். ‘‘சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டில் தமிழக அரசு இரண்டாம் இடத்தில் இருப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது. எண்ணூர் துறைமுகம், கடலூர் சிப்காட் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் என இதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். தமிழகத்தில் காற்று மாசு மிக மோசமாக உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் தெரிவித்துள்ளது. நிலத்தடி நீரும் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளது. இந்த விளம்பரம் முழுப் பொய்’’ என்கிறார் அவர். 

சிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி?

‘‘குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் தமிழகக் காவல்துறை எப்படிச் செயல்படுகிறது என்பதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய நாளில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்பட்ட குளறுபடிகள் ஒன்றே உதாரணம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஏன் சரியாகப் பாதுகாப்பு வழங்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், காவல்துறை எந்த வகையில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தினம் தினம் செயின் பறிப்புச் சம்பவங்கள் தொடர்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் மூன்று தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர். யாராவது வெளிப்படையாகக் கருத்து சொன்னால், அவர்கள் கைது செய்யப்படும் சூழல்தான் தமிழகத்தில் நிலவுகிறது. கூடவே தேசத்துரோகச் சட்டமும் பாய்கிறது. இதற்கு நேரடி சாட்சி திருமுருகன் காந்தி. இப்படியான சூழலில், அரசின் இந்த விளம்பரம் ஏற்கக்கூடியதல்ல. இது வேடிக்கையான, வெட்கக்கேடான விளம்பரம்’’ என்று கடுமையாகச் சாடியுள்ளார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் முத்தரசன்.

சிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி?

இப்படி, சமூக ஆர்வலர்கள் இந்த அறிக்கைகளைப் புறந்தள்ளும் அதே சமயம், தொழில்துறையில் உள்ளவர்கள் அறிக்கைகளின் சாராம்சத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். குறிப்பாக, பயன்பாடு மற்றும் பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சிலின் சிந்தனைக்குழு (Think-tank National Council for Applied and Economic Research -NCAER) தந்திருக்கும் அறிக்கையை அவர்கள் வரவேற்கிறார்கள். தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 21 பெரிய மாநிலங்களில் முதலீட்டுக்கான சாத்தியக் கூறுகள் பற்றிய இந்த ஆண்டுக்கான ஆய்வை இந்த அமைப்பு சமீபத்தில் நடத்தியது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் தொடங்குவதற்கு எந்தவிதமான கட்டமைப்புகள் உள்ளன, தொழில் முனைவோர் எளிதில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் என்னென்ன உள்ளன என்பவை போன்ற ஆறு அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், டெல்லி முதலிடத்திலும், தமிழ்நாடு 2–வது இடத்திலும், குஜராத் 3-வது இடத்திலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி?

‘கடந்த ஆண்டு ஆறாவது இடத்திலிருந்த தமிழ்நாடு இப்போது 2–வது இடத்திற்கு வந்திருக்கிறது. சட்டம் – ஒழுங்கு பராமரிப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மனித வளம், தங்குதடையற்ற மின்சாரம் போன்றவற்றில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. அரசு நிர்வாகம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையில் கடந்த ஆண்டு 5–வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது முதலிடத்தில் இருக்கிறது’ என்கிறது இந்த அறிக்கை. ‘‘இரண்டாவது முறையாக சுதந்திர தினத்தில் தேசியக்கொடியை ஏற்றியதில் மகிழ்கிறேன்’’ என எடப்பாடி பழனிசாமி பூரிப்புடன் சொல்லியுள்ள சூழலில், இதெல்லாம் உண்மைதானா என்று மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். 

- முகிலன்

‘‘தொழில் தொடங்க 30 நாட்களுக்குள் அனுமதி கிடைக்கிறது!’’

ந்தியத் தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் எம்.பொன்னுசாமி, ‘‘தமிழக அரசு சமீபகாலமாக தொழில்துறையில் அதிக அளவு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கடந்த அக்டோபரில் பெரு நிறுவனங்களுக்காக ஆன்லைன் சிங்கிள் விண்டோ (ஒற்றைச் சாளரமுறை) இணையதளத்தை அறிமுகப்படுத்தினர். இதன்மூலம் விண்ணப்பித்த 25 நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கான இணையதளமும் நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன்மூலம் வந்த 66 விண்ணப்பங்களில் 48 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு சராசரியாக 25 விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை 30 நாட்களுக்குள் பரிசீலித்து அனுமதிகளை வழங்கிவிடுகிறார்கள். ஸ்டெர்லைட் பிரச்னைக்குப் பிறகும், புதிய நிறுவனங்கள் தமிழகத்துக்கு வருவதற்குக் காரணம் இவைதான்.  

சிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி?

நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நிலங்களைப் பதிவுசெய்யவும் திறன் வாய்ந்த அதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள். ஆன்லைன் பத்திரப்பதிவு ஒரு சிறந்த ஏற்பாடு. வேளாண் பொருள்கள் சார்ந்த தொழில் நிறுவனங்கள், விசைத்தறி, ஜவுளித் தொழில் நிறுவனங்கள், எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள் தயாரிக்கும் குறுதொழில் நிறுவனங்கள் போன்றவற்றை ஊக்குவிப்பதிலும் அரசுத் தரப்பில் முனைப்பு காட்டப்படுகிறது. இந்த முயற்சிகளால் அடுத்த ஆண்டு தமிழகம் தொழில்துறையில் இன்னும் முன்னேறும்’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார்.  

கோவை மாவட்ட சிறு தொழிலதிபர்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் ராமமூர்த்தி, ‘‘சிறு மற்றும் குறு தொழில்களுக்கான சிங்கிள் விண்டோ முறை மிகவும் உதவிகரமாக இருக்கிறது. கொடிசியா சார்பில் அரசிடம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை அரசுத் தரப்பில் மிகவும் அக்கறையுடன் கேட்கிறார்கள். தற்போது கொடிசியா சார்பில் கோவையில் சுமார் 400 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். இதற்கு அரசு நல்ல ஒத்துழைப்பு தருகிறது. இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இது செயல்பாட்டுக்கு வந்துவிடும். இது அமைந்தால், சிறு, குறு தொழில் துறை இன்னும் முன்னேற்றம் அடையும்’’ என்கிறார்.