Published:Updated:

``எப்போதும் சிலை வேட்டைத் தொடரும்!'' - பொன்.மாணிக்கவேல் ! - #VikatanExclusive

பணியில் இருக்கும்போதே நான் இறந்திருந்தால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்குமே அப்படித்தான் ஆகியிருக்கும். உயர் நீதிமன்றம் இல்லை என்றால் இந்தத்துறையே இருந்திருக்குமா. போலீஸ்துறை இதில் செயல் இழந்துவிட்டதே.

``எப்போதும் சிலை வேட்டைத் தொடரும்!'' - பொன்.மாணிக்கவேல் ! - #VikatanExclusive
``எப்போதும் சிலை வேட்டைத் தொடரும்!'' - பொன்.மாணிக்கவேல் ! - #VikatanExclusive

சிலைக்கடத்தல் மற்றும் ரயில்வே துறையில் ஐ.ஜி-யாகப் பணியாற்றிவந்த பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுவதாக இருந்தார். இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு இவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து, ஓராண்டு பணிநீட்டிப்பு செய்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

1980-களில்தமிழகத்தில் சிலைகள் கடத்தல் அதிகரித்திருந்த நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதன் பிறகு வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் சிலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. அப்போதுதான், சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர், சிலைக் கடத்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான். தஞ்சாவூர் பெரியகோயிலில் இருந்து காணாமல்போன ராஜராஜன் சிலையை மீட்டுக்கொண்டுவந்தது பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் குழு. இதுபோலவே, கடந்த ஓராண்டு மட்டும் முப்பதுக்கும் அதிகமான சிலைகளை மீட்டிருக்கிறது இந்தக்குழு. மேலும், தீனதயாளன், சேகர் உள்ளிட்ட சிலைகளை விற்கும் புரோக்கர்களையும் கைது செய்தனர். மேலும், போலிச் சான்றிதழ்கள் மூலம் சிலைகளை வைத்திருந்ததாகக்கூறி அமித்திஸ்ட் உணவக உரிமையாளர் கிரண்ராவ் மற்றும் தொழிலதிபர் ரன்வீர்ஷா ஆகியோர் வீட்டில் இருந்து 300-க்கும் அதிகமான சிலைகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் மாதம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரித்து வந்த வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இந்த உத்தரவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என, யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெறவிருந்த நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, பொன்.மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நியமித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

இந்நிலையில், பொன்.மாணிக்கவேலை சில கேள்விகளோடு சந்தித்தோம்.


நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

``சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஊதியமே வழங்கவில்லை என்றாலும்கூட தொடர்ந்து பணி செய்யத் தயார். வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டெடுக்கவும், இங்குள்ள சிலை திருடர்களைப் பிடிக்கவும் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தது உயர் நீதிமன்றம்தான். உயர் நீதிமன்றம் மட்டும் இல்லையெனில் சிலைக்கடத்தல் பிரிவு இருந்திருக்காது. உயர் நீதிமன்றம் இல்லையென்றால் நான் இந்த வழக்கில் இருந்திருக்க மாட்டேன். 100 சதவிகிதம் சிலைகளை மீட்டெடுத்த பெருமை உயர் நீதிமன்றத்தையே சேரும்.’’ 

குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகளைக் கொண்டு, ஆயிரத்துக்கும் அதிகமான சிலைகளை மீட்டது எப்படிச் சாத்தியமானது?
 
``சிலைக் கடத்தல் குறித்து தகவல்கள் வந்தது, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். இவ்வளவு சிலைகளையும் மீட்க முடிந்தது கூட்டு முயற்சியால்தான். கடந்த 2014 முதல் என்னுடன் இருந்த குழுவே இனியும் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும்.’’

இனிவரும் நாள்களில், சிலைக் கடத்தல் குறித்த உங்களின் ஆய்வறிக்கையை யாரிடம் சமர்ப்பிப்பீர்கள்?

``நீதிமன்றத்திடம் தான்.’’

நீங்கள் விசாரித்து வரும் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளுள் சில, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. உங்களுக்கு பணிநீட்டிப்பு நீதிமன்றம் கொடுக்காமல் இருந்திருந்தால், அந்த வழக்குகள் என்னவாகியிருக்கும்?

``நான் என்னுடைய வேலையை மட்டுமே செய்கிறேன். பணியில் இருக்கும்போதே நான் இறந்திருந்தால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்குமே அப்படித்தான் ஆகியிருக்கும். உயர் நீதிமன்றம் இல்லை என்றால் இந்தத்துறையே இருந்திருக்குமா. போலீஸ்துறை இதில் செயல் இழந்துவிட்டதே.’’

ஒட்டுமொத்தமாக போலீஸ்துறை செயல் இழந்ததாகக் கூற முடியாதே?

``ஆயிரத்துக்கும் அதிகமான சிலையை மீட்டுக் கொண்டு வந்தபோதும், அறநிலையத்துறையில் முக்கிய அதிகாரிகளைக் கைது செய்தபோது என்னை வேறு இடத்துக்கு மாற்றியிருக்க மாட்டார்களா. நீதிமன்றத்தின் ஒத்துழைப்பு எனக்கு இருந்ததால்தான் என்னால் இவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடிந்தது. எனக்குக் கிடைத்ததுபோல், எல்லா அதிகாரிகளுக்கும் நீதிமன்ற ஒத்துழைப்புக் கிடைத்தால், அவர்களும் சிறப்பாகச் செயல்படுவார்கள்.’’

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு மீது திருப்தி இல்லை என்று அரசு சொன்னது குறித்து..?

``அரசு சொல்லவில்லை. சில அரசு அதிகாரிகளைக் காப்பாற்ற சில அரசு அதிகாரிகளே அரசை இப்படிச் சொல்ல வைத்தனர். ஆனால், நான் என்னுடைய வேலையை சிறப்பாகச் செய்துகொண்டுதான் இருப்பேன்.’’

கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சிலை மாற்றப்பட்ட வழக்கில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் தவிர மற்றவர்களுக்கு மட்டும் ஏன் ஜாமின் கொடுக்கப்பட்டது?

``திருமகளுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதுதான் காரணம். திருமகளை போலீஸ் நெருங்குமா என்றால்... நிச்சயமாக நெருங்கும்.’’

அடுத்த ஓர் ஆண்டு உங்கள் செயல்பாடு எப்படி இருக்கும்?

``இனி ரயில்வே பணி இல்லை. இனி வரும் ஓராண்டில், சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பேன். தொடர்ந்து சிலைகள் கடத்தப்படாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்படும். இப்போதுபோல் எப்போதும் சிலைக் கடத்தியவர்களைப் பிடிக்க என் வேட்டைத் தொடரும்.’’