Published:Updated:

ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - கொந்தளிக்கும் திருமங்கலம் வட்ட விவசாயிகள்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு விவசாய நிலங்களை கையக்கப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள், இது தொடர்பாக மதுரை கலெக்டர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். 

திருமங்கலம் வட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டல் அமைப்பதற்காக (சிப்காட் தொழிற்பேட்டை) 1478.71 ஏக்கர் விவசாய நிலத்தை கையப்படுத்தப் போவதாக கடந்த 2008ல் அறிவித்தது அப்போதைய தி.மு.க. அரசு. அதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த விளைநிலங்களை விட்டால், நாங்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று சிவரக்கோட்டை, கரிசக்காளன்பட்டி, சுவாமிமல்லம்பட்டி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து அப்போதைய கலெக்டர் அந்த இடங்களை ஆய்வு செய்து, அவை எல்லாம் தரிசு நிலங்கள் தான் என்று அறிக்கை கொடுத்தார். ஆனாலும், விவசாயிகளின் போராட்டம் நின்றபாடில்லை. இந்தப் பிரச்னையை டெல்லி வரைக்கும் கொண்டு சென்றார்கள் விவசாயிகள். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிவரக்கோட்டைக்கே வந்து போராடினார் சமூக சேவகர் மேதா பட்கர்.

இந்த நிலையில், விவசாயிகளை சமரசப்படுத்தி, நில ஆர்ஜிதம் செய்தவதற்கான கூட்டம் இன்று காலையில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் வழக்கம் போல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு பிரிவு விவசாயிகள் இடத்தைக் கொடுக்க சம்மதித்தபோது, மற்றொரு பிரிவு விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்.

இது பற்றி விவசாய சங்க நிர்வாகி ராமலிங்கம் கூறியபோது, "தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் பற்றி கடந்த ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு போனோம். திருமங்கலம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டத்தை கைவிடச் செய்வோம்' என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார். ஆட்சி மாறிய பிறகு, இந்தத் தொகுதியில் ஜெயிச்ச அவங்க கட்சி எம்.எல்.ஏ.வான முத்துராமலிங்கம் இந்த கோரிக்கையை சட்டசபையில் வலியுறுத்தினாரு. விவசாய நிலங்கள் பறிக்கப்படாது என்று 11.8.2011 தேதி சட்டசபையில் உறுதிமொழி கொடுத்தார் தொழிற்துறை அமைச்சர் வேலுமணி.
 
ஆனால், அதற்குப் பிறகும், நிலம் எடுக்கப்போறதா வீட்டுக்கு வீடு சிப்காட் தாசில்தார் தபால் போடுகிறார். இன்றைய கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும், அவை எல்லாம் தரிசு நிலங்கள் தான் என்று சொல்கிறார். அதற்கு ஒரு சென்ட், ரெண்டு சென்ட் வைத்திருக்கிற, விவசாயத்தில் ஆர்வமில்லாத விவசாயிகளும் ஆமாம் போடுகிறார்கள். இதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம். இந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்றார்.

கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து