Published:Updated:

'பா.ம.க, தே.மு.தி.க., ஏன் வேண்டாம் என்கிறேன் தெரியுமா!?' - ஆ.ராசாவுக்கு ஸ்டாலின் அட்வைஸ் 

இந்த முறை 25 தொகுதிகளுக்கு மேல் நாம் வெற்றி பெறுவோம். பலமுனை போட்டி நடப்பதால் நமக்குத்தான் வெற்றி கிடைக்கும். அதன்மூலமாக அகில இந்திய அளவில் செல்வாக்குடைய கட்சியாக நாம் மாறுவோம்.

'பா.ம.க, தே.மு.தி.க., ஏன் வேண்டாம் என்கிறேன் தெரியுமா!?' - ஆ.ராசாவுக்கு ஸ்டாலின் அட்வைஸ் 
'பா.ம.க, தே.மு.தி.க., ஏன் வேண்டாம் என்கிறேன் தெரியுமா!?' - ஆ.ராசாவுக்கு ஸ்டாலின் அட்வைஸ் 

தேர்தல் கூட்டணி குறித்து ஆ.ராசா அளித்துள்ள பேட்டி, அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த சில குழப்பங்களுக்குத் தீர்வைக் கொடுத்துள்ளது. `துரைமுருகன் பேட்டிக்கு எதிர்வினையாக ஆ.ராசா பேட்டி இருந்தது. இதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியுள்ளன' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தீவிரமாக இறங்கிவிட்டன. `தேசியக் கட்சிகளுடன் எந்தெந்த மாநிலக் கட்சிகள் கூட்டுச் சேரும்?' என்ற கணக்குகள் போடத் தொடங்கிவிட்டனர் அரசியல் விமர்சகர்கள். அதேசமயம், கூட்டணிக்கும் தோழமைக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து துரைமுருகன் அளித்த பேட்டி, தி.மு.க கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. `சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் எங்கள் அணிக்குள் இருந்தன. அதைத்தான் துரைமுருகன் பேசினார். ஒருமித்த கருத்துடன் இருக்கும் கட்சிகளை தோழமை எனக் கூறினார். இதில் எந்தவித முரண்பாடும் இல்லை' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கியுள்ளனர் தி.மு.க நிர்வாகிகள். இதற்கிடையில், கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமோ என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என ஆதங்கத்தோடு பேட்டியளித்தார் வைகோ. இந்த இரு கட்சிகளின் தலைவர்களையும் அறிவாலயத்துக்கே அழைத்துப் பேசினார் ஸ்டாலின். இதையடுத்து, வைகோவும் திருமாவளவனும் சாந்தமானார்கள். 

இந்நிலையில், நேற்று முன்தினம் பேட்டியளித்த தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா, "துரைமுருகன் எதார்த்தமாக வெளிப்படுத்திய வார்த்தைகள் ஊடகங்களாலும் எதிர் முகாம்களில் உள்ளவர்களாலும் ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளன. கொள்கை வழியில் அமைந்துள்ள தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க கூட்டணி தொடரும். ஒருவேளை துரைமுருகனுக்கு தனிப்பட்ட ஆசைகள் இருக்குமேயானால் அதற்கு தி.மு.க துணைபோகாது. கமல் வந்தால் வரவேற்போம், அதேபோல டி.டி.வி. வந்தாலும் வரவேற்போம். ஆனால் பா.ம.க., தே.மு.தி.கவை அழைப்பது எங்கள் சுயமரியாதைக்கு இழுக்கு. அவர்களைக் கூப்பிட்டு எங்கள் சுயமரியாதையை இழக்கத் தயாரில்லை" என்றார். "எங்கள் நோக்கம் பிஜேபி, அதிமுகவை வீழ்த்துவதுதான். இதற்கு திமுக ஒன்றே போதும்" என விளக்கமாகப் பேசியிருந்தார். 

"துரைமுருகன் கருத்துக்கு எதிர்வினையாக இந்தப் பேட்டி அமைந்திருந்தாலும், ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலேயே இப்படியொரு பேட்டியை ஆ.ராசா கொடுத்தார்" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``தனியார் தொலைக்காட்சிக்குப் பொருளாளர் துரைமுருகன் கொடுத்த பேட்டி, பா.ம.கவை உள்ளே இழுப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்துவிட்டதாக நிர்வாகிகள் மத்தியில் பேச்சு எழுந்தது. அதாவது, வடமாவட்டங்களில் அதிகப்படியான வாக்குகளைப் பெற வேண்டும் என்றால், வி.சி.க நம்முடன் இருப்பது நன்றாக இருக்காது' என்ற அடிப்படையிலேயே இந்தப் பேட்டியை துரைமுருகன் கொடுத்ததாகவும் பேச்சு எழுந்தது. இந்த விவகாரம் சமாதானத்தில் முடிந்தாலும், ஆ.ராசாவை அழைத்துப் பேசியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்தச் சந்திப்பில் சில புள்ளிவிவரங்கள் அடங்கிய தாள்களையும் கையில் வைத்திருந்தார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் `மாற்றம்-முன்னேற்றம்' என்ற பெயரில் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை ராமதாஸ் முன்னிலைப்படுத்தினார். அப்போது தனக்கு எதிராக அன்புமணி வம்புக்கு இழுத்ததையும் ஸ்டாலின் இன்னும் மறக்கவில்லை. இந்தச் சந்திப்பில், `பா.ம.க ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்து இயங்கக் கூடிய ஒரு கட்சி. அவர்களால் நமக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை. எடப்பாடி பழனிசாமிதான் நம்முடைய முதல் எதிரி. அமைப்புரீதியாகவும் அ.தி.மு.க பலமாக இருக்கிறது. 90 சதவிகித கட்சி எடப்பாடியிடம்தான் இருக்கிறது. நாமும் காங்கிரஸ் கட்சியும் ஒன்று சேர்ந்தாலே 40 சதவிகித வாக்குகளைப் பெற்றுவிடுவோம். கூடுதல் பலத்துக்காக திருமாவளவனை நம்மோடு சேர்த்துக் கொள்ளலாம். பா.ம.க நமக்குத் தேவையில்லை. தே.மு.தி.கவும் நமக்குத் தேவையில்லை. இவர்கள் தேவையற்றவர்கள் என்ற விமர்சனத்தை நாம் முன்வைக்கும்போதுதான், நம்மைப் பற்றிய அவர்களின் விமர்சனங்கள் அர்த்தமற்றுப் போகும். மக்களும் அவர்களைப் புறம்தள்ளிவிடுவார்கள். 

பா.ம.கவைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க-வுடன் சேர்ந்தாலும் அந்த அணி 30 சதவிகித வாக்குகளைத் தாண்டப் போவதில்லை. தினகரனுடன் சேர்ந்தாலும் வடமாவட்டங்களில் 25 சதவிகித வாக்குகளுக்கு மேல் வாங்க மாட்டார்கள். வடமாவட்டங்களில் நாம் 40 சதவிகித வாக்குகளோடு களத்தில் இருக்கிறோம். கமாண்டிங் அண்ட் கம்ஃபர்ட்டபிள் பொசிசனில் இருக்கிறோம். எனவே, இவர்கள் நமக்குத் தேவையில்லை. அகில இந்திய தலைவர்கள் நமக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். காங்கிரஸ் மீது எந்த விமர்சனத்தையும் முன்வைத்துவிட வேண்டாம். பா.ஜ.க-வும் நம்மை நோக்கி வருகிறது. `நாம்தான் வேண்டாம்' எனக் கூறிவிட்டோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு 37 எம்.பி தொகுதிகள் கிடைத்தன. ஆனால், தனி மெஜாரிட்டியில் மோடி வெற்றி பெற்றதால், ஜெயலலிதா பெற்ற வெற்றியால் பயனில்லாமல் போய்விட்டது. இந்தமுறை 25 தொகுதிகளுக்கு மேல் நாம் வெற்றி பெறுவோம். பலமுனை போட்டி நடப்பதால் நமக்குத்தான் வெற்றி கிடைக்கும். அதன்மூலமாக அகில இந்திய அளவில் செல்வாக்குடைய கட்சியாக நாம் மாறுவோம். உதயசூரியன் சின்னத்தால் வரக் கூடிய வெற்றி நமக்கு வந்து சேரட்டும். எனவே, தேவையில்லாத கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு அணியைப் பெரிதாக்க வேண்டாம். இந்த அடிப்படையில் பேசுங்கள்' எனக் கூறியதாக நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இதையொட்டியே ஆ.ராசாவின் பேட்டியும் வெளியானது" என்றார் விரிவாக. 

தேர்தல் நெருக்கத்தில் இன்னும் என்னவெல்லாம் கலவரம் வெடிக்குமோ..!?