Published:Updated:

“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்!”

“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்!”

ஓவியம்: பாரதிராஜா

“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்!”

ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:
“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்!”

டும் காரிலிருந்து இறங்கி ஆடினால், ‘கிகி சேலஞ்ச்’! ஆளுங்கட்சியில் அமைச்சராக இருந்துகொண்டே தெர்மாகோல், சிட்னி, மும்மாரி மழை என்றெல்லாம் அசராமல் அடித்து ஆடினால்... அதுதான் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் ‘கிச்சுகிச்சு சேலஞ்ச்!’

“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்!”

‘அரசு நலத் திட்டங்களைப் பெற அ.தி.மு.க உறுப்பினர் அட்டை கட்டாயம்’ என்று  எதிர்க் கட்சிகளுக்கே டஃப் ஃபைட் கொடுப்பவரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சந்தித்துப் பேசினேன்...

‘‘ரஜினிக்கு அ.தி.மு.க-வில் தலைமைப் பதவி கிடையாது என்கிறீர்களே... ரஜினிகாந்த், அ.தி.மு.க-வில் இணைய சம்மதம் தெரிவித்துவிட்டாரா?’’

‘‘இல்லையில்லை... பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றின்போது, ‘ஜெயலலிதா இருந்த இடத்தில், ரஜினியை அமரவைத்து அழகு பார்ப்பீர்களா?’ என்ற அர்த்தத்தில் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்துப் பேசும்போது, ‘அ.தி.மு.க-வில் ஏற்கெனவே தலைமைப் பொறுப்புகளில் தலைவர்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வைப் பொறுத்த வரை கொள்கையை ஏற்றுக்கொண்டு கட்சியில் சேருகிறவர்கள் யாராக இருந்தாலும், முதலில் தொண்டராகத்தான் இணைய முடியும். பின்னர் அவரது தகுதியைப் பொறுத்து, கட்சியின் பொறுப்புகளில் அமர வைப்பதற்கு இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ்-ஸும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஸும் முடிவெடுப்பார்கள்’ என்றுதான் சொல்லி யிருந்தேன்.

மற்றபடி ரஜினிகாந்த், எங்கள் கட்சியில் சேருவதாகவும் சொல்லவில்லை... அவரேகூட தனிக்கட்சி ஆரம்பிப்பதாகவும் தெரியவில்லை!’’

‘‘ ‘டெங்குகொசு டெல்லியிலிருந்து பஸ்ஸில் வருகிறது, மக்கள் சோப் போட்டுக் குளிப்பதால்தான் நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது...’ என்றெல்லாம் தொடர்ச்சியாக அ.தி.மு.க அமைச்சர்கள் காமெடியாகப் பேசி வருவது... அரசியல் பிரச்னைகளைத் திசை திருப்பும் நோக்கம்தானே?’’

‘‘இன்றைக்கு ஊடகமும் மீம்ஸும் அதிகரித்துவிட்டன. அதனால், ‘டங் ஸ்லிப்’பாக ஏதேனும் ஒரு வார்த்தையை விட்டுவிட்டால்கூட அதை எடுத்துவைத்துக்கொண்டு பெரிதுபடுத்தி விடுகிறார்கள்.

சமீபத்தில்கூட மு.க.ஸ்டாலின், சுதந்திர தின தேதியைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டதைக் குறிப்பிட்டு நிறைய மீம்ஸ் வந்தன. அதனால், அ.தி.மு.க அமைச்சர்கள் மட்டுமல்ல... எல்லோருக்குமே ‘டங் ஸ்லிப்’ வருவது சகஜம்தான்!’’

‘‘ ‘அ.தி.மு.க உறுப்பினர் கார்டு உள்ளவர்களுக்குத்தான் அரசுத் திட்டப் பயன்கள் கிடைக்கும்’ என்று நீங்கள் பேசியது எப்படி ‘டங் ஸ்லிப்’ ஆகும்?’’


‘‘எங்கள் கட்சி அலுவலகத்தில், நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கைக் கூட்டத்தில் தொண்டர்களை உற்சாகப் படுத்துவதற்காகப் பேசப்பட்ட பேச்சு அது. அதையும் ஊடகத்தில் வெளியிட்டுவிட்டார்கள். 

“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்!”

யாராவது வந்து உதவி என்று கேட்டால்கூட, ‘என்னப்பா, நீ கட்சியில் உறுப்பினராக இருக்கிறாயா?’ என்று நான் கேட்கணும் இல்லையா... ஒரு அத்தாட்சி கார்டு இருந்தால்தானே உதவி ஏதும் செய்ய முடியும். ஆக, உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் மட்டும்தான் அப்படிப் பேசினேன்.’’

‘‘மதுரையை சிட்னி ஆக்கும் உங்கள் முயற்சி எந்தளவில் இருக்கிறது?’’


‘‘நடந்துகொண்டே இருக்கிறது... காலவாசல், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், குருவிக்காரன் சாலை உள்ளிட்ட மதுரையின் பல்வேறு இடங்களில் உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. இவைதவிர, தொழிற்பேட்டை, தொழில்நுட்ப நகரம், ராஜாஜி மருத்துவமனை விரிவாக்கம், தொழிற்சாலைகள் எனப் பல்வேறு நவீன வசதிகளும் மதுரையில் ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருக்கின்றன. அண்ணன் எடப்பாடி ஆட்சியில், இன்னும் இரண்டு வருடங்களில், மதுரை வளர்ந்த நகரமாக மாறிவிடும்!’’

‘‘தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் திட்டத்தைக் கொண்டுவந்ததுபோல், இப்போதைய மழை வெள்ளத்தைத் தடுக்க ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?’’

(சிரிக்கிறார்) ‘‘மழை வெள்ளத்தைத் தடுக்கத்தான் ஆங்காங்கே நம் முதல்வர் தடுப்பணைகளைக் கட்டிவருகிறாரே. குடிமராமத்துப் பணியின்கீழ் நீர்நிலைகளை உயர்த்திக் கட்டுவதற்கான பணிகளை விவசாயிகளின் ஒத்துழைப்போடு அரசு செயல்படுத்திவருகிறது.

ஜெயலலிதா இறுதியாக சட்டமன்றத்தில் பேசியபோது, ‘எனக்குப் பிறகும் இந்தத் தமிழகத்தை அ.தி.மு.க-தான் நூறாண்டுகள் ஆளும்!’ என்றார். அதை நோக்கித்தான் தற்போதைய அ.தி.மு.க பயணிக்கிறது!’’

‘‘ ‘ஜெயலலிதாவைப் போல், சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் எடப்பாடி’, ‘மாதம் மும்மாரி மழை பொழிகிறது’ என்றெல்லாம் முதல்வரைப் புகழும் நீங்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பணிகளைப் பாராட்டுவதில்லையே... ஏன்?’’

‘‘ஆட்சியைப் பொறுத்தளவில், தலைவராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான். அவருக்குப் பக்கபலமாக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஆனால், முதல்வரது நடவடிக்கையின் அடிப்படையில்தான் அரசுத் திட்டங்கள் செயல்படுகின்றன.

எனவே, ஆட்சியைப் பற்றிச் சொல்லும்போது, தலைமையைப் பற்றித்தான் சொல்லமுடியுமே தவிர, அவருக்குக் கீழே இருக்கிற ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்வதென்பது வழக்கம் கிடையாது.

அதேசமயம், கட்சியைப் பொறுத்த வரையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உறுதுணையிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.’’

‘‘தி.மு.க-வின் செயல்தலைவராக அழகிரி இருந்திருந்தால், அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்திருப்பார் என்கிறீர்களே... இது தி.மு.க மீதான அக்கறையா அல்லது அழகிரிமீதான பயமா?’’

‘‘அழகிரி மத்திய அமைச்சராக இருக்கும்போது, அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக நான் இருந்தேன். வேறு எந்தவித அரசுப் பதவியும் நான் வகிக்க வில்லை. ஆனாலும் அந்தச் சூழ்நிலையிலேயே நான் அழகிரியை எதிர்த்து அரசியல் செய்துவந்திருக்கிறேன்.

நான் செய்யாத ஒரு கொலை வழக்குக்காக, என்னை முதல் குற்ற வாளியாகவே சித்திரித்தார்கள். ஆனாலும் கூட துணிந்து அரசியல் செய்து வந்தவன் நான். அதனால், `அழகிரிக்கு பயந்து’ என்பதெல்லாம் தவறானது. என்னைப் பற்றியும் கட்சி ரீதியாக எனக்குள்ள கொள்கைப் பிடிப்பு பற்றியும் அழகிரிக்கே நன்றாகத் தெரியும். 40 வருடங்களாக நான் மதுரையில் இருந்து வருவதால், அழகிரியின் அரசியல் வாழ்வு, அவரது செயல்பாடுகள், கட்சிக் காரர்களோடு அவர் எந்தளவு பிடிப்பாக இருப்பார் என்பது பற்றியெல்லாம் எனக்கும் தெரியும். இதையெல்லாம் வைத்துத்தான் நான் அப்படிப் பேசினேன்.’’

‘‘முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதிக்கு இடம் ஒதுக்க மறுத்ததில், அ.தி.மு.க அரசுக்கு மக்களிடையே அவப்பெயர்தானே...?’’

‘‘நிச்சயமாக இல்லை. ஏற்கெனவே, மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைவதற்கு எதிராக வழக்கு போட்ட வர்களே தி.மு.க-வினர்தான். மொத்தம் 5 வழக்குகள். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, ஒரே இரவில் இந்த 5 வழக்குகளும் ஒருசேர வாபஸ் பெறப்படுகின்றன என்றால், இவை யாரால் போடப்பட்ட வழக்குகள் என்பது நாட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிட்டது.

அடுத்ததாக, சமாதி குறித்த வழக்கு நல்லமுறையில் நடைபெறுவதற்கும் தீர்ப்புக்குப் பிறகு அதனை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கும் உறுதுணையாக நின்றதே அ.தி.மு.க அரசுதான். முன்னாள் முதல்வர் என்ற முறையில், கருணாநிதிக்குக் கொடுக்கப்பட வேண்டிய அத்தனை மரியாதைகளும் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, மக்கள் தமிழக அரசைப் பாராட்டுகிறார்கள் என்பதுதான் உண்மை!’’

‘‘பத்திரிகையாளர் சந்திப்புகளில், பளிச்சென்று பல விஷயங்களைச் சொல்லிவிடுகிறீர்களே... உங்கள் பேச்சை யாராவது பாராட்டியிருக்கி றார்களா?’’


‘‘நிறைய பேர் பாராட்டியிருக்கிறார்கள். ‘அண்ணே நீங்க உண்மையைச் சொல்றீங்கண்ணே... மனசுல பட்டதைப் பேசுறீங்கண்ணே...’ என்று சொல்வார்கள். ‘மதுரைக்காரய்ங்க பாசக்காரய்ங்க...’ என்று சொல்வார்கள். நான் மதுரைக்காரன். எங்ககிட்டே கோபம் இருக்கும், பாசம் இருக்கும், அன்பு இருக்கும். ‘துரோகம்’ மட்டும் எங்களுக்குப் பிடிக்காது!’’

‘‘உங்கள் மகன், சாலை விபத்தில் இறந்துபோன சம்பவம் உங்களை எந்தளவு பாதித்தது?’’

(உணர்ச்சிவயமாகிறார்) ‘`என் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம் அது. என்னுடைய ஒரே மகன் தமிழ் மணி... 27 வயது! பார்த்துப் பார்த்து வளர்த்தோம்.

என் மகள் வயிற்றுப் பேரக் குழந்தைக்குப் பொம்மை வாங்கிவர பைக்கில், பாண்டி பஜாருக்குச் சென்றவன், சாலையில் அமைக்கப்பட்டிருந்த ‘ஸ்பீடு பிரேக்’கினை கவனிக்காமல் வந்து விபத்தாகிவிட்டது. மிகப்பெரிய துயரம்... என் வாழ்வின் இறுதிக்கட்டம் வரையிலும் அந்த சோக வடு மாறாது.

வளர்ந்த ஒரு மகனை இழந்த குடும்பம் எந்தளவு பாதிக்கப்படும் என்பதற்கு என் குடும்பமே உதாரணமாகிவிட்டது. அந்த சோகத்திலிருந்து என் மனைவியை மீட்டெடுத்துக் கொண்டுவருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டோம். அந்தச் சமயத்தில், ஜெயலலிதாவே எங்களுக்கு ஆறுதல் சொன்னார்.

மகன் நினைவாக, ‘தமிழ் மணி அறக் கட்டளை’யை ஆரம்பித்து, நிறையபேருக்கு உதவி செய்துவருகிறோம். இப்போது எங்களுக்கு நிறைய பிள்ளைகள்!’’

த.கதிரவன் - ஓவியம்: பாரதிராஜா - படம்: சொ.பாலசுப்பிரமணியன்