மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - மு.தம்பிதுரை (கரூர்)

என்ன செய்தார் எம்.பி? - மு.தம்பிதுரை (கரூர்)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - மு.தம்பிதுரை (கரூர்)

காகிதத்தைக்கூட அரசியல் ஆயுதமாக மாற்ற முடியுமா?

ஜெயலலிதா மறைந்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகி, ஒரு மாதம்கூட ஆகவில்லை. அப்போது ஒரு கலகக்குரல் எழுந்தது. ‘‘ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான். அவர் முதல்வராக வேண்டும். கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் தனித்தனியாக இருப்பது ஏற்புடையதல்ல’’ என்று கொள்கை பரப்புச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை அதிரடியாக அறிவித்தார். அவரின் அறிக்கை, துணை சபாநாயகர் லெட்டர்ஹெட்டில் வெளியானது. இந்திய அரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட நாடாளுமன்ற லெட்டர்ஹெட்டையும் துணை சபாநாயகர் பதவியையும் தன் அரசியலுக்கான ஆயுதமாக மாற்றியவர் தம்பிதுரை.

ஜெ. மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்று, முதல்முறையாகப் பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்றபோது தம்பிதுரையை அழைத்துச் செல்லவில்லை. அந்தச் சந்திப்பு நடந்த நாளில்தான், ‘‘சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’’ எனப் பேட்டி அளித்தார் தம்பிதுரை. ‘‘ஜெயலலிதா என்னை அறைந்தார்’’ என அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா புயல் கிளப்பியபோது, ‘‘என்னை எங்கேயும் செல்லக் கூடாது என தம்பிதுரை தடுத்தார்’’ என்றும் புகார் கிளப்பினார். ‘‘எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகுதான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது’’ என்பது தம்பிதுரை கண்டறிந்த உண்மை. இப்படிச் சகல பாத்திரங்களிலும் பெர்ஃபாமன்ஸ் செய்யும் தம்பிதுரை, தன்னைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கரூர் மண்ணுக்கு என்ன செய்தார்? கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி என நான்கு மாவட்டங்களில் பரவிக்கிடக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்குள் களம் புகுந்தது ஜூ.வி.

என்ன செய்தார் எம்.பி? - மு.தம்பிதுரை (கரூர்)

‘‘மெத்தப் படித்தவர், துணை சபாநாயகர், எளிதில் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்புள்ளவர் என்று சகலத் தகுதிகளையும் படைத்த தம்பிதுரை, கரூரைக் கண்டுகொள்ளவில்லை’’ என்பதுதான் கோரஸ் குரலாக எதிரொலிக்கிறது.

கரூர் தொகுதியில் நான்கு முறை இவர் ஜெயித்துள்ளார். கடந்த இரண்டு முறை தொடர்ச்சியாக எம்.பி-யாக இருக்கிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படி அவரது பணிகள் இல்லை. ‘ஊருக்கு ஊர் நாடக மேடை கட்டியுள்ளேன். பேருந்து நிறுத்தங்கள் கொண்டு வந்துள்ளேன்’ என அவரே சொல்லும் அளவுக்குத்தான் அவரது சாதனைகள் உள்ளன.  ‘‘சண்டே மட்டும் தொகுதியில் தலைகாட்டுவார். மின்னல் மாதிரி வந்து போய்விடுவார்’’ என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

கரூர் தொழில் பிரமுகர்களிடம் பேசியபோது, ‘‘ஜவுளி, பஸ் பாடி கட்டுதல், கொசுவலை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நிறைந்த தொகுதி இது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குப் பிறகு சிறு, குறு தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. பஸ் பாடி கட்டும் தொழிலில் மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்த விதிகளின்படிச் சாதாரண நெட், போல்ட் முதற்கொண்டு எல்லாவற்றையும் புனேவில் போய் தர நிர்ணயம் செய்ய வேண்டும். இது செலவுகளை அதிகரிக்கிறது. இதனால், சிறிய அளவிலான பஸ் பாடி நிறுவனங்கள் அழியும் நிலையில் உள்ளன. இந்தத் தொழிலைக் காக்க தம்பிதுரை துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. சீன கொசுவலைகளை அனுமதித்த பிறகு, தொழிற்சாலைகள் நசிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன. தன் தொகுதியில் நடக்கும் இந்தப் பிரச்னையைத் தீர்க்கக்கூட எம்.பி-க்கு நேரமில்லை. நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. 2010-ல் தொடங்கப்பட்ட ஜவுளி பார்க்கில் 54 நிறுவனங்கள் இருந்தன. இப்போது அந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது’’ என்றார்கள்.

‘‘தமிழகத்தின் மொத்த முருங்கை உற்பத்தியில் 65 சதவிகிதம் அரவக்குறிச்சி பகுதியில்தான் நடக்கிறது. முருங்கையை பவுடராக்கி ஏற்றுமதி செய்ய வசதியாகத் தொழிற்சாலை கொண்டுவர வேண்டும் என்பது 20 வருடக் கோரிக்கை. முருங்கையைச் சேமித்து வைக்கும் குளிர்பதனக் கிடங்கு கேட்டு ஓய்ந்துவிட்டோம். ‘இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன்’ எனத் தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுப்பார் தம்பிதுரை. ஜெயித்ததும் மறந்துவிடுவார். கிருஷ்ணராயபுரம் பகுதியில் வாழை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை, வாழைச் சந்தை, மணப்பாறையில் வாசனைத் திரவியத் தொழிற்சாலை, காய்கறிகள் பதனிடும் குளிர்பதனக் கிடங்கு என அவர் கொடுத்த பல வாக்குறுதிகள் காற்றோடு போய்விட்டன’’ என்றனர் விவசாயச் சங்கத்தினர்.

கரூரின் முக்கியப் பிரச்னையாக இருப்பது சாயப்பட்டறை. இதுபற்றிப் பேசிய விவசாயிகள், ‘‘சாயப்பட்டறையால் அமராவதி ஆறு பாதிக்கப்படுகிறது. ‘நாடாளுமன்றத்தில் இதுபற்றிப் பேசித் தீர்வு கிடைக்கச் செய்வேன்’ எனச் சொன்னார் தம்பிதுரை. ‘தாதம்பாளையம் குளத்துக்குக் காவிரித் தண்ணீரை விடுவேன்’ என்று சொன்னார். அதையும் அவர் செய்யவில்லை’’ என்றனர். கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களின் சாயப்பட்டறைப் பிரச்னையைத் தீர்க்கப் பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கான இடம்கூட இன்றுவரை முடிவாகவில்லை.  

‘‘புதுக்கோட்டையிலும் கரூரிலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கிவிட்ட நிலையில், கரூரில் கட்டடங்கள் கட்டும் பணியே இன்னும் முடியவில்லை. ‘கரூர் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி கொண்டுவருவேன்’ எனச் சொன்னார். அதையும் நிறைவேற்றவில்லை’’ என்றனர் எதிர்க்கட்சியினர்.

ரயில்வே பயணிகள் நலச் சங்கத்தினர் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். ‘‘கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நான்கு மற்றும் ஐந்தாவது பிளாட்பாரங்களில் கூரை இல்லை. கரூரிலிருந்து சென்னைக்கு நேரடி பகல்நேர ரயில்விட வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கை. துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை தனது லெட்டர்ஹெட்டில் இந்தக் கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்திருந்தாலே நிறைவேறியிருக்கும். இதையெல்லாம் செய்யாமல் அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நிலையில் கட்சிக்காரர்களை டெல்லிக்கு விமானத்தில் அழைத்துப் போயும், குற்றாலத்துக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றும் குளிர்விக்கிறார். மக்களை எப்போதுதான் கண்டு கொள்வார் எனத் தெரிவில்லை’’ என்றார்கள்

‘‘ ‘கரூர் - கோவை சாலையை நான்குவழிச் சாலை ஆக்குவேன்’ என்று கடந்த தேர்தலின்போது,வாக்குறுதி அளித்தார். அது இப்போது ஆறு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வேலைகளை நடந்து கொண்டிருக்கின்றன. காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததில் தம்பிதுரை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். காவிரி மற்றும் அமராவதியில் தடுப்பணைகளை அமைத்திருக்கிறார்’’ என்றனர் அ.தி.மு.க-வினர்.

‘ஒவ்வொரு எம்.பி-யும் ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டத்தின்படி, கடவூர் ஒன்றியத்தில் உள்ள பாலவிடுதி ஊராட்சியைத் தத்தெடுத்தார் தம்பிதுரை. அது எப்படி இருக்கிறது என ஆய்வு செய்தோம். இந்த ஊராட்சியில் 18 குக்கிராமங்கள் உள்ளன. அங்கு குடிநீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ‘வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டித் தருவேன்’ என்றார். ஆனால், பெரும்பாலான வீடுகளில் கழிப்பறைகள் கட்டக் குழி வெட்டி, கூரைகள் போட்டு, பீங்கான் வைக்கப்பட்டதுடன் நிற்கிறது. கழிப்பறைக் கட்டி முடிக்கப்பட்ட இடங்களில் இணைப்புகூட தரப்படவில்லை. ‘‘இதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. மக்களின் பயன்பாட்டுக்கு சாலை போடாமல், தம்பிதுரைக்கு வேண்டிய ஒருவரின் பண்ணைக்குப் போவதற்காக இரண்டு தார் சாலைகள் போட்டுள்ளனர்’’ எனக் கொதித்தார்கள் பாலவிடுதி மக்கள்.

தொகுதி ரவுண்ட் அப் குறித்து தம்பிதுரையிடம் பேசினோம். ‘‘மருத்துவக் கல்லூரி கொண்டு வந்திருக்கிறேன். கரூர் - சேலம் புதிய ரயில்பாதைத் திட்டம், கரூர் - கோவை பசுமை வழிச்சாலை திட்டம், கரூர் ரிங் ரோடு எனப் பலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தி நாடக மேடைகளை பஸ் ஸ்டாப்புகளையும் கட்டியுள்ளேன்’’ என முடித்துக்கொண்டார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதள பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, துரை.வேம்பையன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - மு.தம்பிதுரை (கரூர்)

எம்.பி அலுவலகத்தில் என்ன ரெஸ்பான்ஸ்?

தயம், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை போன்றவற்றுக்கு   எம்.பி சிபாரிசு செய்தால், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவி கிடைக்கும். அதன்படி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் அரவக்குறிச்சி ஒன்றியம் அரங்கப்பாளையத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர், கடவூர் தாலுகாவைச் சேர்ந்த குமார் ஆகியோரைக் கண்டறிந்து, பிரதமர் நிதி உதவிக்காகச் சிபாரிசு செய்யும்படி தம்பிதுரை அலுவலகத்துக்குக் கோரிக்கை மனு அனுப்ப வைத்தோம். அரவக்குறிச்சி ஒன்றியம் நடுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இதய நோயாளியான முருகனையும் கோரிக்கை மனு அனுப்ப வைத்தோம். இதய அறுவை சிகிச்சைக்கு நிதியின்றி தவித்த குமரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த அட்சயா, பசுபதிபாளையத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற சிறுமிகளை அவர்களின் பெற்றோருடன் போய் எம்.பி அலுவலகத்தில் மனுக்களை அளிக்க வைத்தோம். இரு வாரங்கள் கடந்தும் இந்த ஐந்து பேருக்கும் எம்.பி அலுவலகத்திலிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.

கரூர் ராமானுஜர் நகரில் குமாரசாமி அப்பார்ட் மென்டில் உள்ளது தம்பிதுரையின் எம்.பி ஆபீஸ். அது அலுவலகம் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. அங்கு போய் விசாரித்தோம். அட்சயா, கிருத்திகா கொடுத்த மனுக்கள் கைக்கு வரவே இல்லை எனக் கூறி அதிர வைத்தார் அங்கிருந்த பெண் ஊழியர். ஐந்து பேரையும் மறுபடியும் எம்.பி அலுவலகத்தை அணுகச் சொன்னோம். ஆனால், ‘உரிய ஆவணங்கள் இல்லை’ என ஐந்து பேருக்கும் எம்.பி அலுவலகத்திலிருந்து பதில் வந்திருக்கிறது.

என்ன செய்தார் எம்.பி? - மு.தம்பிதுரை (கரூர்)

தொகுதி மேம்பாடு நிதி செலவழித்தல்!

நா
டாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு எம்.பி-க்கும் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அந்த நிதியை தம்பிதுரை பயன்படுத்தி விவரம் இங்கே...

என்ன செய்தார் எம்.பி? - மு.தம்பிதுரை (கரூர்)
என்ன செய்தார் எம்.பி? - மு.தம்பிதுரை (கரூர்)

எம்.பி எப்படி?

ரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 485 பேரைச் சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

என்ன செய்தார் எம்.பி? - மு.தம்பிதுரை (கரூர்)