Published:Updated:

திருத்தம்... திரிபு வேலை... ஜிடிபி வளர்ச்சி... அடேங்கப்பா மோடி!

ஜிடிபி விகிதத்தைக் கணக்கிடுவதில் எப்படி அதன் கணக்கிடும் முறையை மோடி அரசு திருத்தி அமைத்துக் கொண்டதோ, அதே பாணியில் இந்தியாவுக்கான தர மதிப்பீடு நன்றாக...

திருத்தம்... திரிபு வேலை... ஜிடிபி வளர்ச்சி... அடேங்கப்பா மோடி!
திருத்தம்... திரிபு வேலை... ஜிடிபி வளர்ச்சி... அடேங்கப்பா மோடி!

ங்கிலாந்தில் கன்யூட் என்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவனைச் சுற்றி எப்போதும் ஒரு ஜால்ரா கூட்டம் இருந்தது. அமைச்சர்கள், படைத்தளபதிகள் என எல்லோரும் எப்பொழுதும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். புகழுரையின் உச்சமாக, ``மன்னா... உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படியாமல் இந்த உலகத்தில் யாரும் இருக்கமுடியாது" என்று ஒருமுறை ஜால்ரா கூட்டம் சொன்னபோது, மன்னன் கன்யூட்டுக்கு எரிச்சலாகிப் போனது. அவன் இந்தப் புகழுக்கெல்லாம் மயங்காதவன். கொஞ்சம் அறிவும், யோசனையும் உள்ளவன். 

ஒருநாள் தன் அமைச்சர்களுடனும், தளபதிகளுடனும் கடற்கரையோரம் நடந்துகொண்டிருந்தான். வழக்கம்போல அந்த ஜால்ராக் கூட்டம் மன்னனைப் புகழ்ந்து தள்ளியது. இந்த முட்டாள் கூட்டத்துக்குப் பாடம் புகட்ட இதுவே சரியான தருணம் என்று எண்ணிய மன்னன், ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து அலைதொடும் கடற்கரை மணலில் போடுமாறு உத்தரவிட்டான். அவனது சேவகர்களும் அப்படியே செய்தனர். 

அதைத் தொடர்ந்து, ``இந்தக் கடல் எனக்கு ஆணைக்கு அடிபணியுமா?" என்று கடல் தன் பாதத்தை வருடிச் செல்வதைப் பார்த்துக் கொண்டே கேட்டான் கன்யூட். மன்னன் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசி பழக்கமில்லை என்பதால், ``இல்லை" என்று தைரியமாகச் சொல்ல அந்த ஜால்ரா அதிகாரிகள் பயப்பட்டனர். 

``அரசரே! நீங்கள் கட்டளையிடுங்கள். அந்த கடலும் உங்கள் ஆணைக்கு அடிபணியும். இது சத்தியம்" என்று துதி பாடினார் ஒருவர்.

``ஏய் நீலக் கடலே, நீ கரையைத் தொடாமல் அங்கேயே நில்! அலைகளே... நீங்கள் என் ஆணைக்குக் கட்டுப்பட்டு, என் பாதத்தைத் தொடாமல் அங்கேயே நில்லுங்கள். இது மன்னன் கன்யூட்டின் அரச கட்டளை!"  என்று உத்தரவிட்டான்.

ஆனால், அலைகள் நின்றபாடில்லை. வழக்கம் போல நிற்காமல் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது. அன்று முழுப் பௌர்ணமி நாள் என்பதால், நேரம் செல்லச் செல்ல தண்ணீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே போய் கடைசியில் அந்த நாற்காலி முழுவதையும் மறைத்தது. மன்னரின் ஆடைகளெல்லாம் நன்றாகத் தண்ணீரில் நனைந்துவிட்டன.

மன்னர் தன் கிரீடத்தைக் கழட்டியபடியே, ``எனது அமைச்சர் பெருமக்களே... அதிகாரிகளே... சேவகர்களே... இப்போதாவது, நீங்கள் பார்த்ததிலிருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். உலகத்தில் ஒரே ஒரு அரசன்தான் இருக்கிறான். அவன் இந்த மகா சமுத்திரத்தை ஆள்பவன், இந்தப் பெருங்கடலைத் தன் உள்ளங்கைக்குள் வைத்திருப்பவன். அவனைத் தவிர வேறு யாரும் புகழ்ச்சிக்கு அருகதையற்றவர்கள். இதைப் புரிந்து கொள்ளுங்கள்" என்று சொல்லி, அதைச் சிலுவையில் தொங்கவிட்டதாக ஒரு கதை உண்டு. 

ஜித்தர் மோடி

இந்தக் கதையில் வரும் கடலைப் போன்றுதான் பொருளாதாரத்தையும் ஆணையிட்டு வளர்ச்சியடையச் செய்ய முடியாது. கடல் அலை மேலே எழும்புவதைத் தடுக்க, நீண்ட மதில் கட்ட வேண்டுமானால், அதற்கு நீண்ட காலப் பொறுமையும் கவனத்துடன் கூடிய உழைப்பும் தேவை. ஆனால், நமது தலைவர்களிடம் அது இல்லை. எனவேதான் அவர்கள் கட்டுக்கதைகளையும், மாயையையும் உருவாக்கி, மக்கள் கவனத்தைத் திசை திருப்பி, அவர்களிடம் தங்களை ஒரு நல்ல பிராண்டாக மாற்றி மக்களிடம் விற்று ஓட்டைப் பெறுகின்றனர். அவ்வாறு மக்களிடம் தன்னைக் குறித்த மாயையை உருவாக்குவதில் மோடி ஜித்தராகத் திகழ்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் என்கின்றனர் அவரை எதிர்ப்பவர்கள். 

இதோ, மோடியின் ஐந்தாண்டுக் கால ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் நான்கைந்து மாதங்களே இருக்கின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, தேயும் பொருளாதார வளர்ச்சி, அரசுக்கு எதிராகத் திரளும் விவசாயிகள், அவர்கள் டெல்லியில் நடத்திய பேரணி வரை அடுத்த முறை மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும், அவர் சார்ந்துள்ள பா.ஜனதா கட்சியினரும் பதற்றமடையத் தொடங்கி இருப்பது தெரிகிறது. 

அதனால்தானோ என்னவோ,  ஜிடிபி  எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு குறித்த தகவலைத் திருத்தி வெளியிட்டு, அரசின் இமேஜைத் தூக்கிப்பிடிக்க வைக்கும் திரிபு வேலைகளில் ஈடுபடுவதாக மோடி அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதே சமயம், இவ்வாறு ஜிடிபி தகவலைத் திருத்தி வெளியிட்டு, மக்கள் மத்தியில் ஒருவித போலியான இமேஜை ஏற்படுத்துவது என்பது புதிதான செயல் அல்ல. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் இதே வேலையைச் செய்துள்ளது. அதாவது பொருளாதார விகிதத்தைக் கணக்கிடுவதற்கான அத்தியாவசியப் பொருள்களுக்கான விலையை, 2004-05-ம் ஆண்டின் சந்தை விலையின் அடிப்படையில் கணக்கிட்டு, 2011-12-ம் ஆண்டுக்கான ஜிடிபி விகிதத்தை வெளியிட்டு, ஜிடிபி வளர்ச்சி அடைந்துள்ளதாகக் காண்பித்தது. இதன் மூலம், ஜிடிபி விகித வளர்ச்சியை 4.7 சதவிகிதத்திலிருந்து 6.9 சதவிகிதமாக மாற்றி, தமது அரசு சிறப்பாகச் செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. 

அதே பாணியைத்தான் ஆட்சிக்கு வந்த மறு ஆண்டே கடைப்பிடித்தது மோடி அரசு. அதாவது 2015 ஜனவரியில், மோடி அரசு மேற்கொண்ட முதல் பொருளாதாரக் கொள்கை முடிவுகளில் ஒன்றாக, ஜிடிபி-யைக் கணக்கிடும் அடிப்படை ஆண்டையும் முறையையும் மாற்றியமைப்பதும் இடம்பெற்றது. 

அந்த முறையில்தான், தற்போது மத்தியப் புள்ளியியல் துறை ஜிடிபி குறித்து வெளியிடப்பட்ட தகவலில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), திருத்திய மதிப்பீட்டின்படி முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியில் இருந்ததை விட, தற்போதைய பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சியில் அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டிருந்தது. 

``மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவிகிதமாகச் சரிந்தது. கடந்த 2011-12-ம் நிதியாண்டு அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட்டதில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி 7.1 சதவிகிதமாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 6.3 சதவிகிதமாக இருந்தது. அதேநேரத்தில், முந்தைய ஏப்ரல் - ஜூன் காலாண்டை விட (8.2 சதவிகிதம்) வளர்ச்சி சரிந்துள்ளது.  

ஜனவரி - மார்ச் காலாண்டில் ஜிடிபி 7.7 சதவிதமாகவும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 7 சதவிகிதமாகவும் இருந்தது. ஆனால், சீனாவை விட அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. நடப்பு ஆண்டில், சீனப் பொருளாதார வளர்ச்சி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.5 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது" என அதில் மத்தியப் புள்ளியியல் துறை மேலும் குறிப்பிட்டிருந்தது. 

எது உண்மையான பொருளாதார வளர்ச்சி?  

இதையடுத்து, ``காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தற்போது இருப்பதைவிட ஜிடிபி வளர்ச்சி அதிகமாக இருந்தது என்று தொடர்ந்து சொல்லி வந்தனர். ஆனால், உண்மை இப்போது வெளிவந்திருக்கிறது" என்று பா.ஜனதா கூறவும், ``பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி நடைமுறை மற்றும் அதிக வரி விதிப்பு ஆகியவற்றால் பிரதமரும், நிதி அமைச்சரும் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதாளத்துக்குத் தள்ளியுள்ளனர். அதை மறைக்கும் நோக்கில் அருண் ஜெட்லியும், மோடியும் தவறான ஜிடிபி தகவல்களை வெளியிட்டுள்ளனர்" என்று கொதித்தெழுந்து காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டது. 

அதேபோன்று முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், நாட்டின் ஜிடிபி விகிதங்களை, மறுபரிசீலனை செய்து தவறான தகவல்களை வெளியிடும் நிதி ஆயோக் அமைப்பைக் கலைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக விமர்சித்திருந்தார். 

இதற்குப் பதிலளித்த நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார், ``தற்போது கிடைத்த பலதரப்பட்ட தகவலின் அடிப்படையில், முந்தைய ஆண்டுகளுக்கான ஜிடிபி, மதிப்பீடு செய்யப்பட்டது. அதனால்தான் இந்த மாற்றம் வந்துள்ளது. அரசுக்கு, முந்தைய ஜிடிபி வளர்ச்சியைக் குறைத்துக் காட்டும் எந்த நோக்கமும் இல்லை" என்று விளக்கமளித்தார். 

``பொருளாதார விகிதத்தைக் கணக்கிடுவதற்கான ஆண்டைத் திருத்தியமைத்துக் கொள்வது உலக அளவில் ஏற்றுக்கொண்ட முறைதான் என்றாலும், பணவீக்கத்தைத் தாண்டிய வளர்ச்சியே உண்மையான பொருளாதார வளர்ச்சி. புள்ளி விவரங்களை வெளியிட்டு, பெயரளவுக்குக் காண்பிக்கப்படும் பொருளாதார வளர்ச்சியெல்லாம் ஆட்சியிலிருப்பவர்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுப்பதற்கு வேண்டுமானால் பயன்படும். ஆனால், சாமான்யர்களுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை. ஆனால், மோடியும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் இதுகுறித்து எவ்வித கவலையும் கொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் தங்களைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய புள்ளி விவரங்களை வெளியிட்டு, அதன்மூலம் தங்கள் மீதான மதிப்பீட்டை உயர்த்திக் கொள்வதிலேயே கவனம் கொண்டுள்ளனர்" என்பதே பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது. 

உலக வங்கியிடமும் லாபி முயற்சி? 

உள்நாட்டுக் கதை இதுவென்றால், சர்வதேச அளவிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தர மதிப்பீடு (Ranking) செய்யும் உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளிடமும், தனியார் தர மதிப்பீட்டு நிறுவனங்களிடமும் மோடி அரசு லாபி செய்து, தங்களுக்குச் சாதகமான மதிப்பீடுகளை வெளியிட வைக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு உள்ளது. 

அதாவது, ஜிடிபி விகிதத்தைக் கணக்கிடுவதில் எப்படி அதன் கணக்கிடும் முறையை மோடி அரசு திருத்தி அமைத்துக் கொண்டதோ, அதே பாணியில் இந்தியாவுக்கான தர மதிப்பீடு நன்றாக இருக்குமாறு, அதாவது அதிக தர மதிப்பீடு கொண்ட முதல் 50 நாடுகளில், இந்தியாவையும் இடம்பெற வைக்கும் விதத்தில் கணக்கிடும் முறையை (methodology) மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என உலக வங்கியைச் சம்மதிக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அது பயனளிக்காமல் போனதால், சிறிய அளவிலான தர மதிப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக, மோடி ஆட்சியில் இந்தியாவுக்கான பொருளாதார வளர்ச்சி தர மதிப்பீடு உயர்ந்துள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், அடுத்து மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் அவர் மேற்கொண்ட பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் முடங்கி, இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கும் என்ற விதத்திலும் தகவல்கள் வெளியிடப்பட்டதாக ஆங்கில ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. 

ஒருவேளை இவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டு வெளியிடப்படும் தர மதிப்பீடுகளை நம்பி, அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவில் இந்தியாவில் முதலீடு செய்து, நிஜம் வேறாக இருந்து நஷ்டங்களை எதிர்கொண்டால், நாளை அவர்கள் இந்தியா குறித்த எந்தத் தர மதிப்பீட்டையும் நம்பி முதலீடு செய்ய யோசிக்க வேண்டிய நிலை வந்துவிடும் என எச்சரிக்கிறார்கள் இந்தியப் பொருளாதார நிபுணர்கள். 

மக்களிடம் எடுபடுமா?

நீதித் துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி என நீண்ட மோடி அரசின் தலையீடுகள், உலக வங்கி அளவுக்கும் சென்று முயன்று தோற்று, தற்போது தனியார் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் புள்ளியியல் துறையில் வந்து நிற்கிறது. 

தவறுதலாகவே அல்லது இயல்பாகவோ மோடி, தனது ஆதரவாளர்களைக் கொண்டு கட்சியிலும் ஆட்சியிலும் தன்னை ஒரு மாபெரும் தலைவனாகவும், அரசனாகவும் காட்டிக் கொள்ளும் விதத்தில் அவர்களைச் செயல்பட அனுமதிக்கிறார். ஆனால், அரசியல், அரசு நிர்வாகம், நீதித் துறை, விவசாயிகள் மற்றும் தனியார் துறையில் கூட அவர் மீதான பிம்பம் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், இதுபோன்ற புள்ளிவிவரங்களை மாற்றி ஏற்படுத்திக் கொள்ளும் மாயை, மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்திக் கொள்ளும் விதத்தில் மக்கள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை 2019 தேர்தல்தான் சொல்லும்!