Published:Updated:

`நான் தி.மு.க-வே இல்லை. பி.எல்.ஏன்னா என்னங்க...?'- ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த பூத் நிலவரம்

பூத் கமிட்டி குளறுபடிகளுக்கான அடிப்படையான காரணத்தைக் கேட்கக்கூட ஸ்டாலின் தயாராக இல்லை. `நான் எடுத்த முடிவையே விமர்சனம் செய்வதா...அவர்கள் ஏதோ பொறாமையில் சொல்கிறார்கள்' என விமர்சிக்கிறார்.

`நான் தி.மு.க-வே இல்லை. பி.எல்.ஏன்னா என்னங்க...?'- ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த பூத் நிலவரம்
`நான் தி.மு.க-வே இல்லை. பி.எல்.ஏன்னா என்னங்க...?'- ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த பூத் நிலவரம்

`தி.மு.க அணியைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன; பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன' என இன்று திருச்சியில் நடைபெற்ற தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் ஆவேசத்துடன் பேசியிருக்கிறார் திருமாவளவன். ` தி.மு.கவைப் பலவீனப்படுத்த வெளியாள்கள் தேவையில்லை. சொந்தக் கட்சிக்காரர்களே போதும். அந்தளவுக்கு பூத் கமிட்டிகளில் குளறுபடிகள் நடந்துள்ளன' எனக் கொதிக்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் வேகம் காட்டி வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்காக மாவட்டத்துக்கு இருவர் என நாடாளுமன்றத் தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களையும் அறிவித்தார். இந்தப் பொறுப்பாளர்கள், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் முகாமிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி எல்லைக்குள்ளும் 250 முதல் 300 பூத்துகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பூத்துகளுக்கும் 20 கட்சிக்காரர்களை நியமிப்பது எனவும் அந்த 20 பேரில் 5 பேர் பெண்களாக இருக்க வேண்டும் எனவும் தி.மு.க தலைமை அறிவுறுத்தியிருந்தது. இதன் பேரில் கடந்த சில வாரங்களாக ஆய்வுப் பணிகளில் பொறுப்பாளர்கள் வேகம் காட்டி வந்தனர். ஆனால், இதன் விவரங்களை அவர்கள் இன்னமும் அறிவாலயத்துக்கு அப்டேட் செய்யவில்லை. `உண்மையான நிலவரம் தெரிந்துவிட்டால், கட்சிப் பதவிக்கு ஆபத்து வந்துவிடும்' என்பதால் பல பொறுப்பாளர்கள் சைலன்டாகிவிட்டனர் என்கின்றனர் அறிவாலயப் பொறுப்பாளர்கள். 

``நாடாளுமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மாவட்டச் செயலாளர்கள் மீதுதான் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலினே முன்னின்று, புதிய மாவட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்தார். அதில் ஏற்பட்ட குழப்பம்தான் இன்றளவும் கட்சியின் உள்கட்டமைப்பைச் சீர்குலைத்திருக்கிறது" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``கிளை, ஒன்றியம், மாவட்டம் என அனைத்து மட்டங்களிலும் ஒருவரையொருவர் நம்பாத நிர்வாகிகள்தான் இன்றும் பொறுப்பில் இருக்கின்றனர். `பூத்துக்கு 20 பேர் கொடுங்கள்' என ஸ்டாலின் கேட்டார். ஆயிரம் வாக்காளர்களிலிருந்து கட்சிக்கு வேண்டிய 20 பேரைத் தேர்வு செய்வதுதான் அடிப்படையான பணி. மக்களோடு தொடர்புடைய 20 பேரைத் தேர்வு செய்வது என்பது ஒரு கிளைச் செயலாளருக்குப் பெரிய வேலையே இல்லை. சில நொடிகளில் இதைச் சாத்தியப்படுத்திவிடலாம். ஆனால், ஐந்து மாதங்கள் ஆகியும் இந்தப் பணிகள் நிறைவடையவில்லை. 

தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிக்கு ஆள்களை நிரப்ப முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். புதிதாகப் பதவிக்கு வந்துள்ள நிர்வாகிகளால், 20 பேரைக்கூட கொண்டு வர முடியவில்லை. `தலைமை சொல்லிவிட்டதே...’ என அவசரம் அவசரமாக பூத்துக்கு 20 பேர் பெயரை மாவட்ட நிர்வாகிகள் அனுப்பி வைத்துள்ளனர். அந்த 20 பேரும் உண்மையானவர்களா என்பதை கட்சியின் ஐ.டி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். `உங்க பேர்  இதுதானா?' `கட்சியின் பி.எல்.ஏவாக (Booth level Agent) இருக்கிறீர்களா...' என்றெல்லாம் விசாரித்தபோது, `என்கிட்ட போன் நம்பர் வாங்கிட்டுப் போனாங்க. நான் தி.மு.க-வே இல்லை. பி.எல்.ஏன்னா என்னங்க...?' என எதிர்க்கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். வேறு சிலரோ, `நீங்கள் சொல்லித்தான் நான் பூத் ஏஜெண்டுன்னே தெரியுது...' எனக் கூறியுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமை" என்றவர், 

``கட்சிப் பதவிக்கு யார் வர வேண்டுமோ அவர்களை ஒதுக்கிவைத்துவிட்டு, `இவர்தான் மாவட்டச் செயலாளர்' என முடிவு செய்து தேர்தல் நடத்தினார் ஸ்டாலின். அந்த மா.செ-க்களுக்கு வேண்டிய நகர, ஒன்றியச் செயலாளர்களைக் கொண்டு வந்ததன் விளைவுகள்தான் இதெல்லாம். உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பாஸ்கர் சுந்தரம் என்பவர் வடக்கு மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக முயற்சி செய்தார். சாலைப் பணி ஒப்பந்ததாரராகவும் இருக்கிறார். அவருக்கு 80 சதவிகித ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் ஆதரவாக இருந்தனர். மா.செ தேர்தலை அறிவாலயத்தில் நடத்துவதாகப் பாவ்லா காட்டிவிட்டு, 300 ஓட்டு வாங்கிய பாஸ்கர் சுந்தரத்தைத் தோற்கடித்துவிட்டு, 90 ஓட்டு வாங்கிய கும்மிடிப்பூண்டி வேணு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சாலை ஒப்பந்தத்தில் வந்த பணத்தையெல்லாம் கட்சிக்காக செலவு செய்தவர் பாஸ்கர் சுந்தரம். பதவி பறிபோன வருத்தம் இருந்தாலும், அதைப் பற்றி அவர் பெரிதாய் கவலைப்படவில்லை. காவேரி மருத்துவமனை வாசலில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் தினம்தோறும் வந்து சென்றார். 

கருணாநிதி இறந்த 15-வது நாளில் நினைவேந்தல் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் திருச்சி சிவாவும் சுப.வீரபாண்டியனும் பேசுவதாக இருந்தது. இத்தனைக்கும் இலக்கிய அமைப்பு ஒன்றுதான் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதை விரும்பாத கும்மிடிப்பூண்டி வேணு, `என் அனுமதியில்லாம ஊருக்குள்ள வரக் கூடாது' எனத் தலைமையில் புகார் செய்து, திருச்சி சிவாவை வரவிடாமல் செய்துவிட்டார். அந்தக் கூட்டத்தில் 2,000 பேர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் தடையை மீறி, இவ்வளவு பேர் கூட்டத்துக்கு வந்தனர். இன்று வரையில் தடை போட்ட அந்த மாவட்டச் செயலாளர் ஒரு நினைவேந்தல் கூட்டத்தையும் நடத்தவில்லை. இது ஒரு சின்ன உதாரணம்தான். பல மாவட்டங்களில் இதே நிலைதான் நீடிக்கிறது. பூத் கமிட்டி குளறுபடிகளுக்கான அடிப்படையான காரணத்தைக் கேட்கக்கூட ஸ்டாலின் தயாராக இல்லை. `நான் எடுத்த முடிவையே விமர்சனம் செய்வதா...அவர்கள் ஏதோ பொறாமையில் சொல்கிறார்கள்' என விமர்சிக்கிறார். இவற்றையெல்லாம் சரிசெய்தால்தான் பூத் கமிட்டிகளில் வேலை செய்வதற்கு ஆள்கள் வருவார்கள். கட்சியின் உண்மை நிலையைக் கருத்தில் கொண்டு சீர்செய்யும் முயற்சிகளில் ஸ்டாலின் இறங்க வேண்டும்" என்றார் ஆதங்கத்துடன்.