Published:Updated:

ஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்

ஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்

காலத்தின் குரல்

ஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்

காலத்தின் குரல்

Published:Updated:
ஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்
ஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்

மிழ்ச் சமூக வரலாற்றில் பல ஆளுமைகள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். சிலர் மட்டுமே தங்களது அளப்பரிய ஆற்றலால் சமூகப் பங்களிப்பால், தொடர்ந்து சமூகத்தின் நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது இன்மை, அவர்களது செயல்வெளியின் வெற்றிடம் சமூகத்தால் உணரப்பட்டுக்கொண்டேயிருக்கும். அப்படியானவர்களுள் ஒரு பன்முக ஆளுமை, ‘கலைஞர்’ என்று அழைக்கப்படும் மு.கருணாநிதி. பத்திரிகையாளர், திரைப்பட வசனகர்த்தா, தயாரிப்பாளர், பேச்சாளர், எழுத்தாளர், கலை இலக்கிய ஆர்வலர், களச்செயல்பாட்டாளர், அரசியல்வாதி என்கிற பல்வேறு பரிமாணங்களோடு தன் இறுதிமூச்சு வரை தமிழை சுவாசித்த பெரும் வாசிப்பாளர். 20-21 ம் நூற்றாண்டின் மகத்தான நினைவுகளில் ‘கலைஞர்’ என்றும் வாழ்ந்திருப்பார்! அவரின் ஆளுமையை, நம்பிக்கைகளை, அரசியல் முன்னெடுப்புகளை, சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கான விவாதிப்பதற்கான ஒரு முன்னெடுப்பாக இந்தச் சிறப்புக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கலைஞருக்கு எமது அஞ்சலி!

ஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘நபிகள் நாயகம்’ விழாவில் கலந்துகொள்ள திருவாரூர் வருகிறார், அப்போது சி.என்.அண்ணாதுரை என அறியப்பட்ட நீதிக்கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணா. அவர் சமீபத்தில் தொடங்கிய ‘திராவிட நாடு’ இதழில் வெளியான ‘இளமைப் பலி’ என்ற கட்டுரையை எழுதியவரைச் சந்திக்க எண்ணி, அவரை அழைத்து வரச் சொல்கிறார். ஒரு 15 வயது சிறுவன் வந்து நிற்கிறான். ஆச்சர்யத்தோடு அண்ணா, “நீயா கருணாநிதி?” எனக் கேட்க, “ஆம்” என்கிறான் அந்தச் சிறுவன். அடுத்து அண்ணா, ‘‘பள்ளியில் படிக்கிறாயா?’’ எனக் கேட்டு, ‘‘இனிமேல் படிப்பைக் கவனி, எழுதாதே. அரசியலெல்லாம் பின்னர் பார்க்கலாம்” எனக் கண்டித்து அனுப்புகிறார். அண்ணாவின் அந்த அன்புக் கட்டளையை மீறுகிறது கருணாநிதி என்ற அந்த எழுத்தாள/பத்திரிகையாளன் ஆர்வம். விளைவு, பள்ளி இறுதித் தேர்வில் தோற்று, உயர்கல்வி கற்க இயலாதவராகிறார் அந்த இளைஞர். உயர்கல்வியைத் தொடர முடியாமைக்காகப் பலமுறை வருந்துகிறார். ஆனால், இறுதி வரை அரசியல் அதிகாரத்தின் அத்தனை உயரங்களையும் தொட்ட பின்பும், தன்னை ஒரு ‘பத்திரிகையாளன்’ என்று அறிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறார், கலைஞர் எனும் இளைஞர்.

பள்ளிப்பருவத்தில் ‘மாணவ நேசன்’ கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்குகிறது, கலைஞர் எனும் பத்திரிகையாளரின் பணி. கையெழுத்துப் பத்திரிகையைத் தோழர் தென்னனோடு 50 பிரதிகள் எடுத்து சுற்றுக்கு விடுகிறார்கள். தமிழ் வேந்தர்கள் மீது பெருமிதம் கொண்டிருந்தவரான கலைஞரின் முதல் புனைப்பெயர், ‘சேரன்’ என்பதே.

முப்பதுக்கும் குறைவான எண்ணிக்கையோடு நின்றது ‘மாணவ நேசன்’. பின்னர், தொடங்கியது அசலான அரசியல் இதழ் ‘முரசொலி.’ இது அடிப்படையில் ஒரு துண்டுப்பிரசுரம் மட்டுமே. அதிலும் திங்களிதழ். சில ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு, தஞ்சை மாவட்டத்தின் திராவிடர் கழகக் கிளைகளுக்கு அனுப்பப்படும். கிளை உறுப்பினர்கள் வசூலித்துத் தரும் பணம் வழியாகவே ‘முரசொலி’ தொடர்ந்தது. முரசொலி தொடங்கியபோது, கலைஞருக்கு 18 வயது நிரம்பியிருந்தது. ‘முரசொலி’ முகப்பில் வெற்றி என்பதன் அடையாளமாக ஆங்கிலத்தில் ‘V’ என்ற எழுத்து அச்சிடப்பட்டது. பத்திரிகையின் ‘தோற்றம் ஈ.வே.ரா ஆண்டு 67’ என்று ஆண்டுக்கணக்கை பெரியாரின் பிறந்த ஆண்டைக்கொண்டு கணக்கிட்டு வெளிவந்த முதல் இதழ் ‘முரசொலி’தான். அது தவிர, ‘முரசு’ ஆண்டையும், ‘ஒலி’ திங்களையும் குறிப்பிட்டன. 1943-ம் ஆண்டு, முதலாம் ஆண்டு விழாவுக்கு நாவலர் நெடுஞ்செழியனையும் பேராசிரியரையும் அழைத்துவருகிறார். ‘முரசொலி’ தஞ்சையைக் கடந்தும் தன் கால் பதிக்கிறது.

1944-ம் ஆண்டு, தில்லையில் (சிதம்பரத்தில்) தீட்சிதர்கள் நடத்திய ‘வருணாசிரம மாநாட்டிற்கு’ எதிராக ‘முரசொலி’ இதழ், ‘வருணமா? மானமா?’ என்ற துண்டுப்பிரசுரம் வெளியிடுகிறது. ‘சமதர்ம சங்கநாதம் சனாதனிகளின் காதைத் துளைக்குமளவு சுயமரியாதைக் காரர்களால் ஒலிக்கப்படும் நேரத்தில்... இளித்தவாயர்களை உண்டுபண்ணி னால்தான் களித்திருக்க வழி ஏற்படும் எனக்கண்டு, மடிந்துபோன வர்ணாசிரமப் பிணத்தை மயக்கமென்று கூறித் தண்ணீர் தெளித்துக் கண்ணீர் பெருக்குகிறார்கள்’’ என முழங்குகிறது அந்தத் துண்டுபிரசுரம்.

இப்படி முழங்கியவர்க்கு அதே ஊரில் பெண் பார்த்து மணம் முடிகிறது. ‘வர்ணாசிரம மாநாடு எதிர்ப்பாளன்’ ஊருக்குள் நுழையக் கூடாது என   தடைவிதிக்கப்பட்டு சிக்கலாகிறது புதுமாப்பிள்ளைக்கு. எதிர்ப்புகளில் வளர்ந்ததுதானே கலைஞர் எனும் எழுத்தாள ஆளுமை. 1944-ல் சிதம்பரத்தில் திருமண விழா அன்று, மாலை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் ‘கிந்தனார் சரித்திரம்’ நாடகம். ஏற்பாடு செய்த புதுமாப்பிள்ளை வீட்டுக்குள் நுழைய முடியாத கூட்டம், புழக்கடையில் நின்று நாடகம் கேட்கிறார். இந்த எழுத்தாள/ பத்திரிகையாளர் இவ்வளவு பிரபலமானபோது வயது 20.

ஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்

கலைஞரின் நீண்ட வாழ்நாள் காலம், அவருக்கு 80 ஆண்டுகால பொது வாழ்க்கையைக் கொடுத்தது என்றால், அவரது போராட்ட குணம், அவரை 75 ஆண்டுகளுக்கு முன்னரே அவரது ஆளுமைக்கு வெளிச்சம்போட்டது. கலைஞர் எனும் படைப்பாளியின் வளர்ச்சி, நாடகம், திரைத்துறை என விரிந்தபோது பத்திரிகையாளன் கொஞ்சம் இடைவெளி கொடுத்து விலகிநின்றான். ஆனால், இடைவெளிகளில் பத்திரிகையாளன் உயிர்த்தபடிதான் இருந்தான் என்பது மட்டுமே அதன் மீதான கலைஞரின் அளவறந்த காதலுக்குச் சாட்சி. திருவாரூரிலிருந்து கோவை சென்று திருவாரூர் திரும்பியபோது, மீண்டும்  ‘முரசொலி’த்தது. பின்னர் விழுப்புரம், பாண்டிச்சேரியில் பரீட்சித்துப் பார்த்த ‘திராவிட நடிகர் சங்க’ முயற்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது  ‘பத்திரிகையாளர்’ கருணாநிதிக்கு பெரியார் விடுத்த அழைப்பே.

கலைஞர் வாழ்வின் மிக முக்கியமான பத்திரிகைப் பயிற்சி, பெரியாரின் ‘குடியரசு’ இதழில் நிகழ்ந்தது என்பது கவனத்திற்குரியது. ஈரோடு  ‘குடியரசி’லிருந்து சேலம் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ வழியாக இடப்பெயர்வு சென்னை வந்தடைந்ததும் பத்திரிகையாளன் முந்திக்கொண்டான். இப்போது, 1954-ல் ‘முரசொலி’ இதழ் உரிய கட்டமைப்பு வசதிகளோடு செயல்படத் தொடங்கியது.அவரது ‘முதல் பிள்ளை’யான ‘முரசொலி’ இப்போது சவளைப் பிள்ளையாகவன்றி திடகாத்திரமானான். 50-களின் தமிழ் சினிமாவை ஆண்டவரின் பிள்ளையல்லவா இப்போது அவன். கலைஞர் இப்போது முழுநேரத் திரைக்கதை, வசனகர்த்தா, முழுநேரப் பத்திரிகையாளர், முழுநேர அரசியல் களச்செயல்பாடுகொண்ட தி.மு.க முன்னோடிகளின் முன்வரிசையில். பல வேளைகளில், அதிருப்தியாளர்களுக்கு இவற்றை ஒரு இளைஞன் ஒருசேரச் செய்தான் என்பதையே ஏற்க முடியாது.ஆனால், இதுதான் தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால அரசியலை உள்ளும், புறமுமாக இருந்து, அதன் அத்தனை நகர்வுகளிலும்  பிரதான பங்களிப்பு செய்தவராக கலைஞரை மாற்றியது.

இதில் முக்கியமான கூறு, பத்திரிகை, திரைப்படம், களஅரசியல் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்பானவையாகவும், ஒன்றை ஒன்று வளமும், பலமும் கூட்டுபவையாக இருந்ததும், ஆனதும் கண்கூடு. கட்சி நிகழ்வுகள், செய்திகள் ஆயின. மேடைப் பேச்சுகள், கட்டுரைகள் ஆகின. உடன்பிறப்புக்கான தினசரி மடல், இடைவிடாத உரையாடல் களமாகியது. கட்சியின் கருத்துக்களை, செயல்திட்டங்களை, வெகுமக்கள் வெளிக்கு கடத்தும் அரிய சாதனமாகியது திரைப்படம். மடல்கள் தம்பிகளுக்கு சொன்னதை, ‘பராசக்தி’ குணசேகரனும், ‘மனோகரா’ மனோகரனும், ‘மலைக்கள்ளன்’ நாயகனும் மக்களுக்குச் சொன்னார்கள். இந்த நுட்பத்தைப் பிறரைவிட கலைஞர் மிகச் சிறப்பாக, மிக உயர்ந்த தரத்தில் கையாண்டார் என்று சொல்வது, மற்றவர்களை எளிமைப்படுத்துவதாகாது.       
              
1954-ல் நிரந்தரமான வார இதழானதும் முரசொலியில் ‘எழுத்தாணி பதில்கள்’,  ‘பொன்முடிக்குக் கடிதம்’, ‘சுழல்விளக்கு’ போன்ற பகுதிகள் அவரது எழுத்துகளால் மிளிர்ந்தன. அந்த நாளில் தி.மு.க-வின் மிகப் பெரிய சவால், முந்நூறுக்கும் மேலான எண்ணிக்கையில் வெளிவந்துகொண்டிருந்த பத்திரிகைகள். ஆம், ஒவ்வொரு பொறுப்பாளரும் பத்திரிகை நடத்திய கட்சியொன்று உண்டென்றால், அது தி.மு.க.தான் என உறுதியாகச் சொல்லலாம். எனவே, ஒருவரின் கருத்து மற்றும் மொழிநடை மட்டுமே அவரது எல்லைகளை விரித்துச் செல்லும் சாத்தியம்கொண்டது. அண்ணாவின் ‘திராவிட நாடு’ அதிகாரப்பூர்வ நாளேடு என்றால், அதற்கடுத்து வெகுவாக கட்சியினரால் கொண்டாடப்பட்டது ‘முரசொலி’. அண்ணாவின் எழுத்துகளில் காணப்பட்ட நிதானம், தலைமைக்கான பொறுப்பு என்றால், கலைஞரின் எழுத்துகள் செயல்வீரர்களைக் கிளர்ந்தெழச் செய்யும் வகையானது. அண்ணா, ‘தம்பி, தியாகத் திருவுருவே புறப்பட்டு வா’ என்றால், அதையே கலைஞர், ‘அண்ணன் அறைகூவல் கேட்டாயா தோழனே, தடை உடைக்க படையெடுத்து வா’ என எழுதுவார்.

திராவிட இயக்கத்தை, அதன் மிக அரிதான பங்களிப்பை அங்கீகரிக்க மறுப்போர், அறியாமையில் செய்யும் பிழை அது என்றே சொல்ல வேண்டும். 30-களின் நடுவிலிருந்து அண்ணாவும், 40-களின் தொடக்கத்திலிருந்து கலைஞரும் ஆற்றிய பணிகள் 1957-க்குப் பின்னரான ஆட்சியதிகாரம் நோக்கிய நகர்வு கருதியதில்லை. காலமும் சூழலும் அதைத் தேர்வாக்கின. அவர்களுக்கான படைக்களன்கள் எப்போதும் எழுத்துகளும் மேடைப் பேச்சுகளுமே. திராவிட இயக்கத்தின் அத்தனை இதழ்களும் செம்பணியாற்றியவையே. ஆனால், காலம் கடந்தும் விஞ்சி நின்றவை ‘திராவிட நாடும்’,  ‘முரசொலி’யுமே. அதன் காரணம், அவற்றின் மொழியாற்றலும் சொற்சுவையுமே.கழகத்தவர்களில் கற்றவர்கள் எண்ணிக்கை உண்டெனினும், முற்றிலுமாக அவர்கள் மட்டுமே இருந்தனர் என்று கருத இயலாது. கழகக் கிளைகளில் ‘திராவிடநாடு’ம்,  ‘முரசொலி’யும் உரத்த குரலில் வாசிக்கப்பட்டு தோழர்களால் ‘கேட்கப்பட்டது’. அது கருதியும் அண்ணாவும் கலைஞரும் அந்த அலங்கார மொழிநடையைக் கையாண்டனர். ஆனால், ‘திராவிட நாடு’ மற்றும் ‘முரசொலி’ கொண்டுவந்து சேர்த்த தகவல்கள், உலக அரசியல் நிகழ்வுகளை வாரந்தோறும் அவர்களை வந்தடையச் செய்தன. இந்த வகையில் அண்ணாவின் தாக்கம் கலைஞரிடம் அபரிமிதமாய் உண்டு. ஓர் ஆண்டைக் குறிப்பிட்டால், அதே நாளில், அதே திங்களில் உலகெங்கும் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளைப் பட்டியலிட்டுவிட்டுத்தான் இங்கே வருவார்கள். ஆனால், அவை வெறும் செய்திகளல்ல, இதர நாடுகளில் நிகழ்ந்துவரும் அரசியல் மாற்றங்கள் குறித்த தகவல்கள். பிரெஞ்சுப் புரட்சி, இரண்டாம் உலகப் போர், ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கறுப்பர் பிரச்னை தொடர்பில் நடக்கும் விவாதம், பிரிட்டீஷ் தொழிலாளர் கட்சி நடவடிக்கை... என விரியும். குடியரசு மற்றும் ஜனநாயகம் பற்றிய விவாதம் தொடர்ந்தபடி இருக்கும். வால்டேரும், ரூசோவும் தி.மு.க-வினரின் பேச்சிடையே குதித்து இறங்குவார்கள். உலகிலேயே, ஏன் பிரான்ஸ் நாட்டில்கூட இத்தனை பேர் வால்டேர், ரூசோ என்ற பெயருடன் இருப்பார்களா என்பது நிச்சயமாகச் சந்தேகமே. ஆனால், தி.மு.க குடும்பங்களில் இன்றும் ரூசோக்கள் உண்டு.

ஐம்பதாண்டுக் கால ‘தலைப்புச் செய்தி’யான பத்திரிகையாளன்

காலமும் தேவையும் அவரது எழுத்துகளைத் தீர்மானித்தன. 1957-ல் தேர்தல் களம்கண்டதும், கட்சியில் உருவான உட்கட்சி பூசல்களும் ‘முரசொலி’யை 1960-ல் நாளிதழாக்கியது. தினசரியாகத் தொண்டர்களுடன் உரையாட வேண்டிய தேவை அதற்கான காரணமானது. ஐம்பதுக்கும் மேலான ஆண்டுகள், நாள் தவறாமல் ‘உடன்பிறப்பிற்குக் கடிதம்’ என்பதே அவரது எழுத்துப் பணிக்கான நிறைவான அத்தாட்சி. ஆனால், கலைஞர் எனும் எழுத்தாளர் கடுமையான வாசகனாகவும் தன்னைக் காத்துவைத்திருந்தார் என்பதுதான் கவனத்திற்கு உரியது. ஒரு பத்திரிகையாளனாக, அரசியல்வாதியாக, ஆட்சியாளராக அவர் காலை ஐந்து மணிக்குள்ளாக அத்தனை தினசரிகளையும் வாசித்து முடித்துவிட்டுத்தான் ஒவ்வொரு நாளையும் தொடங்கினார் என்பதே ஒவ்வொரு பத்திரிகையாளனுக்குமான அரிதான பாடம்.

தனது சக மற்றும் எதிர்தரப்பின் கருத்தை, மக்களின் ஆதங்கத்தை, அன்றாட நிகழ்வுகளை அறியாதவர் உருவாக்கும் கருத்து என்பது பெரும்பாலும் வீணான கற்பனாவாதமாகவே இருக்க இயலும். அதிலும் மக்கள் பிரச்னை, அரசியல் நகர்வு போன்றவை இதன்றி எப்படிச் சாத்தியமாகும். 1963-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைமையேற்ற கலைஞர், அந்தப் போராட்டம் நீண்ட இரண்டு ஆண்டுகளில் பலமுறை தடுப்புக் காவலில் சிறையிலடைக்கப்பட்டார். தி.மு.க இந்த இரண்டு ஆண்டுகளில் சேலம், தஞ்சை, திருநெல்வேலி, சென்னை ஆகிய ஊர்களில் ‘இந்தி எதிர்ப்பு’ மாநில மாநாடுகளையும், பல நூறு கூட்டங்களையும் நடத்தியது. அவற்றுக்கான அழைப்பாக, களச்செய்தியாக, உயிர்த் தியாக அஞ்சலியாக எழுத்துகள் அந்த எதிர்ப்புணர்வுக் கனல் தனிந்துவிடாமல் காத்தன. இறுதியாக 1965 பிப்ரவரி 16-ம் நாள் இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுவதற்குத் தேர்வான, இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தைத் தூண்டியதாகச் சேர்க்கப்பட்ட ஆவணம், அவர் ‘முரசொலி’க்காக எழுதிய ‘ஒரு கண்ணில் சுண்ணாம்பு’ எனும் தலையங்கமும், ‘நீட்டோலை’ எனும் மடலும் என்பது அந்த பத்திரிகையாளனின் பணிக்கான சான்று.

இந்தப் பத்திரிகையாளன், இந்திரா அம்மையார் கொண்டுவந்த நெருக்கடிநிலை காலத்தில் , பத்திரிகை சுதந்திரத்தைக் காக்க எடுத்த முயற்சிகளும் கையாண்ட வழிமுறைகளும் போதும், அவரது பத்திரிகை பங்களிப்பைக் காலத்திற்கும் பறைசாற்ற. பத்திரிகைக்கான முன் தணிக்கை அமலில் இருந்தபோது, தலையங்கம் எழுதுவதே நடக்காத காரியம். தலைப்புச் செய்தியின் கதை, அதைவிட மோசம். ‘வெண்டைக்காய் சாப்பிட்டால், மூளை வளர்ச்சியடையும்; ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு’ எனத் தலைப்புச் செய்தி. தணிக்கையானதால் வெளிவர முடியாத செய்திக்கான இடம் வெற்றிடம் அல்லது கருப்பு அச்சு. நெருக்கடிக் கால கைதானோர் பட்டியல் வெளியிடத் தடை. எனவே, “அண்ணா நினைவு அஞ்சலிக்கு வரமுடியாதோர்” என அதே பட்டியல். இதுபோன்ற எண்ணற்ற தகவல்களை அடுக்க முடியும். ஈழத்தமிழர் பிரச்னை, ஒன்றிய அரசுடானான உரிமைப் போர், ஆளுங்கட்சியாக இல்லாதபோது தொடர்ந்து ஆட்சியாளர்களின் தவறுகளை இடித்துரைப்பது என மாபெரும் பட்டியல் அது. 70 ஆண்டுகள் நீண்ட பத்திரிகைப் பணி குறித்து எழுத நூல்தான் சாத்தியம், கட்டுரை போதாது. ஒரு வரியில் சொல்ல முயல்கிறேன். கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’  வாசியுங்கள் போதும். அண்ணா எனும் தன் தலைவனின் சொல், செயல் வழியாக மட்டுமே தன் வாழ்வினைப் பேசும் ஒரு அற்புதமான பத்திரிகையாளனைக் காண்பீர்கள். அண்ணா வாழ்ந்து மறைந்த காலம் முழுதும் அவரது அற்புத வரிகளை நினைவுகூர்ந்தே எழுதும் முறை , சுயசரிதை எழுதல் முறையின் புதிய வடிவம்.

நாளும் அண்ணாவின் புகழ்பாடி வழிநடந்த தம்பி கலைஞர், ஐம்பதாண்டு கால தமிழ்நாட்டின் ‘தலைப்புச் செய்தியும்’ ஆனார் என்பதே வரலாறு.

வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்
தொகுப்பு  : வெய்யில்