Published:Updated:

‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை?

‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை?
பிரீமியம் ஸ்டோரி
‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை?

காலத்தின் குரல்

‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை?

காலத்தின் குரல்

Published:Updated:
‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை?
பிரீமியம் ஸ்டோரி
‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை?
‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை?

லைஞர் இறந்ததையொட்டி நூற்றுக்கணக்கான அஞ்சலிக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் நூற்றுக்கணக்கான அஞ்சலிக் கட்டுரைகள் எழுதப்படலாம்; எழுதப்பட வேண்டும். எண்பது ஆண்டுகால பொதுவாழ்க்கைகொண்ட கலைஞரின் அரசியற் செயற்பாடுகள், தமிழர்களின் வாழ்வில் குறுக்கும் நெறுக்குமாய் ஊடுபாவியிருக்கின்றன. ‘முரசொலி’யைக் கையெழுத்துப் பத்திரிகையாக நடத்திய காலம்தொட்டு, ஃபேஸ்புக்கில் தனக்கெனத் தனிப்பக்கம் ஆரம்பித்துப் பதிவிடுவதுவரை நான்கு தலைமுறைக் காலங்களில் நெடிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் அவர். வெறுமனே அரசியல் தலைவராக மட்டுமில்லாமல் கலை, இலக்கியம், இதழியல் என வெவ்வேறு களங்களில் இயங்கியவர் என்பதால், கலைஞர் குறித்து விரிவாக எழுதப்படுவது சாத்தியமும் தேவையுமாகும். ஆனால், இந்தக் கட்டுரை, கலைஞர் பெரியாரிடமிருந்து விலகிய புள்ளிகளில் அவரது இயங்குதளம் எப்படி இருந்தது என்பதை ஆராய முற்படுகிறது.

1925-ல் பெரியார், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ‘சுயமரியாதை இயக்க’த்தைத் தொடங்கியதிலிருந்து திராவிடர் இயக்கத்தின் எழுச்சிக்காலம் தொடங்குகிறது. அதற்கு ஓராண்டுக்கு முன்பு 1924-ல் கருணாநிதி பிறந்தார். (சுயமரியாதை இயக்கத்துக்கு முற்றிலும் நேர்மாறான ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டதும், தான் பிறந்த காலகட்டத்தில்தான் என்பதைக் கலைஞர் ‘நெஞ்சுக்கு நீதி’ முதல் பாகத்தில் பதிவு செய்திருக்கிறார்). 1925 முதல் 1948 வரை பெரியாரின் தலைமையை ஏற்று, சமூக விடுதலை இயக்கமாகச் செயற்பட்ட அண்ணாவும் அவரது தம்பிகளும், 1949 செப்டம்பர் 17-ல் பெரியாரிடமிருந்து விலகி தி.மு.க-வைத் தொடங்குகின்றனர். திராவிடர் இயக்கத்திலிருந்து முதல் ‘திராவிட’ இயக்கம் உருவானது. பெரியாரிடமிருந்து சில புள்ளிகளில் விலகி, தமக்கான பாதையை உருவாக்கிக்கொண்டனர் ‘கண்ணீர்த்துளிகள்’.

முதலாவதாகக் கடவுள் மறுப்பு. ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்ற பெரியாரிடமிருந்து விலகிய அண்ணா, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார். கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் இணையும் இயக்கமாகத் தி.மு.க மாறினாலும், தொடக்ககால தி.மு.க-வினர் பெரும்பாலும் நாத்திகர்களாகவே இருந்தனர். திருப்பதிக்குப் போய்வந்த சிவாஜி கணேசனுக்குத் தி.மு.க-வில் எதிர்ப்புகள் எழுந்ததும் வெறுப்புற்ற அவர், காங்கிரஸுக்குச் சென்றதும் வரலாறு. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகத் தி.மு.க, நாத்திகர்களைவிட இறைநம்பிக்கையாளர்கள் அதிகம் உள்ள கட்சியாக மாறியது. ஆனால், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று தன் கட்சியின் கொள்கையாகச் சொல்லிக்கொண்டாலும் அண்ணா, தன்னளவில் நாத்திகராகத்தான் இருந்தார். அதேபோல்தான் கலைஞரும். இறுதிவரை நாத்திகராகவே வாழ்ந்து மறைந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை?

அண்ணா இருந்த காலத்தைவிட கலைஞரின் காலம் நீண்டது, சிக்கலான பரிமாணங்களைக்கொண்டது என்பதால், அவர் நாத்திகராகவே நீடித்ததும் தன்னை அவ்வாறே வெளிப்படுத்திக்கொண்டதும் உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் ஸ்டாலின் சொன்னதைப்போல், தி.மு.க-வில் இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள்; தி.மு.க.வுக்கு வெளியில் தி.மு.க-வின் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்களும் இந்துக்கள்தான். ஆனாலும், கலைஞர் ‘இந்து என்றால் திருடன்’, ‘ராமன் என்ன என்ஜினீயரா?’, ‘நெற்றியில் என்ன, ரத்தம் வழிகிறதா?’ என்று இந்துமதம் குறித்த கேலியும் கிண்டலும் நிறைந்த விமர்சனங்களை முன்வைக்கத் தவறியதில்லை. உண்மையில் இந்தியளவில் இடதுசாரிகள்கூட மதத்தில் கைவைக்கத் தயங்கிநிற்கும் சூழலில், ஒரு மாநிலக் கட்சியாக, மையநீரோட்ட அரசியல் கட்சியாக, இறைநம்பிக்கையுள்ளவர்களைத் தேர்தலுக்காகச் சார்ந்திருக்கும் கட்சியாக இருக்கும் தி.மு.க-வின் தலைவராக இருந்து, கலைஞர் இதைச் செய்ததுதான் குறிப்பிடத்தக்கது. அதனாலேயே அவர் அரசியல் வாழ்வில் பல சமரசங்களைச் செய்தாலும் சனாதனம் கடைசிவரை அவரைச் சகித்துக்கொள்ளவில்லை. ‘கருணாநிதி’ என்ற பெயரை வெறுப்புடனே அணுகியது. அதேபோல் சித்தர்கள், பௌத்தம், சமணம், ஆசீவகம், வள்ளலார், அயோத்திதாசர் என்று தொடர்ச்சியாகவே எதிர்க்குரல்களால் பக்குவப்பட்ட தமிழ்மரபும் கலைஞர் எனும் அரசியல் தலைவரை அவரது இந்துமத எதிர்ப்புடனும் நாத்திகத்துடனுமே உள்வாங்கிக்கொண்டது. அவரது தேர்தல் வெற்றிகளை இது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பது இந்தியச் சூழலில் எடுத்துப்பார்த்தால் ஒரு மகத்தான அரசியல் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.

பெரியாரிடமிருந்து அண்ணாவும் கலைஞரும் விலகி நின்ற இன்னொரு முக்கியமான புள்ளி தமிழ் இலக்கியங்கள், தமிழ்ப்பெருமிதம் குறித்த பார்வை.

பெரியாரைப் பொறுத்தவரையில் மொழி என்பது, தொடர்புகொள்வதற்கான ஒரு சாதனம் மற்றும் அதிகாரங்களைக் கட்டமைக்கும் கட்டவிழ்க்கும் களம். அதைத்தாண்டி, மொழி என்பது வழிபாட்டுக்குரியதல்ல. மொழி மட்டுமல்ல எதுவுமே வழிபாட்டுக்குரியதல்ல. பழந்தமிழர் பெருமை என்பது, நவீனச் சிந்தனைகளை முன்வைப்பதற்கான பெரும் இடையூறு. புலவர்களும் தமிழறிஞர்களும் மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லாத பழமைவிரும்பிகள். பகுத்தறிவு, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு எனும் அடிப்படையில்தான் பழம் இலக்கியங்களை அணுக வேண்டும். புது இலக்கியங்களைப் படைக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. அதனால்தான் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டத்தில் குதித்தாலும்,  “மொழிப் போராட்டம் என்பது கலாசாரப் போராட்டத்தின் ஒரு பகுதியே” என்றார் பெரியார். பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்த பேதக் கருத்துகளையும் மூடநம்பிக்கைகளையும் கடுமையாகச் சாடி, ‘தமிழ்ப் புலவர்கள் எல்லாம் மரண தண்டனை முதல் ஆயுள்தண்டனை வரை கொடுக்கத்தக்கவர்கள்’ என்றார். ‘தமிழ், காட்டுமிராண்டிகளின் மொழி’, ‘சனியனான தமிழ்’ என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதேநேரத்தில் இந்தி எதிர்ப்பு, எழுத்துச் சீர்திருத்தம், நவீனச் சிந்தனை முறையைத் தமிழ்ச் சூழலில் உருவாக்கியது, அம்பேத்கர் தொடங்கி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வரை பிற மொழிகளில் உள்ள பல முற்போக்கு விஷயங்களை மொழிபெயர்த்து வெளியிட்டது என்று பலவகையில் தமிழைச் செழுமைப்படுத்த உதவினார் பெரியார்.

ஆனால், அண்ணாவும் கலைஞரும் பெரியாரிடமிருந்து மாறுபட்டவர்கள். பெரியாரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட தமிழ் மன்னர்களையும் கற்பின் அடையாளமான கண்ணகியையும் உயர்த்திப் பிடித்தவர்கள். “வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்றார் கலைஞர். தமிழை வழிபாட்டுக்குரிய ஒன்றாக மாற்றினர். இவை முற்றிலும் பெரியாரியத்துக்கு எதிரானவை. அதேநேரத்தில் இன்னும் சில கோணங்களில் இந்தப் பிரச்னையை அணுகலாம் என்று கருதுகிறேன்.

பழந்தமிழ் இலக்கியங்களில் நிறைந்துகிடந்த வர்ணாசிரமக் கருத்துகள், சாதியச் சிந்தனைகள், ஆணாதிக்கக் கூறுகள் ஆகியவற்றை பெரியார் கடுமையாக விமர்சித்தது, உண்மையில் அளப்பரிய நவீனச் சிந்தனையே. எந்த ஒன்றையும் வழிபாட்டுக்குரியதாக மாற்றாமல் விமர்சனபூர்வமாக அணுகுவதும் நவீனச் சிந்தனைக்கு அவசியமான ஒன்றே. அதேநேரத்தில் பெரியார் தமிழ் இலக்கியங்களை விமர்சித்தபோது, இங்கு நிலவிவந்த அவைதீக மரபைக் கணக்கிலெடுக்கத் தவறினார். ஐம்பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறுகாப்பியங்களும் பௌத்த, சமண இலக்கியங்கள். நீண்டநெடுங்காலம் பௌத்தமும் சமணமும் கோலோச்சிய தமிழ் மண்ணைப் பார்ப்பனிய சனாதனம் கைப்பற்றியது. பக்தி இலக்கியத்தின்வழி இது சாத்தியமாயிற்று. ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ போன்ற முக்கியமான நூல்களை எழுதிய மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார், சுயமரியாதை இயக்கத் தொடர்புடையவர் என்றாலும், இத்தகைய அவைதீகத் தமிழ் மரபு குறித்து பெரியார் கவனம்கொள்ளவில்லை. ஆனால், ஆச்சர்யமாக கலைஞர்  முன்வைத்த ‘குறளோவியம்’, ‘பூம்புகார்’, ‘கண்ணகி சிலை’, ‘மந்திரிகுமாரி’யில் குண்டலகேசி பாத்திரம் என்று பெரும்பாலானவை சமண, பவுத்த இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டவையே. ‘அவைதீக மரபு’ என்று பின்னாளில் தமிழ் நவீனக் கோட்பாட்டாளர்கள் சுட்டக்கூடிய அளவுக்கு கலைஞருக்குக் கோட்பாட்டுத் தெளிவு இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால், மதம் சார்ந்த இலக்கியங்களுக்கு மாற்றாக, வைதீக அடையாளங்களுக்கு மாற்றாக வள்ளுவரையும் சிலம்பையும் கண்ணகியையும் அவர் தமிழ் வெகுமக்களிடம் கொண்டுசேர்த்தது முக்கியமானது.

அதேபோல், ‘கடவுளின் இடத்தில் எதை வைப்பது?’ என்ற கேள்வி காலந்தோறும் தொடரக்கூடிய ஒன்று. புத்தர் தொடங்கிச் சமகாலம் வரை கடவுளுக்கும் மதவுணர்வுக்கும் மாற்றாக எதை நிரப்புவது என்ற குழப்பம் நீடித்துக்கொண்டு தானிருக்கிறது. புத்தரும் பெரியாரும் அறவுணர்வையும் சமத்துவத்தையும் கடவுளின் இடத்தில் வைத்தனர். ஆனால், கலைஞரும் அண்ணாவும் கடவுளின் இடத்தில் தமிழை முன்வைத்தனர். தமிழுணர்வு என்பதைக் கிட்டத்தட்ட மதவுணர்வாக மாற்றினர். இங்கே மதத்திற்காகத் தற்கொலைகள் நடந்ததில்லை. ஆனால், தமிழுக்காக, ஈழத்தமிழர் பிரச்னைக்காக, தமிழைக் காப்பாற்றுவதாகக் கருதப்பட்ட இயக்கத்திற்காகத் தற்கொலைகள் நடந்தன. இவற்றுக்கு அடிப்படையாக இருந்தது, மதவுணர்வுக்கு மாற்றீடு செய்யப்பட்ட தமிழுணர்வே. இதைச் சாத்தியமாக்கியவர்கள் அண்ணாவும் கலைஞரும். சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் ‘தமிழர்’ என்னும் பொதுஅடையாளத்தை, உணர்ச்சிமிக்க தமிழுணர்வால் அவர்கள் உருவாக்கினர். அதனால்தான் சிறுபான்மைச் சாதியைச் சேர்ந்த, சாதியத்தால் கீழ்மையோடு பார்க்கப்பட்ட சாதியைச் சேர்ந்த கலைஞர் தி.மு.க-வின் தலைவராகவும் ஐந்துமுறை தமிழக முதல்வராகவும் ஆகமுடிந்தது.

‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை?

அதேநேரத்தில் பெரியாரால் ஆழமாக விமர்சிக்கப்பட்ட ஆணாதிக்கக் கூறுகள், கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத்தவரிடம் மோசமாகப் படிந்திருந்தன. கணவனைக் கொல்லும் ‘குண்டலகேசி’ பாத்திரம், ‘தெய்வந் தொழா அள்’ குறளுக்கு நவீனச் சிந்தனையின் அடிப்படையில் உரை எழுதியது, மூவலூர் ராமாமிர்தம் போன்ற முன்னோடிப் பெண்களின் பெயரில் திட்டங்களைக் கொண்டுவந்தது போன்றவற்றைக் கலைஞர் செய்திருந்தாலும் அவரது இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் ஆணாதிக்கம் மிகுந்தே இருந்தது. தி.மு.க பேச்சாளர்களின் மேடைப்பேச்சுகள் ஆணாதிக்கத்துக்கான அவல உதாரணங்கள்.

பெரியாரிடமிருந்து தி.மு.க விலகிய இன்னொரு முக்கியப் புள்ளி, ‘அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்’.

‘ஓட்டுப்பொறுக்கிகள்’ என்று அரசியல் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்த பெரியார், இறுதிவரை தேர்தல் அரசியலில் பங்கேற்பதிலிருந்து விலகி நின்றார். ஆனால், அதேநேரத்தில் தேர்தல் அரசியல் என்பது தவிர்க்க முடியாததாகவும் மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. 1947-க்குப்பின் உருவான ‘சுதந்திர இந்தியா’, ‘தேர்தல் ஜனநாயகம்’, ‘அரசியல் சட்டம்’ ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பெரியாருக்கும் இருந்தது. 30-களில் சுயமரியாதை இயக்கத்தின் செயற்பாடுகளையும் 50-களுக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் செயற்பாடுகளையும் ஒப்பிட்டாலே இது புரியும். ‘மொழிவழி மாநிலங்கள்’ அமைந்தபிறகு, ‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டதைப்போல, ‘தேர்தல் ஜனநாயகம்’ உருவானபிறகு, ‘அரசுகளைச் சமூகநீதிக் கோரிக்கைகளை நிறைவேற்றப் பயன்படுத்துவது’ என்னும் உத்தியை மேற்கொண்டார் பெரியார். காமராஜர், அண்ணா, கலைஞர் எனத் தன் கொள்கைக்கிசைந்த அரசுகளை ஆதரித்தார். ஆனாலும், தன் இறுதிப் பேருரையில்கூடத் தேர்தல் கட்சிகளைக் கடுமையாக விமர்சிக்கவே செய்தார்.

‘கொள்கைகளுக்குச் செயல்வடிவம் தரவே அரசியல் நுழைவு’ என்று சொல்லி தி.மு.க, தனது முதல் தேர்தலைச் சந்தித்தது. 15 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. கெடுவாய்ப்பாக, தி.மு.க-வின் நிறுவனரான அண்ணா ஓராண்டிலேயே மறைந்தார். ஐந்துமுறை தமிழக முதல்வராகக் கலைஞரே இருந்தார். இதில் இரண்டுமுறை ஆட்சி கலைக்கப்பட்டது.

பெரியாரின் விமர்சனங்களுக்கு நியாயம் சேர்ப்பதைப்போல, பா.ஜ.க-வோடு கூட்டு சேர்ந்தது உள்பட, பல பிசகல்களும் சமரசங்களும் கலைஞரின் அரசியல் வாழ்க்கையில் உண்டு. ஊழல், குடும்ப அரசியல், வாரிசு அரசியல், தனிநபர் வழிபாடு, அதிகார துஷ்பிரயோகம், சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது, இடைநிலைச் சாதி அதிகாரத்தைக் கட்டுப்படுத்தாதது எனப் பல விமர்சனங்கள் அவர்மீது உண்டு. அதேநேரத்தில் பெரியாரின் வழித்தோன்றலாகவும் தி.மு.க-வின் லட்சியங்களான தமிழுணர்வு, மாநிலச் சுயாட்சி, இந்தி எதிர்ப்பு, சமூகநீதி ஆகியவற்றின் அடிப்படையிலும் அவர் நிறைவேற்றிய திட்டங்களும் பிறப்பித்த ஆணைகளும் ஏராளம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான அரசாணை, பெண்களுக்கும் சொத்துரிமையில் பங்கு, உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கான சலுகைகள், முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு, உழவர் சந்தை, சமத்துவபுரம், நுழைவுத் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீடு,  குடிசைமாற்று வாரியம், போக்குவரத்துக் கழகம், சமச்சீர்க்கல்வி, அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு... எனப் பட்டியல் நீளமானது. அதேநேரத்தில் தமிழுணர்வு, திராவிடத்தை முன்வைத்த கலைஞரின் அரசியல் செயற்பாடுகள், அகில இந்திய அளவில் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கலைஞரை நினைவுகூரும் பல்வேறு பதிவுகளைச் சமீபத்தில் கவனித்தவகையில் இரண்டு பதிவுகள் எனக்கு முக்கியமானவையாகத் தெரிந்தன. கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெற்ற, விஜய் டிவி ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பண்பலைத் தொகுப்பாளர் ஒபிலியா ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். “ராஜஸ்தான்ல ராஜஸ்தானி மீடியாவோ பஞ்சாபில் பஞ்சாபி மீடியாவோ இல்லை. எல்லாத்தையும் இந்தி ஆக்கிரமிச்சிருச்சு. ஆனால், இங்கே தமிழ் மீடியா இருக்குன்னா அதுக்குக் கலைஞர்தான் காரணம். அவர் மட்டும் இல்லைன்னா கோபிநாத்துக்குப் பதிலா ஒரு கோபிகபூர் இருந்திருப்பார்” என்றார். வடமாநிலங்களில் வெவ்வேறு மொழிகளை உட்செரித்து, இந்தி ஆக்கிரமித்திருப்பதைப்போல், தமிழகத்தில் நிகழாமல் தமிழ் தனித்தன்மையுடன் விளங்க தி.மு.க-வே காரணம்.

அதேபோல், 20.08.18 ‘இந்து தமிழ்’ இதழில் வெளிவந்த ‘கருணாநிதி இந்தி பேசாத மக்களின் உரிமைகளைக் காத்தவர்’ என்ற மொழிபெயர்ப்புக் கட்டுரையும் என் கவனம் ஈர்த்தது. கட்டுரையை எழுதியுள்ள பத்திரிகையாளரான கர்க சாட்டர்ஜி, தன்னை ‘ஒரு வங்கப் பிராமணன்’ என்றே கட்டுரையில் அறிமுகப்படுத்திக்கொள்கிறார் (கட்டுரை மொழிபெயர்ப்பு: வெ.சந்திரமோகன்). இந்தியா சுதந்திரம் அடைந்த தொடக்ககாலங்களில் ‘குறைந்தகாலத்துக்கு ஆங்கிலம் அலுவல்மொழி; பிறகு இந்தியே அலுவல்மொழி’ எனும் ஏற்பாடு எப்படி இந்தி ஆதிக்கத்துக்கும் பிறமாநிலங்களில் உள்ள உயர்சாதியினருக்குமான ஒப்பந்தமாக இருந்தது என்பதை விளக்கும் சாட்டர்ஜி, தி.மு.க, இந்தி அலுவல்மொழியாக ஆகாமல் தடுத்துநிறுத்தியதாலேயே மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தப்பிப் பிழைத்ததையும் பதிவுசெய்கிறார்.

“ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தக்கவைக்கப்பட்டதால், இந்தி பேசாத குடிமக்களில் குறைந்தபட்சம் மேட்டுக்குடியினராவது முன்னேற்றப் பாதையில் செல்லமுடிந்தது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன். கருணாநிதி உள்ளிட்ட தமிழ்த் தலைவர்களின் தலைமுறையினரின் காரணமாகவே, என்னால் இந்தக் கட்டுரையை எழுதமுடிகிறது; ‘டெய்லி ஓ’ இதழின் ஆசிரியராக இருக்க முடிகிறது; ‘டெய்லி ஓ’ போன்ற ஆங்கில இதழ்கள் இயங்க முடிகிறது. ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள், ஆங்கிலப் பாடப்புத்தகங்கள், ஆங்கில மொழிப் பயன்பாட்டுடனான ஒட்டுமொத்த வேலைவாய்ப்புச் சூழல் போன்றவை இந்திய ஒன்றியத்தில் நீடிக்கின்றன என்றால், அதற்கு கருணாநிதியின் அரசியல் ஒரு காரணம்” என்று அவர் எழுதுவது கலைஞரின் தேசிய முக்கியத்துவத்தை உணர்த்தும்.

அண்ணாவும் கலைஞரும் முன்வைத்த ‘இந்தி எதிர்ப்பு’, ‘மாநிலச் சுயாட்சி’ போன்ற கருத்தாக்கங்களை இன்று மம்தா பானர்ஜி முதல் பினராயி விஜயன் வரை உயர்த்திப் பிடிக்கின்றனர். தொடக்ககால இந்திய தேசியத்தைக் காந்தி ‘உள்ளடக்கும் தேசியமாகவே’ (Inclusive Nationalism) முன்வைத்தார். நேருவும் மதவாத எதிர்ப்பு, முற்போக்குச் சிந்தனைகள் ஆகியவற்றின் மூலம் இதற்கு உடன்பட்டாலும் இந்தித் திணிப்பு விஷயத்தில் ஜனநாயக விரோதமாகவே நடந்துகொண்டார். ஆனால், ‘இந்து - இந்தி - ஒற்றைத்துவ இந்தியா’வை முன்வைக்கும் ‘இந்துத்துவத் தேசியமோ’ மாநிலங்களின் உரிமைகள், தேசிய இனங்களின் அடையாளங்கள், இந்தி அல்லாத பிறமொழிகளின் தனித்துவங்களை அழிக்கப் பார்க்கிறது.

அதை மீண்டும் மீட்டெடுக்கவும் பன்மைத்துவ இந்தியாவைக் காப்பாற்றவும் ‘உள்ளடக்கும் தேசிய’த்தை வளர்த்தெடுக்கவும் ‘இந்தியா’வுக்குக் காந்தியும் நேருவும் மட்டுமில்லை, கலைஞரும் அண்ணாவும் தேவை. தந்தையிடமிருந்து விலகிய தனையர்கள் சாதித்த, முக்கியமான அரசியல் சாதனை இது.

 சுகுணா திவாகர்