Published:Updated:

``நான் தமிழ்ப் பெண். கன்னடப் பெண் அல்ல" - வட்டாள் நாகராஜை எதிர்த்த ஜெயலலிதா #VikatanInfographics

``நெருப்பாற்றில் நீந்தியே பழக்கப்பட்டவள் நான்", சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின் ஜெயலலிதா கூறிய வார்த்தைகள் இவை.

``நான் தமிழ்ப் பெண். கன்னடப் பெண் அல்ல" - வட்டாள் நாகராஜை எதிர்த்த ஜெயலலிதா   #VikatanInfographics
``நான் தமிழ்ப் பெண். கன்னடப் பெண் அல்ல" - வட்டாள் நாகராஜை எதிர்த்த ஜெயலலிதா #VikatanInfographics

``நெருப்பாற்றில் நீந்தியே பழக்கப்பட்டவள் நான்", சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின் ஜெயலலிதா கூறிய வார்த்தைகள் இவை. ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபின் அவர் எதிர்கொண்ட பிரச்னைகள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்ட இரும்புப் பெண்மணி ஜெயலலிதா. அந்தப் பிரச்னைகளுள் சிலவற்றை இங்கே காணலாம்.

வழக்கறிஞர் கனவு

சட்டம் படித்து, நல்ல வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதுதான் சிறுவயதிலிருந்தே ஜெயலலிதாவின் எதிர்காலத் திட்டமாக இருந்தது. ``சினிமா என்னோடு போகட்டும்... என் மகளுக்கு அது வேண்டாம்" என்று கூறி வந்த ஜெயலலிதாவின் தாய் சந்தியா, குடும்பச் சூழ்நிலையை மனதில் கொண்டு அவரை நடிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தார். தன் அம்மாவின் இந்த முடிவை எதிர்த்து வாதாடி, அதில் தோல்வி கண்டார் அவர்.  

விருப்பமில்லாமல் நடிக்க வந்தாலும், நடிப்பில் தனக்கெனத் தனி இடம் பிடித்து ஜெயித்துக் காட்டினார் ஜெ. தென்னிந்திய மொழிகளில் இவர் கதாநாயகியாக நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்கள்தாம். இந்தியில் தர்மேந்திராவுடன் சேர்ந்து நடித்த `இஜ்ஜத்' என்ற படமும் சூப்பர் ஹிட். `Epistle' என்றொரு ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார் ஜெ. எம்.ஜி.ஆரோடு மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார்.

மனம் திறந்து சொல்கிறேன் 

1972ம் ஆண்டு `மனம் திறந்து சொல்கிறேன்' என்ற பெயரில் தனது சுயசரிதையை வாரப் பத்திரிகை ஒன்றில் தொடராக எழுதினார் ஜெயலலிதா. அவர் சொல்லச் சொல்ல பத்திரிகையாளர் எஸ்.ரஜத் என்பவர் இந்தத் தொடரை எழுதினார். 23 வாரங்கள் எழுதிய பின்பு, தொடர் எழுதுவதை நிறுத்த நிர்பந்திக்கப்பட்டார் ஜெ.

இதன்பின், ``இந்தத் தொடரை நிறுத்துவதில் எனக்கு மகிழ்ச்சியே கிடையாது. எல்லோருமே வாழ்க்கையிலே தவறுகள் செய்திருக்கிறோம். என்னுடைய தவற்றையும் ஒப்புக் கொள்கிறேன். முதல் தவறு, என் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட அநேகம் பேர் உயிருடன் இருக்கும்போது சுயசரிதம் எழுத ஆரம்பித்தது. இரண்டாவது தவறு, எழுதுவதில் மிகவும் வெளிப்படையாக இருந்தது" என்று தைரியமாக தெரிவித்தார்.

நான் ஒரு தமிழ்ப் பெண்

நடிக்க ஆரம்பித்திருந்த காலம். விகடன் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், `கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து கன்னடம் நன்றாகப் பேசினாலும்கூட, நான் ஒரு தமிழர்' என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு, வட்டாள் நாகராஜின் `கன்னட சலுவாலி' கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ``ஒரு கன்னடராக இருந்துகொண்டு இப்படியா பேசுவது" என்று கொதித்தனர் அக்கட்சியினர். மேலும், ஜெயலலிதா மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் என மிரட்டல் கோரிக்கைகள் விடுத்தனர். 

இந்நிலையில், இயக்குநர் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், `கங்கா கவுரி' என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வந்தது. படத்தைப் பற்றிய செய்திகளைத் திரட்டுவதற்காக, மூத்த பத்திரிகையாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தலைமையில் 10 பத்திரிகையாளர்களும் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றிருந்தனர். அதே சமயத்தில் வட்டாள் நாகராஜ் தனது ஆதரவாளர்களுடன் படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டார். பத்திரிகையாளர்கள், இயக்குநர் பந்துலு, சாமி ஆகியோர் இருந்த அறைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டு ஜெயலலிதா மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மிரட்டினர். 

இந்த மிரட்டல்களுக்கிடையே, ``நான் தமிழ்ப் பெண். கன்னடப் பெண் அல்ல. மன்னிப்புக் கேட்க முடியாது" என்று கூறினார் அவர். அப்போது தமிழில் பேசியதால் அந்தக் கும்பலுக்கு ஒன்றும் புரியவில்லை. மைசூருக்கு வந்துள்ள தமிழர்களை இப்படிப் பூட்டி வைத்து மிரட்டுவது சரியாக இருக்காது என்று அங்கிருந்த இயக்குநர் சாமி, வட்டாள் நாகராஜிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கலைந்து சென்றனர். 

தனது தீர்மானமான முடிவை மாற்றிக்கொள்ள மறுப்பதும், மிரட்டலுக்கு அஞ்சாமல் எதிர்த்து நிற்பதும் ஜெயலலிதாவின் உடன்பிறந்த குணம் என்பதை அரசியல் வாழ்க்கை மட்டுமல்லாமல் திரை வாழ்க்கை, சொந்த வாழ்க்கை எனத் தான் பயணித்த அனைத்துத் தளங்களிலும் நிரூபித்துக் காட்டிய பெண்மணி ஜெயலலிதா. அந்த இரும்புப் பெண்மணி நம்மைவிட்டுப் பிரிந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன.

ஜெயலலிதாவுக்குப் பிடித்த உணவு, முதலில் வாங்கிய கார், பிடித்த செல்லப் பிராணிகள் என அவரின் பெர்சனல் பக்கங்கள் பற்றிய தகவல்கள் இதோ...