Published:Updated:

மக்கள் நீதி மய்யத்தில் பதவி பெற இந்தத் தகுதிகள் கட்டாயம்...!

மக்கள் நீதி மய்யத்தில் பதவி பெற இந்தத் தகுதிகள் கட்டாயம்...!
மக்கள் நீதி மய்யத்தில் பதவி பெற இந்தத் தகுதிகள் கட்டாயம்...!

மிழக அரசியலில், கமல்ஹாசன் தலைமையிலான `மக்கள் நீதி மய்யம்' வித்தியாசமான கட்சி! `சினிமா ரசிகர்களின் பலத்தோடு அரசியலுக்குள் அடியெடுத்துவைத்து, அடுத்த தேர்தலிலேயே முதல்வராகிவிட வேண்டும்' என்ற கனவுலகில் துடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கிடையே, அரசியல் குறித்த தன் விமர்சனங்களிலும் அரசியலுக்குள் அடியெடுத்துவைத்த வேகத்திலும் கமல்ஹாசனின் பாணி வித்தியாசமானது. 

`ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை' என்ற திட்டத்தோடு கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மாநாட்டில் கட்சியின் பெயரை அறிவித்த கமல்ஹாசன், கூடவே கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அரசியல் சாராத ஆளுமைகளையும் நியமித்து அதிரடி காட்டினார்.

சமீபத்தில் இக்கட்சியின் துணைத் தலைவராக டாக்டர் ஆர்.மகேந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மீடியா வெளிச்சத்துக்கு இதுவரை வந்திராதவர் மகேந்திரன். கட்சியின் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட மறுநாளே, கஜா புயல் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நிரலில், கமல்ஹாசனுடன் கைகோத்துக் கிளம்பிவிட்டார். நிவாரணப் பணிகளின்போது, கமல்ஹாசனுடன் தொடர்ந்து இவர் பயணித்து வந்து மக்களைச் சந்தித்துப் பேசியதையடுத்து, `யார் இந்த மகேந்திரன்...' என்ற கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது.  

இதையடுத்து டாக்டர் மகேந்திரனின் பின்னணி பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி செய்தோம். கிடைத்த தகவல்கள் இதோ...

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பொறுப்புக்கு வந்திருக்கும் டாக்டர் மகேந்திரன், அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனாலேயே விவசாயத்தின் மீது தணியாத ஆர்வம் உண்டு. விவசாயத் துறையில், பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்து வெற்றிகளையும் ஈட்டியுள்ளார். 

மகேந்திரன் பற்றிய மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ளும் நோக்கோடு, ம.நீ.ம கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரிடம் பேசினோம்.
``மக்கள் நீதி மய்யத்தில், முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அனைவருமே இதுவரையிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்துவந்த நபர்கள்தான். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி மௌரியா, ஐ.ஏ.எஸ் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ள ரங்கராஜன், மூத்த நீதிபதி பூவையா, வழக்கறிஞர் விஜயன், பதிப்பாளர் காந்தி கண்ணதாசன் என அனைவருமே அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தவர்கள்தாம். இப்போது ம.நீ.ம மூலமாகத்தான் முதன்முதலில் அரசியலுக்குள்ளேயே நுழைகிறார்கள். திடீரெனக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கும் மகேந்திரன் குறித்து எல்லோருக்குமே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன், எம்.பி.பி.எஸ் படித்துமுடித்து 30 வருடங்கள் மருத்துவத் தொழில் செய்துவந்தவர். ஐஸ்கிரீமில் பயன்படுத்தப்படும் `வெணிலா' பயிர்வகையை அதிகளவில் உற்பத்தி செய்துவருவதோடு ஏற்றுமதியும் செய்துவருகிறார். விவசாயம் மட்டுமன்றி, சமூகம் சார்ந்த பிரச்னைகளைக் களைவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனாலேயே ம.நீ.ம செயல்பாடுகளில் தானாக முன்வந்து ஈடுபாடு காட்டி வந்தார். 

மகேந்திரனின் ஆர்வமிக்க செயல்பாடுகளைக் கவனித்துவந்த, கமல்ஹாசனும் `இவரைக் கட்சியில் சரியாகப் பயன்படுத்த வேண்டுமே' என்ற எண்ணத்தில் இருந்துவந்தார். இந்தச் சூழ்நிலையில்தான் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்புக்குப் பொதுக்குழு மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மகேந்திரன். 

ம.நீ.ம கட்சியைப் பொறுத்தவரை முக்கியப் பொறுப்புகளுக்கு வரவேண்டுமானால், மூத்தவர் என்ற தகுதியோ அல்லது நீண்டகால அனுபவமோ முக்கியம் இல்லை. சம்பந்தப்பட்ட நபரின்  நற்குணாதிசயமும் தனிப்பட்ட திறமையும்தான் முக்கியம்! அந்தவகையில், `கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இவர்களை நியமித்தால், திறம்படச் செயல்பட முடியும்' என்ற உறுதியான நம்பிக்கை ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனுக்கு உண்டு!'' என்கிறார்கள் உறுதியுடன்.

வரவேற்போம்!