மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை!”

என்ன செய்தார் எம்.பி? - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை!”

ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் கோபால்

#EnnaSeitharMP
#MyMPsScore

‘‘நான் எம்.பி-யாக இருந்து தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை. அதை நானே ஒப்புக் கொள்கிறேன்’’ என்று பரிதாபமாகச் சொல்கிறார் நாகப்பட்டினம் தொகுதி எம்.பி டாக்டர் கோபால். தொகுதியை வலம் வந்தபோது அவர் பொய் சொல்லவில்லை என்பது புரிந்தது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் ஜெயலலிதா. நாகப்பட்டினம் தனித்தொகுதிக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற ஆலோசனை கார்டனில் ஒரு பக்கம் நடக்க, தனக்கு இணக்கமான ஒரு நபரை எப்படி எம்.பி-யாகக் கொண்டுவரலாம் என மற்றொரு பக்கம் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார் அமைச்சர் காமராஜ். தி.மு.க-வின் ஆதரவுடன் கம்யூனிஸ்ட்கள் செல்வாக்கு செலுத்திவந்த தொகுதியாக அதுவரை நாகப்பட்டினம் இருந்துவந்தது. 2014-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் வாக்குகள் மூன்றாகப் பிரிய, அ.தி.மு.க எப்படியும் வெற்றிபெற்றுவிடலாம் என்பதை காமராஜ் நன்றாக உணர்ந்திருந்தார். அப்போது அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் கோபால்.   இவர், காமராஜின் சொந்த ஊரான நன்னிலத்தில் ஒரு சிறிய மருத்துவமனையை நடத்திவந்தவர்; ஏற்கெனவே ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அமைதியானவர்; சர்ச்சைகளில் சிக்காதவர் என பிளஸ் பாயின்ட்களுடன் படித்தவர் என்ற பிம்பமும் அவரை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைத்தது.

எம்.பி ஆனபிறகு அவர் தொகுதிக்குள் வலம் வந்தது என்றால், அவரது வீடு அமைந்துள்ள நன்னிலத்தில் மட்டும்தான். இந்தத் தொகுதியில் நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர், நன்னிலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த ஆறு தொகுதிகளில் ஒன்றுகூட இவரால் பலன் அடையவில்லை என்பதுதான், இந்த நான்கரை ஆண்டுகளில் உள்ள நிலை. பின்தங்கிய பகுதியான நாகப்பட்டினம் தொகுதியில் மீனவர்கள் அதிகம். நாகை துறைமுகம் மேம்படுத்தப்படாததால் தொழில் வளர்ச்சி ஏதுமில்லை.

என்ன செய்தார் எம்.பி? - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை!”

நாகூர் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் சாகாமாலிம், ‘‘இந்தத் தொகுதியில் உள்ள நாகூர் தர்ஹா உலகப் பிரசித்திபெற்ற ஆன்மிகத்தலம். ஆண்டுதோறும் பல்வேறு இடங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகிறார்கள். ஆனால், எம்.பி-யாக கோபால் தேர்வாகி நாகூருக்கு ஒருமுறை மட்டுமே வந்துள்ளார். இந்த ஆன்மிகத்தலத்துக்கு ஒரு ரூபாய்கூட இவர் ஒதுக்கீடு செய்யவில்லை. நாகூருக்குப் பக்கத்தில் காரைக்காலில் நிலக்கரியை இறக்குமதி செய்யும் தனியார் துறைமுகம் செயல்பட்டுவருகிறது. அங்கிருந்து வெளியேறும் நிலக்கரித் தூளால், நாகூர் பகுதி மாசுபடுகிறது. தர்கா கோபுரங்களின் நிறமே மாறியுள்ளது. அந்தத் துறைமுகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நாகூர் மக்கள் 50-க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து குரல் எழுப்ப வேண்டிய எம்.பி., இதுவரை பேசவே இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி-யான டி.ராஜா எங்கள் பகுதியில் தடுப்பணை ஒன்றுக்கு நிதி ஒதுக்கியுள்ளார். ஆனால், எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-யோ, எங்கள் உயிருக்குச் சிக்கல் வரும்போதும்கூடக் கேட்க மனமின்றி உள்ளார்’’ என்றா வேதனையுடன்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டும், அது கடைமடைப் பகுதிகளை அடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடைமடை கிராமங்களுக்கு நீர் செல்லாமல் போனதற்கு வாய்க்கால் சீரமைப்பே இல்லாமல் போனதும் ஒரு காரணம் என்கிறார்கள்.

வேதாரண்யம் வட்டார விவசாய சங்கத்தின் தலைவர் டி.வி.ராஜன், ‘‘இந்தப் பகுதியில் பதினைந்தாயிரம் ஹெக்டேர் விவசாயப் பகுதிக்குப் பாசன வசதி செய்துகொடுப்பேன் என அவர் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதை இன்றுவரை நிறைவேற்றவில்லை. அதனால், கடைமடையில் தண்ணீர்வரத்து இல்லாமல் போய்விட்டது. இந்தப் பகுதியில் மாம்பழங்கள் அதிக அளவில் விளைவதால், அவற்றைச் சேமிக்கக் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும் என்று சொன்னார். அதையும் செய்யவில்லை. வேதாரண்யம் அருகில் ஆசியாவிலேயே மிகப் பெரிய நெல் குடோன் அமைக்கப்பட்டுள்ளது.அது, கட்டிமுடிக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதை, ராணுவப் பயன்பாட்டுக்காக மத்திய அரசு விடப்போவதாகச் செய்திவருகிறது. அதைத் தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் எம்.பி., எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை’’ என ஆதங்கப்பட்டார்.

அரசு விழாக்களில் அமைச்சர் காமராஜுடன் சென்று சில இடங்களில் எம்.பி தலைகாட்டியுள்ளார். தனிப்பட்ட முறையில் அவர் எங்கும் வந்ததில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. நாலுவேலபதி என்ற ஊரில் அம்மா பூங்கா திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க-வினர், ‘கோபால் எக்ஸ் எம்.பி’ என்று போட்டு ஃப்ளெக்ஸ் வைத்துள்ளனர். அதைப் பார்த்து கோபால் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் சென்றுள்ளார். ‘‘அவ்வளவுதான் சொல்லமுடியும்’’ என்று அ.தி.மு.க-வினரே கமென்ட் அடிக்கிறார்கள். ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் தனது பகுதியில் சில திட்டங்கள் வேண்டும் என்று கேட்டு எம்.பி-யிடம் மனு அளித்துள்ளார். அதற்கு கோபால், ‘‘எனக்கு வரும் நிதியைப் பிரித்தால் ஓர் ஊராட்சிக்கு ஐயாயிரம் ரூபாய்தான் தரமுடியும். அதை இப்போதே தருகிறேன். வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லி அதிரவைத்தாராம்.

தொகுதியில் நமக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பல இடங்களில், ‘‘உங்கள் எம்.பி யார்?’’ என்று பொதுமக்களிடம் கேட்டால், ‘‘ஓ.எஸ்.மணியன்’’ என்று சொல்லி அதிர வைத்தார்கள். எம்.பி-யின் பெயர்கூட மக்களுக்குத் தெரியாத அளவில் அவரின் செயல்பாடு உள்ளது. தொகுதிக்கு அவர் என்ன செய்துள்ளார் என்று சிலரிடம் விசாரித்தபோது, ‘‘சென்னை - மன்னார்குடி விரைவு ரயிலை, திருவாரூர் வழியாகத் திருப்பிவிட்டுள்ளார். காரைக்காலில் இருந்து பெங்களூரு சென்ற ரயிலை திருவாரூர் வழியாகத் திருப்பிவிட்டுள்ளார். இவை மட்டுமே அவரது சாதனைகள்’’ என்கிறார்கள்.

வேதாரண்யம் பகுதி உப்பளத்துக்குப் புகழ்பெற்றது. இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உப்பளத் தொழிலை நம்பியுள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு வட மாநிலங்களுக்குச் செல்ல, முன்பு ரயில் போக்குவரத்து இருந்தது. அது 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அதை மீண்டும் இயக்குவேன் என்று எம்.பி வாக்குறுதி கொடுத்தார். அதை நிறைவேற்றவில்லை என்ற குமுறல் உப்பு உற்பத்தியாளர்களிடம் உள்ளது.

‘‘உப்புத்தொழிலை மேம்படுத்தவோ, நாகப்பட்டினம் துறைமுகத்தை மேம்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர் ஒரு மருத்துவர். இவர் நிதியிலிருந்து மருத்துவமனையை யாவது மேம்படுத்தியிருக்கலாம். அதைக்கூடச் செய்யவில்லை. எம்.பி நிதியிலிருந்து கட்டப்பட்ட எந்தக் கட்டடத்தையும் இந்தத் தொகுதியில் பார்க்க முடியாது. நல்ல மனிதர். ஆனால், எதையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார். அமைச்சர் காமராஜ் கட்டுப்பாட்டில் அவர் இருப்பதால், எம்.பி நிதியைக்கூட காமராஜ் சொல்படிதான் செலவு செய்கிறார்” என்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முருகானந்தம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பழனிசாமி, திருத்துறைப்பூண்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். அவர், “திருச்சியிலிருந்து கோடியக்கரை வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நாகை - கன்னியாகுமரி ரயில் நிறுத்தப்பட்ட பிறகு இதுவரை இயங்கவில்லை. அதை இயக்குவதற்கு இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது நிதியை என்ன செய்தார் என்பதே தெரியவில்லை’’ என்றார்.

நாகப்பட்டினம் அருகேயுள்ள அக்கரைப் பேட்டை ஊராட்சி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பில்லூர் ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளை எம்.பி தத்தெடுத்துள்ளார். எம்.பி-க்கள் ஊராட்சியைத் தத்தெடுக்கச் செய்தது, அடிப்படை வசதிகளில் அவை தன்னிறைவு பெற்ற ஊராட்சிகளாக வேண்டும் என்பதற்கே. அக்கரைப்பேட்டை ஊராட்சி முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் சொந்த ஊர் என்பதால், அதைத் தத்தெடுத்தபோது, ஓர் உயர் கோபுர மின்விளக்கு ஒன்றை மட்டும் அமைத்துள்ளார். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த காத்தலிங்கம், ‘‘தத்தெடுக்கப் போறேன் என எங்கள் எம்.பி சொன்னார். ஆனால், அதற்குப் பிறகு அவர் இங்கே வரவே இல்லை. அவர் நிதியிலிருந்து தெருவில் ஒரே ஒரு பல்பு மட்டும் போட்டார். அதுவும் போட்டதிலிருந்து எரியவில்லை” என்கிறார்.

பில்லூர் ஊராட்சியை எம்.பி தத்தெடுத்துள்ளார் என்ற விவரத்தை, தொலைக்காட்சி ஒன்றில் வெளியான செய்தியை வைத்தே அந்த ஊர் மக்கள் அறிந்துள்ளார்கள். பில்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சந்திரசேகரன், “எங்கள் பகுதிக்கு எம்.பி நிதியிலிருந்து ஒரு ரூபாய்கூடச் செலவு செய்யவில்லை. ஓட்டு கேட்டு வந்தபோது, தேவூரில் ரயில்வே கீழ்ப்பாலம் அமைத்துத் தருவேன் என்று சொன்னார். அதற்கு ஐந்து லட்ச ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டதாகச் சொன்னார்கள். அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை” என்றார்.

நாகப்பட்டினம் தொகுதியின் எம்.பி-க்கு அலுவலகம் என எதுவும் இல்லை. (ஆனால், அலுவலகச்  செலவுகள் என நான்கரை ஆண்டுகளில் அவர் பெற்றது, ரூ.6,90,000/-) நன்னிலத்தில் உள்ள தன் வீட்டின் வரவேற்பறையைத்தான் அலுவலகமாகப் பயன்படுத்திவருகிறார். அங்கு சென்றால் மட்டுமே அவரைச் சந்திக்க முடியும்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதள பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- அ.சையது அபுதாஹிர், மு.இராகவன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

தொகுதி மேம்பாடு - நிதி செலவழித்தல்!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு எம்.பி-க்கும் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அந்த நிதியை கோபால் பயன்படுத்திய விவரம் இங்கே...

என்ன செய்தார் எம்.பி? - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை!”
என்ன செய்தார் எம்.பி? - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை!”
என்ன செய்தார் எம்.பி? - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை!”

‘‘என்னை ஏன் விரட்டுகிறீர்கள்?’’

நா
கை எம்.பி கோபாலிடம் ‘எம்.பி நிதியில் செய்த பணிகள் என்னென்ன?’ என்று கேட்டபோது, ‘‘நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லையே’’ என்றார். ‘நிதியை எந்த வகையில் பயன்படுத்தினீர்கள்’ என்று கேட்டதற்கு, ‘‘நான் இரவு உட்கார்ந்து எழுதி காலையில் உங்களுக்குத் தருகிறேன். எனக்கு பி.ஏ யாரும் இல்லை’’ என்று சொல்லி போனைத் துண்டித்து விட்டார். (ஆனால், இந்த நான்கரை ஆண்டுகளில் ‘உதவியாளர் சம்பளம்’ என்ற வகையில் எம்.பி கோபால் பெற்றது, ரூ.15,13,548/-).

மறுநாள் காலை அவரைத் தொடர்புகொண்டபோது, ‘‘நான் வெளியூரில் இருக்கிறேன்’’ என்றார். நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்றபோது, ‘‘எம்.பி அவருடைய மருத்துவமனைக் கட்டுமானத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்’’ என்று தகவல் சொன்னார்கள். அங்கு நாம் சென்று பார்த்தபோது, கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வேலையாட்களுடன் நின்று கொண்டிருந்தார் எம்.பி. நம்மைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி, ‘‘நான்தான் தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்கிறேனே... என்னை ஏன் விரட்டுகிறீர்கள்?’’ என்று விரக்தியுடன் புலம்பினார். ‘நீங்கள் தத்தெடுத்த கிராமத்துக்குச் செய்தது என்ன?’ என்று கேட்டோம். ‘‘நான் இரண்டு கிராமங்களைத் தத்தெடுப்பதாக அறிவித்தேன். ஆனால், அந்த இரண்டு கிராமங்களுக்கு நான் போகக்கூட இல்லை. இதுதான் உண்மை’’ என்று பரிதாபமாகச் சொன்னார்.

என்ன செய்தார் எம்.பி? - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை!”

எம்.பி எப்படி?

நா
கை நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியுள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 606 பேரைச் சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

என்ன செய்தார் எம்.பி? - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை!”